ஹமீதா பானு: ஆண்களுக்கு சவால்விட்ட இந்தியாவின் முதல் பெண் மல்யுத்த வீராங்கனை

ஆண்கள் கூட தோற்கடிக்க முடியாத இந்தியாவின் மல்யுத்த வீராங்கனை

பட மூலாதாரம், FEROZ SHAIKH

இந்தியாவில் பெண்கள் மல்யுத்தம் செய்வது விசித்திரமாக பார்க்கப்பட்ட 1950களில், ஹமீதா பானு ஆண் மல்யுத்த வீரர்களுக்கு ஒரு சவாலாகத் திகழ்ந்தார்.

இந்த 32 வயது மல்யுத்த வீராங்கனை, ஆண் மல்யுத்த வீரர்களிடம் ஒரு சவால் விடுத்தார். "என்னை யார் மல்யுத்த களத்தில் தோற்கடிக்கிறாரோ அவர் என்னைத் திருமணம் செய்து கொள்ளலாம்" என்பதுதான் அவர் விடுத்த சவால்.

இதேபோன்ற சவாலில், 1954 பிப்ரவரியில் இருந்து அவர் ஏற்கெனவே இரண்டு ஆண் மல்யுத்த சாம்பியன்களை தோற்கடித்திருந்தார். இவர்களில் ஒருவர் பாட்டியாலாவை சேர்ந்தவர். மற்றவர் கொல்கத்தாவை சேர்ந்தவர்.

அந்த ஆண்டு மே மாதம் தனது மூன்றாவது போட்டிக்காக அவர் பரோடாவிற்கு சென்றார்.

அவரது வருகை நகரில் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது 80 வயதாகும் சுதிர் பரப் அப்போது பரோடாவில் வசித்து வந்தார். விருது வென்ற கோ-கோ வீரரான அவர் அப்போது பள்ளியில் படித்துக் கொண்டிருந்தார்.

“அந்த மல்யுத்தப் போட்டி மக்களை மிகவும் கவர்ந்ததாக எனக்கு நினைவிருக்கிறது. அந்த மாதிரியான மல்யுத்தம் பற்றி யாரும் கேள்விப்பட்டதே இல்லை," என்று அவர் கூறினார்.

மல்யுத்தம் பார்ப்பதற்கான இருக்கை அமைப்பு பண்டைய கிரேக்க போர் விளையாட்டில் இருப்பது போன்று அமைக்கப்பட்டிருந்தன. ஆனால் பார்வையாளர்களின் ஆர்வத்தைத் தணிக்க ஹமீதா பானுவுக்கு சில வினாடிகளே தேவைப்பட்டன.

அந்தப் போட்டி ஒரு நிமிடம் 34 வினாடிகள் மட்டுமே நீடித்தது என்று அப்போதைய 'ஏபி' செய்தி முகமையின் அறிக்கை தெரிவிக்கிறது. ஹமீதா பானு, பாபா பயில்வானை வெற்றிகொண்டார்.

மல்யுத்த வீராங்கனை ஹமீதாவை அவர் திருமணம் செய்து கொள்வதற்கான வாய்ப்பு இல்லை என நடுவர் அறிவித்தார். ஹமீதா பானுவின் கொக்கிப்பிடியில் சிக்கி தோல்வியைத் தழுவிய பாபா பயில்வான், இதுவே தனது கடைசி போட்டி என்று உடனடியாக அறிவித்தார்.

பின்னாளில் இந்தியாவின் முதல் பெண் தொழில்முறை மல்யுத்த வீராங்கனையாகப் புகழ் பெற்ற ஹமீதா பானு, பெண்கள் பலவீனமானவர்களாகக் கருதப்பட்ட இந்த நாட்டின் பாரம்பரியக் கட்டுக் கதைகளைத் துணிச்சலுடன் முறியடித்து வந்தார்.

அந்த நாட்களில் மல்யுத்தம் முக்கியமாக ஆண்களின் விளையாட்டாகவே கருதப்பட்டது.

ஆண்கள் கூட தோற்கடிக்க முடியாத இந்தியாவின் மல்யுத்த வீராங்கனை

பட மூலாதாரம், FEROZ SHAIKH

"அலிகரின் அமேசான்"

ஹமீதா பானு சாதாரண மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகிவிட்டார். அவரது எடை, உயரம், அவ்வளவு ஏன் அவரது உணவுமுறையும்கூட செய்திகளில் இடம்பிடித்தது.

அவரது எடை 107 கிலோ, உயரம் 5 அடி 3 அங்குலம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவரது தினசரி உணவில் ஐந்தரை கிலோ பால், இரண்டே முக்கால் கிலோ சூப், சுமார் இரண்டேகால் லிட்டர் பழச்சாறு, ஒரு சிக்கன், ஒரு கிலோ மட்டன், 450 கிராம் வெண்ணெய், 6 முட்டை, சுமார் ஒரு கிலோ பாதாம், 2 பெரிய ரொட்டி மற்றும் 2 தட்டுகள் பிரியாணி ஆகியவை அடங்கும்.

நாளொன்றுக்கு ஒன்பது மணி நேரம் உறங்குவதும், ஆறு மணி நேரம் உடற்பயிற்சி செய்வதும் அவரது வழக்கம் என்றும் செய்திகளில் தெரிவிக்கப்பட்டது.

அவர் 'அலிகர் அமேசான்' என்று அழைக்கப்பட்டார். ஹமீதா மிர்ஸாபூரில் பிறந்தார். சலாம் என்ற மல்யுத்த வீரரின் கீழ் மல்யுத்தப் பயிற்சி பெற அலிகர் சென்றார்.

'அலிகர் அமேசானை' பார்த்தாலே போதும், உங்கள் உடல் நடுங்கத் தொடங்கிவிடும்,” என்று 1950களில் ஒரு கட்டுரையை எழுதிய எழுத்தாளர் குறிப்பிடுகிறார்.

அமேசான், அமெரிக்காவின் ஒரு பிரபலமான மல்யுத்த வீராங்கனை. ஹமீதா பானு அவருடன் ஒப்பிடப்பட்டார்.

"எந்தவொரு பெண்ணையும் அவருடன் ஒப்பிட முடியாது. எனவே போட்டியாளர்கள் இல்லாததால் எதிர் பாலினத்தவருக்குக்கு சவால் விடவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது," என்று அவர் எழுதினார்.

போட்டியாளர்கள் இல்லாததோடு கூடவே சமூகத்தின் பழைமைவாத சிந்தனையால் அவர் தனது வீட்டைவிட்டு வெளியேறி அலிகரில் குடியேற வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டது என்று ஹமீதா பானுவின் உறவினர்களுடன் உரையாடியதில் இருந்து தெரிய வந்தது.

ஆண்களுடன் மல்யுத்தம் செய்த பெண்

பட மூலாதாரம், SCREENGRAB

ஆண்களுடன் மல்யுத்தம் செய்யும் பெண், குதிரை வண்டிகள் மற்றும் லாரிகளில் சுவரொட்டிகள்

1950களுக்குள் அவர் தனது புகழின் உச்சத்தை அடைந்தார்.

1954ஆம் ஆண்டில் தனது சவாலான நாட்களிலேயே தான் 320 போட்டிகளிலும் வெற்றிபெற்றதாக அவர் கூறினார்.

அவருக்கு இருந்த புகழ், அக்காலக் கட்டுரைகளில் தெளிவாகத் தெரியும். அதேநேரத்தில் பல கதாசிரியர்களும் தங்கள் கதாபாத்திரங்களின் சக்தியை ஹமிதா பானுவுடன் ஒப்பிடுகிறார்கள்.

இந்த விஷயங்கள் அனைத்தும் பரோடா மக்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தின.

இந்தியாவில் முதன்முறையாக ஒரு பெண் ஆண் மல்யுத்த வீரருடன் மல்யுத்தம் செய்கிறார் என்பதால் இந்தப் போட்டி வித்தியாசமானது என்று சுதிர் பரப் கூறுகிறார்.

"1954இல் மக்கள் மிகவும் பழைமைவாதிகளாக இருந்தனர். இதுபோன்ற மல்யுத்தம் நடக்கும் என்று நம்பக்கூட மக்கள் தயாராக இல்லை. திரைபடங்களுக்கு விளம்பரம் செய்யப்படுவதைப்போல குதிரை வண்டிகள் மற்றும் லாரிகளில் பேனர்கள், போஸ்டர்களை ஒட்டி, அவர் நகரத்திற்கு வருவதை அறிவித்தனர்,” என்று அவர் கூறுகிறார்.

அவர் பரோடாவில் பாபா பயில்வானை தோற்கடித்தார் என்பது அன்றைய செய்தித்தாள்களின்படி தெளிவாகிறது.

”மகாராஜாக்களால் ஆதரிக்கப்பட்ட லாகூரின் புகழ்பெற்ற காமா பயில்வான்களுடன் தொடர்புடைய இளைய காமா பயில்வானுடன் அவர் ஆரம்பத்தில் சண்டையிடுவதாக இருந்தது,” என்று பரப் கூறுகிறார்.

ஆனால் இளைய காமா பயில்வான், ஹமீதா பானுவுடன் மல்யுத்தம் செய்ய கடைசி நேரத்தில் மறுத்துவிட்டார்.

ஒரு பெண்ணுடன் மல்யுத்தம் செய்ய மாட்டேன் என்று அவர் கூறியதாக பரப் தெரிவித்தார்.

சில மல்யுத்த வீரர்களுக்கு பெண்களுடன் மல்யுத்தம் செய்வது வெட்கக்கேடான விஷயமாக இருந்தது.

ஆண்களுடன் மல்யுத்தம் செய்த பெண் வீராங்கணை

பட மூலாதாரம், SCREEN SHORT

அதேநேரம் ஒரு பெண் பொதுவெளியில் ஆண்களுக்கு சவால்விட்டு அவர்களைத் தோற்கடிப்பதால் பலரும் கோபமடைந்தனர்.

புனேவில் உள்ள மல்யுத்த கட்டுப்பாட்டு அமைப்பான ராஷ்ட்ரிய தாலிம் சங்கத்தின் எதிர்ப்பு காரணமாக ராம்சந்திர சலோன் என்ற ஆண் மல்யுத்த வீரருடன் ஒரு போட்டி ரத்து செய்யப்பட்டது என்று 'டைம்ஸ் ஆஃப் இந்தியா' செய்தி தெரிவிக்கிறது.

மகாராஷ்டிர மாநிலம் கோலாப்பூரில் நடந்த மற்றொரு போட்டியில் ஷோபா சிங் பஞ்சாபி என்ற நபரை அவர் தோற்கடித்தபோது, மல்யுத்த ரசிகர்கள் அவரைத் திட்டியதோடு, அவர்மீது கற்களை வீசினர்.

கூட்டத்தைக் கட்டுப்படுத்த காவல்துறையைக்கூட வரவழைக்க வேண்டியிருந்தது. இந்தப் போட்டி போலியானது என்று சாதாரண மக்கள் அழைத்தனர். ஆனால் விஷயம் இத்துடன் முடிந்துவிடவில்லை.

எழுத்தாளர் ரன்விஜய் சென் தனது 'நேஷன் அட் ப்ளே: ஹிஸ்டரி ஆஃப் ஸ்போர்ட் இன் இந்தியா' என்ற புத்தகத்தில், "ஹமீதா பானுவின் போட்டிக்குப் பிறகு இரண்டு மல்யுத்த வீரர்களுக்கு இடையே ஒரு போட்டி நடைபெறுவதாக இருந்தது. அந்த வீர்களில் ஒருவர் கால் ஊனமுற்றவர், மற்றவர் கண் பார்வையற்றவர். இதிலிருந்து அந்தக் கொண்டாட்டங்களில் விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கின் கலவை எப்படி இருந்தது என்று தெரிந்துகொள்ளமுடியும்,” என்று எழுதியுள்ளார்.

”ஆனால் அந்தப் போட்டி பொழுதுபோக்காகவோ அல்லது கேலியாகவோ நிறுத்தப்பட்டது. ஏனெனில் பார்வையற்ற மல்யுத்த வீரர் பல்வலி இருப்பதாகப் புகார் செய்தார். இதன் விளைவாக அவரது போட்டியாளர் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.”

"ஹமீதா பானு இறுதியில் தனது மல்யுத்தம் மீதான தடைக்கு எதிராக மாநில முதல்வர் மொரார்ஜி தேசாயிடம் புகார் செய்ய வேண்டியிருந்தது. ஆனால் இந்தத் தடை பாலினம் காரணமாக அல்ல, மாறாக அமைப்பாளர்கள் மீது வந்த புகார்கள் காரணமாக விதிக்கப்பட்டது என்று தேசாய் பதில் அளித்தார்.

பானுவிற்கு எதிராக 'டம்மி' மல்யுத்த வீரர்களைக் களமிறக்கியதாக அமைப்பாளர்கள் மீது புகார் சொல்லப்பட்டது,” என்று சென் தெரிவிக்கிறார்.

யாராலும் தோற்கடிக்க முடியாத சிங்கக் குட்டி

ஹமீதா பானுவுக்கு எதிரான மல்யுத்தத்தில் போலி மல்யுத்த வீரர்கள் அல்லது பலவீனமான வீர்களைக் களம் இறக்குகிறார்கள் என்பது அக்காலத்தில் பரவலான பேச்சாக இருந்தது.

மகேஷ்வர் தயால் 1987ஆம் ஆண்டு வெளியான தனது 'ஆலம் மே இந்த்காப் - டெல்லி' என்ற புத்தகத்தில், "ஹமீதா, உத்திர பிரதேசம் மற்றும் பஞ்சாபில் பல மல்யுத்தப் போட்டிகளில் பங்கேற்றார். அவரையும் அவரது மல்யுத்தத்தையும் பார்க்க வெகு தொலைவில் இருந்து மக்கள் வந்தனர்,” என்று எழுதுகிறார்.

"அவர் ஆண் மல்யுத்த வீரர்களைப் போலவே சண்டையிடுவார். ஹமீதா பானுவிடம் ஆண் மல்யுத்த வீர்கள் வேண்டுமென்றே தோற்றார்கள். ஏனென்றால் ஹமீதா பானுவுக்கும் ஆண் மல்யுத்த வீரர்களுக்கும் இடையே ரகசிய ஒப்பந்தம் இருந்தது என்று சிலர் கூறினர்,” என்று அவர் எழுதியுள்ளார்.

அதே நேரத்தில் பல ஆண் எழுத்தாளர்கள் அவரது சாதனைகளைக் கேலி செய்திருக்கிறார்கள் அல்லது ஒரு கேள்விக்குறியை வைத்திருக்கிறார்கள்.

பெண்ணிய எழுத்தாளர் குர்த்துல் ஐன் ஹைதர் தனது கதைகளில் ஒன்றான 'தாலன்வாலா'வில் ஹமீதா பானுவை குறிப்பிட்டு, “1954இல் மும்பையில் ஒரு மாபெரும் அகில இந்திய மல்யுத்தபோட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் அவர் தனது திறமையை அற்புதமாக வெளிப்படுத்தினார்,” என்று எழுதியுள்ளார்.

"எந்தப் போட்டியாளராலும் அந்த சிங்கக்குட்டியை வெல்ல முடியவில்லை. அதே போட்டியில் பேராசிரியை தாராபாய் மிகவும் கடுமையாக மல்யுத்தம் செய்தார். மேலும் அந்த இரண்டு பெண் மல்யுத்த வீரர்களின் படங்களும் விளம்பரத்தில் அச்சிடப்பட்டன. இந்தப் படங்களில் அவர் பனியன் மற்றும் நிக்கர் அணிந்து நிறைய பதக்கங்களை கழுத்தில் மாட்டிக்கொண்டு பெருமையுடன் கேமராவை பார்த்துக்கொண்டிருந்தார்,” என்று அவர் குறிப்பிட்டார்.

ஹமீதா பானு 1954ஆம் ஆண்டு மும்பையில், ரஷ்யாவின் 'பெண் கரடி' என்று அழைக்கப்படும் வீரா சாஸ்டலினை ஒரு நிமிடத்திற்குள் தோற்கடித்ததாகவும், அதே ஆண்டில் அவர் ஐரோப்பிய மல்யுத்த வீரர்களுடன் மல்யுத்தம் செய்ய ஐரோப்பா செல்லப்போவதாக அறிவித்தார் என்றும் அக்கால பதிவுகள் காட்டுகின்றன.

ஆனால் இந்தப் பிரபலமான போட்டிகளுக்குப் பிறகு ஹமீதா மல்யுத்த காட்சியிலிருந்து காணாமல் போனார். அதன் பிறகு அவரது பெயர் பதிவுகளில் வரலாறாக மட்டுமே காணப்படுகிறது.

ஆண்களுடன் மல்யுத்தம் செய்த பெண் வீராங்கணை

பட மூலாதாரம், SCREEN SHORT

"அவரை தடுக்க சலாம் தடியால் அடித்தார் "

ஹமீதா பானுவை பற்றி மேலும் அறிய இப்போது நாட்டின் மற்றும் உலகின் பல்வேறு மூலைகளில் வசிக்கும் அவரது நெருங்கிய உறவினர்கள் மற்றும் அறிமுகமானவர்களை நான் தேடினேன்.

ஹமீதா பானுவின் ஐரோப்பா செல்லும் அறிவிப்பு அவரது மல்யுத்த வாழ்க்கையின் வீழ்ச்சிக்குக் காரணமாக அமைந்தது என்று அவர்களிடம் பேசும்போது தெரிந்தது.

"ஒரு வெளிநாட்டு பெண் அவருடன் மல்யுத்தம் செய்ய மும்பைக்கு வந்தார். போட்டியில் தோற்ற அவர், பாட்டியின் திறமையால் ஈர்க்கப்பட்டு அவரை ஐரோப்பாவிற்கு அழைத்துச் செல்ல விரும்பினார். ஆனால் அவரது பயிற்சியாளர் சலாம் பெஹ்ல்வான் இதை ஒப்புக்கொள்ளவில்லை,” என்று தற்போது செளதி அரேபியாவில் வசிக்கும் ஹமீதாவின் பேரன் ஃபிரோஸ் ஷேக் கூறினார்.

அவரை ஐரோப்பா செல்லவிடாமல் தடுக்க சலாம் பெஹெல்வான் அவரை தடியால் தாக்கி, கையை உடைத்ததாக ஷேக் கூறுகிறார்.

அதுவரை இருவரும் அலிகரில் இருந்து பம்பாய் மற்றும் கல்யாணுக்கு அடிக்கடி வந்து செல்வார்கள். அங்கு அவர்களுக்கு பால் பிஸினஸ் இருந்தது.

அந்த நேரத்தில் கல்யாணில் ஹமீதா பானுவின் பக்கத்து வீட்டில் வசித்த ராஹீல் கான், அவருக்கு நிகழ்ந்த கொடுமைகளை உறுதிப்படுத்துகிறார். இப்போது அவர் ஆஸ்திரேலியாவில் வசிக்கிறார்.

சலாம் பெஹல்வான் ஹமீதாவின் கால்களையும் உடைத்தார் என்று அவர் கூறுகிறார்.

"அவரால் நிற்கக்கூட முடியவில்லை என்பது எனக்குத் தெளிவாக நினைவிருக்கிறது. அவருடைய கால்கள் பின்னர் குணமடைந்தன. ஆனால் அவரால் கைத்தடி இல்லாமல் பல ஆண்டுகளுக்கு சரியாக நடக்க முடியவில்லை," என்று ராஹீல் குறிப்பிட்டார்.

"இருவருக்குள்ளும் தொடர்ந்து சண்டைகள் நடந்தன. சலாம் பெஹல்வான் அலிகருக்கு திரும்பிச் சென்றார், ஆனால் ஹமீதா பானு கல்யாணிலேயே தங்கினார்," என்று ராஹீல் கான் கூறினார்.

"1977இல் ஹமீதா பானுவின் பேரனின் திருமணத்திற்கு சலாம் மீண்டும் கல்யாண் வந்தார். இருவருக்கும் இடையே அப்போது கடுமையான சண்டை ஏற்பட்டது. இரு தரப்பினரும் கைகளில் தடிகளை எடுத்தனர்," என்றார் அவர்.

சலாம் பெஹல்வான் செல்வாக்கு மிக்கவர். அரசியல்வாதிகள், திரையுலக நட்சத்திரங்களுடன் நெருக்கமாகப் பழகிய அவர், நவாப் போல் வாழ்ந்ததாக அவரது உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆனால் அவரது வருமான ஆதாரம் தீர்ந்து போனதால் அவர் கடும் சிரமங்களைச் சந்திக்க நேரிட்டதாகவும், ஹமீதாவின் பதக்கங்கள் மற்றும் பிற பொருட்களை சலாம் விற்றதாகவும், ஃபிரோஸ் கூறுகிறார்.

ஹமீதா பானு திருமணம் செய்து கொண்டாரா?

கல்யாணில் ஹமீதா வசித்து வந்த வளாகம் மிகவும் பெரியதாக இருந்தது. அங்கு ஒரு கால்நடைத் தொழுவம் இருந்தது. அங்கு கட்டப்பட்டிருந்த சில கட்டடங்களையும் அவர் வாடகைக்கு விட்டிருந்தார்.

ஆனால் நீண்ட நாட்களாக வாடகை உயர்த்தப்படாததால், அவருக்கு கஷ்டம் ஏற்பட ஆரம்பித்தது.

தனது பெற்றோர் படித்தவர்கள், அதன் காரணமாக ஹமீதா அடிக்கடி அவர்களைச் சந்திக்க வருவார் என்று ராஹீல் கூறினார்.

ராஹீலின் தாயார், ஃபிரோஸ் மற்றும் அவரது உடன்பிறப்புகளுக்கு ஆங்கிலம் கற்றுக் கொடுப்பார்.

"சலாமுடனான சண்டைகள் அதிகரித்ததால் அவர் தனது சேமிப்பைப் பாதுகாப்பாக வைத்திருக்க அடிக்கடி என் அம்மாவிடம் வருவார்," என்று ராஹீல் நினைவு கூர்ந்தார்.

ஆனால் ஹமீதாவின் கடைசி நாட்களில் பல சிரமங்கள் இருந்ததாக அவர் கூறுகிறார்.

"கல்யாணில் உள்ள தன் வீட்டின் முன் இருந்த திறந்த வெளியில் அவர் பூந்தி விற்று வந்தார்," என்றார் அவர்.

இருப்பினும் தனது குழந்தைகளை அலிகர் அல்லது மிர்ஸாபூருக்கு செல்ல அவர் தடை விதித்திருந்தார்.

தனது தந்தை மரணப் படுக்கையில் இருந்தபோது அவரைச் சந்திக்க ஹமீதா ஒருமுறை அலிகர் வந்தார் என்று அலிகரில் வசிக்கும் சலாம் பெஹ்ல்வானின் மகள் சஹாரா கூறினார்.

மிர்ஸாபூரில் உள்ள ஹமீதாவின் உறவினர்கள் இந்த விஷயத்தைப் பற்றி பேசுவதற்குத் தயங்குகிறார்கள். ஆனால் அலிகரில் உள்ள சலாம் பெஹல்வானின் உறவினர்களுடன் உரையாடியபோது, ஒரு முக்கியத் தகவல் கிடைத்தது.

ஹமீதா பானு உண்மையில் சலாம் பெஹல்வானை திருமணம் செய்து கொண்டார் என்றும் அதுவும் சுதந்திரத்திற்கு முன்பே என்றும் அவர்கள் கூறினர்.

ஆனால் ஹமீதா பானு விஷயம் குறித்து சலாம் பெஹல்வானின் மகள் சஹாராவிடம் போனில் பேசியபோது, ஹமீதா பானுவை தன் அம்மா என்று அழைக்க அவர் தயங்கினார்.

இதுகுறித்துக் கேள்வி எழுப்பியபோது, ஹமீதா தனது மாற்றாந்தாய் என்று அவர் கூறினார்.

ஹமீதா பானுவும் சலாம் பெஹல்வானும் திருமணம் செய்து கொண்டதாக அவர் கூறுகிறார்.

ஹமீதா பானுவின் பெற்றோர், ஆண்களின் விளையாட்டான மல்யுத்தத்தில் அவர் ஈடுபடுவதை எதிர்த்தனர். இதற்கிடையில், சலாம் பெஹல்வான் மிர்ஸாபூர் சென்றார். அது ஹமீதாவுக்கு வெளியே செல்ல வாய்ப்பளித்தது என்று சஹாரா கூறினார்.

"என் தந்தை மல்யுத்தத்திற்காக மிர்ஸாபூருக்கு சென்றிருந்தார். அங்கு அவர் ஹமீதாவை சந்தித்தார். பின்னர் அவரை இங்கு அலிகருக்கு அழைத்து வந்தார்," என்று சஹாரா கூறினார்.

"ஹமீதா சலாமின் உதவியை நாடினார். ஹமீதா என் தந்தையின் உதவியுடன் மல்யுத்த போட்டிகளில் கலந்துகொண்டார். அவருடன் வாழ்ந்தார்," என்றார் சஹாரா.

ஆனால் ஹமீதா பானுவின் கடைசிக் காலம் வரை அவருடன் இருந்த ஹமீதாவின் பேரன் ஃபிரோஸ், சஹாரா மற்றும் பிற உறவினர்களுடன் உடன்படவில்லை.

"அவர் நிச்சயமாக சலாம் பெஹ்ல்வானுடன் வாழ்ந்தார். ஆனால் அவரைத் திருமணம் செய்து கொள்ளவில்லை," என்று ஃபிரோஸ் குறிப்பிட்டார்.

தனது பாட்டி ஹமீதா பானுவுடனான தனது உறவைப் பற்றிப் பேசிய அவர், "உண்மையில் பாட்டி என் தந்தையைத் தத்தெடுத்தார். ஆனால் எனக்கு அவர் என் பாட்டிதான்," என்றார்.

ஹமீதா பானு மற்றும் சலாம் பெஹல்வானின் குடும்ப உறுப்பினர்கள் மாறுபட்ட கருத்துகளைக் கூறினாலும் அவர்களின் தனிப்பட்ட உறவுகளின் விவரங்கள் இன்று முக்கியமில்லை. மல்யுத்தத்தில் 'அந்த சிங்கக்குட்டியை வெல்ல அவரது வாழ்நாளில் எந்தவொரு போட்டியாளரும் இருக்கவில்லை’ என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)