நடராஜனுக்கு பர்ப்பிள் தொப்பி - ராஜஸ்தானை 1 ரன்னில் வீழ்த்திய ஹைதராபாத்தின் துல்லியமான யார்க்கர்கள்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், க.போத்திராஜ்
- பதவி, பிபிசி தமிழுக்காக
ஐபிஎல் தொடரில் வியாழக்கிழமை நடந்த ஆட்டத்தில், கடைசி ஓவரின் 5வது பந்துவரை ஆட்டம் ராஜஸ்தான் பக்கம் இருந்த நிலையில் கடைசிப்பந்தில் ஆட்டம் சன்ரைசர்ஸ் பக்கம் திரும்பி வெற்றி பெற்றதை யாராலும் கணித்திருக்க முடியாது. சன்ரைசர்ஸ் அணியினருக்கு கூட தாங்கள் வெற்றி பெறுவோமா என்பதில் சந்தேகம் இருந்திருக்கக்கூடும். ஆனால் முடிவு அவர்களுக்குச் சாதகமாகவே அமைந்துவிட்டது. அதேசமயம், ராஜஸ்தான் அணியினருக்கும் எப்படித் தோற்றோம் எங்கு தோற்றம் என்பது புதிராக இருந்தது.
19-ஆவது ஓவர்வரை ராஜஸ்தான் அணியின் ரன்ரேட் 10 ரன்களுக்குக் குறையாமல் இருந்துவந்தநிலையில் கடைசி ஓவரிலும் வெற்றிக்கு அருகே சென்று கோட்டைவிட்டுள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. ஹைதராபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 50-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை ஒரு ரன்னில் தோற்கடித்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.
முதலில் பேட் செய்த சன்ரைசர்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் சேர்த்தது. 202 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி, 7 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் சேர்த்து ஒரு ரன்னில் தோல்வி அடைந்தது.

பட மூலாதாரம், Getty Images
பிளே ஆப் வாய்ப்பு யாருக்கு?
இந்தத் தோல்வியால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி எந்தவிதத்திலும் பாதிக்கப்படாமல் தொடர்ந்து 10 போட்டிகளில் 8வெற்றி, 2 தோல்வி என 16 புள்ளிகளுடன் முதலிடத்தில், நிகர ரன்ரேட் 0.622 என்று இருக்கிறது. இன்னும் ராஜஸ்தான் அணிக்கு 4 லீக் ஆட்டங்கள் இருக்கும் நிலையில் அதில் குறைந்தபட்சம் 2 போட்டிகளில் வென்றாலே ப்ளே ஆஃப் சுற்றுக்குள் முதல் இரு இடங்களைப் பிடித்துவிட முடியும்.
சன்ரைசர்ஸ் அணி 10 போட்டிகளில் 6 வெற்றி, 4 தோல்வி என 12 புள்ளிகளுடன் 4-ஆவது இடத்துக்கு நகர்ந்துள்ளது. நிகர ரன்ரேட் 0.072 என்று வைத்துள்ளது. சிஎஸ்கே அணி 4ஆவது இடத்தில் இருந்தநிலையில் 5-ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. சன்ரைசர்ஸ் அணிக்கு இன்னும் மீதம் 4 ஆட்டங்கள் உள்ளன. இதில் குறைந்தபட்சம் அடுத்துவரும் 3 ஆட்டங்களில் வென்றால்தான் சன்ரைசர்ஸ் சிக்கல் இல்லாமல் ப்ளே ஆஃப் செல்ல முடியும். இல்லாவிடில், 16 புள்ளிகளோடு இருந்தால், நிகர ரன்ரேட் சிக்கல் வந்துவிடும்.
சன்ரைசர்ஸ் அணிக்கு, மும்பை(மே6), லக்னோ(மே8), குஜராத்(மே16), பஞ்சாப்(மே19) ஆகிய அணிகளுடன் போட்டிகள் உள்ளன. மும்பை அணியை ஏற்கெனவே சன்ரைசர்ஸ் தோற்கடித்திருப்பதால், 2-ஆவது முறையும் தோற்கடித்தால், மும்பையின் ப்ளே ஆஃப்கனவு முடிந்துவிடும். அதேபோல பஞ்சாப், குஜராத் அணிகள் சன்ரைசர்ஸ் அணியுடன் தோற்றாலே ப்ளே ஆஃப் சுற்றுக்குச் செல்வது கடினமாகிவிடும்.
இதுவரை 50 லீக் ஆட்டங்கள் முடிந்துவிட்டன. ஆனால், இதுவரை எந்த அணியும் ப்ளே ஆஃப் சுற்றிலிருந்து வெளியேற்றப்படவும் இல்லை, எந்த அணியும் அதிகாரப்பூர்வமாக ப்ளே ஆஃப் சுற்றுக்குத் தகுதியாகவும் இல்லை.

பட மூலாதாரம், Getty Images
சன்ரைசர்ஸ் - ராஜஸ்தான் போட்டியில் என்ன நடந்தது?
சன்ரைசர்ஸ் அணியின் வெற்றிக்கு மூல காரணமாக இருந்தது புவனேஷ்வர் குமாரின் அனுபவமான பந்துவீச்சுதான். அனுபவமான பந்துவீச்சாளர் என்பதை கடைசி ஓவரிலும் முதல் ஓவரிலும் வெளிப்படுத்திவிட்டார். முதல் ஓவரிலேயே பட்லர், சாம்ஸன் இரு பெரிய ஆபத்தான பேட்டர்களை டக்அவுட்டில் வெளியேற்றி ராஜஸ்தான் அணிக்கு பெரிய ஷாக் அளித்தார். முதல் ஓவரில் புவனேஷ்வர் இதுவரை 47 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்..
கடைசி ஓவரிலும் அவரது துல்லியமான பந்துவீச்சு தொடர்ந்தது. 13 ரன்களுக்குள் முடக்க வேண்டும் என்ற நிலையில், கடைசிப்பந்தில் பாவெலுக்கு கால்காப்பில் வீசி அவுட் ஆக்கி சன்ரைசர்ஸ் அணிக்கு புவனேஷ்வர் வெற்றி தேடித்தந்தார். 4 ஓவர்கள் வீசி 41ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி ஆட்டநாயகன் விருதையும் வென்றார்.

பட மூலாதாரம், SPORTZPICS
கடைசிப் பந்து வெற்றி பற்றி கம்மின்ஸ் கூறியது என்ன?
சன்ரைசர்ஸ் கேப்டன் கம்மின்ஸ் கூறுகையில் “ அற்புதமான போட்டி. கடைசிப்பந்துவரை நாங்கள் வெற்றி பெறுவோம் என நான் நினைக்கவில்லை. இது டி20 கிரிக்கெட் எதுவேண்டுமானாலும் நடக்கலாம். புவனேஷ்வர் 6 யார்கர்களை வீசி அற்புதமாக பந்துவீசினார். கடைசிப்பந்தில் நிச்சயம் சூப்பர் ஓவருக்கு கொண்டு செல்லும் என நினைத்தேன். நடராஜன் அருமையான யார்கர் பந்துவீச்சாளர். ராஜஸ்தான் அணியும் நன்கு பேட்செய்தனர், ஆனால் தொடக்கத்தில்தான் விக்கெட்டுகளை இழந்தனர். தரமான வீரர்கள் என்பதால் கடைசிவரை எங்களுக்கு வெற்றிக்கான வாய்ப்பைத் தரவில்லை. நிதிஷ் குமார் சிறப்பாக பேட் செய்து இக்கட்டான சூழலில் நல்ல ஸ்கோர் செய்தார்” எனத் தெரிவித்தார்

பட மூலாதாரம், Getty Images
தமிழ்நாட்டு வீரர் நடராஜன் எட்டிய புதிய மைல்கல்
தமிழ்நாட்டைச் சேர்ந்த இடதுகை வேகப்பந்துவீச்சாளர் நடராஜன் 4 ஓவர்கள்வீசி 35 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஒட்டுமொத்தமாக டி20 போட்டிகளில் 100 விக்கெட்டுகளைக் கைப்பற்றி நடராஜன் புதிய மைல்கல் எட்டினார்.
சிம்ரன் ஹெட்மயர் விக்கெட்டை நடராஜன் எடுத்தபோது இந்த சாதனையைப் படைத்தார். 89 டி20 போட்டிகளில் நடராஜன் 100 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார், இவரின் எகானமி 9 ரன்களுக்கும் குறைவாகவே இருக்கிறது. இதற்கு முன் நடராஜன் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடியபோது, 55 போட்டிகளில் 63 ரன்கள் சேர்த்துள்ளார். இந்த சீசனில் இதுவரை 8 போட்டிகளில் 15 விக்கெட்டுகளை வீழ்த்தி ஊதா நிற தொப்பியையும் பெற்றுள்ளார். சன்ரைசர்ஸ் அணிக்கு அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்திக் கொடுத்த 3-ஆவது பந்துவீச்சாளராக நடராஜன் இருக்கிறார். முதலிடத்தில் புவனேஷ்வரும், 2வது இடத்தில் ரஷித் கானும் உள்ளனர்.
ஆட்டத்தை மாற்றிய கடைசி 2 ஓவர்கள்
18-ஆவது ஓவர்கள் வரை ஆட்டத்தின் வெற்றி ராஜஸ்தான் அணி பக்கமே இருந்தது. கடைசி 2 ஓவர்களில் ராஜஸ்தான் வெற்றிக்கு 20 ரன்கள் தேவைப்பட்டது. களத்தில் துருவ் ஜுரெல், ரோவ்மென் பாவல் இருந்தனர். 19-ஆவது ஓவரை கேப்டன் கம்மின்ஸ் வீசினார்.
உலகின் சிறந்த வேகப்பந்துவீச்சாளர்களுள் ஒருவர் என்பதை கம்மின்ஸ் இந்த ஓவரில் வெளிப்படுத்தினார். முதல் பந்தைச் சந்தித்த துருவ் ஜுரெல்(1) யார்க்கராக வீசப்பட்ட பந்தை லெக்திசையில் மடக்கி அடிக்க அபிஷேக்கிடம் கேட்சானது. அடுத்து அஸ்வின் களமிறங்கி 2வது பந்தில் ஒரு ரன்எடுத்து ஸ்ட்ரைக்கே பாவெலிடம் கொடுத்தார். தொடர்ந்து 3 பந்துகளை டாட் பந்துகளாக கம்மின்ஸ் வீசி பாவெலை திணறடித்தார். கடைசிப்பந்தை கம்மின்ஸ் வைடு யார்க்கராகவீச, அதை பாவெல் சிக்ஸருக்கு விளாச ஆட்டம் பரபரப்பானது. இந்த ஓவரில் கம்மின்ஸ் வெறும் 7 ரன்கள் மட்டுமே கொடுத்து ஒரு விக்கெட்டையும் எடுத்தார்.

பட மூலாதாரம், Getty Images
கடைசி ஓவரில் புவனேஷ்வர் நிகழ்த்திய திருப்பம்
கடைசி ஓவரை புவனேஷ்வர் குமார் வீசினார். ராஜஸ்தான் அணி வெற்றி பெற 6 பந்துகளில் 13 ரன்கள் தேவைப்பட்டது. புவனேஷ்வர் வீசிய முதல் பந்தில் அஸ்வின் ஒரு ரன் எடுத்து, ஸ்ட்ரைக்கை பாவெலிடம் வழங்கினார். 2ஆவது பந்தில் பாவெல் 2 ரன்களும், 3வது பந்தில் பாவெல் பவுண்டரி அடித்து ஆட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தனார்.
புவி வீசிய 4ஆவது பந்தில் பாவெல் 2 ரன்களும், 5-வது பந்தில் 2 ரன்களும் எடுத்தார். கடைசிப்பந்தில் ராஜஸ்தான் வெற்றிக்கு 2 ரன்கள் தேவைப்பட்டது. ஒரு ரன் எடுத்தால் சூப்பர் ஓவர்செல்லும் 2 ரன்கள் எடுத்தார் ராஜஸ்தான் வெற்றி பெறும் என்ற நிலை இருந்தது. பாவெல் கடைசிப்பந்தை எதிர்கொள்ள அதை புவி லோஃபுல்டாசாக வீசவே, பாவெல் கால்காப்பில் வாங்கி 27 ரன்களில் ஆட்டமிழந்தார். ஒட்டுமொத்தத்தில் ராஜஸ்தான் அணியிடம் இருந்த வெற்றியை சன்ரைசர்ஸ் அணி பறித்துக்கொண்டது என்றே கூறலாம்.

பட மூலாதாரம், Getty Images
ரியான் பராக்-ஜெய்ஸ்வால் கூட்டணி
ராஜஸ்தான் அணி முதல் ஓவரிலேயே கேப்டன் சாம்ஸன், பட்லர் இருவரின் விக்கெட்டுகளையும் இழந்து தடுமாறியது. 3ஆவது விக்கெட்டுக்கு ஜெய்ஸ்வால், ரியான் பராக் கூட்டணி அணியைச் சரிவிலிருந்து மீட்டனர். விக்கெட்டுகள் வீழ்ந்தாலும், ஜெய்ஸ்வால், பராக் கூட்டணி அதிரடியைக் கைவிடவில்லை, 4.5 ஓவர்களில் ராஜஸ்தான் 50 ரன்களை எட்டியது. சன்ரைசர்ஸ் பந்துவீச்சை வெளுத்து வாங்கி பவர்ப்ளே ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 60 ரன்கள் சேர்த்தனர். 9.6 ஓவர்களில் ராஜஸ்தான் அணி 100 ரன்களை எட்டியது.
ஜெய்ஸ்வால் 30 பந்துகளில் அரைசதத்தையும், 31 பந்துகளில் ரியான் பராக் ஒரு அரைசதத்தையும் விளாசினர். இருவருமே ஆட்டத்தை முடித்துவிடுவார்கள் என்று எண்ணப்பட்டது. ஆனால் ஜெய்ஸ்வால் தேவையற்ற ஒரு ஸ்விட்ச் ஹிட்ஷாட் ஆட முயன்று நடராஜன் பந்துவீச்சில் க்ளீன்போல்டாகி 67 ரன்களில் ஆட்டமிழந்தார்.இருவரும் 3வது விக்கெட்டுக்கு 135 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.
ஜெய்ஸ்வால் விக்கெட்தான், சன்ரைசர்ஸ் அணிக்கான வெற்றி வாய்ப்புக் கதவுகளை திறந்தது. அதுவரை ஆட்டம் ராஜஸ்தான் அணி பக்கம்தான் இருந்தது. அடுத்த சிறிறு நேரத்தில் ரியான் பராக் 49 பந்துகளில் 77 ரன்கள் சேர்த்தநிலையில் கம்மின்ஸ் பந்தவீச்சில் விக்கெட்டை இழந்தார். ஹெட்மயர் ஒருசிக்ஸர், பவுண்டரி உள்பட 13 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இந்த 3பேட்டர்கள் ஆட்டமிழந்து ராஜஸ்தான் அணியை நெருக்கடிக்குள் தள்ளினர். கடைசி நேரத்தில் ரோவ்மென் பாவல் அதிரடியாக ஆடினாலும், எதிர்முனையில் அவரின் அழுத்தத்தைக் குறைக்கும் பேட்டர்கள் இல்லை. கடந்த போட்டியில் சிறப்பான அரைசதம் அடித்த ஜூரெல் இந்த ஆட்டத்தில் ஒரு ரன்னில் வெளியேறி ஏமாற்றினார்.
5-ஆவது முறையாக 200 ரன்கள்
சன்ரைசர்ஸ் அணி இந்த சீசனில் மட்டும் 5வது முறையாக 200 ரன்கள் ஸ்கோரைச் சேர்த்தது. சன்ரைசர்ஸ் அணியின் தொடக்க வீரர் அபிஷேக்(12) ரன்னில் ஆவேஷ் கானும், அன்மோல்பிரித் சிங்கை(5) ரன்னில் சந்தீப் குமாரும் வீழ்த்தி தொடக்கத்திலேயே அழுத்தம் கொடுத்தனர். பவர்ப்ளே ஓவரில் சன்ரைசர்ஸ் அணி இந்த சீசனில் மிகக்குறைவாக 37 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












