காணொளி: இரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல் - இதுவரை நடந்தது என்ன? முழு விவரம்

காணொளிக் குறிப்பு, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இரான் மீது தாக்குதல் - நடந்தது என்ன?
காணொளி: இரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல் - இதுவரை நடந்தது என்ன? முழு விவரம்

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இரான் மீது தாக்குதல் நடத்தி இருக்கின்றன. அதற்கு பதிலடியாக இஸ்ரேலை நோக்கி இரான் ஏவுகணைகளை ஏவியதாக இஸ்ரேல் கூறுகிறது. அதேபோல பஹ்ரைன், கத்தார், குவைத், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வெடிப்புச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இதனால் மொத்த மத்திய கிழக்கிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது. இரான் மீது நடத்தப்பட்ட தாக்குதல், அமெரிக்க அதிபர் டிரம்ப் விடுத்த பகிரங்க எச்சரிக்கை, உலக தலைவர்கள் தெரிவித்த கருத்து என இந்த விவகாரத்தில் இன்று நடந்தது என்ன என்பதை சற்று விரிவாக பார்க்கலாம்.

இரான் மீது நடந்த தாக்குதல்

சரியாக தெஹ்ரான் நேரப்படி காலை 9:30 மணியை தாண்டி பிறகு, தலைநகரில் வெடிப்புச் சம்பவங்கள் நிகழ்ந்ததாக இரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. முன்னெச்சரிக்கையாக இந்த தாக்குதலை நடத்தியதாக இஸ்ரேல் கூறியது.

இஸ்ஃபஹான் உட்பட நாடு முழுவதும் பல நகரங்களிலும் வெடிப்புச் சத்தம் கேட்டதாக உள்ளூர் செய்திகள் கூறின.

அமெரிக்காவும் இணைந்து நடத்திய தாக்குதல்

தாக்குதல் செய்தி வெளியான சற்று நேரத்திலேயே அமெரிக்காவும் இதில் ஈடுபட்டதாக அதிகாரிகளை மேற்கோள்காட்டி அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. அதனைத் தொடர்ந்து அதிபர் டிரம்பும் அதை உறுதிப்படுத்தினார்.

இது தொடர்பாக 8 நிமிட காணொளியை டிரம்ப் வெளியிட்டார். அமெரிக்க ராணுவம் இரானில் பெரிய அளவிலான போர் நடவடிக்கைகளை தொடங்கியது. இரானிடம் இருந்து வரும் அச்சுறுத்தல்களை அகற்றி அமெரிக்க மக்களை பாதுகாப்பதே எங்கள் நோக்கம் என அதில் டிரம்ப் குறிப்பிட்டிருந்தார்.

அதோடு, இஸ்லாமிய புரட்சிகர காவல்படை உள்ளிட்ட பாதுகாப்பு படைகள் ஆயுதத்தை கைவிட வேண்டும் அல்லது மரணத்தை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கவும் செய்தார்.

இரான் பதில் என்ன?

இரானால் இஸ்ரேலை நோக்கி ஏவப்பட்ட ஏவுகணைகளை ஏவப்பட்டதாகவும், அதை இடைமறித்து வருவதாகவும் இஸ்ரேல் பாதுகாப்பு படை கூறியது.

இஸ்ரேலின் ஹைஃபா நகரத்திலும் பிற இடங்களிலும் வெடிப்புச் சத்தங்கள் கேட்டன, ஆனால் அவை தாக்குதலால் கேட்டதா அல்லது இடைமறிப்புகளால் கேட்டதா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

மத்திய கிழக்கின் பிற இடங்களிலும் தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளன. பஹ்ரைனில் உள்ள அமெரிக்க கடற்படை தளம் ஏவுகணை தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக என்று பஹ்ரைனின் அரசு செய்தி நிறுவனம் கூறியது.

தலைநகர் தோஹாவில் வெடிப்புச் சத்தங்கள் கேட்டதை அடுத்து, தங்கள் நாட்டு எல்லையை குறிவைத்து நடத்தப்பட்ட பல தாக்குதல்களை வெற்றிகரமாக முறியடித்ததாக கத்தார் பாதுகாப்பு அமைச்சகத்தை மேற்கோள்காட்டி அந்நாட்டு அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த பிராந்தியத்தில் மிகப்பெரிய அமெரிக்க ராணுவ தளமான அல் உதெய்த் விமான தளம் கத்தாரில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தங்கள் நாட்டின் மீதான இரான் தாக்குதலைக் கண்டிப்பதாக கூறி உள்ளது. அவர்களின் வான் பாதுகாப்பு இடைமறிப்புகளிலிருந்து விழுந்த சிதைவில் ஒருவர் கொல்லப்பட்டதாக கூறி உள்ள ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பல ஏவுகணைகள் வெற்றிகரமாக இடைமறிக்கப்பட்டதாகவும் கூறி உள்ளது.

உலக தலைவர்களின் எதிர்வினை

ஐரோப்பிய ஒன்றிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன், அனைத்து தரப்பினரும் அதிகபட்ச கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்கவும், பொதுமக்களைப் பாதுகாக்கவும், சர்வதேச சட்டத்தை முழுமையாக மதிக்கவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் நடவடிக்கைகளை பொறுப்பற்றது கண்டித்துள்ளது. இவை சர்வதேச சட்டத்தை மீறுவதாகவும், அரசியல் மற்றும் ராஜீய தீர்வுகளை நாடும்படி கூறி உள்ளது.

அதே நேரம், இரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி, இரான் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள அனைத்து ராணுவ வழிகளையும் பயன்படுத்தும் என கூறி உள்ளார்.

சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார், குவைத், பஹ்ரைன் மற்றும் இராக் உள்ளிட்ட நாடுகளின் வெளியுறவு அமைச்சருடன் தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டதாகவும், இரானின் ஒருமைப்பாட்டைப் பாதுகாக்க அனைத்து தற்காப்பு மற்றும் ராணுவத் திறன்களையும் பயன்படுத்தும் என கூறியதாக ஒரு அறிக்கை கூறுகிறது.

அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்குதல் நடத்துவதற்காக "தங்கள் தளங்கள் மற்றும் பகுதிகளை தவறாக பயன்படுத்துவதைத் தடுக்கும் பொறுப்பை இந்த நாடுகளுக்கு அப்பாஸ் அரக்சி நினைவூட்டியதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

இரானுடன் புதிய போரில் ஈடுபட அமெரிக்காவும் இஸ்ரேலும் எடுத்த முடிவு, கணிக்க முடியாத விளைவுகளுடன் மிக ஆபத்தான தருணத்தை உருவாக்குவதாக பிபிசியின் சர்வதேச விவகார ஆசிரியர் ஜெரோமி போவன் கூறுகிரார். இஸ்ரேல் தனது தாக்குதலை நியாயப்படுத்த முன்னெச்சரிக்கை தாக்குதல் என்ற வார்த்தையைப் பயன்படுத்தியது. ஆனால், இது ஒரு விருப்பப் போர் என்கிரார் அவர்.

பொருளாதார நெருக்கடி, கடந்த ஆண்டு மோதல் ஏற்படுத்திய தாக்கம் உள்ளிட்ட காரனங்களால் இரான் அரசு பலவீனமாக இருப்பதாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கணக்கிட்டுள்ளது. இது வீணடிக்க கூடாத ஒரு வாய்ப்பு என அவர்கள் கருதியதாக தெரிகிறது என அவர் குறிப்பிகிறார்.

இந்த மோதல் முன்பிருந்ததை விட மிக பெரியது மற்றும் ஆபத்தானது என பிபிசியின் பாதுகாப்பு விவகார செய்தியாளர் ஃபிராங்க் கார்ட்னர் கூறுகிறார்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உட்பட வளைகுடா நாடுகள் போரை சந்திப்பது இது முதல் முறை அல்ல. ஆனால் இது வேறுபட்டது. இது முன்பு இருந்ததை விட பெரியது மற்றும் ஆபத்தானது என குறிப்பிடும் அவர் அதனால்தான் ஓமன், கத்தார் மற்றும் சவுதி அரேபியாவின் தலைவர்கள் முன்னதாக டிரம்ப் அரசை இரானை தாக்க வேண்டாம் என வலியுறுத்தியதாக கூறுகிரார். எனவே இந்த மோதல் இந்தப் பிராந்தியத்தில் இன்னும் மோசமாகலாம் என்கிறார் அவர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு