நடராஜன் உள்ளிட்ட தமிழ்நாட்டு வீரர்கள் புறக்கணிப்பா? இந்திய கிரிக்கெட் அணி தேர்வில் என்ன நடக்கிறது?

நடராஜன்

பட மூலாதாரம், SPORTZPICS

    • எழுதியவர், சிவகுமார் ராஜகுலம்
    • பதவி, பிபிசி தமிழ்

அதிர்ச்சி... ஆச்சர்யம்... உலகக்கோப்பைக்கு 140 கோடி இந்தியர்களின் கனவுகளை சுமந்து செல்லும் அணி அறிவிக்கப்படும் ஒவ்வொரு முறையும் கிரிக்கெட் உலகில் தவறாமல் பேசப்படும் சொற்கள் இவை. எதிர்வரும் டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி தேர்வும் அதற்கு விதிவிலக்கு அல்ல.

அதுவும், நாடெங்கும் ஐபிஎல் கிரிக்கெட் ஜூரம் உச்சத்தில் இருக்கும் வேளையில் டி20 அணி அறிவிப்பு வெளியாகியிருப்பது கூடுதல் விவாதங்களுக்கு வழிவகுத்துள்ளது. கிரிக்கெட் நேரலையில் பங்கேற்கும் வர்ணனையாளர்கள், கிரிக்கெட் நிபுணர்கள் உலகக்கோப்பை இந்திய அணித் தேர்வு குறித்து அலசி, ஆராய்ந்து வரும் வேளையில் சமூக ஊடகங்களில் ரசிகர்களும் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

அந்த வகையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் ரசிகர்களுக்கு இந்திய அணியில் தங்களது சொந்த மாநிலத்தைச் சேர்ந்த ஒரு வீரர் கூட இடம் பெறாதது வருத்தம் தருவதாக அமைந்திருக்கிறது. குறிப்பாக, நடப்பு ஐபிஎல் தொடரில் சிறப்பாக ஆடி வரும் நடராஜனுக்கு வாய்ப்பு தரப்படாதது குறித்து அவர்கள் தங்களது அதிருப்தியை சமூக ஊடகங்கள் வாயிலாக வெளிப்படுத்தி வருகின்றனர்.

டி.வி. நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தமிழ்நாட்டைச் சேர்ந்த ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர் பத்ரிநாத்தின் கருத்து அதற்கு உரம் சேர்ப்பதாக அமைந்தது. தமிழ்நாட்டு அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவும் பத்ரிநாத்தின் பேச்சைக் குறிப்பிட்டு, இந்திய அணியில் தமிழ்நாட்டு வீரர் ஒருவர் கூட இடம் பெறாதது குறித்த ஏமாற்றத்தை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்திருந்தார்.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி தேர்வு குறித்த ரசிகர்களின் சமூக ஊடக விமர்சனங்கள் இன்னும் ஓயாத நிலையில், அந்த அணியை தேர்வு செய்த பிசிசிஐ தேர்வுக் குழுத் தலைவர் அஜித் அகார்கரும், அணி கேப்டன் ரோகித் சர்மாவும் செய்தியாளர் சந்திப்பில் சில விளக்கங்களை அளித்துள்ளனர். இந்திய அணி தேர்வில் அவர்கள் கடைபிடித்த அணுகுமுறை என்ன? உலகக்கோப்பையை வெல்வதற்கான எந்தெந்த உத்திகளின் அடிப்படையில் இந்திய அணியை அவர்கள் தேர்வு செய்தார்கள்? இந்திய அணி தேர்வில், குறிப்பாக நடராஜனுக்கு வாய்ப்பு கிடைக்காததில் ரசிகர்கள் விமர்சிப்பதைப் போல அரசியல் விளையாடியுள்ளதா? இந்திய அணி தேர்வு எவ்வாறு நடக்கிறது? விரிவாகப் பார்க்கலாம்.

நடராஜன்

பட மூலாதாரம், Getty Images

டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி

வரும் ஜூன் 2-ம் தேதி தொடங்கும் டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி கடந்த செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 30) அறிவிக்கப்பட்டது. ரோகித் சர்மா தலைமையில் 15 பேர் கொண்ட இந்திய அணியில் 4 சுழற்பந்துவீச்சாளர்கள், 3 வேகப்பந்து வீச்சாளர்கள், 2 விக்கெட் கீப்பர்கள் இடம் பெற்றிருந்தனர். ரோகித் சர்மா, விராட் கோலி, ஜெய்ஸ்வால், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் டாப் ஆர்டர் பேட்டிங்கில் இடம் பிடித்திருந்தனர். ரிஷப் பந்த், சஞ்சு சாம்ஸன் ஆகிய 2 விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டிருந்தது.

குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல் ஆகிய இரு ஸ்பெஷலிஸ்ட் ஸ்பின்னர்களுடன், ரவீந்திர ஜடேஜா, அக்ஸர் படேல் ஆகிய சுழற்பந்துவீச்சு ஆல் ரவுண்டர்கள் அணியில் இடம் பிடித்துள்ளனர். வேகப்பந்துவீச்சை கவனித்துக் கொள்ள ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ் ஆகியோருடன் அர்ஷ்தீப் சிங் சேர்க்கப்பட்டுள்ளார். ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே ஆகிய இருவரும் வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர்களாக வாய்ப்பு பெற்றுள்ளனர். ஹர்திக் பாண்டியா இந்திய அணியின் துணை கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்திய அணியில் எதிர்பார்க்கப்பட்டதற்கு மாறாக, வேகப்பந்துவீச்சாளர் ஒருவர் குறைக்கப்பட்டு, கூடுதலாக ஒரு சுழற்பந்து வீச்சாளர் ஒருவர் சேர்க்கப்பட்டுள்ளார். அத்துடன் மாற்று வீரர்களாக, சுப்மான் கில், ரிங்கு சிங், கலீல் அகமது, ஆவேஷ் கான் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

ரோகித் சர்மா

பட மூலாதாரம், Getty Images

நடராஜன் சேர்க்கப்படாததால் ரசிகர்கள் அதிருப்தி

டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்ட அந்த விநாடியே, இந்தியா முழுவதும் அதுகுறித்த விவாதங்கள் தொடங்கிவிட்டன. அதுவும் ஐபிஎல் கிரிக்கெட் வேளையில் அறிவிப்பு வெளியானதால் அது இன்னும் கூடுதல் கவனத்தை பெற்றுவிட்டது. சமூக ஊடகங்களில் ரசிகர்கள் பலரும் இந்திய அணி தேர்வு குறித்த தங்களது பார்வையை பதிவிடத் தொடங்கிவிட்டனர்.

டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே “நடராஜன்” என்ற பெயர் சமூக வலைதளங்களில் டிரெண்டிங்காக மாறியது.

X பதிவை கடந்து செல்ல, 1
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

X பதிவின் முடிவு, 1

பத்ரிநாத் கூறியது என்ன?

காட்சி ஊடகங்களும், யூடியூப் சேனல்களும் தங்கள் பங்கிற்கு கிரிக்கெட் சேவையாற்றின. அவற்றில் தோன்றிய கிரிக்கெட் நிபுணர்கள் இந்திய அணியில் தேர்வான வீரர்கள், ரசிகர்கள் எதிர்பார்த்து வாய்ப்பு கிடைக்காமல் போன வீரர்களின் ஆட்டங்கள் குறித்த புள்ளிவிவரங்களுடன் தங்களது விமர்சனப் பார்வைகளை முன்வைத்தனர். அந்த வரிசையில், டி.வி. நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தமிழ்நாட்டைச் சேர்ந்த ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரரும், இன்றைய கிரிக்கெட் வர்ணனையாளருமான சுப்ரமணியம் பத்ரிநாத்தின் கருத்து, சமூக ஊடகங்களில் நடராஜனுக்காக களமாடிய தமிழ்நாட்டு கிரிக்கெட் ரசிகர்களின் மனநிலையை அப்படியே பிரதிபலித்தது.

"இந்திய அணியில் நடராஜன் இடம் பெற்றிருக்க வேண்டும். இந்திய அணியில் இடம் பிடிக்க தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்கள் மட்டும் ஏன் 2 மடங்கு சிறப்பாக விளையாடி திறமையை நிரூபிக்க வேண்டியுள்ளது. தனிப்பட்ட முறையில் நானும் இதுபோன்ற சூழலை எதிர்கொண்டிருக்கிறேன். 500 விக்கெட் எடுத்த அஸ்வினின் செயல்பாடு குறித்து கேள்வி எழுப்புகிறார்கள். 65 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள முரளிவிஜய் இந்தியாவின் தலைசிறந்த 5 சிறந்த தொடக்க வீரர்களில் ஒருவர். அவர் 2 இன்னிங்ஸ் சிறப்பாக ஆடாவிட்டால் கேள்வி எழுப்புகிறார்கள், " என்று அவர் தெரிவித்தார்.

அத்துடன், தனது சமூக வலைத்தளப் பக்கத்திலும் நடராஜனுக்கு ஆதரவாக பத்ரிநாத் கருத்துப் பதிவிட்டிருந்தார். "அர்ஷ்தீப் அல்லது கலீல் அகமதுவுக்கு மேலாக நடராஜன் பெயர் இல்லாதது ஆச்சர்யம் அளிக்கிறது" என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

X பதிவை கடந்து செல்ல, 2
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

X பதிவின் முடிவு, 2

ஐபிஎல் போட்டிகளில் நடராஜன் செயல்பாடு எப்படி?

நடராஜன் இந்திய அணியில் தேர்வு செய்யப்படாதது குறித்த அதிருப்தியில் இருந்த தமிழ்நாட்டு கிரிக்கெட் ரசிகர்களின் குமுறலை பத்ரிநாத்தின் கருத்து இன்னும் அதிகப்படுத்திவிட்டது. நடப்பு ஐ.பி.எல். தொடரில் வேகப்பந்து வீச்சாளர்களின் செயல்பாடுகள் குறித்த புள்ளிவிவரங்களை ஒப்பிட்டு நடராஜனின் செயல்பாட்டை பாராட்டு சமூக ஊடகங்களில் அவர்கள் எழுதத் தொடங்கிவிட்டார்கள்.

நாமும் ஐபிஎல் இணையதளத்தில் வீரர்களின் செயல்பாடுகள் குறித்த புள்ளிவிவரங்களை ஆராய்ந்தோம். அதன்படி பார்த்தோமானால், இந்திய அணி அறிவிக்கப்பட்ட போது நடராஜன், சன்ரைசர்ஸ் அணிக்காக 7 போட்டிகளில் ஆடி 13 விக்கெட்டுகளை எடுத்திருந்தார். அவர் ஓவருக்கு சராசரியாக 9 ரன்களை விட்டுக் கொடுத்திருந்தார்.

அதேநேரத்தில், உலகக்கோப்பைக்கான அணியில் தேர்வாகியுள்ள முகமது சிராஜ் 9 போட்டிகளில் 6 விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றியுள்ளார். ஓவருக்கு சராசரியாக 9.50 ரன்களை அவர் விட்டுக் கொடுத்துள்ளார். அணியில் தேர்வாகியுள்ள மற்றொரு வேகப்பந்துவீச்சாளரான அர்ஷ்தீப் சிங் 9 போட்டிகளில் 11 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவரது எகானமி ரேட் 9.68.

ஜஸ்பிரித் பும்ரா மட்டுமே நடராஜனை விட சிறப்பாக செயல்பட்ட வேகப்பந்துவீச்சாளர் என்று ஐ.பி.எல். புள்ளிவிவரம் கூறியது. அவர் 10 போட்டிகளில் 14 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் தனது ஒட்டுமொத்த விக்கெட் எண்ணிக்கையை 15ஆக உயர்த்திக் கொண்டுள்ள நடராஜன், அதிக விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளருக்கான நீலத் தொப்பியை வசப்படுத்தியுள்ளார்.

ஹர்திக்

பட மூலாதாரம், Getty Images

ஹர்திக் பாண்டியா தேர்வு பற்றி ரசிகர்கள் கேள்வி

நடப்பு ஐ.பிஎல். தொடரில் சிறப்பாக செயல்பட்டதன் மூலம் சஞ்சு சாம்ஸன், ஷிவம் துபே, சுழற்பந்துவீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் ஆகியோர் அணியில் இடம் பிடித்துள்ளனர். தற்போதைய இந்திய அணியில் சிறந்த கிளாசிக் பேட்ஸ்மேனாக கருதப்படும் லோகேஷ் ராகுல், நடப்பு ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டாலும் கூட ரிஷப் பந்த், சாம்ஸன் ஆகியோருடனான போட்டியில் பின்தங்கியுள்ளார். நடு வரிசையில் அதிரடி காட்டும் ரிங்கு சிங்கிற்கு மாற்று வீரராக மட்டுமே இடம் கிடைத்துள்ளது.

கடந்த அக்டோபர் மாதம் வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் காயமடைந்து வெளியேறிய பிறகு இன்னும் ஒரு சர்வதேச போட்டியில் கூட ஆடாத, நடப்பு ஐ,பி.எல். தொடரிலும் பேட்டிங், பந்துவீச்சு, கேப்டன்சி என்று எதிலுமே பெரிதாக ஜொலிக்காத ஹர்திக் பாண்டியாவுக்கு அணியில் இடம் கிடைத்ததுடன், துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டிருப்பது ரசிகர்களின் புருவத்தை உயரச் செய்துள்ளது. பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லேவும் கூட, ஹர்திக் பாண்டியா தேர்வு குறித்த தனது கருத்தை பதிவிட்டிருந்தார்.

"மூன்றாவது வேகப்பந்துவீச்சாளராக ஹர்திக் பாண்டியா மீது தேர்வுக்குழு வைத்துள்ள நம்பிக்கையையே இது காட்டுகிறது" என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

X பதிவை கடந்து செல்ல, 3
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

X பதிவின் முடிவு, 3

தமிழ்நாடு அமைச்சர் கருத்து

அதேநேரத்தில், நடப்பு ஐ.பிஎல்லில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி தொடர்ச்சியாக சிறப்பாக செயல்படும் நடராஜனுக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காதது அதிர்ச்சி அளிப்பதாகவே ரசிகர்கள் ஆதங்கப்பட்டனர். கிரிக்கெட் வர்ணனையாளர்கள், நிபுணர்கள், ரசிகர்கள் மட்டுமின்றி தமிழ்நாட்டு அமைச்சர் ஒருவருமே இதற்கு நேரடியாக கருத்துப் பகிர்ந்தார்.

தமிழ்நாட்டின் தொழிற்துறை அமைச்சரான டிஆர்பி ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில், "இது விரிவாக விவாதிக்கப்படுவது சிறப்பான ஒன்று. தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடும் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்களுக்கு பலமுறை அவர்களுக்குரிய இடத்தைக் கொடுக்காமல் டெல்லி மறுத்துள்ளது. இது சமீப காலமாக அதிக அளவில் நடக்கிறது. இது ஆட்சிக்கெல்லாம் அப்பாற்பட்டது. பல விளையாட்டுகளிலும் டெல்லி இவ்வாறுதான் குறுகிய பார்வையுடன் செயல்படுகிறது. தென் மாநிலங்களைச் சேர்ந்த சிறந்த திறன் மிக்க விளையாட்டு வீரர்கள் குறித்து டெல்லி பெரும்பாலான நேரங்களில் பாராமுகமாகவே இருக்கிறது." என்று குறிப்பிட்டதுடன், பத்ரிநாத் தனது மனதில் பட்டதை பேசியதற்காக பாராட்டியும் இருந்தார்.

X பதிவை கடந்து செல்ல, 4
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

X பதிவின் முடிவு, 4

"நடராஜனை தேர்வு செய்திருக்க வேண்டும்"

ஹர்திக் பாண்டியா தேர்வு, நடராஜனுக்கு அணியில் இடம் கிடைக்காதது, பத்ரிநாத் கருத்து மற்றும் ரசிகர்களின் விமர்சனம் குறித்து விளையாட்டு விமர்சகர் சுமந்த் சி.ராமன், பிபிசி தமிழிடம் தனது கருத்துகளை பகிர்ந்து கொண்டார்.

பத்ரிநாத் ஆதங்கம் குறித்துக் கேட்ட போது, "பத்ரிநாத்தின் கருத்தை ஓரளவு ஏற்றுக் கொள்லாம். ஆனால், அத்துடன் அப்படியே உடன்பட முடியாது. தற்போது சிறப்பான ஃபார்மில் இருக்கும் நடராஜனை இந்திய அணியில் சேர்த்திருக்க வேண்டும் என்றே நினைக்கிறேன். யார்க்கர் வீசுவதில் வல்லவரான நடராஜன், டெத் ஓவர்களில் சிறப்பாக செயல்படுகிறார். அவர் இந்திய அணிக்கு சிறந்த தேர்வாக இருந்திருப்பார்.

பும்ரா அல்லது முகமது சிராஜூக்குப் பதிலாக நடராஜனை சேர்க்க வேண்டும் என்று கூறவில்லை. அதற்கு அடுத்த இடத்தை நடராஜனுக்கு வழங்கி இருக்கலாம். அர்ஷ்தீப், கலீல் அகமது, ஆவேஷ் கான் ஆகியோரில் ஒருவருக்குப் பதிலாக நடராஜன் இந்திய அணியில் இடம் பெற்றிருக்கலாம்" என்றார்.

ரோகித்

பட மூலாதாரம், Getty Images

இந்திய அணி தேர்வு எப்படி நடக்கிறது?

இந்திய அணியில் இடம் பெற தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்கள் 2 மடங்கு சிறப்பாக செயல்பட வேண்டியுள்ளது என்ற பத்ரிநாத் விமர்சனம் குறித்த கேள்விக்கு, "அப்படி எல்லாம் சொல்ல முடியாது. சமீபத்திய ஆணடுகளில் இந்திய அணிக்காக முரளி விஜய், அஸ்வின், நடராஜன், வருண் சக்கரவர்த்தி, சாய் சுதர்சன் என பல வீரர்கள் விளையாடியுள்ளனர். அடுத்தடுத்து வாய்ப்பு பெற்று வருகின்றனர். ஒரு காலத்தில் இந்திய அணியில் மும்பை, கர்நாடகா, தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்களே அதிகம் இடம் பிடித்து வந்தனர். அதுவே, சமீப காலமாக மும்பை மற்றும் டெல்லியைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் இடம் பிடிக்கின்றனர். தற்போதைய அணியிலும் கூட 8 அல்லது 9 வீரர்கள் மும்பை மற்றும் டெல்லியைச் சேர்ந்தவர்களாகவே இருக்கிறார்கள்." என்றார் சுமந்த் சி.ராமன்.

அப்படி என்றால் வீரர்கள் தேர்வில் அரசியல் இருக்கிறது என்ற ரசிகர்களின் விமர்சனம் உண்மைதானா? என்று கேள்வி எழுப்பிய போது, "அது அப்படி அல்ல. இந்திய அணி தேர்வாளர்கள் மும்பை மற்றும் டெல்லியில் உள்ள கிளப்களுக்கும், அகாடமிகளுக்கும் அடிக்கடி செல்வார்கள். அங்கே, வீரர்களின் திறமையை நேரில் பார்க்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைக்கிறது. அதுதவிர, தேர்வாளர்களுடன் அறிமுகமாகி சில வீரர்கள் ஓரளவு பரிச்சயத்தையும் ஏற்படுத்திக் கொள்வார்கள். சில வீரர்கள் தங்களது திறமையால் தேர்வாளர்களை நேரடியாக கவர்வதும் உண்டு.

அணி தேர்வு என்பது வெறும் ரன்கள், விக்கெட்டுகள் அடிப்படையில் மட்டும் நடக்காது. அணியில் உத்தி சார்ந்து சில தேவைகள் எழும் போது, திறமையான ஆட்டத்தால் நேரில் கவர்ந்த அல்லது பரிச்சயமான வீரர்கள் பொருத்தமாக இருப்பார்கள் என்று தேர்வாளர்கள் கருதும் பட்சத்தில் அவர்களுக்கு வாய்ப்பு கிடைத்துவிடும். எல்லோரும் மனிதர்கள் தானே. புள்ளிவிவரங்களைக் காட்டிலும் நேரடி சந்திப்புகளும், திறமையால் ஏற்பட்ட ஈரப்பும் எப்போதும் அவர்கள் மனதில் இருக்கும் தானே. இதுவே, மும்பை மற்றும் டெல்லி வீரர்களுக்கு அனுகூலமானதாக இருக்கிறது. நான் சொல்ல வருவது மும்பை மற்றும் டெல்லியில் வசிக்கும் வீரர்களை. ரஞ்சி, ஐபிஎல் போன்ற உள்நாட்டு தொடர்களில் அவர்கள் வெவ்வேறு அணிகளுக்கு விளையாடுபவர்களாக இருக்கலாம்." என்று கூறினார்.

ஹர்திக்

பட மூலாதாரம், Getty Images

"ஹர்திக் பாண்டியா தேர்வு ஏன்?"

டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணித் தேர்வு நாடெங்கும் கிரிக்கெட் ரசிகர்களிடையே பேசுபொருளாக இருக்கும் நிலையில், இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகார்கரும், கேப்டன் ரோகித் சர்மாவும் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது எதிர்பார்க்கப்பட்டபடியே ஹர்திக் பாண்டியா தேர்வு குறித்த கேள்வியை செய்தியாளர்கள் எழுப்பினர். சர்வதேச போட்டிகளில் கடந்த அக்டோபருக்குப் பிறகு விளையாடாத, தற்போது நல்ல ஃபார்மிலும் இல்லாத ஹர்திக் பாண்டியாவை தேர்வு செய்தது ஏன்?அவரை துணை கேப்டனாக நியமித்தது ஏன்? என்பனவற்றை நியாயப்படுத்த இருவருக்குமே சற்று நேரம் பிடித்தது.

"ஹர்திக் பாண்டியா நீண்ட இடைவெளிக்குப் பிறகு வந்துள்ளார்" என்ற அகார்கர், "மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அவர் விளையாடுகிறார். உலகக்கோப்பையில் எங்களது முதல் போட்டியில் ஆட இன்னும் ஒரு மாதத்திற்கும் அதிக காலம் உள்ளது. அதற்கு அவர் தனது பார்மை மீட்டுவிடுவார்" என்று குறிப்பிட்டார். நல்ல உடல் தகுதியுடன் இருக்கும் போது, இந்திய அணிக்கு ஹர்திக் சேர்க்கும் வலிமையை, இப்போதைய நிலையில் குறிப்பாக பந்துவீச்சில் வேறு யாரும் தர முடியாது. அவரது உடல் தகுதி மிக முக்கியமானது. ஐ.பிஎல். இதுவரையிலும் அவருக்கு சிறப்பானதாகவே இருக்கிறது." என்று அகார்கர் கூறினார்.

அஸ்வின்

பட மூலாதாரம், Getty Images

தமிழக வீரர்களில் யார் பெயர் பரிசீலிக்கப்பட்டது?

பந்துவீச்சு கூட்டணி தேர்வு குறித்துப் பேசிய ரோகித் சர்மா, "4 சுழற்பந்துவீச்சாளர்கள், 3 வேகப்பந்துவிச்சாளகள் மற்றும் ஹர்திக் பாண்டியா இருக்க வேண்டும் என்று விரும்பினேன். சுழற்பந்துவீச்சில் குல்தீப், சாஹல் ஆகியோருடன் ஜடேஜா, அக்ஸர் படேல் ஆகிய ஆல்ரவுண்டர்கள் பலம் சேர்ப்பார்கள். எதிரணியைப் பொருத்து ஆடும் 11 வீரர்களை இறுதி செய்வோம்" என்றார்.

இந்திய அணியில் 4 சுழற்பந்துவீச்சாளர்கள் இடம் பெற்றிருந்தாலும் அவர்களில் ஒருவர் கூட ஆஃப் ஸ்பின்னர் இல்லை. அனைவருமே இடது கை பந்துவீச்சாளர்கள். ஆகவே ஆஃப் ஸ்பின்னரை ஏன் எடுக்கவில்லை என்ற கேள்விக்குப் பதிலளித்த ரோகித், அதுகுறித்து அணி நிர்வாகம் நிறைய விவாதித்ததாக கூறினார்.

"துரதிர்ஷ்டவசமாக அதில் வாஷிங்டன் சுந்தர் இடம் பெறவில்லை. அவர் சமீப காலமாக அதிக போட்டிகள் விளையாடவில்லை. ஆகவே, அஸ்வினா அல்லது அக்ஸர் படேலா என்பதாகவே விவாதம் இருந்தது. அஸ்வின் நீண்ட காலமாக சர்வதேச டி20 கிரிக்கெட் ஆடவில்லை. அதேநேரத்தில், கடைசியாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடிய 5 போட்டிகளில் விளையாடிய போது அக்ஸர் படேல் நல்ல ஃபார்மில் இருந்தார். அவர் சிறப்பாக பந்துவீசி வருகிறார். அத்துடன், பேட்டிங்கிலும் நடு வரிசையில் இடது கை பேட்ஸ்மேனை களமிறங்க விரும்புகையில் அதற்கான சிறந்த தெரிவாக அக்ஸர் படேல் இருப்பார்" என்று கூறினார்.

அதேபோல், வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர்களாக அணியில் சேர்க்கப்பட்டுள்ள ஹர்திக் பாண்டியாவும், ஷிவம் துபேவும் பந்துவீச்சிலும் அணிக்கு வலுசேர்ப்பார்கள் என்று எதிர்பார்ப்பதாக ரோகித் சர்மா தெரிவித்தார்.

அக்ஸர்

பட மூலாதாரம், Getty Images

அணியில் 4 சுழற்பந்துவீச்சாளர்கள் ஏன்?

வேகப்பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும் வெஸ்ட் இண்டீஸில் நடக்கக் கூடிய டி20 உலகக்கோப்பைக்கு 4 சுழற்பந்துவீச்சாளர்கள் ஏன் என்ற கேள்வி இந்திய அணி அறிவிக்கப்பட்டது முதலே இருந்து வருகிறது. நடராஜனுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த பத்ரிநாத் கூட, 4 சுழற்பந்துவீச்சாளர்கள் எதற்கு என்ற கேள்வியை எழுப்பியிருந்தார்.

இதே கேள்வியை செய்தியாளர்கள் முன்வைத்த போது பதிலளித்த ரோகித் சர்மா, "அதுதொடர்பாக விரிவான தகவல்களை பகிர்ந்து கொள்ள விரும்பவில்லை. ஏனென்றால் அனைத்து எதிரணி கேப்டன்களும் இதனை கேட்பார்கள். அதனால் சுருக்கமாக பதிலளிக்கிறேன். 4 சுழற்பந்துவீச்சாளர்கள் அணியில் இடம் பெற வேண்டும் என்று விரும்பினேன். அங்கே நிறைய போட்டிகள் விளையாடியுள்ளோம். அங்குள்ள சூழல் எங்களுக்கு நன்றாக தெரியும். போட்டிகள் காலை 10 அல்லது 10.30 மணிக்கு தொடங்கவுள்ளன. அதில் டெக்னிக்கலாக சில விஷயங்கள் உள்ளன. வெஸ்ட் இண்டீசில் எனது முதல் செய்தியாளர் சந்திப்பில் இதுகுறித்து கூடுதல் விவரங்களை பகிர்ந்து கொள்வேன். 4 சுழற்பந்து வீச்சாளர்களை அணியில் சேர்த்ததற்கு காரணம் உள்ளது. அதனை அங்கே நடைபெறும் செய்தியாளர் சந்திப்பில் நிச்சயம் கூறுவேன்." என்று தெரிவித்தார்.

டி20 உலகக்கோப்பை தொடர் ஜூன் 2 முதல் ஜூன் 29 வரை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடக்கிறது. அதில் பங்கேற்பதற்காக இந்திய கிரிக்கெட் அணி வரும் 21-ம் தேதி அமெரிக்கா புறப்படுகிறது. இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஜூன் 5-ம் தேதி நியூயார்க் நகரில் அயர்லாந்து அணியை எதிர்கொள்கிறது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)