டெல்லியின் கனவைக் கலைத்த தமிழ்நாட்டு வீரர்; ஷ்ரேயாஸ் சொன்ன ரகசியம்

கொல்கத்தா - டெல்லி - ஐபிஎல்

பட மூலாதாரம், SPORTZPICS

    • எழுதியவர், க.போத்திராஜ்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

கொல்கத்தா ஈடன் கார்டன் ஆடுகளத்தில்தான் 262 ரன்களை சேஸிங் செய்த சம்பவத்தையும் ரசிகர்கள் பார்த்தனர். ஆனால், நேற்று அப்படியே தலைகீழாக மாறி, பாரம்பரிய கொல்கத்தா மைதானம் போல் குறைந்த ரன்னை சேஸிங் செய்யும் வழக்கமான ஆட்டமாகவும் அமைந்தது.

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 47-வது லீக் ஆட்டத்தில், டெல்லி கேபிடல்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.

முதலில் பேட் செய்த டெல்லி கேபிடல்ஸ் அணி 9 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் சேர்த்தது. 154 ரன்கள் இலக்குடன் புறப்பட்ட கொல்கத்தா அணி, 21 பந்துகள் மீதமிருக்கையில், 3 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

இந்த ஆட்டமே ஒருதரப்பாக அமைந்தது போல் இருந்தது. கொல்கத்தா தொடக்க வீரர் பில் சால்ட் பவர்ப்ளே ஓவர்களில் 79 ரன்களும், 9 ஓவர்களில் 96 ரன்களும் சேர்த்தபோதே ஆட்டம் ஏறக்குறைய முடிவுக்குவந்து, கொல்கத்தா அணி வென்றதுபோல் ஆகிவிட்டது.

கொல்கத்தா அணிக்கு சவால் விடுக்கும் வகையில் டெல்லியின் பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் இல்லாததால் ஆட்டம் ஒருதரப்பான முடிவையே அளித்தது.

கொல்கத்தா - டெல்லி - ஐபிஎல்

பட மூலாதாரம், Getty Images

புள்ளிப்பட்டியலில் வலுவாக அமர்ந்த கொல்கத்தா

இந்த வெற்றியால் கொல்கத்தா அணி 9 போட்டிகளில் 6 வெற்றி, 3 தோல்விகளுடன் 12 புள்ளிகளுடன் 2வது இடத்தில் இருக்கிறது. அது மட்டுமல்லாமல் அனைத்து அணிகளையும்விட நிகர ரன்ரேட்டில் உயர்வாக 1.096 என்று உச்சத்தில் இருக்கிறது. இந்த வெற்றியால், அடுத்தடுத்து ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்லும் வாய்ப்பை பிரகாசப்படுத்திக் கொண்டது.

கலைந்துவிட்டதா டெல்லியின் ப்ளே ஆஃப் கனவு?

ஆனால், டெல்லி அணி இந்த தோல்வியால் ப்ளே ஆஃப் சுற்றுவாய்ப்பு மறுக்கப்படவில்லை என்றாலும், சற்று கடினமாகியுள்ளது. டெல்லி அணி தற்போது 11 போட்டிகளில் ஆடி 5 வெற்றி, 6 தோல்வி என 10 புள்ளிகளுடன்6-வது இடத்தில் இருக்கிறது. நிகர ரன்ரேட் மோசமாகக் குறைந்து மைனஸ் 0.442 என சரிந்துவிட்டது.

இனி அடுத்துவரும் 3 போட்டிகளையும் டெல்லி அணி கட்டாயமாக வெல்ல வேண்டிய நிலையிலும் நல்ல ரன்ரேட்டில் வெல்ல வேண்டிய நிர்பந்தமும் ஏற்பட்டுள்ளது. ஏனென்றால், அடுத்த 3 போட்டிகளை டெல்லி அணி வென்றாலே அதிகபட்சமாக 16 புள்ளிகள்தான் பெற முடியும்.

ப்ளே ஆஃப் சுற்றுக்குச் செல்ல 4-ஆவது இடத்துக்கு 16 புள்ளிகள் அளவுகோலாக இருக்கும் பட்சத்தில் பல அணிகள் கடும் நெருக்கடி கொடுக்கும். அப்போது ரன்ரேட் முக்கியமாகும், அதை பராமரிக்க வேண்டிய நிலையில் டெல்லி அணி இருக்கிறது.

கொல்கத்தா - டெல்லி - ஐபிஎல்

பட மூலாதாரம், Getty Images

அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய தமிழ்நாட்டு வீரர்

கொல்கத்தா அணியின் வெற்றிக்கு பேட்டிங்கில் தொடக்க ஆட்டக்காரர் பில் சால்ட் அமைத்துக் கொடுத்த அடித்தளமும், பந்துவீச்சில் தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி 3 விக்கெட் வீழ்த்தியதும் முக்கியக் காரணமாகும். கடந்த 8 போட்டிகளாக பந்துவீச்சில் திணறிக் கொண்டிருந்த வருண், 8 போட்டிகளில் 8 விக்கெட் மட்டுமே எடுத்திருந்தால், பந்துவீச்சு சராசரியும் 9 ரன்களாக இருந்தது.

ஆனால், நேற்றைய ஆட்டத்தில் வருண் மீண்டும் ஃபார்முக்கு திரும்பினார். அவருக்கு உதவும் வகையில் விக்கெட்டும் இருந்ததால், வருண் பந்துவீச்சில் பந்துகள் நன்றாக திரும்பின. டெல்லி பேட்டர்கள் வருண் பந்துவீச்சை சமாளித்து ஆடத் திணறினர். 4 ஓவர்கள் வீசிய வருண் 16 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருது வென்றார்.

“ப்ளே ஆஃப்தான் எங்கள் இலக்கு”

கொல்கத்தா அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் கூறுகையில் “ ஆடுகளம் உதவியதாக நினைக்கவில்லை. ஏனென்றால், பவர்ப்ளே ஓவருக்குப்பின் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு நன்கு ஒத்துழைத்தது பேட்டர்களுக்குக் கடினமாக இருந்தது. முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது ஒருவிதத்தில் நல்லதாகிவிட்டது. தொடக்க ஆட்டக்காரர்கள் பில் சால்ட, நரைன் இருவரிடமும் எப்படி விளையாட வேண்டும் என்று டீம் மீட்டிங்கில் பேசியதில்லை. அவர்களும் கூட்டத்தில் பங்கேற்கமாட்டார்கள். ஆனால் அவர்களின் பங்களிப்பில் எந்தச் சிக்கலும் இல்லை.”

“வருண் கடந்த சில போட்டிகளாக தடுமாறிய நிலையில் இன்று சிறப்பாகப் பந்துவீசினார். ப்ளே ஆஃப் சுற்றுக்குள் சென்றுவிட வேண்டும் என்று முதல் போட்டியிலிருந்து இலக்காக வைத்து ஆடி வருகிறோம். அதை நோக்கித்தான் செல்கிறோம், எங்கள் திறமையை வெளிப்படுத்துகிறோம்” எனத் தெரிவித்தார்

கொல்கத்தா - டெல்லி - ஐபிஎல்

பட மூலாதாரம், SPORTZPICS

நெருக்கடி தந்த கொல்கத்தா பந்துவீச்சு

கொல்கத்தா ஈடன்கார்டன் ஆடுகளத்தில் கடந்த சில போட்டிகளாக தட்டையான ஆடுகளத்திலே ஆட்டங்கள் நடந்த நிலையில் நேற்று சுழற்பந்துவீச்சுக்கு உதவும் வகையில் மெதுவான விக்கெட் அமைக்கப்பட்டிருந்தது. இந்த ஆடுகளத்தை டெல்லி கேபிடல்ஸ் பந்துவீச்சாளர்கள் பயன்படுத்தியதைவிட கொல்கத்தா பந்துவீச்சாளர்களே நன்றாகப் பயன்படுத்தினர்.

முதலில் பேட் செய்த டெல்லி கேபிடல்ஸ் அணியின் தொடக்க வரிசையில் 3 விக்கெட்டுகளை மிட்ஷெல் ஸ்டார்ஸ், வைபவ் அரோரா ஆகியோர் பவர்ப்ளே ஓவருக்குள் வீழ்த்தி நெருக்கடி கொடுத்தனர்.

நடுப்பகுதி ஓவர்களில் வருண், நரைன், ராணா ஆகியோர் விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லி அணியை பெரிய இக்கட்டில் சிக்கவைத்தனர். ஒரு கட்டத்தில் டெல்லி அணி 111 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து திணறியது. 68 ரன்கள் வரை 3 விக்கெட்டுகளை இழந்திருந்த டெல்லி அணி, அடுத்த 43 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து சரிவை நோக்கிச் சென்றது. கடைசி நேரத்தில் குல்தீப் யாதவ் 26 பந்துகளில் 35 ரன்கள் சேர்த்து கவுரமான ஸ்கோர் கிடைக்க உதவினார். இல்லாவிட்டால் டெல்லி அணி 120 ரன்களுக்குள் சுருண்டிருக்கும்.

குறிப்பாக கொல்கத்தா சுழற்பந்துவீச்சாளர்கள் சுனில் நரைன், வருண் சக்ரவர்த்தி இருவரும் சேர்ந்து 8 ஓவர்கள் வீசி 40 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். ஹர்சித் ராணா, வைவப் அரோரா இருவரும் ஓரளவுக்கு கட்டுக்ககோப்பாக பந்துவீசி ஓவருக்கு 7 ரன்கள் வீதம் கொடுத்து தலா 2 விக்கெட்டுகளைச் சாய்த்தனர். ஸ்டார்க் பந்துவீச்சில் ரன்கள் வாரி வழங்கப்பட்டன, 3 ஓவர்கள் வீசிய ஸ்டார்க் 43 ரன்களை வழங்கி ஒரு விக்கெட்டை மட்டும் வீழ்த்தினார்.

கொல்கத்தா - டெல்லி - ஐபிஎல்

பட மூலாதாரம், Getty Images

வெற்றிக்கு அடித்தளமிட்ட பில் சால்ட்

குறைவான இலக்கை துரத்திய கொல்கத்தா அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் பில் சால்ட், நரைன் அதிரடியான தொடக்கத்தை அளித்தனர். டெல்லி பந்துவீச்சாளர்கள் கலீல், வில்லியம்ஸ்,ரசிக் சலாம் ஆகியோரின் பந்துவீச்சை வெளுத்த பில் சால்ட் பவுண்டரி, சிக்ஸர்களாகப் பறக்கவிட்டார். லிசாட் வில்லியம்ஸ் வீசிய முதல் ஓவரிலேய சால்ட் 23 ரன்கள் சேர்த்தார், கலீல் அகமது வீசிய 2வது ஓவரிலும் சால்ட் 15 ரன்கள் சேர்த்து பவர்ப்ளே ஓவரை நன்றாகப் பயன்படுத்தினார்.

பில் சால்ட் 26 பந்துகளில் அரைசதத்தை நிறைவு செய்த பில் சால்ட் இந்த சீசனில் 4வது அரைசதத்தை அடித்தார். பவர்ப்ளே ஓவர்களில் கொல்கத்தா அணி விக்கெட் இழப்பின்றி 79 ரன்கள் சேர்த்து, ஏறக்குறைய வெற்றியை உறுதி செய்தது.

தொடக்கத்திலேயே சுழற்பந்துவீச்சைக் கொண்டுவராமல் பவர்ப்ளே ஓவருக்குப்பின்புதான் அக்ஸர் படேல், குல்தீப் இருவரும் பந்துவீச வந்தனர். ஆனால், அக்ஸர் வந்த உடனே முதல் பந்திலேயே சுனில் நரேன்(15) விக்கெட்டை எடுத்தார். முதல் விக்கட்டுக்கு இருவரும் 79 ரன்கள் சேர்த்தனர்.

அடுத்த 9-வது ஓவரை அக்ஸர் வீச வந்தபோது, களத்தில் நங்கூர மிட்டு பேட் செய்த பில் சால்ட்டை(68) க்ளீன் போல்டாக்கி வெளியேற்றினார்.வழக்கமாக கீழ் வரிசையில் களமிறங்கும் ரிங்கு சிங் பதவி உயர்வு பெற்று 3வதுவீரராகக் களமிறங்கினார். ரசிகர்களுக்கு பெரிய விருந்து காத்திருக்கிறது என்று நினைத்தபோது, ரிங்கு சிங் ஏமாற்றினார். வில்லியம்ஸ் ஓவரில் ரிங்கு சிங்(11) ரன்களில் குல்தீப்பிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார்.

4வது விக்கெட்டுக்கு கேப்டன் ஸ்ரேயாஸ், வெங்கடேஷ் இருவரும் சேர்ந்து நிதானமாக பேட் செய்து அணியை வெற்றி பெற வைத்தனர். ஸ்ரேயாஸ் 33 ரன்களிலும், வெங்கடேஷ் 26 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றி பெற வைத்தனர்.

கொல்கத்தா - டெல்லி - ஐபிஎல்

பட மூலாதாரம், SPORTZPICS

டெல்லி அணி சறுக்கியது எங்கே?

டெல்லி கேபிடல்ஸ் அணியின் பந்துவீச்சு, பேட்டிங், பீல்டிங் ஆகிய 3 துறைகளுமே நேற்று மோசமாக இருந்தது. இதில் சுழற்பந்துவீச்சு மட்டுமே ஓரளவுக்க டெல்லிக்கு கை கொடுத்தது. பவர்ப்ளே ஓவரிலேயே அக்ஸர், குல்தீப் யாதவை பந்துவீச அழைத்திருந்தால், கொல்கத்தா அணி பவர்ப்ளேயில் ரன் குவிப்பைத் தடுத்திருக்கலாம். ஆட்டத்தை இன்னும் சிறிது நெருக்கடியாகக் கொண்டு சென்றிருக்கலாம்.

பீல்டிங்கில், முதல் ஓவரில் பில் சால்ட் அடித்த ஷாட்டை கலீல் அகமது கோட்டைவிட்டு பெரிய தவறு செய்தார். பந்துவீச்சில் லிசாட் வில்லியம்ஸ், ரசீக் சலாம், கலீல் ஆகியோர் ரன்களை அதிகமாக வழங்கியதும் ஆட்டத்தை இன்னும் நெருக்கடியாகக் கொண்டு செல்லத் தவறியது.

பேட்டிங்கில் பிரேசர் மெக்ருக் அதிரடியாகத் தொடங்கினாலும், அவரை கட்டம் கட்டி கொல்கத்தா பந்துவீச்சாளர்கள் தூக்கினர். அதிலும் மிட்ஷெல் ஸ்டார்க், பிரேசருக்கு வீசிய 7 பந்துகளில் 5 பந்துகள் யார்க்கராக வீசினார். வைபவ் அரோராவும் யார்கர்களை வீசி மெக்ருக்கை திணறவைத்தனர். இறுதியில் ஸ்டார்க் பந்துவீச்சில் மெக்ருக்(12) விக்கெட்டை இழந்தார்.

கொல்கத்தா - டெல்லி - ஐபிஎல்

பட மூலாதாரம், Getty Images

ஹர்சித் ராணா பந்துவீச வந்து முதல் பந்திலேயே அபிஷேக் போரெலை 15 ரன்னில் க்ளீன் போல்டாக்கினார். ஏற்கெனவே எதிரணி பேட்டர்களுக்கு “சென்ட்ஆஃப்” செய்து அபாராதத்தை வாங்கிய ஹர்சித் நேற்றும் “சென்ட்ஆஃப்” செய்ய முயன்று கட்டுப்படுத்திக்கொண்டார்.

ரிஷப்பந்த்-அக்ஸர் படேல் ஜோடி சரிவிலிருந்து அணியை மீட்க முயன்றனர். ஆனால், வருண், நரைன் ஓவரில் அடுத்தடுத்து சீரான இடைவெளியில் டெல்லி பேட்டர்கள் விக்கெட்டை இழந்தனர். ரிஷப் பந்த்(27), வருண் பந்துவீச்சிலும் அக்ஸர்(15) நரைன் பந்துவீச்சிலும் ஆட்டமிழந்தனர்.

ஸ்டப்ஸ்(4), குஷ்ஹரா(1) விக்கெட்டுகளை வருண் வீழ்த்தவே டெல்லி அணி 111 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. கடைசி நேரத்தில் குல்தீப் யாதவ் கேமியோ ஆடிய 35 ரன்கள் சேர்க்காமல் இருந்தால், நிலைமை இன்னும் மோசமாகியிருக்கும்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)