தோனி அசத்திய விஷயத்தில் கோட்டை விடும் ருதுராஜ் - சிஎஸ்கே பிளேஆஃப் செல்வதில் புதிய சிக்கல்

IPL 2024: GT vs CSK

பட மூலாதாரம், SPORTZPICS

    • எழுதியவர், போத்திராஜ்
    • பதவி, பிபிசி தமிழ்

ஐபிஎல் டி20 தொடர் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. எந்தெந்த அணிகள் ப்ளே ஆஃப் செல்லும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தார்களோ அந்த அணிகள்செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கடைசி இடத்தில் இருந்த அணி ப்ளே ஆஃப் செல்வதற்கான வாய்ப்பை உருவாக்கி வருகிறது.

இதுபோன்ற சுவரஸ்யமான திருப்பங்கள் ஒவ்வொரு போட்டியின் முடிவிலும் கிடைத்து வருகின்றன. நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் ப்ளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றுவிடும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், நேற்றைய தோல்வியால், சிக்கல் ஏற்பட்டுள்ளது.

சிஎஸ்கே அணிக்கு இருக்கும் ஒரே பலம் நிகர ரன்ரேட் மட்டும்தான். அந்த நிகர ரன்ரேட்டை மட்டும் வைத்துக்கொண்டு அடுத்த இரு போட்டிகளிலும் வெல்ல வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கிறது.

ஒரு கட்டத்தில் 3வது இடத்தை அல்லது 2வது இடத்தைப் பிடிக்க சிஎஸ்கே அணிக்கு வாய்ப்பு இருப்பதாகக் கணிக்கப்பட்ட நிலையில் இப்போது 4வது இடத்தைப் பிடிக்கவே கடும் பிரயத்தனம் செய்ய வேண்டியதாகி இருக்கிறது.

ஆமதாபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 59வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 35 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது குஜராத் டைட்டன்ஸ் அணி.

முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 231 ரன்கள் சேர்த்தது. 232 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சிஎஸ்கே அணி 8 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் சேர்த்து 35 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

சிஎஸ்கே-வுக்கு ப்ளே ஆஃப் வாய்ப்பு எப்படி?

IPL 2024: GT vs CSK

பட மூலாதாரம், SPOTZPICS

இந்தத் தோல்வியால் சிஎஸ்கே அணி ப்ளே ஆஃப் செல்வதற்கான பாதை குறுகியுள்ளது. சிஎஸ்கே அணி தற்போது 12 போட்டிகளில் 6 வெற்றி, 6 தோல்வி என 12 புள்ளிகளுடன் 4வது இடத்தில் இருக்கிறது. சிஎஸ்கேவுக்கு இணையாக டெல்லி கேபிடல்ஸ், லக்னெள அணிகளும் தலா 12 புள்ளிகள் பெற்றுள்ளன.

ஆனால், இந்த இரு அணிகளின் நிகர ரன்ரேட் மைனஸில் இருப்பதால், சிஎஸ்கே அணியைவிட பின்தங்கியுள்ளன. ஆனால் சிஎஸ்கேவின் நிகர ரன்ரேட் இந்தத் தோல்வியால்கூட பெரிதாக பாதிக்காமல் நிகர ரன்ரேட் 0.491 என வலுவாக இருப்பதால் 4வது இடத்தைப் பிடித்துள்ளது.

சிஎஸ்கே, அடுத்து வரும் 2 ஆட்டங்களிலும் கட்டாயம் வெற்றி பெற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. ராஜஸ்தான் அணியுடன் வரும் ஞாயிற்றுக்கிழமை சென்னையிலும், அதன்பின் ஆர்சிபியுடன் பெங்களூருவிலும் சிஎஸ்கே மோதுகிறது. இந்த இரு அணிகளும் தற்போது நல்ல ஃபார்மில் இருப்பதால், இரு அணிகளையும் வீழ்த்துவது சிஎஸ்கே அணிக்கு சவாலாக இருக்கும்.

ப்ளே ஆஃப் வாய்ப்புக்கான சாத்தியங்கள் என்ன?

ஒருவேளை சிஎஸ்கே அணி தனக்கிருக்கும் 2 ஆட்டங்களில் ஒன்றில் வென்று ஒன்றில் தோற்றால் 14 புள்ளிகளுடன் முடிக்கும். அப்போது, டெல்லி கேபிடல்ஸ், லக்னெள அணிகள் தங்களுக்குரிய 2 ஆட்டங்களிலும் வென்று 16 புள்ளிகள் பெற்றிருந்தால், அந்த இரு அணிகளில் எந்த அணியின் நிகர ரன்ரேட் சிறப்பாக இருக்கிறதோ அந்த அணி 4வது இடத்தைப் பிடிக்கும்.

ஒருவேளை லக்னெள, டெல்லி அணிகள் தங்களுக்கு இருக்கும் 2 ஆட்டங்களில் ஒன்றில் வென்று, ஒன்றில் தோற்று தலா 14 புள்ளிகளுடன் முடித்து, ஆர்சிபி அணியும் 14 புள்ளிகளுடன் முடித்து, குஜராத் அணியும் 14 புள்ளிகளுடன் முடித்தால், கடைசி இடத்துக்கு சிஎஸ்கே, டெல்லி, லக்னெள, ஆர்சிபி, குஜராத் ஆகிய 5 அணிகள் போட்டியிடும், நிகர ரன்ரேட் அடிப்படையில் எந்த அணி உயர்வாக இருக்கிறதோ அந்த அணி ப்ளே ஆஃப் வாய்ப்பைப் பெறும்.

இந்தக் கணக்கீட்டின்படி, சிஎஸ்கேவுக்கு நிகர ரன்ரேட்டில் சவாலாக இருப்பது ஆர்சிபி மட்டும்தான். ஆர்சிபி 0.217 என்ற அளவில் இருப்பதால் இன்னும் ஒரு வெற்றி பெற்றாலே நிகர ரன்ரேட் சிஎஸ்கேவுக்கு இணையாக வந்துவிடும். அப்போது 14 புள்ளிகளுடன் போட்டியிடும்போது, சிஎஸ்கே அல்லது ஆர்சிபி என்ற போட்டியும் வரலாம்.

குஜராத் அணிக்கு வாய்ப்பு குறைவு

IPL 2024: GT vs CSK

பட மூலாதாரம், SPORTZPICS

குஜராத் டைட்டன்ஸ் அணி இந்த வெற்றியால் 12 போட்டிகளில் 5 வெற்றி, 7 தோல்வி என 10 புள்ளிகளுடன் 8வது இடத்தில் இருக்கிறது, நிகர ரன்ரேட்டில் மைனஸ் 1.063 எனப் பின்தங்கியுள்ளது. குஜராத் அணி தனக்கிருக்கும் 2 லீக் ஆட்டங்களில் வென்றால் 14 புள்ளிகள் பெறலாம்.

ஆனால், நிகர ரன்ரேட்தான் அந்த அணிக்குப் பெரிய சிக்கலாக உள்ளது. நிகர ரன்ரேட்டை உயர்த்தும் அளவுக்கு பிரமாண்ட வெற்றியைப் பெற்றால், குஜராத் அணி ப்ளே ஆஃப் செல்வதற்கான வாய்ப்புகள் பிரகாசமாகலாம், அது மட்டுமல்லாமல், மற்ற அணிகளின் முடிவுகளும் சாதகமாக அமைந்தால்தான் அது சாத்தியம்.

IPL 2024: GT vs CSK

பட மூலாதாரம், SPORTZPICS

போட்டியை ஆக்கிரமித்த கில், சுதர்சன்

குஜராத் அணியின் வெற்றிக்கு அடித்தளமிட்டவர்கள் தொடக்க ஆட்டக்காரர்கள் கேப்டன் சுப்மன் கில், தமிழக வீரர் சாய் சுதர்சன் இருவரும்தான். ஒட்டுமொத்த ஆட்டத்திலும் இருவரும் ஆதிக்கம் செலுத்தி விளையாடி பெரிய ஸ்கோருக்கு அணியைக் கொண்டு சென்றனர்.

ஐபிஎல் தொடரில் தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் சதமே சதம் அடித்த 3வது ஜோடி என்ற பெருமையைப் பெற்றனர். இதற்கு முன் விராட் கோலி, ஏபிடி ஜோடி 2016இல் குஜராத் லயன்ஸுக்கு எதிராகவும், ஆர்சிபிக்கு எதிராக 2019இல் வார்னர், பேர்ஸ்டோ ஜோடியும் சதம் அடித்திருந்தனர்.

கேப்டன் சுப்மன் கில் 51 பந்துகளில் 103 ரன்கள் சேர்த்து (7 சிக்ஸர், 5 பவுண்டரி) ஆட்டமிழந்து ஆட்டநாயகன் விருது பெற்றார். இவருக்குத் துணையாக ஆடிய தமிழக வீரர் சாய் சுதர்சன் 55 பந்துகளில் 105 ரன்கள் சேர்த்து (6 சிக்ஸர், 9 பவுண்டரி) ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு இருவரும் 210 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.

IPL 2024: GT vs CSK

பட மூலாதாரம், SPORTZPICS

சிஎஸ்கே அணிக்கு முதல் விக்கெட்டுக்கு 200 ரன்களுக்கு மேல் குஜராத் அணி சேர்த்தது என்பது ஐபிஎல் வரலாற்றில் தொடக்க ஆட்டக்காரர்கள் சேர்ப்பது 2வது முறை. இதற்கு முன் 2022இல் கொல்கத்தா அணிக்கு எதிராக கே.எல்.ராகுல், டீகாக் ஜோடி 210 ரன்களுக்கு மேல் சேர்த்திருந்தனர். அது மட்டுமல்லாமல் இது சிஎஸ்கே அணிக்கு எதிராக தொடக்க ஜோடி சேர்த்த 2வது அதிகபட்ச ஸ்கோராகும்.

அது மட்டுமல்லாமல் ஆமதாபாத்தில் குஜராத் அணி சேர்த்த 231 ரன்கள் என்பது ஐபிஎல் தொடரில் அந்த அணியின் 2வது அதிகபட்ச ஸ்கோர். இதற்கு முன் கடந்த சீசனில் மும்பை அணிக்கு எதிராக 233 ரன்கள் சேர்த்திருந்தது குஜராத் அணி.

சிஎஸ்கே அணிக்கு எதிராக தொடக்க ஜோடி 150 ரன்களுக்கு மேல் சாய் சுதர்சன், கில் சேர்த்ததுதான் அதிகபட்சம். இதற்கு முன் 2015இல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ரஹானே, வாட்சன் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 144 ரன்கள் சேர்த்திருந்ததுதான் சிஎஸ்கே அணிக்கு எதிராக அதிகபட்சமாக இருந்தது.

கேப்டன் சுப்மன் கில், சாய் சுதர்சன் இருவரும் ஆட்டம் முழுவதையும் ஆக்கிரமித்து பேட் செய்தனர். சான்ட்னர் வீசிய முதல் ஓவரிலேயே கில் ஒரு சிக்ஸர், பவுண்டரி என 14 ரன்கள் சேர்த்து அதிரடியாகத் தொடங்கினார், ஜடேஜா ஓவரை வெளுத்த சாய் சுதர்சன் 21 ரன்கள் சேர்த்து சுழற்பந்துவீச்சாளர்களை மிரட்டினார். சுதர்சன் 32 பந்துகளில் அரை சதத்தையும், கில் 25 பந்துகளில் அரை சதத்தையும் நிறைவு செய்தனர்.

ராக்கெட் வேகத்தில் ரன்ரேட்

IPL 2024: GT vs CSK

பட மூலாதாரம், SPORTZPICS

பவர்ப்ளே ஓவரில் குஜராத் அணி, விக்கெட் இழப்பின்றி 58 ரன்கள் சேர்த்தது. ஆனால் குஜராத் அணி ஸ்கோரையும், ரன்ரேட்டையும் உயர்த்தியது 7 முதல் 15வது ஓவர்களுக்கு இடையேதான்.

இந்த 8 ஓவர்களில் மட்டும் 100 ரன்களுக்கு மேல் சேர்த்தனர். குறிப்பாக 9 முதல் 14 ஓவர்களுக்கு இடையே மட்டும் 100 ரன்கள் சேர்த்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. பவர்ப்ளே முடிவில் 58 ரன்கள் இருந்த குஜராத் அணி 9.3 ஓவர்களில் 100 ரன்களையும், 12.4 ஓவர்களில் 150 ரன்களையும் எட்டியது. 16.2 ஓவர்களில் 200ரன்களை குஜராத் அணி எட்டியது.

சாய் சுதர்சன் 50 பந்துகளில் தனது முதல் ஐபிஎல் சதத்தை நிறைவு செய்தார், கில் 50 பந்துகளில் தனது 2வது சதத்தை நிறைவு செய்தார். இருவரையும் 18வது ஓவர் வரை சிஎஸ்கே பந்தவீச்சாளர்களால் ஆட்டமிழக்கச் செய்ய முடியவில்லை.

தேஷ் பாண்டே வீசிய 18வது ஓவரில் ஆஃப் சைடு விலக்கி வீசப்பட்ட பந்தை விரட்டி அடிக்க முற்பட்டு சாய் சுதர்சன் 104 ரன்களில் ஆட்டமிழந்தார். அதே ஓவரில் கில் 103 ரன்கள் சேர்த்தநிலையில் துபேயிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். டெத் ஓவர்களை மட்டும் ஓரளவுக்கு கட்டுக்கோப்பாக சிஎஸ்கே பந்துவீச்சாளர் வீசியதால், 30 ரன்கள் மட்டும் குஜராத் அணியால் சேர்க்க முடிந்தது.

சிஎஸ்கே அணி தோற்றது ஏன்? செய்த தவறுகள் என்ன?

IPL 2024: GT vs CSK

பட மூலாதாரம், SPORTZPICS

ஐபிஎல்லைப் பொருத்தவரை சிஎஸ்கே அணி சுழற்பந்து வீச்சில் எப்போதுமே அசத்தக் கூடியது. முன்னாள் கேப்டன் தோனி சுழற்பந்துவீச்சாளர்களை சாதுர்யமாக பயன்படுத்தி எதிரணிகளுக்கு நெருக்கடி கொடுப்பதில் கைதேர்ந்தவர். ஆனால், சிஎஸ்கே அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் பொறுப்பேற்றதில் இருந்து சுழற்பந்துவீச்சை சரியாகப் பயன்படுத்துவதில்லை என்ற குற்றசாட்டு இருந்து வருகிறது. நேற்றைய ஆட்டத்திலும் அதையே ஒரு விமர்சனமாக வர்ணனையாளர்கள் முன்வைத்தனர்.

புள்ளிப் பட்டியலில் முதல் இரு இடங்களில் இருக்கும் ராஜஸ்தான், கொல்கத்தா இரு அணிகளுமே சுழற்பந்துவீச்சை சிறப்பாகப் பயன்படுத்தி அந்த இடத்தை அடைந்தவை. ஆனால் சிஎஸ்கே அணியில் சான்ட்னர், ஜடேஜா, மொயின் அலி, ரவீந்திரா ஆகிய 4 சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் நேற்றைய ஆட்டத்தில் சரியாகப் பயன்படுத்தப்படவில்லை.

மொயீன் அலி சர்வதேச அளவில் சிறப்பாகப் பந்துவீசி விக்கெட்டுகளை வீழ்த்தியவர், டெஸ்ட் போட்டிகளில் பந்து வீசிய நீண்ட அனுபவமுடையவர். ஆனால், இரு இடதுகை பேட்டர்கள் களத்தை 15 ஓவர்களுக்கு மேலாக ஆக்கிரமித்து விளையாடும்போது, அவர்களை வீழ்த்த ஆஃப் ஸ்பின்னரான மொயீன் அலியை ஏன் பயன்படுத்தவில்லை என்பது குறித்து வர்ணனையாளர்கள் நேற்று கேள்வி எழுப்பினர்.

ஜடேஜா, சான்ட்னர் ஓவர்களில் ரன்கள் அதிகமாகச் சென்றவுடன் இருவருக்கும் 2 ஓவர்களோடு கெய்க்வாட் நிறுத்தினார், ஆனால் இருவருமே விக்கெட் டேக்கர்கள் என்பதை மறந்துவிட்டு, டேரல் மிட்ஷெலுக்கு ஓவரை வழங்கினார். ஆனால், மிட்ஷெல் 4 ஓவர்கள் வீசி 52 ரன்கள் கொடுத்தார். சிமர்ஜித் சிங் 4 ஓவர்கள் வீசி 60 ரன்களை வாரி வழங்கினார். இவர்கள் இருவர் மட்டுமே 112 ரன்களை வழங்கினர்.

'ஃபீல்டிங்கில் கோட்டைவிட்டோம்'

IPL 2024: GT vs CSK

பட மூலாதாரம், SPORTZPICS

தோல்வி குறித்து சிஎஸ்கே கேப்டன் கெய்க்வாட் கூறுகையில், “எங்களின் ஃபீல்டிங் எதிர்பார்த்த அளவு சிறப்பாக இல்லை, 10 முதல் 15 ரன்கள் கூடுதலாகக் கொடுத்துவிட்டோம். மற்ற வகையில் சிறப்பாகவே செயல்பட்டோம். அதிலும் மிட்ஷெல், மொயீன் அலி ஆட்டம் அற்புதமாக இருந்தது. எங்களின் அடுத்த ஆட்டம் சென்னையில் நடக்கிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் போன்ற வலிமையான அணிக்கு எதிரான ஆட்டம் கடினமாக இருக்கும் என எதிர்பார்க்கிறேன்,” எனத் தெரிவித்தார்.

அதேபோல பவர்ப்ளேவில் ரன்களை சேர்க்கவும் சிஎஸ்கே அணி தவறவிட்டது. பவர்ப்ளே ஓவர்களுக்குள் ரஹானே(1), ரவீந்திரா(1), கெய்க்வாட்(0) என 3 முக்கிய பேட்டர்களை 10 ரன்களுக்குள் இழந்தது. குறிப்பாக கெய்க்வாட் இந்த சீசன் முழுவதும் தொடக்க வீரராகக் களமிறங்கி சிறப்பாக பேட் செய்து வரும்போது, திடீரென ஒன்டவுனில் களமிறங்கியது ஏன் என்ற கேள்வியும் கிரிக்கெட் விமர்சகர்களால் முன்வைக்கப்பட்டது. ரஹானே இந்த சீசன் முழுவதும் ஃபார்மில் இல்லை, இருந்தும் தொடர்ந்து அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு வருவது ஏன் எனத் தெரியவில்லை.

டேரல் மிட்ஷெல்-மொயீன் அலி இருவரும் 109 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்ததுதான் சிஎஸ்கே அணியின் ஆறுதலான அம்சமாகப் பார்க்கப்படுகிறது. மொயீன் அலி 31 பந்துகளில் அரைசதத்தையும், டேரல் மிட்ஷெல் 27 பந்துகளில் அரைசதத்தையும் அடித்தனர்.

இருவரின் ஆட்டமும் நம்பிக்கையை ஏற்படுத்திய நிலையில் அதை மோகித் சர்மா உடைத்தார். மோகித் சர்மா பந்துவீச வராத வரைக்கும் சிஎஸ்கே ஆட்டத்தின் மீது ரசிகர்களுக்கு நம்பிக்கை இருந்தது. ஆனால், கடந்த 3 ஆட்டங்களாக மோசமாகப் பந்துவீசிய மோகித் சர்மா நேற்று சிஎஸ்கே பேட்டர்களை மிரட்டினார். தனது பந்துவீச்சு வேரியேஷனில் அடுத்தடுத்த ஓவர்களில் விக்கெட்டுகளை வீழ்த்தி திணறடித்தார்.

மிட்ஷெல், மொயீன் அலி, ஷிவம் துபே ஆகிய 3 பேரின் விக்கெட்டையும் தனது ஸ்லோ பால், நக்குல் பால் தந்திரத்தால் மோகித் சர்மா வீழ்த்தினார். மிட்ஷெல் 63 ரன்களிலும், மொயீன்ன் அலி 56 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இருவர் சேர்த்த ஸ்கோர்தான் சிஎஸ்கே அணியில் அதிகபட்சமாகும்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)