குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்துவதால் அசாம், மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு கிடைக்கும் பலன்கள்

அஸ்ஸாம் மற்றும் மேற்கு வங்கத்தில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை அமல்படுத்துவதால் பாஜகவுக்கு என்ன ஆதாயம்?

பட மூலாதாரம், ANI

குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சிஏஏ) அமல்படுத்தும் மத்திய அரசின் முடிவுக்கு நாடு முழுவதும் இருந்து பலவகையான எதிர்வினைகள் வந்த வண்ணம் உள்ளன.

ஆனால் மிகக் கடுமையான எதிர்வினைகள் மேற்கு வங்கம் மற்றும் அசாமில் இருந்து வந்தன. 2019ஆம் ஆண்டு இந்தச் சட்டம் இயற்றப்பட்டபோதே, இந்த இரு மாநிலங்களும் இதற்கு எதிர்ப்பு தெரித்தன.

மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, சிஏஏ என்பது வங்கத்தை மீண்டும் பிரிப்பதற்கும், வங்காளிகளை நாட்டை விட்டு விரட்டுவதற்குமான முயற்சி என்று கடுமையாக எதிர்வினையாற்றியுள்ளார்.

திரிணாமுல் காங்கிரஸ் தவிர, இடதுசாரி கட்சிகளும் இதை தேர்தலுக்கான கண்துடைப்பு என்று கூறியிருக்கின்றன. இந்தச் சட்டத்தின் மூலம் ஒருவரின் குடியுரிமை பறிக்கப்பட்டால், தாம் அதைக் கடுமையாக எதிர்க்கப் போவதாக மமதா பானர்ஜி கூறியுள்ளார். “இதை எந்த வகையிலும் என் அரசு அனுமதிக்காது,” என்று அவர் கூறியிருக்கிறார்.

கடந்த திங்கள்கிழமை மாலை (மார்ச் 1) இந்தச் சட்டத்தின் அறிவிப்பு வெளியிடப்பட்ட பிறகு, அவசரமாக அழைக்கப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் மமதா, "இது விளையாட்டான விஷயம் அல்ல," என்று கூறியுள்ளார்.

இந்தச் சட்டம் 2020ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது என்பதுதான் மமதாவின் கேள்வி. நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக அதை இப்போது அமல்படுத்த அரசாங்கம் முடிவு செய்தது ஏன்?

"சிஏஏ மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி) மூலம் ஒருவரின் குடியுரிமை பறிக்கப்பட்டால், நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம். இந்தச் சட்டம் உண்மையில் ஒரு மோசடி," என்கிறார் அவர்.

சிஏஏ சட்டத்தை மேற்கு வங்கத்தில் இந்தச் சமூகம் மட்டும் வரவேற்பது ஏன்?

அஸ்ஸாம் மற்றும் மேற்கு வங்கத்தில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை அமல்படுத்துவதால் பாஜகவுக்கு என்ன ஆதாயம்?

பட மூலாதாரம், SANJAY DAS

அதே நேரத்தில், வங்காளத்தின் வடக்கில் நார்த் 24 பர்கானாஸ் உள்ளிட்ட பிற மாவட்டங்களில் இருக்கும் மட்டுவா சமூகத்தினர் இந்தச் சட்டம் அமலாக்கப்பட்டதற்காக தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி கொண்டாட்டம் நடத்தியுள்ளனர். மட்டுவா சமூகத்தினர் நீண்ட நாட்களாக இந்தச் சட்டத்திற்காக கோரிக்கை விடுத்து வந்தனர்.

கடந்த 2019ஆம் ஆண்டு தேர்தலில் இச்சட்டத்தை அமல்படுத்துவோம் என மத்திய அரசின் தலைவர்கள் உறுதியளித்தனர். ஆனால், அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படாததால், இப்பகுதியினர் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டது.

மமதா பானர்ஜி ஏற்கெனவே வங்கத்தில் சிஏஏ மற்றும் என்ஆர்சியை அமல்படுத்துவதை எதிர்த்து வருகிறார். இதற்கு எதிராகவும் வீதியில் இறங்கிப் போராட்டமும் நடத்தியிருக்கிறார்.

மட்டுவா சமூகத்தினர் ஏற்கெனவே இந்திய குடிமக்கள் என்பது அவரது வாதம். "இல்லை என்றால், இப்போது வரை தேர்தலில் பாஜகவுக்கு எப்படி வாக்களித்தார்கள்? இவ்வாறான நிலையில் அவர்களுக்கு எவ்வாறு மீண்டும் குடியுரிமை வழங்க முடியும்?" என்று அவர் கேட்டார்.

ஹரிசந்த் தாக்கூர் என்பவர் 1812ஆம் ஆண்டு ஒரகண்டியில் (தற்போது வங்கதேசம்) இந்தச் சமூகத்தை நிறுவினார். மட்டுவா மகாசங்கத் தலைவரும், போங்கான் நகரத்தின் பாஜக எம்.பி.யுமான சாந்தனு தாக்கூர் கூறுகையில், "சிஏஏ மட்டுவாவுக்கு மட்டுமல்ல, மாநிலத்தில் வசிக்கும் அனைத்து அகதிகளுக்கும் குடியுரிமைக்கான வழியைத் திறக்கும்," என்று கூறுகிறார்.

இது சட்டப்பூர்வ குடியுரிமையைப் பறிப்பதற்காக அல்ல, அதை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறுகிறார்.

அஸ்ஸாம் மற்றும் மேற்கு வங்கத்தில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை அமல்படுத்துவதால் பாஜகவுக்கு என்ன ஆதாயம்?

பட மூலாதாரம், SANJAY DAS

அமல்படுத்தப்பட்ட நேரம் குறித்த சர்ச்சை

வங்காளத்தின் மாநில காங்கிரஸ் தலைவர் ஆதிர் சௌத்ரியும் இந்தச் சட்டத்தை அமல்படுத்தும் நேரம் குறித்துக் கேள்வி எழுப்பியுள்ளார். “இது தேர்தலுக்கு முன்பு ஏன் அமல்படுத்தப்பட்டது? தேர்தல் ஆதாயம் பெறுவதே இதன் நோக்கம் என்பது தெளிவாகிறது,” என்றார்.

மறுபுறம், வங்க மாநில சிபிஎம் செயலாளர் முகமது சலீம் இது பிரதமர் நரேந்திர மோதி மற்றும் முதல்வர் மமதா பானர்ஜி இடையிலான கூட்டணியின் விளைவு என்று கூறினார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வெறும் காட்சிக்காகவே இந்த சட்டத்தை மமதா எதிர்க்கிறார் என்று கூறினார். மத ரீதியான பிளவு ஏற்படுத்துவதற்காக தேர்தலுக்கு முன்பாக இந்தச் சட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக சலீம் தெரிவித்தார்.

மேற்கு வங்கத்தில் இடதுசாரிகளின் பலம் அதிகரித்து வருவதை மனதில் வைத்து, மத துருவமுனைப்பு மூலம் பாஜக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் இடையே வாக்குகளைப் பிரிக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறுகிறார்.

மாநில பாஜக தலைவர் சுகந்த் மஜும்தார், மத்திய அரசு எப்போதும் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மக்களவைத் தேர்தலுக்கு முன், சிஏஏ அமல்படுத்தப்படும் என உறுதி அளித்தார். தற்போது இந்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தால் அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை.

இதற்கிடையில், இந்தச் சட்டத்தின் அறிவிப்பு வெளியிடப்பட்டது என்ற செய்தி வெளியானதும், வடக்கு 24-பர்கானாஸ் மற்றும் நாடியா மாவட்டங்களில் உள்ள மட்டுவா மக்கள் ஆதிக்கம் செலுத்தும் பகுதிகளில் வாத்தியங்கள் இசைத்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடப்பட்டது.

மட்டுவா சமூகத்தினரின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளதாக போங்கானின் மட்டுவா நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தனு தாக்கூர் தெரிவித்துள்ளார். இந்த சமூத்தினர் மத்தியில் இயற்கையான மகிழ்ச்சி இருக்கிறது.

மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு என்ன லாபம்?

அஸ்ஸாம் மற்றும் மேற்கு வங்கத்தில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை அமல்படுத்துவதால் பாஜகவுக்கு என்ன ஆதாயம்?

பட மூலாதாரம், SANJAY DAS

வடக்கு மற்றும் தெற்கு 24-பர்கானாஸ் மாவட்டங்களைத் தவிர, நாடியா மாவட்டத்திலும் மட்டுவா சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் வாழ்கின்றனர். சுமார் மூன்று கோடி மக்கள்தொகை கொண்ட இந்தச் சமூகம், மாநில சட்டசபையில் குறைந்தபட்சம் 50 இடங்களைப் பெறும் அளவுக்கு ஆதிக்கம் செலுத்துகிறது.

குடியுரிமை மற்றும் பிற அடிப்படை உரிமைகள் தொடர்பாக இந்தச் சமூகத்தில் நிலவும் அச்சம் சிஏஏ அமலாக்கத்துடன் முடிவுக்கு வரும் என்று அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இதனுடன், வரவிருக்கும் தேர்தலில் இதன் காரணமாக அரசியல் சூழ்நிலையும் மாறலாம். மட்டுவா சமூக மக்கள் பாஜக ஆதரவாளர்களாகக் கருதப்படுகின்றனர். இந்தச் சமூகம் நீண்ட காலமாக குடியுரிமைச் சட்டத்தைக் கோரி வருகிறது.

பிரதமர் நரேந்திர மோதி 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு சற்று முன்பு, மார்ச் 17, 2021 அன்று வங்கதேசத்தில் உள்ள ஒரகண்டி என்ற மட்டுவா மக்கள் வாழும் இடத்திற்குச் சென்றிருந்தார். இது தேர்தல் சுற்றுப் பயணம் எனவும், மட்டுவா பிரிவினரை கட்சி பக்கம் ஈர்ப்பதற்காகவே அவர் இந்தச் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டதாகவும் சிலர் கூறுகின்றனர்.

நாடு சுதந்திரம் அடைந்த பிறகு இந்தப் பிரிவைச் சேர்ந்தவர்கள் அங்கிருந்து வந்து மேற்கு வங்க மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் குடியேறினர்.

மட்டுவா சமூகத்தின் மற்றொரு தலைவர், "இந்தச் சட்டத்தின் மூலம், மட்டுவா சமூகம் உண்மையான சுதந்திரத்தைப் பெற்றுள்ளது. நாங்கள் நீண்ட காலமாக அரசியல் விளையாட்டுகளுக்குப் பலியானோம். இப்போது எங்கள் வருங்கால சந்ததியினர் எந்தக் கவலையும் இல்லாமல் இங்கு வாழலாம்," என்றார்.

ஆனால் திரிணாமுல் காங்கிரஸின் மாநிலங்களவை உறுப்பினரும், மட்டுவா சமூகத்தின் தலைவருமான மமதா பாலா தாக்கூர் கூறுகையில், "நாங்கள் ஏற்கெனவே இந்த நாட்டின் குடிமக்களாக இருக்கிறோம். சிஏஏ படிவத்தைப் பூர்த்தி செய்தவுடன் எங்கள் மக்கள் ஏற்கெனவே தங்களுக்கு இருக்கும் குடியிரிமை அந்தஸ்தை இழப்பார்கள். அதனால் இந்த விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்," என்றார்.

அசாமில் என்ன நிலைமை?

அஸ்ஸாம் மற்றும் மேற்கு வங்கத்தில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை அமல்படுத்துவதால் பாஜகவுக்கு என்ன ஆதாயம்?

பட மூலாதாரம், DILIP KUMAR SHARMA

குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகு, அசாம் மற்றும் பல வடகிழக்கு மாநிலங்களில் உள்ள பழங்குடியினர் அமைப்புகள் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.

அசாமின் மிகவும் செல்வாக்குமிக்க மாணவர் அமைப்பான அனைத்து அசாம் மாணவர் சங்கம், சிஏஏ விதிகளின் அறிவிப்பு வெளியிடப்பட்ட பின்னர் திங்கள்கிழமை மாலை அச்சட்டத்தின் நகல்களை எரித்துத் தனது எதிர்ப்பை வெளிப்படுத்தியது.

சிஏஏ-வுக்கு எதிரான அனைத்து அசாம் மாணவர் சங்கத்தின் இந்த எதிர்ப்பு இயக்கத்தில் 30 பழங்குடி அமைப்புகளும் இணைந்துள்ளன. அசாமில் காங்கிரஸ் தலைமையில் உருவாக்கப்பட்ட 16 அரசியல் கட்சிகளின் கூட்டு எதிர்க்கட்சி தளம் முழு மாநிலத்திலும் சிஏஏ-வுக்கு எதிராக போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளது.

உண்மையில், இந்தியாவில் இந்த மாதம் மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட உள்ளது. இதற்கு சில நாட்களுக்கு முன்பு, சிஏஏ அமலாக்கப்பட்டதால் நாட்டின் அரசியல் சூழல் மிகவும் சூடாகிவிட்டது.

கடந்த 2019ஆம் ஆண்டைப் போல் இந்த முறையும் சிஏஏவுக்கு எதிராக பெரிய அளவில் மக்கள் போராட்டம் நடத்தினால் பாஜகவுக்கு அது பின்னடைவாக அமையும் என்று அசாமின் அரசியலைப் புரிந்து கொண்ட வல்லுநர்கள் கூறுகின்றனர்.

அசாமில் உள்ள 14 மக்களவைத் தொகுதிகளில், இம்முறை 11 இடங்களில் பாஜக போட்டியிடுகிறது. கடந்த தேர்தலில், அக்கட்சி 9 இடங்களில் வெற்றி பெற்றது.

அஸ்ஸாம் மற்றும் மேற்கு வங்கத்தில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை அமல்படுத்துவதால் பாஜகவுக்கு என்ன ஆதாயம்?

பட மூலாதாரம், DILIP KUMAR SHARMA

அசாமில் பாஜக-வின் தேர்தல் கணக்கு என்ன?

ஆனால், 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் உருவாக்கப்பட்ட சிஏஏ சட்டத்தைச் செயல்படுத்த பாஜக ஏன் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக எடுத்துக்கொண்டது, மக்களவைத் தேர்தல் அறிவிப்புக்குச் சற்று முன் இந்த சட்ட விதிகளின் அறிவிப்பு ஏன் வெளியிடப்பட்டது, என்ற கேள்விகள் எழுப்பப்படுகின்றன.

பல தசாப்தங்களாக அசாம் அரசியலைப் பின்தொடர்ந்து வரும் மூத்த பத்திரிக்கையாளர் பைகுந்த் நாத் கோஸ்வாமி, பாஜகவின் தேர்தல் கணக்கில் சிஏஏ-வை அமல்படுத்த இதுவே சரியான நேரம் என்கிறார்.

இந்தத் தேர்தல் கணக்கு குறித்து மேலும் விளக்கிய கோஸ்வாமி, “400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவோம் என்று பேசிய பாஜக, தென்னிந்தியாவில் இருந்து ஒடிசாவின் பிஜு ஜனதா தளம் வரை அனைவரையும் தன்னோடு இணைத்துக்கொள்ள முயன்றது. இது பாஜக-வுக்கு வெற்றி பெறுவோமா என்ற பயம் இருப்பதைக் காட்டுகிறது," என்றார்.

“ஆனால் பாஜக எந்த இழப்பையும் எதிர்கொள்ள விரும்பவில்லை. எனவே, மேற்கு வங்கத்தின் மட்டுவா சமூகம், மற்றும் அசாமில் உள்ள இந்து பெங்காலி வாக்குகள் இரண்டையும் சிஏஏ மூலம் கவர முயற்சி செய்கிறது. லட்சக்கணக்கான இந்து பெங்காலி மக்களின் பெயர்கள் என்.ஆர்.சி.யில் இல்லை. இவர்கள் பா.ஜ.க.விடம் இருந்து வெளிநாட்டினர் தீர்ப்பாயத்தின் நடவடிக்கையை எதிர்கொள்கின்றனர். அதனால் அவர்கள் கோபமடைந்தனர். இப்போது தேர்தல்களில் சிஏஏ மூலம் இவர்களுக்கு குடியுரிமை வழங்குவது குறித்து பேச்சு நடத்தப்படும்,” என்றார்.

கடந்த 2011ஆம் ஆண்டு நடத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, அசாமின் 3 கோடியே 12 லட்சம் மக்கள் தொகையில், 70 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்து வங்காளிகள். அசாமிய இந்துக்களுக்கு அடுத்தபடியாக பெங்காலி இந்துக்கள் மாநிலத்தில் இரண்டாவது பெரிய இந்து சமூகம். அசாம் சட்டமன்றத்தின் காங்கிரஸ் கட்சியின் எதிர்க்கட்சித் தலைவர் தேவ்ரத் சைகியா கூறுகையில், பாஜக தனது அரசியல் ஆதாயங்களுக்காக மட்டுமே அசாம் மக்கள் மீது சிஏஏ-வை விதித்துள்ளது, என்றார்.

தேவ்ரத் சைகியா மேலும் கூறுகையில், "சிஏஏ-வை அமல்படுத்துவதன் மூலம் அசாம் மக்களின் நிலம், மொழி மற்றும் கலாசாரத்தைப் பாதுகாப்போம் என்ற வாக்குறுதியை பாஜக உடைத்துவிட்டது. சில வாக்குகளைப் பெறுவதற்காக, 2014 வரை இங்கு வந்த வெளிநாட்டினரை அசாமில் தங்கி இருக்குமாறு பாஜக கேட்டுக் கொண்டுள்ளது,” என்றார்.

பாஜக, தனக்கு மக்கள் ஆதரவு இருப்பதாகவும், அதற்கேற்பவே அனைத்து முடிவுகளும் எடுக்கப்படுவதாகவும் கூறுகிறது. அசாம் பிரதேச பாஜக மூத்த தலைவர் விஜய் குமார் குப்தா கூறும்போது, “அசாம் மக்கள் பாஜகவுக்கு ஆதரவாக இருக்கும் நிலையில், ஓரிரு அமைப்புகள் சிஏஏ-வுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றன. 2019இல் ஓர் இயக்கம் இருந்தது, ஆனால் 2021 சட்டமன்றத் தேர்தலில், அசாம் மக்கள் பாஜகவை ஆதரித்தனர்,” என்றார்.

அசாம் இயக்கம் சுமார் 6 ஆண்டுகள் நீடித்தது. 1971ஆம் ஆண்டு மார்ச் 24ஆம் தேதிக்குப் பிறகு அம்மாநிலத்திற்கு வந்து குடியேறுபவர்கள் வெளிநாட்டினராக ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னர் 1985இல் இந்திய அரசுடன் செய்யப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் என்.ஆர்.சி உருவாக்கப்பட்டது.

ஆனால், சிஏஏ நடைமுறைப்படுத்தப்பட்டதன் மூலம், அசாமுக்கு 2014 வரை வந்த வெளிநாட்டுக் குடிமக்கள் இந்திய குடியுரிமை பெறுவார்கள். சிஏஏ-வின் கீழ், 2014ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதிக்கு முன் பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு வந்த இந்து, சீக்கிய, பௌத்த, ஜெயின், பார்சி மற்றும் கிறிஸ்தவ சமூகங்களுக்கு குடியுரிமை வழங்கப்படும்.

அஸ்ஸாம் மற்றும் மேற்கு வங்கத்தில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை அமல்படுத்துவதால் பாஜகவுக்கு என்ன ஆதாயம்?

பட மூலாதாரம், DILIP KUMAR SHARMA

அஸ்ஸாமில் பாஜக எப்படி பலன் அடையும்?

பிபிசியிடம் பேசிய அனைத்து அசாம் மாணவர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சங்கர் ஜோதி பருவா, "சிஏஏ விதிகளின் அறிவிப்பை வெளியிட்டதன் மூலம் மத்திய அரசு அசாம் சமூகத்தை ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது. சிஏஏ அசாமின் கலாசார மற்றும் மக்கள்தொகை கட்டமைப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ளது. அசாம் மக்கள் சிஏஏ-வை ஒருபோதும் ஏற்க மாட்டோம். ஜனநாயக ரீதியிலும் அமைதியான முறையிலும் அதற்கு எதிராகத் தொடர்ந்து போராட்டம் நடத்துவோம். இந்தச் சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம்,” என்றார்.

மக்களவைத் தேர்தல் வரவிருப்பதை முன்னிட்டும், மாநிலத்தில் நிலவும் பதற்றமான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டும், போராட்டங்களைத் தடுக்க, அசாமின் பல மாவட்டங்களில், போலீசார் தடுப்புகளைத் தயார் செய்துள்ளனர்.

பெயர் வெளியிட வேண்டாம் என்ற கோரிக்கையுடம் பிபிசியிடம் பேசிய அசாம் மாநிலத்தின் காவல்துறை அதிகாரி ஒருவர், சிஏஏ-வுக்கு எதிராக மாநிலத்தில் சில அமைப்புகள் போராட்டத்தை அறிவித்ததைக் கருத்தில் கொண்டு, உள்ளூர் காவல் நிலையங்களின் காலி வளாகங்கள் தற்காலிக சிறைகளாகத் தயார் செய்யப்பட்டுள்ளன, என்றார்.

கடந்த 2019ஆம் ஆண்டு இயக்கத்துடன் ஒப்பிடும்போது இந்த முறை இங்கு பூர்வீக மக்களை ஒன்றிணைப்பது குறித்த கேள்விக்கு பதிலளிக்கும் அனைத்து அசாம் மாணவர் சங்கத்தின் பொதுச் செயலாளர், "அசாமின் பூர்வீக மக்கள் சிஏஏ மீது மிகவும் கோபமாக உள்ளனர். கடந்த போராட்டத்தின்போது மக்களே தெருக்களில் இறங்கினர். இம்முறையும் மக்கள் அமைதியாக இருக்க மாட்டார்கள். சிஏஏ-வுக்கு எதிராக 30 பழங்குடியினரின் அமைப்புகள் தெருக்களில் இறங்கி போராட்டம் நடத்தும். மக்கள் தங்கள் இருப்புக்காக கண்டிப்பாக குரல் எழுப்புவார்கள் என்று நாங்கள் முழு நம்பிக்கையுடன் உள்ளோம்,” என்றார்.

கடந்த 20 ஆண்டுகளாக அசாம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களின் அரசியலைப் பின்தொடர்ந்து வரும் மூத்த பத்திரிகையாளர் சமீர் கர் புர்கயஸ்தா, பாஜக இப்போது சிஏஏ-வை அமல்படுத்தவில்லை என்றால், அசாம் மற்றும் மேற்கு மாநிலங்களில் கட்சிக்கு நஷ்டம் ஏற்பட்டிருக்கும் என்று நம்புகிறார். குறிப்பாக மேற்கு வங்கத்தில் இந்து வங்காளி வாக்காளர்கள் பாஜக-வை ஆதரித்திருக்க மாட்டர்கள் என்கிறார்.

மேலும் பேசிய அவர், "இந்து வங்காள மக்களின் குடியுரிமை ஆபத்தில் இருந்ததால், அசாமில் என்.ஆர்.சி அங்கீகரிக்கப்படவில்லை. இந்த முறை பாஜக சிஏஏ-வை அமல்படுத்தவில்லை என்றால், இந்து வங்காள வாக்காளர்கள் அவர்களுக்கு எதிராகத் திரும்பியிருப்பார்கள்,” என்றார்.

மூத்த பத்திரிக்கையாளர் பைகுந்த் நாத் கூறுகையில், அசாமில் சிஏஏ-வை அமல்படுத்துவதன் மூலம் அசாம் மக்களின் வாக்குகளில் பாஜகவுக்கு பெரிய இழப்பு ஏற்படாது, என்றார்.

மேலும் பேசிய அவர், "சிஏஏ தொடர்பாக மேல் மற்றும் மத்திய அசாமின் சுமார் 8 இடங்களில் அசாம் மக்களின் உணர்வுகள் செல்வாக்கு செலுத்துகின்றன. ஆனால் 2019இல் நடந்த பெரிய அளவிலான போராட்டத்தில் ரயில் நிலையங்கள் எரிக்கப்பட்டு மக்கள் உயிரிழந்தனர். இம்முறை அப்படியொரு போராட்டம் நடப்பது கஷ்டம்," என்றார்.

மேலும், “சிஏஏ-வுக்கு எதிராக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படாத வரை, போராட்டங்களால் மட்டும் சூழல் மாறாது. சமீப காலமாக பாஜக பல்வேறு திட்டங்களை, குறிப்பாக பெண் வாக்காளர்களுக்கு அளித்துள்ளது. அதனால் தேர்தலில் அக்கட்சிக்கு பலன் கிடைக்கக் கூடும்,” என்றார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)