தொடர் தோல்வி பற்றி ஹர்திக் கூறியது என்ன? சென்னைக்கு என்ன சிக்கல்?

பட மூலாதாரம், SPORTZPICS
மாற்றங்களுடன் இந்த சீசனை தொடங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியின் தடுமாற்றம் தொடர்ந்து வருகிறது. பவர் ப்ளேயின் முதல் 4 ஓவர்களில் 27 ரன்களுக்கு 3 விக்கெட், அடுத்த 2 ஓவர்களில் ஒரு ரன்னுக்கு ஒரு விக்கெட் என 28 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து மும்பை இந்தியன்ஸ் அணி தடுமாறியது.
லக்னோவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 48-ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.
முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 7 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் சேர்த்தது. 145 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி 4 பந்துகள் மீதமிருக்கையில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

பட மூலாதாரம், Getty Images
ப்ளே ஆஃப் செல்ல லக்னோ என்ன செய்ய வேண்டும்?
இந்த வெற்றியின் மூலம் லக்னோ அணி 10 போட்டிகளில் 6 வெற்றி, 4 தோல்வி என 12 புள்ளிகளுடன் 3வது இடத்துக்கு முன்னேறியது. இதனால் சென்னை அணி 4-ஆவது இடத்துக்குச் சென்றுவிட்டது. இதனால் அடுத்தடுத்து வரும் போட்டிகள் சென்னை அணிக்கு முக்கியமானதாக மாறியிருக்கின்றன.
அதே நேரத்தில் எளிதாக வெல்ல வேண்டிய போட்டியை கடைசிவரை இழுத்து வந்ததால், லக்னோவின் நிகர ரன்ரேட் பெரிதாக உயரவில்லை. சென்னை அணியையும் விட 0.094 என்ற அளவில் மிகக்குறைவாக இருக்கிறது.
அடுத்தடுத்து வரும் போட்டிகளில் லக்னோ அணி நிகர ரன்ரேட்டை உயர்த்தும் வகையில் ஆடினால்தான், ப்ளேஆஃப் சுற்றுக்குள் செல்ல தகுதிப்படுத்த முடியும். லக்னோ அணிக்கு இன்னும் 4 ஆட்டங்கள் மீதமிருக்கும் நிலையில் குறைந்தபட்சம் 3 ஆட்டங்களில் வெல்வது ப்ளே ஆஃப் சுற்று வாய்ப்பை சிக்கலில்லாமல் உறுதி செய்யும்.

பட மூலாதாரம், Getty Images
மும்பை ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்லுமா?
மும்பை அணி 10 போட்டிகளில் 3 வெற்றி, 7 தோல்வி என 6 புள்ளிகளுடன் கடைசி இடத்துக்கு அருகே உள்ளது.. நிகர ரன்ரேட்டும் மைனஸ் 0.272 என்று மோசமாக இருக்கிறது. இன்னும் கைவசம் 4 போட்டிகள் மட்டுமே இருப்பதால் அதில் அனைத்திலும் வென்றாலும் ப்ளே ஆஃப் சுற்று செல்வது கடினம்தான்.
மும்பை இந்தியன்ஸ் அணியைப் பொறுத்தவரை ஆர்சிபி அணியைப்போல், ப்ளே ஆஃப் சுற்று என்பது வெறும் கணிதத்தின் அடிப்படையில்தானேத் தவிர செயல்பாட்டளவில் சாத்தி இல்லாத செயலாகும். ஏனென்றால், மும்பை இந்தியன்ஸுக்கும், ஆர்சிபிக்கும் இன்னும் 4ஆட்டங்களே மீதம் உள்ளன. இந்த 4 ஆட்டங்களிலும் இரு அணிகளும் வெற்றி பெற்றால்கூட தலா 8 புள்ளிகள்தான் பெற முடியும் ஏற்கெனவே இருக்கும் 6 புள்ளிகள் என 14 புள்ளிகள்தான் பெற முடியும்.
ஆனால், ப்ளே ஆஃப் சுற்றில் 4-ஆவது இடத்துக்கு 16 புள்ளிகள்வரை பெற்று அணிகளுக்குள் கடும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு இருந்தால், ஆர்சிபி, மும்பை ஆகிய அணிகளும் தானாகவே ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்ல முடியாமல் போகும். ஒருவேளை 14 புள்ளிகள் பெற்ற அணிகள் 4-ஆவது இடத்துக்கு போட்டியிட்டால், ஆர்சிபி, மும்பை அணிகளின் நிகர ரன்ரேட் மிக அதிகமாக இருக்க வேண்டும். இவையெல்லாம் சாத்தியமானால்தான் மும்பை, ஆர்சிபி ப்ளே ஆஃப் செல்ல முடியும்.
இந்த ஐபிஎல் சீசன் தொடங்கும்போது ஸ்டாய்னிஸ் மந்தமாகத்தான் தொடங்கினார். ஆனால் ஒவ்வொரு போட்டியிலும் மெருகேறி இரு போட்டிகளில் லக்னோ அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாகியுள்ளார். இந்த சீசனில் பேட்டிங் சராசரியாக 40 வைத்திருக்கும் ஸ்டாய்னிஸ் 150 ஸ்ட்ரைக் ரேட்டுக்கும் அதிகமாக வைத்துள்ளார், பந்துவீச்சில் இதுவரை 10 போட்டிகளில் 12 ஓவர்கள் மட்டுமே வீசிய ஸ்டாய்னிஸ் 4 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். இந்த சீசனில் ஏற்கெனவே சதம் அடித்துவிட்ட ஸ்டாய்னிஸ் இந்த ஆட்டத்தில் 45 பந்துகளில் 62 ரன்கள் சேர்த்து (2சிக்ஸர், 7பவுண்டரி) ஆட்டமிழந்து, ஆட்டநாயகன் விருதையும் வென்றார்.

பட மூலாதாரம், Getty Images
வாய்ப்பை தவறவிட்ட லக்னோ
சேஸிங்கின்போது கேப்டன் ராகுலும், ஸ்டாய்னிஸும்தான் ஆட்டத்தைத் தொடங்கினார்கள் என்று கூறலாம். ஏனென்றால், தொடக்க ஆட்டக்காரர் குல்கர்னி முதல்பந்திலேயே துஷாரா பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி ஆட்டமிழந்தார். அதன்பின் 3வது வீரராக களமிறங்கிய ஸ்டாய்னிஸ், ராகுலுடன் சேர்ந்து தொடக்க ஆட்டக்காரர்போலத்தான் விளையாட வேண்டியதிருந்தது
ஆனால், சூழலுக்கு ஏற்றார்போல் பேட்செய்த ஸ்டாய்னிஸ், பவர்ப்ளே ஓவர்களை சிறப்பாகப் பயன்படுத்தி கோட்ஸீ வீசிய 3வது ஓவரில் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசினார். ராகுலும் அவ்வப்பபோது பவுண்டரிகள் அடிக்க பவர்ப்ளே ஓவரில் லக்னோ அணி ஒரு விக்கெட்டை இழந்து 52 ரன்கள் சேர்த்தது.
ராகுல் 5 ரன்கள் சேர்த்திருந்த ஒரு கேட்ச் கோட்டைவிடப்பட்டிருந்தது, ஆனால் இந்த முறை பாண்டியா பந்துவீச்சில் ராகுல்(28) அடித்தஷாட்டை நபி சிறப்பாக கேட்ச் பிடித்து வெளியேற்றினார். 2வது விக்கெட்டுக்கு ஸ்டாய்னிஸ்,ராகுல் கூட்டணி 58 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.
முதல் 50 ரன்களை 5.2 ஓவர்களை எட்டிய லக்னோ அணி அடுத்த 50 ரன்களை எட்டுவதற்கு 8ஓவர்கள் எடுத்துக்கொண்டது, அதாவது 48பந்துகளை எடுத்துக் கொண்டது. தொடக்கத்தில் 10 ரன்ரேட்டில் சென்ற லக்னோ அணி நடுப்பகுதி ஓவர்களில் ரன்சேர்க்கும் வேகம் குறைந்து 6 ரன்ரேட்டாகச் சரிந்தது.
நடுப்பகுதி ஓவர்களில் மும்பை அணியின் பியூஷ் சாவ்லா, பும்ரா, பாண்டியா ஆகியோர் கட்டுக்கோப்பாக பந்துவீசியதால் ஸ்டாய்னிஸ், தீபக் ஹூடா பேட்டிலிருந்து ரன்கள் செல்வது கடினமாக இருந்தது. இருப்பினும் நிதானமாக ஆடிய ஸ்டாய்னிஸ் 39 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

பட மூலாதாரம், Getty Images
தீபக் ஹூடா 18 ரன்கள் சேர்த்தநிலையில் பாண்டியா பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். 3வது விக்கெட்டுக்கு ஸ்டாய்னிஸ்-பாண்டியா கூட்டணி 40 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். அடுத்துவந்த நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷுடன் சேர்ந்தார்
இரு பெரிய ஹிட்டர்களும் அணியை விரைவாக வெற்றிக்கு அழைத்துச் செல்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஸ்டாய்னிஸ் 62 ரன்களில் முகமது நபி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இவரின் கணக்கில்2 சிக்ஸர், 7பவுண்டரிகள் அடங்கும்.
அடுத்து களமிறங்கிய டர்னர்(5), பதோனி(6) ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 115 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்த லக்னோ அணி, அடுத்த 18 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
வழக்கமாக அதிரடியாக சிக்ஸர்கள், பவுண்டரிகளை அடிக்கும் நிகோலஸ் பூரன் நிதானமாக ஆடி ஒரு பவுண்டரி மட்டுமே சேர்த்தார். பூரன் 14 ரன்களுடனும், குர்னல் பாண்டியா ஒரு ரன்னுடனும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றி பெற வைத்தனர்.
லக்னோ அணி முதல் 50 ரன்களை விரைவாக எடுத்துவிட்டு அடுத்த 95 ரன்களை மிகவும் மந்தமாகச் சேர்த்ததுதான் அதனால் நிகர ரன்ரேட்டைஉயர்த்தமுடியாமல் இருக்கிறது. 95 ரன்களைச் சேர்க்க லக்னோ அணி 14 ஓவர்களை எடுத்துக் கொண்டுள்ளது. இந்த மந்தமான பேட்டிங்தான் லக்னோவின் குறைவான நிகர ரன்ரேட்டுக்கு காரணமாகும். முதல் 50 ரன்களைச் சேர்த்ததுபோல் விரைவாக இலக்கை எட்டி குறைந்த ஓவர்களில் வென்றிருந்தால், லக்னோ அணி 2வது இடத்துக்கு முன்னேறியிருக்க முடியும்.

பட மூலாதாரம், Getty Images
பேட்டிங், பந்துவீச்சில் கலக்கிய ஸ்டாய்னிஸ்
சிஎஸ்கே அணிக்கு எதிராக சதம் அடித்து லக்னோவுக்கு மிகப்பெரிய வெற்றியை ஸ்டாய்னிஸ் பெற்றுக் கொடுத்தார். இந்நிலையில், நேற்றைய ஆட்டத்திலும் ஸ்டாய்னிஸ் அடித்த 62 ரன்கள் சேர்த்து லக்னோ வெற்றிக்கு முக்கியமான பங்களிப்பு செய்தார். பந்துவீச்சிலும், ஸ்டாய்னிஸ் மீது நம்பிக்கை வைத்து தொடக்கத்திலேயே கேப்டன் ராகுல் வாய்ப்பு வழங்கினார்.
அந்த வாய்ப்பை சிறப்பாகப் பயன்படுத்திய ஸ்டாய்னிஸ் புதிய பந்தை ஸ்விங் செய்து ஆபத்தான பேட்டர் சூர்யகுமார் யாதவ்(10) விக்கெட்டை வீழ்த்தினார். 3 ஓவர்கள் வீசிய ஸ்டாய்னிஸ் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார்.

பட மூலாதாரம், Getty Images
மும்பையின் சரிவு
மும்பை அணியைக் காப்பாற்றியது கீழ் வரிசை பேட்டர்கள் நேகல் வதேரா(46), டிம் டேவிட்(35) கடைசி நேரத்தில் ஆடிய கேமியோதான். இருவரும் கடைசி நேரத்தில் ஓரளவுக்கு பேட் செய்யாமல் இருந்திருந்தால் 120 ரன்களுக்குள் மும்பை அணி சுருண்டிருக்கும்.
லக்னோவில் நேற்று நடந்த ஆட்டத்தில் பயன்படுத்தப்பட்ட விக்கெட் பேட்டர்கள் பேட் செய்ய கடினமாக இருந்தது. மும்பை அணி கூடுதலாக 30 ரன்கள் ஸ்கோர் செய்திருந்தால், ஆட்டத்தை வென்றிருக்கக்கூடும்.
மும்பையின் தொடக்க வரிசை பேட்டர்கள் பவர்ப்ளே ஓவருக்குள் பெவிலியன் திரும்பினர். பவர்ப்ளே ஓவரில் மும்பை அணி அடித்த பவுண்டரிகளைவிட இழந்த விக்கெட்டுகள்தான் அதிகம். 3 பவுண்டரிகள் அடித்த மும்பை அணி, 4 விக்கெட்டுகளை இழந்தது.
ரோஹித் சர்மா(4) ரன்னில் மோசின்கான் வீசிய 2வது ஓவரில் ஆட்டமிழக்க, சூர்யகுமார்(10) ரன்னில் ஸ்டாய்னிஸ் வீசிய 3வது ஓவரில்விக்கெட்டை பறிகொடுத்துஇருவரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அதேபோல திலக் வர்மா(7), கேப்டன் ஹர்திக் (0) ஆகிய இருவரும் நவீன் உல்ஹக் வீசிய 6-வது ஓவரில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். பவர்ப்ளே ஓவருக்குள் 4 விக்கெட்டுகளை மும்பை அணி இழந்தது.
இஷான் கிஷன், நேகல் வதேராவுடன் சேர்ந்து ஓரளவுக்கு நிதானமாக பேட்செய்து ஸ்கோரை உயர்த்தினர். மும்பை அணி 10 ஓவரில்தான் 50 ரன்களை எட்டியது. ரவி பிஸ்னோய் வீசிய 13-வது ஓவரில் இஷான் 32 ரன்கள் சேர்த்தநிலையில் யாதவிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். நேஹல் வதேரா மட்டும் ஓரளவுக்கு சிறப்பாக ஆடி 46 ரன்களில் ஆட்டமிழந்தார். டிம் டேவிட் கடைசி நேரத்தில் கேமியோ ஆடி 35 ரன்கள் சேர்த்தார். மற்றவகையில் மும்பை பேட்டர்கள் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை.

பட மூலாதாரம், Getty Images
மயங்க் யாதவ் மீண்டும் காயமா?
இந்த சீசனில் கண்டுபிடிக்கப்பட்ட இளம் வேகப்பந்துவீச்சாளர், மணிக்கு 156 கி.மீ வேகத்தில் பந்துவீசக்கூடிய மயங்க் யாதவ் காயத்திலிருந்து மீண்டுவந்து நேற்று விளையாடினார். 3 ஓவர்கள் சிறப்பாகப் பந்துவீசிய மயங்க் யாதவ், 4வது ஓவரின் முதல் பந்தில் நபியை கிளீன் போல்டாக்கினார். ஆனால், வயிற்றுப்பகுதியில் மீண்டும் வலி எடுக்கவே மயங்க் யாதவ் பெவிலியன் திரும்பினார், அவரின் ஓவரை நவீன் உல்ஹக் பந்துவீசி நிறைவு செய்தார்.
மயங்க் யாதவ் குறித்து பயிற்சியாளர் ஜஸ்டின்லாங்கர் கூறுகையில் “ மயங்க் ஏற்கெனவே ஏற்பட்ட காயத்தில் மீண்டும் வலி ஏற்பட்டதால் முன்கூட்டியே அவரை அழைத்துவந்துவிட்டோம். மயங்க் உடல்நிலையில் நாங்கள் விளையாட விரும்பவில்லை. முன்னெச்சரிக்கையாக மயங்க் அழைத்து வரப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. பெரிதாக அவருக்கு பாதிப்பில்லை” எனத் தெரிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images
என்ன சொல்கிறார் பாண்டியா?
மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறுகையில் “ தொடக்கத்தில் அதிகமான விக்கெட்டுகளை பவர்ப்ளேக்குள் இழந்தபின் மீண்டு வரமுடியவில்லை. எங்களுக்கு தேவைப்படும் நேரத்தில் எங்களால் சிறப்பாகச் செயல்பட முடியவில்லை. ஒவ்வொரு போட்டியிலும் பிற அணிகள் பெரிய ஸ்கோரை அடித்துவருவதால் பேட்டர்கள் நெருக்கடிக்கு ஆளாகிறார்கள் என்று கூற முடியாது. விக்கெட் நன்றாக இருந்தது, பந்தை பார்த்து அடிக்க முடிந்தது. ஆனால் தவறான ஷாட்களை ஆடினோம். களத்துக்குள் இறங்கிவிட்டால் சில நேரங்களில் தோற்கலாம், வெற்றி பெறலாம், ஆனால் போராட வேண்டும் என்று நம்பக்கூடியவன். இந்த ஆட்டம் கடினமானதுதான். ஏராளமானவற்றைக் கற்றுக்கொண்டிருக்கிறோம். வதேரா சிறப்பாக பேட் செய்தார், கடந்த சீசனிலும் வதேரா சிறப்பாக விளையாடினார். தொடக்க வீரர்கள் சிறப்பாக ஆடியதால் வதேராவுக்குவாய்ப்புக் கிடைக்காமல் இருந்திருக்கலாம். பல ஆண்டுகளாக மும்பை அணிக்காக ஆடி வருவதைப் பார்த்திருக்கிறேன்” எனத் தெரிவித்தார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












