ஐபிஎல் பிளேஆஃப் வாய்ப்பு யாருக்கு? சிஎஸ்கே, மும்பை, ஆர்சிபி அணிகளின் நிலை என்ன?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், க.போத்திராஜ்
- பதவி, பிபிசி தமிழுக்காக
2024-ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் சீசன், பாதியைக் கடந்துவிட்டது. 10 அணிகளும் குறைந்தபட்சம் 8 முதல் அதிகபட்சமாக 10 போட்டிகள் வரை விளையாடிவிட்டன. அடுத்ததாக ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்ல முதல் 4 இடங்களைப் பிடிக்க அணிகளுக்குக் கடும் போட்டி ஏற்படத் தொடங்கியுள்ளன.
இதுவரை சிறப்பாக செயல்பட்ட அணிகளுக்குக் கூட சறுக்கல்கள் ஏற்படலாம், சுமாராக இதுவரை ஆடிய அணிகள் கூட இனிமேல் சிறப்பாக ஆடி ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்லலாம். இனிவரும் போட்டிகள் அனைத்தும் ஒவ்வொரு அணிகளுக்கும் முக்கியத்துவம், வெற்றி அவசியம், அதைவிட நிகர ரன்ரேட்டை பராமரிப்பது மிகமிக அவசியம்.
அந்த வகையில் தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 9 போட்டிகளில் 8 வெற்றி, ஒரு தோல்வி என 16 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்தாலும் ப்ளே ஆஃப் சுற்று உறுதியாகவில்லை. ஏனென்றால், ஆர்சிபி அணி தவிர மற்ற 9 அணிகளும் 16 புள்ளிகள் வரை பெறுவதற்கு வாய்ப்புள்ளது, கடைசி இடத்துக்கும் கூட அணிகள் மோதிக்கொள்ளலாம் என்பதால், ராஜஸ்தான் அணி பாதுகாப்பாக ப்ளே ஆஃப் சுற்று செல்ல குறைந்தபட்சம் ஒரு வெற்றிபெற்று 18 புள்ளிகள் பெறுவது அவசியம்.
டெல்லி அணியை வீழ்த்தியதன் மூலம் கொல்கத்தா அணி 12 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்திருக்கிறது.
ராஜஸ்தான் அணிக்கு அடுத்ததாக, சன்ரைசர்ஸ் அணியுடன்(மே2), டெல்லி கேபிடல்ஸ்(மே7), சிஎஸ்கே(மே12), பஞ்சாப் கிங்ஸ்(மே15), கொல்கத்தா(மே19) ஆகிய அணிகளுடன் மோத இருக்கிறது.
இதில் உள்ள 5 அணிகளில் சிஎஸ்கே, சன்ரைசர்ஸ், டெல்லி கேபிடல்ஸ் அணிகள் தலா 10 புள்ளிகளுடன் இருப்பதால், ப்ளே ஆஃப் சுற்றை உறுதி செய்ய கடுமையாக போட்டியிடும். ஆதலால், ராஜஸ்தான் அணிக்கு அடுத்து வரும் 5 ஆட்டங்களும் கடும் சவாலாகவே இருக்கும்.

பட மூலாதாரம், Getty Images
கொல்கத்தாவிடம் மும்பையின் கடிவாளம்
கொல்கத்தா அணி தற்போது 9 போட்டிகளில் 6 வெற்றி, 3 தோல்வி என 12 புள்ளிகளுடன் 2வது இடத்தில் இருக்கிறது. இதில் 10 புள்ளிகளுடன் கொல்கத்தா அணிக்கு நெருக்கடி கொடுக்க சிஎஸ்கே, லக்னெள அணி, சன்ரைசர்ஸ், டெல்லி கேபிடல்ஸ் அணிகள் இருக்கின்றன.
கொல்கத்தா அணிக்கு இன்னும் 5 லீக் ஆட்டங்கள் இருப்பதால், ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்ல இன்னும் 5 போட்டிகளில் 3 வெற்றிகளாவது அவசியமாக இருக்கிறது.
கொல்கத்தா அணி இன்னும் 2 போட்டிகளில் வென்று 16 புள்ளிகள் பெற்றாலும் அது பாதுகாப்பில்லாமல் இருக்கும். ஏனென்றால், மற்ற அணிகளும் 16 புள்ளிகள் பெறுவதற்கான சாத்தியங்கள் இருப்பதால், பாதுகாப்பாக ப்ளே ஆஃப் செல்ல 3 வெற்றிகள் அவசியம். அப்போதுதான், 18 புள்ளிகளுடன் நிகர ரன்ரேட் அடிப்படையில் செல்ல முடியும்.
கொல்கத்தா அணிக்கு இன்னும் மும்பை(மே3), லக்னெள(மே 5), மும்பை(மே11), குஜராத்(மே13) ராஜஸ்தான்(மே 19) ஆகிய போட்டிகள் உள்ளன. இதில் மும்பை அணியுடன் மட்டும் கொல்கத்தா அணி 2 முறை மோதுவது குறிப்பிடத்தக்கது. இதில் மும்பை அணி ப்ளே ஆஃப் சுற்றை நிர்ணயிப்பது கொல்கத்தா அணிதான். இரு போட்டிகளிலும் மும்பையை வீழ்த்திவிட்டாலே மும்பையின் ப்ளே ஆஃப் வாய்ப்பு முடிந்துவிடும்.
பஞ்சாபை முடிவு செய்யும் சிஎஸ்கே

பட மூலாதாரம், Getty Images
5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் தொடர்ந்து இரு தோல்விகளைச் சந்தித்த நிலையில் சன்ரைசர்ஸ் அணியை வீழ்த்தி 9 போட்டிகளில் 5 வெற்றி, 4 தோல்வி என 10 புள்ளிகளுடன் 3வது இடத்தில் இருக்கிறது. சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக சிறப்பான வெற்றியால் சிஎஸ்கே நிகர ரன்ரேட் 0.810 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் சிஎஸ்கே அணிக்கு 5 போட்டிகள் உள்ளன. சிஎஸ்கே அணியும் ப்ளே ஆஃப் டாப்-4 இடங்களில் இடம் பெற குறைந்தபட்சம் 3 வெற்றிகளும், அல்லது சிக்கல் இல்லாமல் இருக்க 4 வெற்றிகளும் அவசியமாகிறது.
சிஎஸ்கே அணிக்கு அடுத்து 5 ஆட்டங்கள் மீதமுள்ளன. இதில் பஞ்சாப் அணி(மே1), பஞ்சாப் அணி(மே5), குஜராத்(மே10), ராஜஸ்தான்(மே12), ஆர்சிபி(மே18) ஆகிய போட்டிகள் உள்ளன. இதில் பஞ்சாப் அணியின் ப்ளே ஆஃப் சுற்று கடிவாளம் சிஎஸ்கே வசம் இருக்கிறது. ஏனென்றால், பஞ்சாப் அணியுடன் இரு போட்டிகளில் சிஎஸ்கே அணி விளையாட உள்ளது. இரு ஆட்டங்களிலும் சிஎஸ்கேயிடம் தோல்வி அடைந்தாலே, பஞ்சாப் அணியின் ப்ளே ஆஃப் கனவு கலைந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

பட மூலாதாரம், Getty Images
சன்ரைசர்ஸ் அணிக்கு என்ன வாய்ப்பு?
சன்ரைசர்ஸ் அணி இரு அடுத்தடுத்த தோல்விகளைச் சந்தித்துள்ளது. ஆர்சிபி, சிஎஸ்கேயுடன் தோற்று சற்று பதற்றமடைந்துள்ளது. 9 போட்டிகளில் 5 வெற்றி, 4 தோல்வி என 10 புள்ளிகளுடன், 0.075 என்ற நிகர ரன்ரேட்டில் இருக்கிறது. அடுத்தடுத்த தோல்வியால் சன்ரைசர்ஸ் நிகர ரன்ரேட் வெகுவாகக் குறைந்துவிட்டது.
சன்ரைசர்ஸ் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்ல குறைந்தபட்சம் 3 வெற்றிகள் அவசியம். 16 புள்ளிகள் பெற்றால், கடைசி இடத்துக்கு முயற்சிக்கலாம். ஆனால், நிகர ரன்ரேட்டில் மற்ற அணிகள் மல்லுக்கட்டலாம் என்பதால், இப்போதுள்ள நிகர ரன்ரேட் போதாது. ஆனால், 4 வெற்றிகளுடன் 18 புள்ளிகளைப் பெற்றால் ப்ளே ஆஃப் சுற்றுக்குள் பாதுகாப்பாக செல்லலாம். ஆனால், ராஜஸ்தான் தவிர்த்து டாப் 5 வரிசையில் இருக்கும் அணிகள் 18 புள்ளிகளுடன் இருந்தால், நிகர ரன்ரேட்தான் பேசும்.
சன்ரைசர்ஸ் அணிக்கு அடுத்த ராஜஸ்தான்(மே2), மும்பை(மே6), லக்னெள(மே8), குஜராத்(மே16), பஞ்சாப்(மே19) ஆகிய போட்டிகள் உள்ளன. இதில் ராஜஸ்தான், லக்னௌ அணிகளுடனான ஆட்டம் சன்ரைசர்ஸ் அணிக்குக் கடும் சவாலாக இருக்கும். மும்பை அணியை ஏற்கெனவே சன்ரைசர்ஸ் துவைத்திருப்பதால், 2வது முறையும் வெளுத்து வாங்கினால், மும்பையின் ப்ளே ஆஃப் கனவு முடிவுக்கு வந்துவிடும். அதேபோல, பஞ்சாப் அணி சன்ரைசர்ஸ் அணியுடன் தோற்றாலும் ப்ளே ஆஃப் சுற்று அரிதாகிவிடும்.

பட மூலாதாரம், Getty Images
லக்னெள சூப்பர் ஜெயிண்ட்ஸ்
லக்னெள சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி 9 போட்டிகளில் 5 வெற்றி, 4 தோல்வி என 10 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருந்தாலும், நிகர ரன்ரேட் மிகக் குறைவாக 0.059 என்ற ரீதியில் இருக்கிறது. இன்னும் 5 ஆட்டங்கள் லக்னெள அணிக்கு மீதம் இருப்பதால், ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்ல வாய்ப்பு அதிகம் இருக்கிறது. ஆனால், குறைந்தபட்சம் 3 வெற்றிகள் பெற்று 16 புள்ளிகளுடன் ப்ளே ஆஃப் வாய்ப்பை எதிர்பார்ப்பது சற்று போட்டிக்குரியது. ஆதலால், 4 வெற்றிகளுடன் 18 புள்ளிகளுடன் ப்ளே ஆஃப் சுற்றுக்குள் நிகர ரன்ரேட் அடிப்படையில் செல்ல முடியும்.
லக்னெள அணிக்கு இன்னும் 5 ஆட்டங்கள் உள்ளன. மும்பை(ஏப்.30),கொல்கத்தா(மே5), சன்ரைசர்ஸ்(மே8),டெல்லி(மே14), மும்பை(மே17) ஆகிய அணிகளுடன் மோதுகின்றன. இதில் மும்பை அணி மட்டும் கொல்கத்தாவுடன் 2 முறையும், லக்னெள அணியுடன் 2 முறையும் மோதுகிறது. இந்த இரு அணிகளுடனும் தலா ஒரு தோல்வியை மும்பை சந்தித்தாலே மும்பையின் ப்ளே ஆஃப் சுற்று கனவு கருகிவிடும். ஆக, மும்பை அணியின் கடிவாளத்தை கொல்கத்தா அணியோடு சேர்ந்து லக்னெள அணியும் பிடித்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images
டெல்லி கேபிடல்ஸ்
டெல்லி கேபிடல்ஸ் அணி 11 போட்டிகளில் 5 வெற்றி, 6 தோல்வி என 10 புள்ளிகளுடன் உள்ளது. ஆனால், நிகர ரன்ரேட் மைனஸ் 0.442 ஆகக் குறைந்துள்ளது. அடுத்துவரும் 3 போட்டிகளிலும் டெல்லி வென்று நிகர ரன்ரேட்டை உயர்த்தினால்தான் ரேஸில் ஓட முடியும்.
டெல்லி அணி அடுத்ததாக ராஜஸ்தான்(மே6), ஆர்சிபி(மே12), லக்னெள(மே14) ஆகிய போட்டிகள் உள்ளன. இந்த 3 ஆட்டங்களும் டெல்லிக்குக் கடும் சவாலாக இருக்கும்.
குஜராத் டைட்டன்ஸ்

பட மூலாதாரம், Getty Images
முன்னாள் சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணி 10 போட்டிகளில் 4 வெற்றி, 6 தோல்வி என 8 புள்ளிகளுடன் 7-வது இடத்தில் இருக்கிறது, நிகர ரன்ரேட் மைனஸ் 1.113 என்று மோசமாக இருக்கிறது. குஜராத் அணிக்கு அடுத்து 4 போட்டிகள் மட்டுமே மீதமுள்ளதால், அனைத்திலும் பெரிய வெற்றியைப் பெற்றால்தான் ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்ல முடியும். 3 வெற்றிகளுடன் 16 புள்ளிகளுடன் குஜராத் இருந்தால், நிகர ரன்ரேட்டில் கடுமையாக அடிவாங்கவும் வாய்ப்புள்ளது. ஆதலால், அடுத்துவரும் போட்டிகளில் குஜராத் அணிக்கு வெற்றி அவசியமாகும்.
குஜராத் அணிக்கு அடுத்ததாக ஆர்சிபி(மே4), சிஎஸ்கே(மே10), கொல்கத்தா(மே13) சன்ரைசர்ஸ்(மே16) ஆகிய போட்டிகள் உள்ளன. இதில் சிஎஸ்கே, கொல்கத்தா, சன்ரைசர்ஸ் அணிகளுடனான ஆட்டம் கடும் சவாலாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
பஞ்சாப் கிங்ஸ் வாய்ப்பு யார் கையில்?

பட மூலாதாரம், Getty Images
பஞ்சாப் கிங்ஸ் அணி 9 போட்டிகளில் 3 வெற்றி, 6 தோல்வி என 6 புள்ளிகளுடன் 8-வது இடத்தில் இருக்கிறது. நிகர ரன்ரேட் மைனஸ்0.187 என்று குஜாரத் அணியைவிட சிறப்பாகவே இருக்கிறது. இன்னும் பஞ்சாப் அணிக்கு 5 போட்டிகள் மீதம் உள்ளன. அனைத்து ஆட்டங்களிலும் வென்றால்தான் கணித ரீதியாக ப்ளே ஆஃப் சுற்றுக்குள் வர முடியும். அதன்பின் நிகர ரன்ரேட் முக்கியமாகும்.
பஞ்சாப் அணிக்கு அடுத்தபடியாக, சிஎஸ்கே அணியுடன் இரு ஆட்டங்களும் சவாலாக இருக்கும். அடுத்தாக, சன்ரைசர்ஸ்(மே19), ராஜஸ்தான்(மே15), ஆர்சிபி(மே9) ஆகிய ஆட்டங்களில் ராஜஸ்தான், சன்ரைசர்ஸ் ஆட்டங்களிலும் வெற்றிக்காக பஞ்சாப் கடுமையாக போராட வேண்டியதிருக்கும். ஒருவேளை சிஎஸ்கே அணியிடம் இரு ஆட்டங்களிலும் தோற்றுவிட்டாலே பஞ்சாப் ப்ளே ஆஃப் கனவு முடிவுக்கு வந்துவிடும். அதன்பின் பெறும் வெற்றிகள் மற்ற அணிகளின் ப்ளே ஆஃப் வாய்ப்புக்குத்தான் வேட்டுவைக்கும்.
மும்பை அணிக்கு வாய்ப்பு கடினம்

பட மூலாதாரம், Getty Images
மும்பை இந்தியன்ஸ் அணி 9 போட்டிகளில் 3 வெற்றி, 6 தோல்வி என 6 புள்ளிகளுடன் 9-வது இடத்திலும், நிகர ரன்ரேட்டில் மைனஸ் 0.261 என்ற ரீதியில் இருக்கிறது. மும்பை அணியும் ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்ல வேண்டுமென்றால் அடுத்துவரும் அனைத்து ஆட்டங்களிலும் வெல்வது கட்டாயம். ஒரு போட்டியில் தோற்றாலும் ப்ளே ஆஃப் சுற்றுக் கனவு முடிவுக்கு வந்துவிடும்.
மும்பையின் ப்ளே ஆஃப் சுற்று வாய்ப்பின் கடிவாளம் கொல்கத்தா அணியிடம் இருக்கிறது. ஏனென்றால், அடுத்ததாக இரு ஆட்டங்களில் கொல்கத்தாவுடன் மும்பை மோத உள்ளது. இதில் ஒரு ஆட்டத்தில் தோற்றாலும் மும்பை இந்தியன்ஸ் கதை முடிந்திவிடும்.

பட மூலாதாரம், Getty Images
ஆர்சிபிக்கு ப்ளே ஆஃப் செல்லுமா?
ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் செல்வது என்பது கணிதத்தில் மட்டும்தான், நடைமுறையில் அடுத்துவரும் 4 ஆட்டங்களில் வென்றாலும், ப்ளே ஆஃப் சுற்றுக் கனவு இலவு காத்த கிளி கதைதான். இதுவரை 10 போட்டிகளில் 3 வெற்றி, 7 தோல்வி என 6 புள்ளிகளுடன் ஆர்சிபி கடைசி இடத்தி்ல் இருக்கிறது.
அடுத்துவரும் 4 ஆட்டங்களில் வென்றாலும் ஆர்சிபி 14 புள்ளிகள்தான் பெறும். ஆனால், இந்த முறை 14 புள்ளிகள் வைத்து 4வது இடம் நிர்ணயிக்கப்படுவது கடினம்தான். ஒருவேளை 14 புள்ளிகள் கடைசி இடத்துக்கு அளவுகோலாக வந்தால் ஆர்சிபி அணியின் நிகர ரன்ரேட் உயர்வாக இருக்க வேண்டும். அது மட்டுமல்லாமல், ஆர்சிபி ப்ளே ஆஃப் செல்ல பல அணிகள் தங்கள் வெற்றியை தாரை வார்க்க வேண்டும். இவையெல்லாம் நடந்தால், ஆர்சிபி ப்ளே ஆஃப் செல்லும்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












