கர்நாடக தேர்தல் முடிவுகள்: எதிர்க்கட்சிகளை ஒன்றுசேர்க்கும் அச்சாணி ஆகுமா காங்கிரஸ்?

- எழுதியவர், தில்நவாஸ் பாஷா
- பதவி, பிபிசி செய்தியாளர்
கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றி பெற்றதை தொடர்ந்து, 'இது வெறுப்புணர்வுக்கு எதிரான அன்பின் வெற்றி' என்று காங்கிரஸ் முன்னாள் எம்.பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
கர்நாடக தேர்தல் வெற்றிக்குப் பிறகு, காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகத்துடன் ஆடுகிறார்கள், பாடுகிறார்கள். தலைவர்கள் ஊடக கேமராக்களுக்கு முன்னால் சிரித்து பேசிக்கொண்டிருக்கிறார்கள். இந்த வெற்றியின் உற்சாகத்தை பல ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் அலுவலகத்தில் பார்க்க முடிகிறது.
கர்நாடகாவில் அமோக வெற்றியை நோக்கி நகர்ந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் தலைவர் சித்தராமையா, 2024ல் ராகுல் காந்தி நாட்டின் பிரதமராக வருவார் என நம்பிக்கை தெரிவித்தார்.
கர்நாடகா வெற்றியின் பெருமை ராகுல் காந்தியை சேரும் என்று காங்கிரஸ் கட்சி தனது சமூக வலைதளங்களில் கூறியுள்ளது. காங்கிரஸ் தலைவர்களும், தொண்டர்களும் ராகுல் காந்தியின் பெயரை குறிப்பிட்டனர்.
'தென் மாநிலங்களின் நுழைவாயில்' என்று அழைக்கப்படும் கர்நாடகாவில் பாஜக.வின் கோட்டையை தகர்த்ததன் மூலம் காங்கிரஸ் நிச்சயம் வலுவான நிலைக்கு வந்துள்ளது. நீண்ட காலத்திற்குப்பிறகு காங்கிரஸ் ஒரு பெரிய மாநிலத்தில் வெற்றி பெற்றுள்ளது.
காங்கிரஸின் வெற்றிக்கு பிறகு டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, "கர்நாடகாவில் வெறுப்பு சந்தை மூடப்பட்டுள்ளது, அன்பின் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இது அனைவரின் வெற்றி, முதலில் இது கர்நாடக மக்களின் வெற்றி" என்று கூறினார்.
பிரதமர் நரேந்திர மோதியின் சூறாவளி தேர்தல் பிரசாரம் மற்றும் ஆக்ரோஷமான பேச்சுக்கு மத்தியில் கர்நாடகாவில் காங்கிரஸ் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்து பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.
இந்த வெற்றிக்குப் பிறகு காங்கிரஸின் மன உறுதி நிச்சயம் அதிகரிக்கும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி அரசியல் ரீதியாக மிகவும் வலுவாக உள்ளது. வரும் மக்களவை தேர்தலில் பாஜகவை எதிர்கொள்ள எதிர்க்கட்சிகளை ஒன்றிணைப்பது பற்றிய குரல்கள் எழுந்துள்ளன.
எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை குறித்து மீண்டும் மீண்டும் பேசப்படுகிறது, ஆனால் பாஜகவின் நரேந்திர மோதி போன்ற சக்திவாய்ந்த தலைவரின் முன் எதிர்க்கட்சியின் முகம் யார் என்பதில் தொடர்ந்து சந்தேகம் நீடிக்கிறது.
காங்கிரஸின் நிலை வலுவாகுமா?

பட மூலாதாரம், TWITTER/@RAHULGANDHI
கர்நாடகாவில் வெற்றி பெற்ற பிறகு, எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு தலைமையேற்கும் காங்கிரஸின் உரிமைகோரல் மேலும் வலுப்பெறும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
"இதுவரை வந்துள்ள தேர்தல் முடிவுகளில் காங்கிரஸ் எப்போதுமே பின்னணியிலேயே இருக்கவேண்டி வந்தது. ஆனால் இந்த வெற்றி ஒரு பெரிய மாநிலத்தில், பெரிய வித்தியாசத்தில் கிடைத்துள்ளது. எனவே எதிர்க்கட்சிகளின் கூட்டணியை வழிநடத்தும் காங்கிரஸின் உரிமை கோரலுக்கு இது வலு சேர்க்கும்,” என்று அரசியல் ஆய்வாளரும் மூத்த செய்தியாளருமான ஸ்மிதா குப்தா கூறினார்.
ஏற்கெனவே பல மாநிலங்களில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன. பிகாரில் காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளின் மகா கூட்டணி ஆட்சியில் உள்ளது. ஜார்க்கண்டிலும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ஆர்ஜேடி ஆகிய கட்சிகளின் கூட்டணி அதிகாரத்தில் உள்ளது. மகாராஷ்டிராவில் கடந்த ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்படும் வரை சிவசேனை, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் மகாவிகாஸ் அகாடி கூட்டணி ஆட்சியில் இருந்தது.
தேசிய அளவில் எதிர்க்கட்சி கூட்டணி அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால் அதற்கு இன்னும் தெளிவான வடிவத்தை கொடுக்க முடியவில்லை.
பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் ஏற்கனவே கூட்டணி இருப்பதாகவும், மற்ற பிராந்தியக் கட்சிகள் இல்லாத இடங்களில் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே நேரடிப் போட்டி நிலவுவதாகவும் அரசியல் ஆய்வாளரும் மூத்த செய்தியாளருமான ஊர்மிளேஷ் கூறுகிறார்.
கர்நாடகாவில் கிடைத்துள்ள வெற்றி எதிர்க்கட்சி கூட்டணியில் காங்கிரஸின் உரிமை கோரலை வலுப்படுத்துமா என்பது குறித்துக்கருத்து தெரிவித்த ஊர்மிளேஷ், “கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றி பெற்றிருக்காவிட்டாலும், பல பிராந்திய கட்சிகளுடன் ஒப்பிடும்போது அது வலுவாக இருந்திருக்கும். கர்நாடகாவின் வெற்றிக்கு முன்பே அது எதிர்க்கட்சிகளில் மிகப்பெரிய கட்சி,” என்றார்.
"இப்போது ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த மூன்று மாநிலங்களிலும் பாஜக, காங்கிரஸுக்கு இடையே போட்டி நிலவுகிறது. இந்த மாநிலங்களிலும் காங்கிரஸின் செயல்பாடு சிறப்பாக இருந்தால், அது காங்கிரஸுக்கு மேலும் வலுசேர்க்கும். எதிர்கட்சி கூட்டணியின் அச்சாணியாக காங்கிரஸ்தான் இருக்கும். அதில் எந்த சந்தேகமும் இல்லை,” என்று அவர் குறிப்பிட்டார்.
“பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் மாநிலங்களவையில் ஏற்கனவே ஒன்றிணைந்துள்ளன என்று கூறலாம், அதை தேசிய அளவில் கொண்டு செல்ல வேண்டும். இந்தியா போன்ற பன்முகத்தன்மை கொண்ட நாட்டில் பாஜகவுக்கு எதிராக கூட்டணியின் ஒரே வேட்பாளரை முன்னிறுத்துவது நடைமுறை ரீதியாக சாத்தியமில்லை,” என்று ஊர்மிளேஷ் கூறினார்.
”இது வரை எந்த எதிர்க்கட்சித் தலைவரும் கூட்டணியின் முகம் தாங்கள்தான் என்று கூறவில்லை. ஆயினும் அனைவரும் ஒற்றுமைக்காக கண்டிப்பாக முயற்சி செய்கிறார்கள்,” என்று அவர் குறிப்பிட்டார்.
”காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பாஜகவுக்கு எதிராக ஒரே ஒரு எதிர்க்கட்சி வேட்பாளர் இருக்கவேண்டும் என்பது போல எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை முன்வைக்கப்படுகிறது,” என்றார் அவர்.
"காங்கிரஸ் ’தலைவராவதற்கு’ முயற்சிக்க கூடாது"

"கர்நாடகாவில் கிடைத்த இந்த வெற்றி காங்கிரஸுக்கு உயிர் கொடுத்துள்ளது. ஆனால் எதிர்க்கட்சிகளின் தலைமையை ஏற்க காங்கிரஸ் முயற்சிக்கக் கூடாது," என்று மூத்த செய்தியாளர் விஜய் திரிவேதி கூறுகிறார்.
"எதிர்க்கட்சிக் கூட்டணியை வழிநடத்தும் காங்கிரஸின் உரிமை கோரல் வலுவாகிவிட்டது என்று கூறுவது கொஞ்சம் அவசரத்தனமாக இருக்கும். ஆனால் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை வலுப்படுத்துவதில் காங்கிரஸ் சிறந்த பங்காற்ற முடியும். இந்த வெற்றி காங்கிரஸுக்கு ஒரு உயிர்மூச்சை அளித்துள்ளது என்று நிச்சயம் சொல்லலாம்,” என்று திரிவேதி குறிப்பிட்டார்.
ஆனால் எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு தலைவராகிவிடுவோம் என்று காங்கிரஸ் கருதக்கூடாது என்கிறார் விஜய் திரிவேதி.
கர்நாடகத்தில் வெற்றிக்குப் பிறகு, காங்கிரஸ் கட்சியும், அதன் தலைவர்களும், தொண்டர்களும் வெற்றிக்கான பெருமையை ராகுல் காந்திக்கு வழங்கினர். எனினும் கர்நாடகாவில் வெற்றி பெற்றதற்கான முழுப் பெருமையையும் ராகுல் காந்திக்கு வழங்குவது சரியல்ல என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
"கர்நாடகாவில் வெற்றி பெற்றதற்கு, காங்கிரஸின் உள்ளூர் தலைமைக்கு அதிக பெருமையை அளிக்க வேண்டும். டி.கே. சிவக்குமார் மற்றும் சித்தராமையாவின் கைகளில் தலைமை பொறுப்பு இருந்தது. கர்நாடகாவைச் சேர்ந்த மல்லிகார்ஜுன் கார்கே இந்த ஆண்டு கட்சியின் தலைவராக ஆனார். கர்நாடக தேர்தல் முடிவுகளின் பின்னணியில் அதன் உள்ளூர் தலைமை உள்ளது” என்று ஸ்மிதா குப்தா குறிப்பிட்டார்.
" உள்ளூர் தலைமை இந்தத் தேர்தலில் உள்ளூர் பிரச்சனைகளை முன்வைத்து போட்டியிட்டு வெற்றியைப் பெற்றது. இந்த வெற்றியின் பெருமையை பாரத் ஜோடோ யாத்திரைக்கும் ராகுல் காந்திக்கும் காங்கிரஸ் அளித்தாலும். உண்மையில் அது சரியல்ல. காங்கிரஸின் மத்திய தலைமைக்கு உள்ளூர் தலைவர்களை நம்பிய பெருமை மட்டுமே அளிக்கப்படவேண்டும்,” என்றார் அவர்.
மறுபுறம், இந்த ஆண்டு பிப்ரவரியில் சத்தீஸ்கரில் நடைபெற்ற மாநாட்டிற்கு பிறகு காங்கிரஸின் அணுகுமுறை மாறிவிட்டது. அதன் நிர்வாகமும் மேம்பட்டுள்ளது என்று ஊர்மிளேஷ் கூறுகிறார்.
"சமூகநீதிப் பிரச்னைகளை காங்கிரஸ் தனது செயல் பட்டியலில் சேர்த்துள்ளது. சத்தீஸ்கர் சிந்தனை அமர்வு கூட்டத்தில், காங்கிரஸ் உருவாக்கிய செயல்திட்டத்தை அது செயல்படுத்துகிறது. இதுவும் அதன் சிறந்த செயல்பாட்டிற்கு ஒரு காரணம்" என்கிறார் ஊர்மிளேஷ்.
ராகுல் காந்தியின் இமேஜ் வலுவாகுமா?
மறுபுறம், கர்நாடகா வெற்றி ராகுல் காந்தியின் இமேஜை பலப்படுத்தும் என்று விஜய் திரிவேதி கருதுகிறார்.
"பாரத் ஜோடோ யாத்திரை மூலம் ராகுல் காந்தி உருவாக்கிய பிம்பம் இந்த வெற்றியால் மேலும் வலுவாகும். ஆனால், கர்நாடகாவில் ராகுல் காந்தியின் ஸ்ட்ரைக் ரேட் 35 சதவிகிதமாக உள்ளது. கர்நாடகாவில் காங்கிரஸுக்கு ஒரு வேகத்தை ராகுல் காந்தி ஏற்படுத்தினார் என்று நாம் சொல்லலாம்,” என்கிறார் திரிவேதி.
கர்நாடகாவில் காங்கிரஸின் இந்த வெற்றி எதிர்பாராதது அல்ல என்றும், பாஜக அரசின் தோல்வியே இதற்கு முக்கியக் காரணம் என்றும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
"காங்கிரஸின் இந்த வெற்றி எதிர்பாராதது அல்ல. காங்கிரஸுக்குப் அறுதிப்பெரும்பான்மை கிடைத்துள்ளது. இந்தக் கண்ணோட்டத்தில் இந்த வெற்றி மிகப்பெரியது என்று உறுதியாகச் சொல்லலாம். கர்நாடகாவில் காங்கிரஸ் ஒற்றுமையாக செயல்பட்டது.
ஆனால் ஆழமாக அலசினால், இந்த முடிவுகளுக்கு பசவராஜ் பொம்மை அரசின் தோல்வியே முக்கிய காரணம் என்று சொல்லலாம். பிரதமர் நரேந்திர மோதி தீவிரமாக பிரச்சாரம் செய்தார். கடலோர கர்நாடகத்தில் வகுப்புவாத விஷயங்கள் தாக்கத்தை ஏற்படுத்தின. இல்லாவிட்டால் பாஜகவின் நிலைமை இன்னும் மோசமாக இருந்திருக்கும்,” என்கிறார் விஜய் திரிவேதி.
மறுபுறம், கர்நாடகாவில் இந்துத்துவ அரசியலை மக்கள் நிராகரித்துவிட்டனர் என்றும், இதுவே காங்கிரஸின் வெற்றிக்கு முக்கிய காரணம் என்றும் ஊர்மிளேஷ் கருதுகிறார்.
"தென்னிந்தியா எப்போதுமே இந்துத்துவ அரசியலுக்கு எதிரானது. கர்நாடகா அதற்கு விதிவிலக்கு. கர்நாடகாவிலும் பாஜக முன்பு ஆட்சி அமைத்தது உண்மைதான். ஆனால் ஒருபோதும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. மொத்தத்தில் தெற்கே கர்நாடகாவில் பாஜக அமைத்திருந்த நுழைவாயில் இப்போது இடிந்து விட்டது." என்கிறார் ஊர்மிளேஷ்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












