கர்நாடகாவில் பாஜகவின் தோல்வியால் பிரதமர் நரேந்திர மோதிக்கு என்ன பின்னடைவு?

modi

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், ரஜ்னிஷ் குமார்
    • பதவி, பிபிசி செய்தியாளர்

கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றி பெற்றதை தொடர்ந்து அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் நரேந்திர மோதியின் பாதை கடினமாகிவிட்டதா? மோதியின் செல்வாக்கு குறைகிறதா? பாஜகவை தோற்கடிக்கும் திறன் காங்கிரஸுக்கு வந்துவிட்டதா? என்பது போன்ற விவாதங்கள் மீண்டும் தொடங்கியுள்ளன.

கடந்த 9 ஆண்டுகளாக மத்தியில் பாஜக ஆட்சியில் உள்ளது. கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற பிரதமர் மோதி எந்த முயற்சியையும் விட்டுவைக்கவில்லை. ஆனால் மோதியின் இந்த முயற்சி கர்நாடகாவில் எதிர்பார்த்த பலனை அளிக்கவில்லை.

கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றி பெற்றதன் மூலம் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு எதிரான முகாமை தன்னால்தான் வழிநடத்த முடியும் என்ற அக்கட்சியின் கூற்றுக்கு வலு சேர்ந்துள்ளது.

அடுத்த ஆண்டு மக்களவை தேர்தலுக்கு முன்னதாக இன்னும் பல மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல்கள் உள்ளன. இந்த மாநிலங்களில் சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியும், மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சியும் உள்ளது.

சத்தீஸ்கர் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் இந்த ஆண்டு நவம்பர் மாதமும், ராஜஸ்தானில் டிசம்பர் மாதமும் தேர்தல் நடைபெற உள்ளது.

மத்தியப்பிரதேச தேர்தல் பாஜகவுக்கு எப்படி கடினமாக இருக்குமோ அதேபோலதான் ராஜஸ்தானில் காங்கிரஸுக்கும் இருக்கும் என்று கூறப்படுகிறது.

சட்டப்பேரவை தேர்தல் விளைவு

நரேந்திர மோதி, கர்நாடகா தேர்தல் முடிவுகள், பாஜக

இந்த மூன்று முக்கியமான மாநிலங்களைத் தவிர, மிசோ தேசிய முன்னணி ஆட்சி செய்யும் மிசோரமில் நவம்பர் மாதத்தில் தேர்தல் நடைபெறும். தெலங்கானா ராஷ்டிர சமிதி என்ற பெயரை பாரத் ராஷ்டிர சமிதி என்று மாற்றிய கே.சந்திரசேகர் ராவ் ஆட்சி செய்யும் தெலங்கானாவில் டிசம்பர் மாதம் தேர்தல் நடக்க உள்ளது.

சட்டப்பேரவை தேர்தல் நடைமுறை இத்துடன் முடிந்துவிடவில்லை. ஆந்திரப் பிரதேசம், அருணாச்சலப் பிரதேசம், சிக்கிம் மற்றும் ஒடிஷா ஆகிய மாநிலங்களிலும் மக்களவை தேர்தலுக்கு முன்போ அல்லது அதன் கூடவோ சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும். இந்த மாநிலங்களில் அடுத்த ஆண்டு ஏப்ரலிலும், மக்களவைத் தேர்தல் மே மாத்திலும் நடைபெற உள்ளது.

மக்களவை தேர்தலுக்கு முன்பாக கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றிருப்பது பாஜகவுக்கு எந்த வகையிலும் நல்ல செய்தியாக இருக்க முடியாது.

ஒடிஷாவில் நவீன் பட்நாயக், ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி, தெலங்கானாவில் கே சந்திரசேகர் ராவ் ஆகியோர் மிகவும் பிரபலமான தலைவர்கள். இந்த மூன்று மாநிலங்களிலும் பாஜகவின் தாக்கம் அவ்வளவாக இல்லை. இத்தகைய சூழ்நிலையில் கர்நாடகாவிற்குப் பிறகு இந்த மாநிலங்களில் வெற்றிகிடைக்கும் என்று பாஜக நம்புவதற்கு உறுதியான காரணம் எதுவும் இல்லை.

இந்திய வாக்காளர்கள் சட்டப்பேரவை மற்றும் மக்களவை தேர்தல்களில் மாறுபட்ட வகையில் தங்கள் வாக்குகளை அளிக்கின்றனர். உதாரணமாக, ராஜஸ்தானில் 2018 சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. ஆனால் மக்களவைத் தேர்தலில் ராஜஸ்தானில் உள்ள 25 இடங்களில் 24 இடங்களை பாஜக வென்றது.

இதேபோல்தான் மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் தேர்தல் முடிவுகளும் இருந்தன. இந்தி மொழி பேசப்படும் மாநிலங்களில் சட்டப்பேரவை மற்றும் மக்களவை தேர்தல் முடிவுகள், கடந்த பல தேர்தல்களாக வெவ்வேறாக உள்ளன. ஆனால் ஆந்திரா, ஒடிஷா, தெலங்கானா ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவை மற்றும் மக்களவை தேர்தல் முடிவுகள் ஒரே மாதிரியாக இருந்து வந்துள்ளன.

இந்தி பிரதேசத்தில் இருந்து மாறுபட்ட முடிவுகள்

நரேந்திர மோதி, கர்நாடகா தேர்தல் முடிவுகள், பாஜக

பட மூலாதாரம், ANI

ஆந்திராவில் 2019 சட்டப்பேரவைத்தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர்சிபி கட்சி அமோக வெற்றியைப் பெற்றது. கூடவே மக்களவைத் தேர்தலில் மொத்தமுள்ள 25 இடங்களில் 22 இடங்களை அக்கட்சி வென்றது. மூன்று இடங்கள் தெலுங்கு தேசம் கட்சிக்கு சென்றன. பாஜகவுக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை.

ஒடிஷாவிலும் நவீன் பட்நாயக் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றார். மக்களவைத் தேர்தலில் மொத்தமுள்ள 21 இடங்களில் 12 இடங்களில் அவரது கட்சி வெற்றி பெற்றது. தெலங்கானாவிலும் மக்களவை தேர்தல் மற்றும் சட்டப்பேரவைத்தேர்தல் முடிவுகள் வித்தியாசமாக இருக்கவில்லை. 2000 வது ஆண்டு மார்ச் மாதம் ஒடிஷா முதல்வராக பதவியேற்ற பிறகு நவீன் பட்நாயக் ஒரு தேர்தலில்கூட தோல்வியடையவில்லை.

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றாலும், மக்களவை தேர்தலில் வெற்றி கிடைக்கும் என்று உறுதியாக கூற முடியாது.

2013ஆம் ஆண்டு நடைபெற்ற கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 224 தொகுதிகளில் பாஜகவுக்கு 40 இடங்களே கிடைத்தன. ஆனால் 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் மாநிலத்தில் மொத்தமுள்ள 28 இடங்களில் 17-ஐ பாஜக கைப்பற்றியது. அதே நேரத்தில், 2019 மக்களவைத் தேர்தலிலும், 28 இடங்களில் 25 இடங்களில் பாஜக வெற்றி பெற்றது.

கர்நாடக சட்டப்பேரவைத்தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் நரேந்திர மோதியின் பிரபலத்தை குறைத்து மதிப்பிடுவது அவசரத்தனமானது என்று மூத்த செய்தியாளர் நீரஜா செளத்ரி கூறுகிறார்.

'மோதியின் புகழ் குறையவில்லை'

நரேந்திர மோதி, கர்நாடகா தேர்தல் முடிவுகள், பாஜக

பட மூலாதாரம், ANI

"கர்நாடகாவில் பாஜகவின் உள்ளூர் தலைமை காங்கிரஸை விட மிகவும் பலவீனமாக உள்ளது. பாஜகவுக்கு எடியூரப்பாவைத் தவிர வலுவான தலைவர் இல்லை. எடியூரப்பாவின் பிரபலமும் தற்போது குறைந்துள்ளது. கர்நாடகாவில் பாஜகவின் தோல்வியை விட காங்கிரஸின் வெற்றி முக்கியத்துவம் வாய்ந்தது,” என்று நீரஜா செளத்ரி கூறினார்.

"கர்நாடகாவில் காங்கிரஸின் வெற்றிக்கு மோதியின் பிரபலம் குறைந்ததுதான் காரணம் என்று நான் நினைக்கவில்லை. பாஜகவின் உள்ளூர் தலைமைக்கு செல்வாக்கு இல்லை என்று உறுதியாகச் சொல்ல முடியும். இரண்டாவதாக, பாரம்பரியமாக பாஜகவுக்கு வாக்களிக்கும் லிங்காயத்துகளும் காங்கிரஸுக்கு வாக்களித்துள்ளனர் என்பது காங்கிரஸின் இந்தப்பெரிய வெற்றியிலிருந்து தெளிவாகிறது,” என்றார் அவர்.

வரும் தேர்தலில், பாஜகவை விட காங்கிரஸ் அதிக சிரமத்தை சந்திக்கும். ராஜஸ்தானில் சச்சின் பைலட் vs அஷோக் கேலாட் சர்ச்சை அதிகரித்து வருகிறது. இரு தலைவர்களும் வெவ்வேறுவிதமாக பேசி வருகின்றனர்.

மத்தியப் பிரதேசத்தில் ஜோதிராதித்ய சிந்தியா பாஜகவில் இணைந்தது மாநில காங்கிரஸின் ஆரோக்கியத்தை நேரடியாக பாதித்துள்ளது. மறுபுறம், ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசத்தில் பாஜகவிற்குள் இதுபோன்ற உட்பூசல் இல்லை.

கர்நாடகாவில் நரேந்திர மோதி தனது முழு பலத்தையும் செலுத்திய விதத்தை பார்க்கும்போது இந்தத்தோல்வி அவருக்கு பெரிய அடியாக இருக்கும் என்று மூத்த செய்தியாளர் ராதிகா ராமசேஷன் கருதுகிறார்.

மோதியின் வேண்டுகோள் பலனளிக்கவில்லை

நரேந்திர மோதி, கர்நாடகா தேர்தல் முடிவுகள், பாஜக

பட மூலாதாரம், ANI

"மோதி தேர்தல் பிரசாரத்தின் முடிவில் பஜ்ரங்பலி என்ற பெயரில் வாக்கு கேட்கத் தொடங்கினார். அவர் பல ரோட் ஷோக்களை நடத்தினார். ஆனால் அவரது பேச்சு பலனளிக்கவில்லை. பாஜக எடியூரப்பாவை நீக்கி பசவராஜ் பொம்மையை முதல்வராக்கியது, இதுவும் பின்னடைவை ஏற்படுத்தியது," என்று அவர் குறிப்பிட்டார்.

"கர்நாடகாவில் பாஜக என்றால் எடியூரப்பா. 2012-ல் எடியூரப்பாவை நீக்கி பாஜக தனது நிலையை உணர்ந்துகொண்டது. இந்தத் தவறை அத்வானி செய்தார். மோதி மீண்டும் அதே தவறை செய்தார்."

“கர்நாடகா தேர்தல் முடிவை வைத்து அடுத்த ஆண்டின் பொதுத் தேர்தலை கணிக்க முடியாது என்றாலும், மோதியின் ஒவ்வொரு முறையீட்டையும் கர்நாடக மக்கள் நிராகரித்தனர் என்பது உண்மை” என்று அவர் கூறுகிறார்.

"மாநிலத்தின் உள்ளூர் தலைவர்களை ஒதுக்கிவைத்து நீண்ட காலத்திற்கு தேர்தலில் வெற்றி பெற முடியாது என்பது பாஜகவுக்கு ஒரு பாடம். ஹரியானா, உத்தராகண்ட் போல எல்லா மாநிலங்களையும் அது கருதமுடியாது.”

உத்தரகாண்டில் புஷ்கர் சிங் தாமி தலைமையில் , சட்டப்பேரவைத்தேர்தலில் பாஜக தோல்வியடைந்த பிறகும், பாஜக அவரை முதல்வராக்கியது.

என்ன செய்தி?

நரேந்திர மோதி, கர்நாடகா தேர்தல் முடிவுகள், பாஜக

பட மூலாதாரம், Getty Images

கடந்த ஆண்டு டிசம்பரில் குஜராத்தில் பாஜக சாதனை வெற்றி பெற்றது. காங்கிரஸ் அவமானகரமான தோல்வியை சந்தித்தது. மேலும் இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்றது.

ஆனால், ஹிமாச்சல பிரதேசத்தில் பாஜக மற்றும் காங்கிரஸின் வாக்கு சதவிகிதத்தில் சிறிய இடைவெளியே இருந்தது. இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸின் வாக்கு சதவிகிதம் 43.90 ஆக இருந்தது, அது 40 இடங்களை வென்றது. பாஜகவின் வாக்கு சதவிகிதம் 43. அது 25 இடங்களை கைப்பற்றியது.

ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் கலந்துகொண்ட பிரபல அரசியல் ஆர்வலர் யோகேந்திர யாதவ், கர்நாடக தேர்தல் முடிவு அத்தனை இறுதியானதாக இருக்காது என்று நம்புகிறார்.

"கர்நாடக தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, காங்கிரஸ் உற்சாகமாக பாஜக முடிந்துவிட்டது என்று அறிவிக்கலாம். பாஜக செய்தித் தொடர்பாளர்கள் சட்டப்பேரவைத் தேர்தலுக்கும் மக்களவை தேர்தலுக்கும் சம்பந்தம் இல்லை என்று கூறுவார்கள். கர்நாடக சட்டபேரவைத்தேர்தலில் அளித்த அதே முடிவை மக்களவை தேர்தலிலும் மக்கள் அளிப்பார்கள் என்று சொல்ல முடியாது,” என்று யோகேந்திர யாதவ் தி பிரிண்டில் எழுதினார்.

"இந்த முடிவு உளவியல் தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்புகிறேன். காங்கிரஸின் வெற்றி, பாஜகவையும் தோற்கடிக்க முடியும் என்ற செய்தியை அனுப்பும். பாரத் ஜோடோ யாத்திரைக்குப் பிறகு உருவாகியிருக்கும் சூழல் தொடரும். கர்நாடக தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, 2024 பொதுத் தேர்தலுக்கான களம் திறந்துள்ளது. தேர்தல் வெற்றிக்கு வகுப்புவாதம் ஒரு உத்தரவாதம் இல்லை என்பதையும் காங்கிரஸின் வெற்றி சொல்கிறது.”

புகழ்பெற்ற பொருளாதார நிபுணரும், மன்மோகன் சிங் அரசில் பொருளாதார ஆலோசகருமான கெளசிக் பாசு, காங்கிரஸின் வெற்றி குறித்து, “கர்நாடகம் இன்று செய்வதை இந்தியா நாளை செய்யும்” என்று எழுதினார்.

கர்நாடகாவின் இன்றைய மக்கள் தீர்ப்பு, வரவிருக்கும் காலத்தின் பிரதிபலிப்பு என்று பாசு கூற முயல்கிறார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: