ஜப்பான்: ஒரு பூனையை கண்டு மொத்த ஒரு நகரமே அஞ்சுவது ஏன்? என்ன நடந்தது?

காணொளிக் குறிப்பு, இதற்குக் காரணம் அந்தப் பூனை ஏதும் செய்துவிடுமோ என்ற பயம் இல்லை.
ஜப்பான்: ஒரு பூனையை கண்டு மொத்த ஒரு நகரமே அஞ்சுவது ஏன்? என்ன நடந்தது?

மேற்கு ஜப்பானில் உள்ள புகுயாமா நகரம் ஒரு பூனையைக் கண்டு அஞ்ச வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கிறது. இதற்குக் காரணம் அந்தப் பூனை ஏதும் செய்துவிடுமோ என்ற பயம் இல்லை. அந்தப் பூனை மீது ஒட்டியிருக்கும் ரசாயனம்தான்.

ஒரு தொழிற்சாலையின் விஷத்தன்மைமிக்க ரசாயனம் இருந்த தொட்டியில் இந்தப் பூனை விழுந்தது. அதன்பின் அது அந்தப் பகுதியில் சுற்றித்திரிந்து கொண்டிருப்பது கண்டறியப்பட்டது.

இதனால் அதனிடமிருந்து விலகி இருக்குமாறு அப்பகுதியின் மக்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் நடந்த தொழிற்சாலையில் பணிபுரியும் ஒரு தொழிலாளி, ரசாயனத் தொட்டியில் இருந்து மஞ்சள் காலடிச் சுவடுகள் வெளியே செல்வதைக் கண்டிருக்கிறார். அதன்பிறகே இந்த எச்சரிக்கை வந்துள்ளது.

பூனை

பட மூலாதாரம், Getty Images

அங்கு பாதுகாப்புக்காக வைக்கப்பட்டிருந்த கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளைப் பார்த்தபோது, ஒரு பூனை தப்பி ஓடுவதைக் காண முடிந்தது.

புகுயாமாவில் உள்ள அதிகாரிகள் பொதுமக்களை இந்தப் பூனையிடம் இருந்து விலகி இருக்குமாறும், அது எங்கேனும் தென்பட்டால் காவல்துறையினரிடம் தெரிவிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

ரசாயனம் ஆபத்தானதா?

பூனை மீதுள்ள ரசாயனம்

பட மூலாதாரம், PROVIDED BY NOMURA PLATING

ஹெக்ஸாவலன்ட் குரோமியம் என்று அழைக்கப்படும் இந்த ரசாயனம், ஆரஞ்சு மற்றும் பழுப்பு நிறத்திலானது. மிக அதிக அமிலத்தன்மை கொண்டது. புற்றுநோயை உண்டாக்கக் கூடியது.

இப்படிப்பட்ட ரசாயனத்தில் தான் இந்தப் பூனை விழுந்துள்ளது.

'நமுரா முலாம் பூசும் புகுயாமா தொழிற்சாலை' என்ற இடத்தில் நேற்று முன்தினம் (திங்கள், மார்ச் 11) பணிக்கு வந்தபோது ஒரு ஊழியர் பூனையின் காலடித் தடங்களைக் கண்டறிந்ததாக ஆசாஹி செய்தி இணையதளம் தெரிவித்துள்ளது.

புகுயாமா நகரின் சுற்றுச்சூழல் குழு, ‘அசாதாரணமாகத் தோன்றும் பூனைகளை’ பொதுமக்கள் தொட வேண்டாம் என்று எச்சரித்திருக்கிறது. ஆனால் இச்சம்பவத்தின் விளைவாக அந்தப் பூனை இறந்திருக்கக்கூடும் என்றும் கூறியது.

எங்கே தவறு நடந்தது?

பூனை மீது படர்ந்த ரசாயனம்

பட மூலாதாரம், PROVIDED BY NOMURA PLATING

இந்தத் தொழிற்சாலையை நடத்தும் நிறுவனம், இந்த ரசாயனத் தொட்டி தாள்போன்ற ஒரு விரிப்பால் மூடப்பட்டிருந்ததாகக் கூறியது. ஆனால் பூனை உள்ளே விழுந்த அந்தப் பகுதி திறந்திருந்ததாகவும் கூறியது.

“பூனைகள் போன்ற சிறிய விலங்குகள் தொழிற்சாலைக்குள் வருவதைத் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தை இந்த சம்பவம் எங்களுக்கு நினைவுறுத்துகிறது. இது நாங்கள் எதிர்பார்க்காத ஒன்று," என அந்நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் கூறியதாக AFP செய்தி நிறுவனம் ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறது.

ஹெக்ஸாவலன்ட் குரோமியம் தோல் எரிச்சல், சுவாசப் பிரச்சனைகள், மற்றும் பார்வை இழப்பை ஏற்படுத்தும். இதன் அருகில் பணிசெய்யும் ஊழியர்கள் முகமூடிகள் மற்றும் ரப்பர் கையுறைகளை அணிவது கட்டாயம்.

நேற்று (செவ்வாய், மார்ச் 12) வரை இந்தப் பூனை எங்கும் தென்படவில்லை என்று அதிகாரிகள் கூறினர்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)