மும்பையின் ஆறுதல் வெற்றியால் சென்னைக்குக் கிடைத்த நன்மை

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், க.போத்திராஜ்
- பதவி, பிபிசி தமிழுக்காக
ஐபிஎல் டி20 தொடரில் ப்ளே ஆஃப் சுற்று நெருங்க, நெருங்க ஒவ்வொரு போட்டி முடிந்தபின்பும் புள்ளிப்பட்டியலில் அடுத்தடுத்து மாற்றங்கள் நடந்து வருகின்றன. அப்படியொரு போட்டிதான் திங்கள்கிழமை நடந்திருக்கிறது. மும்பையின் ஆறுதல் வெற்றி, சன்ரைசர்ஸ் அணிக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது.
மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 55-வது ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது மும்பை இந்தியன்ஸ் அணி.
முதலில் பேட் செய்த சன்ரைசர்ஸ் அணி 8 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்தது. 174 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 16 பந்துகள் மீதமிருக்கையில் 3 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

பட மூலாதாரம், Getty Images
மும்பை அணிக்கு ப்ளே ஆஃப் வாய்ப்பு இருக்கிறதா?
இந்த வெற்றி மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஆறுதலாக மட்டுமே இருக்கும். ஆனால், இந்த வெற்றி சன் ரைசர்ஸ் ப்ளே ஆஃப் சுற்று செல்வதில் பெரிய பிரேக் போடும் விதத்தில் அமைந்துவிட்டது. அதே நேரத்தில் இந்த வெற்றி சிஎஸ்கே உள்ளிட்ட சில அணிகளுக்கு பிளேஆப் கனவை தக்கவைத்துக் கொள்வதற்கு ஒரு வாய்ப்பாக அமைந்திருக்கிறது. மும்பை தோற்றிருந்தால், சிஎஸ்கே புள்ளிப் பட்டியலில் கீழே இறங்கியிருப்பதுடன், பிளேஆப் வாய்ப்பும் கூடுதல் சவாலாக மாறியிருக்கும்.
மும்பை அணி இந்த வெற்றியால் புள்ளிப்பட்டியலில் 9-ஆவது இடத்துக்கு நகர்ந்துள்ளது, 12 போட்டிகளில் 4-ஆவது வெற்றியைப் பதிவுசெய்தாலும் நிகர ரன்ரேட் இன்னும் மைனஸைக் கடக்காமல் 0.212 என்ற அளவில்தான் இருக்கிறது. அடுத்த இரு போட்டிகளிலும் மும்பை அணி பெரிய அளவில் வென்றால்கூட ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்வது பெரிய சந்தேகம்தான். இருப்பினும் மும்பையின் வெற்றிகள் பல அணிகளின் முன்னேற்றத்தில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும்.

பட மூலாதாரம், Getty Images
சன்ரைசர்ஸ் அணிக்கு என்ன சிக்கல்?
இந்த தோல்வி சன்ரைசர்ஸ் அணி ப்ளே ஆஃப் சுற்று செல்வதற்கான பாதையை கடினமாக்கியுள்ளது. முதல் இரு இடங்களை கொல்கத்தா அணி பிடிக்க தேவையான வசதிகளை உருவாக்கிவிட்டது. சன்ரைசர்ஸ் அணி அடுத்துவரும் 3 ஆட்டங்களிலும் கட்டாய வெற்றி பெற வேண்டிய நிலையும், நிகர ரன்ரட்டை உயர்த் வேண்டிய சூழலிலும் இருக்கிறது.
ஏனென்றால் இந்த தோல்வியால் சன்ரைசர்ஸ் அணியின் நிகர ரன்ரேட் மைனசில் சென்று 0.065 ஆகக் குறைந்துவிட்டது. சன்ரைசர்ஸ் அணி 11 போட்டிகளில் 6 வெற்றி, 5 தோல்வி என 12 புள்ளிகளுடன் 4வது இடத்தில் இருக்கிறது.இந்த 4வது இடத்தைத் தக்கவைக்க, சன்ரைசர்ஸ் அணிக்கு அடுத்தடுத்து வெற்றிகள் அவசியம். அதேசமயம் லக்னெள அணி இன்னும் ஒரு போட்டியில் தோற்றால்கூட சன்ரைசர்ஸ் ப்ளே ஆஃப் செல்லும் வாய்ப்பு பிரகாசமடையும்.
புள்ளிப்பட்டியலில் திடீர் மாற்றங்கள்
இன்று டெல்லியில் நடக்கும் ராஜஸ்தான், டெல்லி அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தின் முடிவு புள்ளிப்பட்டியலில் இன்னும் திடீர் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும். ராஜஸ்தான் அணி பிரமாண்ட வெற்றி பெற்றால் 18 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடிக்கும். கொல்கத்தா 2-ஆவது இடம் பிடிக்கும். ஒருவேளை சாதாரண வெற்றியாக அமைந்தாலும், 18 புள்ளிகளுடன் முதலிடம் செல்லும். அதேசமயம், டெல்லி அணி வெற்றி பெற்றால், 12 புள்ளிகளுடன், சிஎஸ்கே, லக்னெள, சன்ரைசர்ஸ் அணிகளுடன் ரேஸில் இணைந்துவிடும்.
மும்பை இந்தியன்ஸ் அணியின் நேற்றைய சேஸிங்கில் வெற்றிக்கு சூர்யகுமார் மட்டுமே முக்கியக் காரணமாக அமைந்தார். 51 பந்துகளில் சதம் அடித்த சூர்யகுமார் யாதவ் 102 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்று ஆட்டநாயகன் விருது வென்றார். ஸ்கைக்கு துணையாக ஆடிய பேட்டர் திலக் வர்மா 37 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இருவரும் 4வது விக்கெட்டுக்கு 79 பந்துகளில் 143 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.

பட மூலாதாரம், Getty Images
டெஸ்ட் போட்டியா அல்லது டி20 போட்டியா?
கடந்த முறை இதே வான்கடே மைதானத்தில் நடந்த ஆட்டத்தில் ரன் திருவிழாவாவை சன்ரைசர்ஸ் அணி நடத்தி, பல புதிய சாதனைகளைப் படைத்தது. ஆனால் இந்த முறை சன்ரைசர்ஸ் அணியை தொடக்கத்தில் இருந்தே கட்டுப்படுத்தி, 173 ரன்களில் மும்பை அணி சுருட்டியது.
ஆனால் 173 ரன்களையும் டிபெண்ட் செய்ய வலுவான பந்துவீச்சு வைத்திருக்கும் சன்ரைசர்ஸ் அணியும் முயன்றது. பேட்டர்களுக்கு சொர்க்கபுரியான வான்ஹடே மைதானத்தில் 173 ரன்களைக் கட்டுப்படுத்துவது எளிதான இலக்கு அல்ல. அதற்கு ஏற்றாற்போல் புதியபந்தில் பந்துவீசி மும்பை பேட்டர்களை புவனேஷ்வர், கம்மின்ஸ், யான்சென் திணறவிட்டனர்.
பனிப்பொழிவால் ஆடுகளம் லேசான நெகிழ்வுத்தன்மை அடைந்ததால், பந்துவீச்சாளர்களால் ஸ்விங்கைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் பந்து பலமுறை பேட்டர்களை கடந்து விக்கெட் கீப்பரிடம் சென்றது. அதிகமான ஸ்விங் ஆகியதால், முதல் 3 ஓவர்களில் சன்ரைசர்ஸ் பந்துவீச்சாளர்கள் 18 உதிரிகளை விட்டனர்.
இதனால் மும்பை அணி முதல் 9 பந்துகளில் அதிரடியாகத் தொடங்கி 29 ரன்களைச் சேர்த்தது. ஆனால், அடுத்தடுத்து சன்ரைசர்ஸ் பந்துவீச்சாளர்கள் நெருக்கடி கொடுத்தனர். முதலில் யான்சென் தனது ஸ்விங் பந்துவீச்சில் இஷான் கிஷன் விக்கெட்டை எடுத்தார்.
அடுத்ததாக கம்மின்ஸின் துல்லியமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ரோஹித் சர்மா ஆட்டமிழந்தார். 3வதாக நமன்திர் புவனேஷ்வர் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார். இதனால், முதல் 9 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்த மும்பை அணி அடுத்த 19 பந்துகளில் 6 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது. 1.3 ஓவரிலிருந்து 4.4 ஓவர்கள்வரை மும்பை அணி ஒரு ரன்கூட எடுக்கவில்லை.
டெஸ்ட் போட்டியில் வீசப்படும் பந்துவீச்சா அல்லது டி20 போட்டியா எனத் தெரியாத அளவுக்கு பந்து ஸ்விங் ஆகின. இதுபோன்ற ஆடுகளத்தில் கம்மின்ஸ், புவனேஷ் பந்துவீச்சைப் பற்றி சொல்லத்தேவையில்லை. இருவரும் தலா ஒரு மெய்டன் ஓவர்களை வீசி திணறவிட்டனர்.
இதனால் ஆட்டம் மும்பையின் கையைவிட்டு சன்ரைசர்ஸ் பக்கம் நழுவுகிறதா என்று வான்கடே ரசிகர்கள் கவலையடைந்தனர். 4வது விக்கெட்டுக்கு சூர்யகுமார், திலக் வர்மா ஜோடி சேர்ந்து ஆட்டத்தை கையில் எடுத்து, அணியைச் சரிவிலிருந்து மீட்டனர்.

பட மூலாதாரம், Getty Images
சூர்யகுமாரின் அதிரடி
சூர்யகுமார் களத்துக்கு வந்தபின் ஆட்டத்தின் போக்கே மாறியது. கம்மின்ஸ், யான்சென் ஓவர்களை சூர்யகுமார் முதலில் குறிவைத்து பவுண்டரிகளை அடித்தார். யான்சென் வீசிய 7-வது ஓவரில் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸரை விளாசினார். நிதானமாகத் தொடங்கிய ஸ்கை 7 பந்துகளில் 4 ரன்கள் என்ற நிலையில் இருந்து, அதன்பின் 14 பந்துகளில் 32 ரன்கள் என்ற நிலைக்கு உயர்ந்தார். பந்துவீச்சில் கிடைத்த துல்லியத்தை அதன்பின் சன்ரைசர்ஸ் அணி இழந்தது. பவப்ப்ளேயில் மும்பை அணி 3 விக்கெட் இழப்புக்கு 52 ரன்கள் சேர்த்தது.
சன்ரைசரஸ் பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை எளிதாக அடித்த சூர்யகுமார் 30 பந்துகளில் அரைசதம் அடித்தார். அதிலும் யான்சென் பந்துவீச்சில் 9பந்துகளைச் சந்தித்த சூர்யகுமார் 32 ரன்களை விளாசினார், அதில் 4 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் அடங்கும். 11.1 ஓவர்ளில் மும்பை அணி 100 ரன்களை எட்டியது.
ஒருகட்டத்தில் சூர்யகுமார் 82 ரன்கள் சேர்த்திருந்தபோது கம்மின்ஸ் வீசிய 17-வது ஓவரில் அடுத்தடுத்து 2பவுண்டரி, சிக்ஸர் விளாசி 96 ரன்களு உயர்ந்தார். நடராஜன் வீசிய 18-வது ஓவரில் லாங்க் ஆஃப் திசையில் சிக்ஸர்விளாசி சதத்தை நிறைவு செய்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். ஐபிஎல் தொடரில் சூர்யகுமார் 2வது சதத்தையும், டி20 போட்டிகளில் 6வது சதத்தையும் நிறைவு செய்து 102 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
ஆட்டத்தின் முக்கியமான வித்தியாசம் என்னவென்றால், சன்ரைசர்ஸ் அணி பேட்டர்கள் அனைவரும் சேர்ந்து 12 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் அடித்தனர். ஆனால் நேற்று சூர்யகுமார் ஒருவரே 12 பவுண்டரிகள், 6சிக்ஸர்கள் விளாசினார்.

பட மூலாதாரம், Getty Images
‘ப்ளே ஆஃப் கணக்குத் தெரியாது’
மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறுகையில் “ ப்ளேஆஃப் செல்வதற்கான கணித சூழல்கள் எனக்குத் தெரியாது. இந்த வெற்றியால் மகிழ்ச்சி. கூடுதலாக 20 ரன்கள் கொடுத்துவிட்டோம், இருப்பினும் பேட்டிங் சிறப்பாக அமைந்தது. என்னுடைய பந்துவீச்சு எனக்கு திருப்தி அளிக்கிறது. நல்ல லென்த்தில் பந்துவீசினேன், இதைத்தான் விரும்புகிறேன். பியூஷ் சாவ்லா எடுத்த விக்கெட்டுகள் திருப்புமுனையாக அமைந்தது. ஸ்கையின் ஆட்டம் நம்பமுடியாத அளவுக்கு இருந்தது. சன்ரைசர்ஸ் பந்துவீச்சாளர்களுக்கு அவர் கொடுத்த அழுத்தம் ரன்சேர்ப்பில் தெரிந்தது.எந்தவிதமான மோசமான பந்தையும் ஸ்கை பெரிய ஷாட்கள் அடிக்க தவறவிடவில்லை. என்னுடைய அணியில் ஸ்கை இருப்பது அதிர்ஷ்டம். இதுபோல் அடுத்தடுத்து வெற்றிகள் வரும் என நம்புகிறேன்” எனத் தெரிவித்தார்

பட மூலாதாரம், Getty Images
சன்ரைசர்ஸ் அணி எங்கு தோற்றது?
சன்ரைசர்ஸ் அணியில் தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட் 48 ரன்கள் சேர்த்ததுதான் அந்த அணியில் நேற்றைய அதிகபட்ச ஸ்கோராகும். வலுவான பேட்டிங் வரிசையை வைத்திருக்கும் சன்ரைசர்ஸ் அணி நேற்று விக்கெட்டுகளை சீரான இடைவெளியில் இழந்தது. பவர்ப்ளேயில் விக்கெட்டை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த மும்பை அணி பந்துவீச்சாளர்களில் பும்ரா தவிர மற்றவர்கள் வழக்கத்துக்கு மாறாக துல்லியமாக பந்துவீசினர்.
ஆனால் பும்ரா தனது இயல்பான பந்துவீச்சில் அபிஷேக் சர்மா 11 ரன்னில் வெளியேற்றினார். மயங்க அகர்வால் 5 ரன்னில் கம்போஜ் பந்துவீச்சில் க்ளீன் போல்டாகி ஆட்டமிழந்தார். இருப்பினும் பவர்ப்ளேயில் சன்சைர்ஸ் அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 56 ரன்களுடன் வலுவாக இருந்தது.
டிராவிஸ் ஹெட் விக்கெட்டை எடுக்க பியூஷ் சாவ்லா கொண்டுவரப்பட்டார். தொடக்கத்தில் இருந்தே சாவ்லா பந்துவீச்சுக்கு திணறிய ஹெட் திலக் 48 ரன்கள் சேர்த்தநிலையில் திலக் வர்மாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
ஒரு கட்டத்தில் சன்ரைசர்ஸ் அணி 90 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து வலுவான நிலையில் இருந்தது, ஸ்கோரை 200 ரன்களுக்கு மேல் கொண்டு செல்லகக்கூடிய வலுவான பேட்டர்கள் இருந்தனர்.
அதன்பின் வந்த நடுவரிசை, கீழ்வரிசை பேட்டர்கள் யாரும் நிலைத்து ஆடவில்லை. நிதிஷ்குமார் ரெட்டி(20), கிளாசன்(2), யான்சென்(17), ஷாபாஸ் அகமது(10) அப்துல் சமது(3) என சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தது ரன் சேர்ப்பில் பெரிய பாறையை கட்டிவிட்டதுபோன்ற நிலை ஏற்பட்டது.
ஹர்திக் பாண்டியா, பியஷ் சாவ்லாவின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் பெரிய திருப்புமுனையாக இருந்தது.டி20 உலகக் கோப்பை நெருங்கும் நேரத்தில் ஹர்திக்கின் பந்துவீச்சில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பது ஆறுதல் அளிக்கிறது. இருவரும் சேர்ந்து சன்ரைசர்ஸ் பேட்டிங் வரிசையை உலுக்கி எடுத்தனர்.
90 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து வலுவாக இருந்த சன்ரைசர்ஸ் அணி, அடுத்த 11 பந்துகளில் 96 ரன்களுக்கு 5 விக்கெட்டுகள் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது. சன்ரைசர்ஸ் அணி 6 ரன்களுக்க 3 விக்கெட்டுகளை இழந்தது.
ஷாபாஸ் அகமது, யான்சென் தங்களால் முடிந்த அளவு போராடினர். 7 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் சேர்த்திருந்த சன்ரைசர்ஸ் அணி, 136 ரன்களுக்கு 8 விக்கெட்டுகள் என்ற நிலைக்கு தள்ளப்பட்டது. பியூஷ் சாவ்லா, ஹர்திக் இருவரும் கடைசி வரிசை பேட்டர்களின் விக்கெட்டை வீழ்த்தி சன்ரைசர்ஸ் ரன்ரேட்டை இறுக்கிப் பிடித்தனர். சன்ரைசர்ஸ் கேப்டன் கம்மின்ஸ் அதிரடியாக கேமியோ ஆடி 17 பந்துகளில் 35 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












