16 வயது சிறுமிகளுக்கு குறி வைத்த சீரியல் கில்லர் - 30 ஆண்டுகளுக்குப் பிறகு துப்பு துலங்கியது எப்படி?

- எழுதியவர், கில்பெர்ட் ஜான்
- பதவி, பிபிசி செய்தியாளர்
16 வயது நிரம்பிய 3 சிறுமிகள் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில், இந்த தொடர் கொலைகளில் ஈடுபட்ட நபரை போலீசார் எப்படி கண்டுபிடித்தனர் என்பதே தற்போது பிபிசி வெளியிட்டுள்ள குறுந்தொடரின் கதையாகும்.
'சனிக்கிழமையின் இரவு கொலைகாரன்' என்ற அந்த நபரை அடையாளம் காணவே முடியாது என ஏராளமானோர் நினைத்திருந்தனர். ஆனால் 30 ஆண்டுகளுக்குப் பின்னர் அந்த கொலைகாரனை காவல் துறையினர் அடையாளம் கண்டுபிடித்தனர்.
அந்த நபரை அடையாளம் கண்டுபிடிக்க இரண்டு டிஎன்ஏ சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த சோகக் கதைதான் 'ஸ்டீல்டவுன் கொலைகள்' என்ற பிபிசியின் புதிய குறுந்தொடரின் கருவாக உள்ளது.
1973ஆம் ஆண்டு கோடைகாலத்தில், வீட்டிலிருந்து வெளியில் சென்றிருந்த சிறுமிகள் மீண்டும் வீடு திரும்பவில்லை என்ற 2 சம்பவங்கள் வேல்ஸ் நாட்டின் ஸ்வான்சீ நகர் மற்றும் சுற்றுப்புறங்களில் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
ஜுலை மாதத்தில் 16 வயது சிறுமி சாண்ட்ரா நியூட்டன் தனது ஆண் நண்பருடன் அருகில் உள்ள பிரிட்டன் ஃபெர்ரி என்ற நகருக்குச் சென்றிருந்தார். நள்ளிரவு 1 மணியளவில் அவர் வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்த போது மாயமானார். ஐந்து மைல் தொலைவைக் கடக்க இடையிடையே அந்த வழியாக வந்த வாகனங்களைப் பிடித்து அவர் பயணித்திருக்கலாம் என போலீசார் எண்ணினர்.
அதற்குப் பின் இரண்டு நாட்கள் கழித்து அப்பகுதியில் இருந்த ஒரு பாலத்தின் அருகே சாண்ட்ராவின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. பாலியல் தாக்குதலுக்குப் பின் தலையில் தாக்கப்பட்டு, அவரது உடைகளாலேயே கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார்.
அதன் பின் செப்டம்பர் மாதம் ஜெரால்டைன் ஹக்ஸ் மற்றும் பாலின் ஃப்ளாய்ட் ஆகிய சிறுமிகள் லாண்டர்சி அருகே இரவு நேரப் பயணத்தின் போது கொலை செய்யப்பட்டனர்.

16 வயதே நிரம்பிய இந்த சிறுமிகள் இருவரும் நெருங்கிய தோழிகள் என்ற நிலையில், அவர்கள் பாலியல் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டிருந்தனர். சாண்ட்ராவின் உடல் கண்டுபிடிக்கப்பட்ட இடத்திலிருந்து 7 மைல் தொலைவில் அவர்களது உடல்கள் மீட்கப்பட்டன.
இந்த படுகொலைகள் வேல்ஸ் நாட்டில் மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், கொலையாளியைத் தேடி போலீசார் மிகப்பெரும் தேடுதல் வேட்டையை நடத்தினர். இந்நடவடிக்கையில் 150 காவல் துறை அதிகாரிகள் ஈடுபட்டு, ஜெரால்டைன் மற்றும் பாலின் குறித்து 35,000 பேரிடம் விசாரணை நடத்தினர்.
ஆனால், 30 - 35 வயது மதிக்கத்தக்க, மீசை வைத்திருந்த - அடர்ந்த தலைமுடியுடன் கூடிய நபர் தான் கொலைகாரனாக இருக்க முடியும் என்ற தகவலைத் தவிர போலீசாருக்கு வேறு எந்தத் தகவல்களும் கிடைக்கவில்லை.
ஸ்வான்சீயிலிருந்து அந்த சிறுமிகள் இரவு நேரத்தில் மோரிஸ் 1100 மாடல் காரில் ஒரு நபருடன் பயணம் செய்ததை போலீசாரின் முக்கிய சாட்சிகள் பலர் பார்த்துள்ளனர்.
இந்த கொலைகள் தொடர்பான செய்தியை பிபிசியின் செய்தியாளர் என்ற முறையில் கடந்த 1973-ம் ஆண்டு நான் எழுதிய அனுபவம் இருக்கிறது.
கொலைகள் மிக அரிதாக நடக்கக்கூடிய பகுதியில் இது போல் மூன்று பேர் சொலை செய்யப்பட்டது அப்பகுதி மக்களை பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருந்தது.
ஏதாவது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வீட்டிலிருந்து வெளியில் செல்லும் சிறுமிகள் மீண்டும் வீடு திரும்புவதில்லை என்ற அச்சம் பெரும்பாலானோரிடையே எழுந்திருந்த நிலையில், கொலைகாரனை கண்டுபிடிக்க முடியாத நிலையிலேயே போலீசார் விசாரணையைத் தொடர்ந்து மேற்கொண்டுவந்தனர்.
பெரும் துயரிலும், கவலையிலும் தவித்துக்கொண்டிருந்த பொதுமக்களிடம், கொலையாளியை போலீசார் கண்டுபிடிப்பார்களா என்ற ஆற்றமுடியாத எதிர்பார்ப்பு நிறைந்திருந்தது. ஆனால் காவல் துறையினர் யாரையும் கைது செய்யவில்லை. தீவிர விசாரணைக்குப் பின்னரும் காவல் துறையினருக்கு துப்பு கிடைக்கவில்லை.

பட மூலாதாரம், MIRRORPIX
இந்த மூன்று கொலைகளையும் விசாரணை அதிகாரிகள் எப்போது தொடர்புபடுத்தினர்?
கொலைகாரன் எங்கிருந்து வந்திருக்கமுடியும் என்பதற்கு ஏராளமான பதில்கள் இருந்தன. பல இடங்களில் எங்காவது இருந்து அவன் வந்திருக்கக்கூடும்.
விசாரணை குறித்த தகவல்களை, கணினிகள் இல்லாத அந்த காலத்தில் ஏராளமான ஆவணங்கள் மூலம் காவல் துறையினர் பராமரிக்கவேண்டிய நிலை காணப்பட்டது. அந்த ஆவணங்கள் மலைபோல் குவிந்திருந்தன.
விசாரணையின் ஒரு காலகட்டத்தில், ஒரே ஒரு நபர் தான் அந்த மூன்று கொலைகளையும் செய்திருக்கவேண்டும் என காவல் துறையினர் கருதினர். ஆனால் சாண்ட்ராவைக் கொலை செய்ததாக மற்றொரு் நபரையும் விசாரணை அதிகாரிகள் ஏற்கெனவே சந்தேக வளையத்தில் வைத்திருந்தனர்.

பட மூலாதாரம், MIRRORPIX
சாண்ட்ராவின் கொலையைப் பொறுத்தளவில் அவரை யார் கடைசியில் சந்தித்தாரோ, அவர் தான் கொலையாளி என கருதப்பட்ட நிலையில், அவருடைய ஆண் நண்பரிடம் போலீசார் துருவித் துருவி விசாரணை நடத்தினர். ஆனால் அவர் கொலை செய்ததற்கான எந்த முகாந்திரமும் கிடைக்கவில்லை. அந்தத் தவறை தான் செய்யவில்லை என அவர் உறுதியாகத் தெரிவித்திருந்தார்.
இந்த மூன்று கொலைகளிலும் மிகப்பெரிய ஒற்றுமை இருந்த போதும், அடுத்த 30 ஆண்டுகள் வரை அவற்றை தனித்தனிக் குற்றங்களாகவே வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதில் 2000-வது ஆண்டில் விசாரணை அதிகாரிகளுக்கு கிடைத்த ஒரு உதவி தான் டிஎன்ஏ சோதனை. இந்த உதவி பயனுள்ளதாக இருந்ததால் ஏற்கெனவே நிலுவையில் இருந்த ஏராளமான வழக்குகளில் குற்றவாளிகளைக் கண்டுபிடித்து நீதியின் முன் நிறுத்தும் முயற்சிகளை விசாரணை அதிகாரிகள் மீண்டும் தொடங்கினர்.

ஜெரால்டைன் மற்றும் பாலின் ஆகியோரின் உடைகளில் படிந்திருந்த விந்து மாதிரிகள் மூலம் நடத்தப்பட்ட டிஎன்ஏ சோதனையில், அவை இரண்டும் ஒரே நபருடையது என்பது உறுதியானது. அப்போது தான் டிஎன்ஏ சோதனை முடிவுகளை சேமிக்கும் நடைமுறை ஏற்படுத்தப்பட்டிருந்ததால், அந்தப் பதிவுகளில், இந்த சிறுமிகளைக் கொலை செய்த நபர் குறித்த தகவல்கள் இல்லை.
புதிதாக ஆப்பரேஷன் மேக்னம் என்ற பெயரில் நடத்தப்பட்டு வந்த விசாரணையில் ஓராண்டுக்குப் பின், சாண்ட்ராவின் உள்ளாடையிலிருந்து கிடைத்த தடயங்கள் மூலம் மிகப்பெரும் திருப்பு முனை ஏற்பட்டது.
அவரது உள்ளாடையிலும் அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் டிஎன்ஏ இருந்தது.
"லாண்டர்சி கொலைகாரனின் டிஎன்ஏவும், அந்த நபரின் டிஎன்ஏவும் ஒரு விதத்தில் ஒத்துப்போயின," என்கிறார் தடயவியல் துறை விஞ்ஞானி டாக்டர் காலின் டார்க்.
"1973-ம் ஆண்டு வேல்ஸ் நாட்டின் தென்பகுதியில் பெண்களைக் கொலை செய்யும் ஒரு தொடர் கொலையாளி இருந்ததற்கான ஆதாரம் அதில் கிடைத்தது."
அதன் மூலம், சாண்ட்ராவின் ஆண் நண்பர் கொலையாளி அல்ல என்பதும் திட்டவட்டமாகத் தெரியவந்தது.
"30 ஆண்டுகளாக விசாரணை செய்யப்பட்டு வந்த 3 சிறுமிகளின் கொலைகளில் ஒரே நபர் தான் குற்றவாளி என்பது முதன்முதலாக உறுதிப்படுத்தப்பட்டது," என்கிறார் இந்த வழக்குகளை விசாரித்து வந்த புதிய துணை ஆய்வாளர் பால் பெதெல்.

டிஎன்ஏ வரலாற்றை உருவாக்குதல் - பகுதி ஒன்று
இந்த 3 சிறுமிகளின் உடைகளில் இருந்து கிடைத்த டிஎன்ஏ, ஏற்கெனவே தேசிய தரவுதளத்தில் இருந்த எந்த டிஎன்ஏவுடனும் ஒத்துப் போகாத நிலையில், கொலையாளி யார் என்பதில் இன்னும் குழப்பமே நீடித்தது.
அப்போது தான் டிஎன்ஏ-வைப் பயன்படுத்தி குற்றவாளியைக் கண்டுபிடிக்கும் இன்னொரு உத்தியை போலீசார் கையாண்டனர்.
"குற்றவாளியின் டிஎன்ஏவை மட்டுமே எடுத்துக்கொள்ளாமல், அவரது வாரிசுகளின் டிஎன்ஏ மூலமும் குற்றவாளியைக் கண்டுபிடிக்க முடியும் என அப்போது புரிந்திருந்தது," என தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருந்த டிஎன்ஏ மாதிரிகளுடன் அவற்றைப் பொருத்திப் பார்த்துக் கொண்டிருந்த குழுவின் தலைவர் டாக்டர் காலின் டார்க் தெரிவித்தார்.
"ஒருவர் தனது பெற்றோர்களிடம் இருந்து டிஎன்ஏவைப் பெறுகிறார். அதே போல தனது குழந்தைகளுக்கும் அதைக் கடத்துகிறார். இதனால், புதிதாகப் பிறந்த ஒரு குழந்தையின் டிஎன்ஏவுடன் ஒத்துப் போகும் டிஎன்ஏவைக் கண்டுபிடிக்க நாங்கள் முயன்றோம். இந்த முறையில் கண்டிப்பாக குற்றவாளியைக் கண்டுபிடிக்க முடியும்."

பட மூலாதாரம், MIRRORPIX
"இதன்படி, வேல்ஸ் நாட்டின் தென்பகுதியில் அண்மைக்காலங்களில் பிறந்த பல்லாயிரக்கணக்கான குழந்தைகளின் டிஎன்ஏ விவரங்களை எடுத்து, கொலை செய்யப்பட்ட சிறுமிகளின் உடைகளில் கிடைத்த டிஎன்ஏவுடன் பொருந்தாதவற்றை ஒவ்வொன்றாக கழிக்க முடிவெடுத்தோம்," என டாக்டர் டார்க் தெரிவித்தார்.
"இந்த பணியை பலமணிநேரம் செய்த பின் ஒரு 100 பெயர்கள் மட்டுமே எங்களிடம் மிச்சமிருந்தன. அவர்களுடைய டிஎன்ஏ, குற்றவாளியின் டிஎன்ஏவுடன் பாதியளவு ஒத்துப்போகும் நிலையில் இருந்தன," என்றார் அவர்.
"இது ஒரு மிகமுக்கியமான - முன்மாதிரியான தொழில்நுட்பம். பிரிட்டனில் மட்டுமல்ல, உலக அளவில் இப்படி ஒரு முயற்சி மேற்கொள்வது இதுவே முதல்முறை- இங்கிருந்துதான் குடும்ப உறுப்பினர்களின் டிஎன்ஏ மூலம் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கும் நடைமுறை புழக்கத்துக்கு வந்தது."
இதற்கிடையே, 500 முக்கிய குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க 35,000 பேரின் மாதிரிகளை திறமையைப் பயன்படுத்தி சோதிக்கவேண்டியிருந்தது.
"நாங்கள் தயாரித்த பட்டியலில் இருந்த தனிநபர்களில் யாராவது ஒருவர் மோரிஸ் 1100 கார் வைத்திருந்தாரா, பாலியல் தொடர்பான குற்றங்களில் ஈடுபட்டு தண்டிக்கப்பட்டவரா," என்ற இருவகையான விவரங்களின் அடிப்படையில் தேடும் முயற்சிகள் அப்போது மேற்கொள்ளப்பட்டன என துணை காவல் ஆய்வாளர் பெதெல் நினைவுகூர்ந்தார்.

பட மூலாதாரம், Getty Images
ஜோ காப்பென் குற்றவாளியாக இருந்திருக்க முடியுமா?
இந்த இரண்டு பட்டியல்களையும் வைத்து ஒப்பீடு செய்த போது காப்பென் என்ற குடும்பப் பெயர் தான் எங்களுக்குக் கிடைத்தது.
போர்ட் டால்பாட் பகுதியில் கார்களைத் திருடிவந்த ஜோ காப்பெனின் டிஎன்ஏ, குற்றவாளியாக நாங்கள் சந்தேகித்த நபரின் தரவுகளுடன் ஒத்துப் போனதைத் தொடர்ந்து அவரைப் பற்றி விசாரித்தோம். ஆனால், அந்த நபர், இந்த கொலைகள் நடந்த போது வெறும் 7 வயதான சிறுவனாக இருந்தார்.
அவருடைய தந்தை ஜோசப் காப்பென் மோரிஸ் 1100 காரை வைத்திருந்ததால் 1973-ம் ஆண்டே விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்
இரவு விடுதியின் பாதுகாப்பாளரும், பகுதி நேர பேருந்து ஓட்டுனராகவும் பணியாற்றிய ஜோசப் காப்பென் வீட்டுக்கும் சென்று போலீசார் அப்போது விசாரணை மேற்கொண்டிருந்தனர்.
ஆனால், கொலை நடந்த இரவு நேரங்களில் அவருடைய கார் பழுதடைந்திருந்ததாகவும், அவர் தமது மனைவியுடன் இருந்ததாகவும் அந்த விசாரணையின் போது தெரிவித்திருந்தார்.
அவர் அந்தப் பகுதியில் ஒரு ரவுடியைப் போல செயல்பட்டு வந்ததாக பொதுமக்கள் தெரிவித்தனர் என துணை காவல் ஆய்வாளர் பெதெல் கூறினார்.
குடும்ப உறுப்பினர்களை தாக்கியதாக அவர் பல முறை சிறை சென்றிருந்ததையும் போலீசார் கண்டுபிடித்தனர்.
ஜோசப் காப்பெனின் மகனுடைய டிஎன்ஏவுடன், குற்றவாளியின் டிஎன்ஏ 50 சதவிகிதம் பொருந்தும் நிலையில், இந்த கொலைகள் தொடர்பான வழக்கில் 30 ஆண்டுகளுக்குப் பின் அவர் மீது மட்டுமே சந்தேகம் அதிகமாயிற்று.
ஆனால், அதன் பின் அவரது வீட்டுக்குச் சென்று டிஎன்ஏ மாதிரியைப் பெற போலீசார் முயன்ற போது, காப்பெண் 11 ஆண்டுகளுக்கு முன்பே நுரையீறல் புற்று நோய் காரணமாக தமது 48-வது வயதில் மரணமடைந்துவிட்டதாக தகவல் கிடைத்தது.
இதையடுத்து, குற்றவாளியை உறுதி செய்யும் வகையில், காப்பெனின் முன்னாள் மனைவி மற்றும் அவரது மகளிடம் இருந்து டிஎன்ஏவைப் பெற்று ஆய்வு செய்தனர்.
"இந்த ஆய்வின் போது, குற்றவாளி காப்பென் தான் என்பதற்கு மூன்றில் இரண்டு பங்கு ஆதாரம் கிடைத்தது," என்றார் டாக்டர் டார்க். அவருடைய குழுவினர் செப்ஸ்டோ என்ற பகுதியில் உள்ள ஒரு சோதனைக்கூடத்தில் இந்த ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வந்தனர்.
"குற்றம் நடந்த போது கிடைத்த டிஎன்ஏ மாதிரியுடன் அதை ஒப்பிட்டுப் பார்த்தபோது, தற்போது கிடைத்த டிஎன்ஏ பொருந்திப் போயிருந்தாலும், உண்மையான குற்றவாளி யார் என்பதை அறிவிக்க, முழுமையான ஆதாரங்கள் தேவை."

பட மூலாதாரம், PA Media
டிஎன்ஏ வரலாற்றை உருவாக்குதல் - பகுதி இரண்டு
காப்பென் தான் அந்த கொலைகளைச் செய்தார் என்பதை முழுமையாக நிரூபித்தால் தான், உயிரிழந்த சிறுமிகளின் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு ஒரு ஆறுதலாவது கிடைக்கும்.
அதற்கு ஒரே வழிதான் இருந்தது. அதாவது இறந்து போன காப்பெனின் உடலைத் தோண்டி எடுப்பது தான் அது. ஒரு உடலைத் தோண்டி எடுத்து குற்றத்தை நிரூபிப்பது பிரிட்டன் வரலாற்றிலேயே முதன்முறை சம்பவமாக இருந்தது.
இதற்காக விசாரணை அதிகாரிகள் உயர் அதிகாரிகளிடமும், உள்துறை அமைச்சகத்திடமும் அனுமதி பெறவேண்டிய நிலை இருந்தது.

"இது போன்ற நடவடிக்கைகளினால் உண்மையில் ஏதாவது பயன் கிடைத்தால் அது சரியானதாகவே கருதப்படும். ஆனால், இப்படி ஒரு உடலைத் தோண்டி எடுத்து விசாரணை மேற்கொண்ட பின் அதில் எந்தப் பயனும் கிடைக்காமல் போனால், அது ஒரு தவறான நடவடிக்கையாகவே பார்க்கப்படும் என்பது மட்டுமின்றி, இதில் தொடர்புடைய குடும்பங்களுக்கும் அது பாதிப்பை ஏற்படுத்தும்," என 2001 முதல் 2004-ம் ஆண்டு வரை உள்துறை அமைச்சராகப் பதவி வகித்த லார்ட் ப்ளன்கெட் தெரிவித்தார்.
இருப்பினும், "குற்றவாளியை உறுதிப்படுத்த ஜோசப் காப்பெனின் உடலைத் தோண்டி எடுத்து டிஎன்ஏவைப் பெற்று ஆய்வு நடத்தவேண்டும் என்றும், அதன் மூலம், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஏதாவது ஒரு ஆறுதலைப் பெற்றுத்தரவேண்டும் என்றும் நான் உறுதியாக முடிவெடுத்தேன். எந்த நிலையிலும் உண்மையைக் கண்டுபிடிப்பது ஒரு முக்கியத் தேவையாகவே இருந்திருக்கிறது."
அதன் பின் 2002-ம் ஆண்டு மே மாதம் புதிய வரலாறு படைக்கப்பட்டது. ஜோசப் காப்பெனின் உடலைத் தோண்டி எடுக்கும் பணி ஒரு நள்ளிரவில் தொடங்கியது

"அது ஒரு பயங்கரமான இரவு. காப்பெனின் உடல் புதைக்கப்பட்டிருந்த இடத்துக்கு நாங்கள் சென்ற போது இடியுடன் வானில் மின்னல்களும் தோன்றின. பாவம் செய்த நபர் அடையாளப்படுத்தப்பட்டார் என்ற உணர்வு எனக்குள் தோன்றியது. அதே நேரம் ரத்தம் உறைந்துவிடுமளவுக்கு என்னுள் பயம் நிறைந்திருந்தது," என்றார் டாக்டர் டார்க்.
அப்பகுதியில் உள்ள மோரிசான் மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட தடயவியல் ஆய்வில், 30 ஆண்டுகளுக்கு முன் மூன்று சிறுமிகளைக் கொலை செய்த நபர் ஜோசப் காப்பென் தான் என்பது உறுதியானது. அது, ஜெரால்டைன் மற்றும் பாலின் குடும்பத்தினருக்கு மட்டுமல்ல, சாண்ட்ராவின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கும் ஒரு வித நிம்மதியை அளித்தது என்பதே உண்மை.

"குற்றவாளி அடையாளம் காணப்பட்ட பின் எங்களுக்கு ஏற்பட்ட உணர்வுகளை விவரிக்க முடியாது. அப்போது தான் எங்களுக்கு பெரும் மனச்சுமை குறைந்தது," என்றார் ஜெரால்டைனின் குடும்ப உறுப்பினர் ஜுலி பெக்லி.
"நிச்சயமாக ஒரு நாள் உண்மைக்குற்றவாளி யார் என்பது தெரியும் என நாங்கள் எப்போதும் நம்பிக்கையுடன் காத்திருந்தோம். அந்த நம்பிக்கை வீண் போகவில்லை. ஜெரால்டைன் ஒரு அற்புதமான பெண். எப்போதும் சிரித்த முகத்துடனேயே இருப்பாள்."
அது, ஜெரால்டைன் மற்றும் பாலின் குடும்பத்தினருக்கு மட்டுமல்ல. சாண்ட்ராவின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கும் ஒருவித நிம்மதியை அளித்தது என்பதே உண்மை.

"சாண்ட்ராவின் உடல் புதைக்கப்பட்ட இடத்தில் அவர் இன்னும் வாழ்ந்து கொண்டிருப்பதாக நம்பி, கடந்த 49 ஆண்டுகளாக அவரது நினைவு நாளில் அவருடைய கல்லறைக்குச் சென்று வருகிறேன்," என்கிறார் அவருடைய தோழி தெரசா மே.
"அவள் என்னுடைய அழகான தோழி. அவள் மரணமடைந்த போது, அவளது உயிரும், எதிர்கால வாழ்க்கையும் அவளிடமிருந்து பறிக்கப்பட்டிருந்தது."
" நான் இப்போது வரை அவளைப் பற்றி நினைத்துக்கொண்டே இருக்கிறேன். இத்தனை ஆண்டுகளுக்குப் பின் இனிமேலாவது அவளுடைய ஆன்மா அமைதியாக ஓய்வெடுக்கட்டும்."
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












