கர்நாடகா தேர்தல்: நரேந்திர மோதி சொன்ன '91 ஏச்சுக்கள்', எதிர்க்கட்சிகளின் எதிர்வினை ஏற்படுத்தும் தாக்கம் என்ன?

- எழுதியவர், இம்பான் குரேஷி
- பதவி, பிபிசி இந்திக்காக
கர்நாடகா சட்டமன்ற தேர்தல் மே 10ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி வழக்கமான நடைமுறைப்படி வாக்குப்பதிவுக்கு 24 மணி நேரம் முன்பாக தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையில் முடிவடைகிறது. இந்த தேர்தலுக்கான ஜுரம் இப்போதே தேர்தல் களம் காணும் கட்சிகள், வேட்பாளர்கள் இடையே தொற்றிக் கொண்டிருக்கிறது.
இந்த தேர்தலில் கர்நாடகாவில் பாரதிய ஜனதா கட்சியின் வெற்றியை உறுதி செய்ய பிரதமர் நரேந்திர மோதி கடுமையாக உழைத்துள்ளார்.
கடந்த ஏழு நாட்களில் அவர் 17 பேரணிகள் மற்றும் ஐந்து சாலை வழி பேரணிகளை நடத்தியுள்ளார்.
தென் மாநிலங்களில் முக்கிய மாநிலமான கர்நாடகாவின் தேர்தல் முடிவுகள், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவை தேர்தல் மற்றும் பல மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தலுக்கும் முக்கியமானதாக இருக்கும்.
கர்நாடகாவில் பாரதிய ஜனதா கட்சியின் வெற்றியை உறுதி செய்து, வரும் தேர்தலில் அதை தங்களுக்கு சாதகமாகப்பயன்படுத்த பிரதமர் நரேந்திர மோதி விரும்புகிறார்.
பிரதமர் நரேந்திர மோதி கடந்த 9 நாட்களில் டெல்லிக்கு வெளியே இரண்டு இரவுகளை கழித்துள்ளார். இதுவும் ஒரு அசாதாரணமான விஷயம். கர்நாடகாவில் மூன்று முதல் நான்கு பேரணிகள் மற்றும் ரோட் ஷோக்களை நடத்த அவர் இதைச் செய்தார்.
கர்நாடக தேர்தல் முடிவுகள் மே 13ஆம் தேதி வெளியாகும்.
தனது கட்சியின் தலையெழுத்தை மாற்ற விரும்புவதால் பிரதமர் நரேந்திர மோதி கர்நாடகாவின் மீது அதிக கவனம் செலுத்துகிறார். ஏனென்றால் 1985-க்குப் பிறகு எந்த ஆளும் கட்சியும் தொடர்ந்து இரண்டாவது முறையாக அங்கு ஆட்சிக்கு வந்ததில்லை.
கர்நாடகாவில் பாஜகவின் உயர் தலைவர் பிஎஸ் எடியூரப்பா அக்கட்சியின் தேர்தல் பிரசாரத்தை முன்னின்று நடத்தாத முதல் தேர்தல் இது என்பதாலும் இந்த தேர்தல் பிரசாரம் முக்கியத்துவம் வாய்ந்தது.
எடியூரப்பா 2008ல் கட்சியை தனித்து ஆட்சிக்கு கொண்டு வந்தார். 2018ல் எந்தக்கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், 2019ல் பாஜகவை ஆட்சியில் அமர்த்தியதில் முக்கிய பங்காற்றினார்.
ஆதிக்கம் செலுத்தும் பிரச்னைகள்

பட மூலாதாரம், @NARENDRAMODI
அப்போது பாரதிய ஜனதா கட்சி முறையே 110 மற்றும் 104 இடங்களை கைப்பற்றியது. 224 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவையில் இரண்டு முறையும் 113 என்ற மேஜிக் எண்ணை கட்சியால் எட்ட முடியவில்லை.
இந்த தேர்தலின் மற்றொரு அம்சம் - இம்முறை பாஜக, ஆட்சிக்கு எதிரான அலையை மாநிலத்தில் எதிர்கொள்கிறது.
பல மாதங்களுக்கு முன்பு பாஜக மீது ஊழல் குற்றச்சாட்டை சுமத்திய காங்கிரஸ், இது 40 சதவிகித 'கமிஷன் அரசு' என்று கூறியது.
ஊழல் விவகாரத்தில் பாஜகவை தாக்கியதுடன், வேலையின்மை மற்றும் விலைவாசி உயர்வு போன்ற முக்கியமான பிரச்சனைகளில் இருந்து பொதுமக்களுக்கு நிவாரணம் அளிக்கும் நான்கு உத்தரவாதங்களை காங்கிரஸ் கட்சி பொதுமக்களுக்கு அளித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோதி ஏப்ரல் 29 ஆம் தேதி மாநிலத்தில் தனது தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கினார். மேலும் அவர் மீது காங்கிரஸ் சுமத்திய குற்றச்சாட்டுகளை தனது தேர்தல் பிரசாரத்தின் மையமாக ஆக்கினார்.
காங்கிரஸ் தலைவர்களின் 'விஷப்பாம்பு', 'தகுதியற்ற மகன்' போன்ற அறிக்கைகளை மேற்கோள் காட்டிய அவர், காங்கிரஸ் தலைவர்கள் தன்னை தவறாகப்பேசி தனிப்பட்ட முறையில் தாக்குகிறார்கள் என்று கூறினார்.
பஜ்ரங் தளத்திற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் கூறியிருப்பதை சுட்டிக்காட்டிய அவர் இது பகவான் அனுமாருக்கு செய்யப்பட்ட அவமதிப்பு என்று மீண்டும் மீண்டும் கூறினார்.
பாஜக தலைவர்களின் அணுகுமுறையில் தன்னம்பிக்கை தெரியவில்லை என்று போபாலின் ஜாக்ரன் லேக்சிட்டி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரும் அரசியல் ஆய்வாளருமான பேராசிரியர் சந்தீப் சாஸ்திரி கூறினார்.

பட மூலாதாரம், @NARENDRAMODI
முதலாவதாக, மாநிலத்தில் உள்ள ஒப்பந்ததாரர்கள் மற்றும் பள்ளி மேலாளர்கள், அரசுக்கு எதிராக இந்த குற்றச்சாட்டை கூறியதுடன், இது குறித்து பிரதமருக்கு கடிதமும் எழுதினர்.
இந்த முறை பாஜகவின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி கொடுப்பதற்கு பதிலாக, மாநிலத்தில் தேர்தலுக்கான விவாதப்பொருளாக காங்கிரஸ் அதை ஆக்கியுள்ளது என்று மாநில அரசியலை கவனித்து வரும் அரசியல் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
முதல்வர் பசவராஜ் பொம்மையின் தலைமையில் ஆளும் பாஜக, காங்கிரஸின் குற்றச்சாட்டுகளுக்கு உறுதியுடன் பதிலளிக்க முடியவில்லை.
பிரபலமான பணம் செலுத்தும் செயலியின் பிரசார இயக்கத்தின் உதவியுடன் மாநிலத்தில் முதலமைச்சரை சுற்றி வளைக்க காங்கிரஸ் 'PayCM' பிரசாரத்தைத் தொடங்கியது. இதற்கு தகுந்த பதிலடியை பாஜகவால் கொடுக்கமுடியவில்லை.
தேர்தல் ஆணையம் மாநிலத்தின் தேர்தல் அட்டவணையை அறிவிப்பதற்கு முன்பே காங்கிரஸ் கட்சி, அரசு மீதான ஊழல் குற்றச்சாட்டுகளைச் சுற்றி தனது தேர்தல் பிரசாரத்தை தயார் செய்தது.
காங்கிரஸ் பல நலத்திட்டங்களுக்கான வரைபடத்தையும் முன்வைத்தது., பிரதமர் நரேந்திர மோதி இதை ’அன்பளிப்பு கலாசாரம் என்று விமர்சித்தார்.
வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதம் 10 கிலோ அரிசியும், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத் தலைவிக்கு மாதம் இரண்டாயிரம் ரூபாய் நிதியுதவியும், வேலையில்லா பட்டதாரிகள் மற்றும் டிப்ளமா படிப்பு படித்தவர்களுக்கு, 2 ஆண்டுகளுக்கு ’வேலையில்லா படிப்பணமும்’ வழங்கும் ஜனரஞ்சக அறிவிப்புகளை காங்கிரஸ் வெளியிட்டது.
பாரதிய ஜனதா கட்சி இந்த வாக்குறுதிகளை வெற்று வாக்குறுதிகள் என்று கூறி நிராகரித்தது. அவை நிறைவேற்ற முடியாதவை என்றும் அது கூறியது.
மறுபுறம் முன்னாள் முதல்வர் சித்தராமையா இந்த திட்டங்கள் ஜனரஞ்சக திட்டங்கள் அல்ல, அவை பொருளாதார திட்டங்கள் என்று கூறி அவற்றை நியாயப்படுத்தினார்.
பிபிசி இந்திக்கு அளித்த பேட்டியில் இந்த முன்மொழியப்பட்ட திட்டங்களை நியாயப்படுத்திய அவர், இந்த திட்டங்களால் 50,000 கோடி ரூபாய் மட்டுமே கூடுதல் சுமை ஏற்படும் என்பதால் அவற்றை நிறைவேற்ற முடியும் என்று கூறினார்.
மாநிலத்தின் ஆண்டு பட்ஜெட்டான 3.10 லட்சம் கோடி ரூபாயில் இருந்து ஆண்டுக்கு 20 முதல் 25 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்க முடியும் என்றார் அவர்.
மறுபுறம், பாரதிய ஜனதா கட்சி தனது தேர்தல் அறிக்கையில் வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு வருடத்தில் மூன்று இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்க வாக்குறுதி அளித்துள்ளது. உகாதி, விநாயகர் சதுர்த்தி, தீபாவளி ஆகிய பண்டிகைகள் வரும் மாதங்களில் இந்த சிலிண்டர்கள் வழங்கப்படும் என அக்கட்சி உறுதியளித்துள்ளது.
ஒவ்வொரு முனிசிபல் கவுன்சில் வார்டிலும் அடல் ஆஹார் கேந்திரா (உணவு மையம்) அமைக்கப்படும் என்றும் பாஜக வாக்குறுதி அளித்துள்ளது. இந்த உணவு மையங்களில் மக்களுக்கு மலிவு விலையில் உணவு கிடைக்கும். இது தவிர, தினமும் அரை கிலோ நந்தினி பால், மாதந்தோறும் ஐந்து கிலோ தானியம், வீடற்ற ஏழைகளுக்கு பத்து லட்சம் வீடுகள் கட்டித்தரப்படும் என்றும் கட்சி வாக்குறுதி அளித்தது.
தீவிர தேர்தல் பிரசாரம்

பட மூலாதாரம், @NARENDRAMODI
ஆனால் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் ஒரு சிறிய பத்தி, பிரதமர் நரேந்திர மோதியின் தாக்குதல் இலக்காக மாறியது.
பஜ்ரங் தள் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) மற்றும் பிற அமைப்புகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் உறுதியளித்துள்ளது.
தடைசெய்யப்பட்ட அமைப்பான பிஎஃப்ஐயுடன் பஜ்ரங்தளத்தை ஒப்பிட்டுப் பேசியதற்காக காங்கிரஸை பாஜக தாக்கியுள்ளது. 'குற்றம்சாட்டப்பட்ட பயங்கரவாத அமைப்புகளிடமிருந்து' நிதி பெற்றதாகவும் PFI மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஜெய் பஜ்ரங் பலி என்ற முழக்கத்தை எழுப்பி பிரதமர் நரேந்திர மோதி தேர்தல் பிரசாரத்தை தொடங்கி வைத்தார்.
மக்கள் வாக்களிக்கச் செல்லும்போது ஜெய் பஜ்ரங் பலி என்ற முழக்கத்தை எழுப்பி வாக்களிக்க வேண்டும் என்று நரேந்திர மோதி கூறினார்.
2014ல் அப்போதைய கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் ’ஸ்ரீராம் சேனா அமைப்பை’ தடை செய்ததை ஒப்பிட்டு காங்கிரஸ் இதற்கு பதிலளித்தது.
மனோகர் பாரிக்கர் பாஜகவை சேர்ந்தவர். 'கோவாவில் ஸ்ரீராம் சேனாவுக்கு தடை விதிக்கப்பட்டபோது, பிரதமர் அதை ராமரை அவமதித்ததாகக் கூறினாரா?' என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பியது.
காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் செய்தியாளர் சந்திப்பில், "அப்போது அப்படி எதுவும் சொல்லப்படவில்லை. இப்போது அது திரித்து முன்வைக்கப்படுகிறது. பஜ்ரங்தள்ளை, பஜ்ரங் பலியுடன் ஒப்பிட முடியாது அல்லது பஜ்ரங்தளம் பஜ்ரங் பலியாக மாற முடியாது" என்று கூறினார்.
பிரதமர் நரேந்திர மோதி கர்நாடகாவில் தேர்தல் பிரசாரத்தை தொடங்குவதற்கு ஒரு நாள் முன்பு, காங்கிரஸின் தீவிர தலைவர்களில் ஒருவராக கருதப்படும் மல்லிகார்ஜுன் கார்கே, மோதியை விஷப்பாம்பு என்று ஏசினார்.
இதற்குப் பதிலளித்த பிரதமர் நரேந்திர மோதி காங்கிரஸ் கட்சி இதுவரை '91' முறை தன்னை ஏசியுள்ளது என்று கூறினார்.
மறுநாள் தனது உரையில், “என்னை பாம்பு என்று சொன்னார்கள், ஆனால் பாம்பு, சிவபெருமானின் கழுத்தில் உள்ள ஆபரணம். இந்த நாட்டு மக்களையும், கர்நாடக மக்களையும் நான் சிவனாகக் கருதுகிறேன். எனவே அந்த அறிக்கையை வரவேற்கிறேன்" என்று பிரதமர் கூறினார்.
மறுபுறம், பிரியாங்க் கார்கே, பிரதமர் மோதியை தகுதியற்ற குடிமகன் என்றார். இதன் மூலம் பிரதமர் மோதிக்கு காங்கிரஸை தாக்க மற்றொரு விஷயம் கிடைத்தது. பிரியங்க் கார்கே சித்தாப்பூர் சட்டமன்ற தொகுதியில் இருந்து மீண்டும் தேர்தலில் போட்டியிடுகிறார்.
‘சாய்வாலா’ விவகாரம் போன்ற சூழல் காங்கிரஸுக்கு உருவாகியுள்ளதா?

2014 பொதுத் தேர்தலுக்கு முன்னதாக நரேந்திர மோதியை பிரதமர் வேட்பாளராக பாஜக அறிவித்த சில நாட்களுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மணிசங்கர் ஐயர், மோதியை சாய்வாலா (chaiwala) என்று அழைத்தார்.
இதைத் தொடர்ந்து காங்கிரஸுக்கு எதிராக ’சாய் பே சர்ச்சா’ என்ற ஆக்ரோஷமான தேர்தல் பிரசாரத்தை பாஜக தொடங்கியது. தேர்தலில் காங்கிரஸ் தோல்வியை சந்திக்க வேண்டியிருந்தது.
இப்படிப்பட்ட நிலையில் சமீபத்திய அரசியல் சர்ச்சைகள், காங்கிரசுக்கும், பாஜக.வுக்கும் தேர்தலில் என்ன விளைவை ஏற்படுத்தும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இது தேர்தலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
"பிரதமர் நரேந்திர மோதி தேர்தல் பிரசாரத்தை தொடங்குவதற்கு முன்பே மாநிலத்தில் தமது மதம் சார்ந்த பிரசார திட்டத்தை பாரதிய ஜனதா கட்சி கைவிட்டது. காரணம், இதனால் அதிக பலன் இல்லை என்று அக்கட்சி மேலிடம் உணர்ந்தது. வாழ்வாதாரம், விலைவாசி உயர்வு போன்ற பிரச்னைகளால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வேலையில்லா திண்டாட்டம் ஒரு பெரிய பிரச்னையாக உள்ளது. இது தவிர அரசு எதிர்ப்பு அலையை பாரதிய ஜனதா கட்சி எதிர்கொள்கிறது," என்று அரசியல் ஆய்வாளர் டி உமாபதி கூறுகிறார்.
அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் பேராசிரியரான நாராயணனும், டி. உமாபதியுடன் உடன்படுகிறார்.
"இதுபோன்ற சர்ச்சைகள் தரை மட்டத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நான் நினைக்கவில்லை. சமீப காலங்களில் நான் கிராமங்களில் உள்ள மக்களிடம் பேசினேன், பஜ்ரங்தளம் அல்லது பிற பிரச்சினைகள் அடிமட்ட நிலையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தாது என்று நான் புரிந்து கொண்டேன். மக்கள் எந்த கேள்வியும் கேட்பதற்கு முன்பே மாநிலத்தில் உள்ள பாஜக அரசை விமர்சிக்கத் தொடங்குகிறார்கள்,” என்று அவர் கூறினார்.

பட மூலாதாரம், @INCINDIA
மறுபுறம், பாஜக.வின் ஆக்ரோஷத்தை காங்கிரஸால் எதிர்கொள்ள முடியுமா இல்லையா என்பது தேர்தல் பிரசாரத்தின் கடைசி வாரத்தில் தெரிந்துவிடும் என்று பேராசிரியர் சாஸ்திரி முன்பு பேட்டியளித்திருந்தார். இப்போது பாஜகவின் தாக்குதல்களை காங்கிரஸ் தாங்கிக்கொண்டுவிட்டது போல் தெரிகிறது” என்கிறார் சாஸ்திரி.
பேராசிரியர் சாஸ்திரி லோக்நிதி நெட்வொர்க்கின் இணை இயக்குநராகவும் உள்ளார். லோக்நிதி நெட்வொர்க் CSDS உடன் இணைந்து NDTV சேனலுக்கான தேர்தல் ஆய்வை நடத்தியது. மாநிலத்தில் 61 சதவிகித ’ஆட்சிக்கு எதிரான அலையை’ பாஜக எதிர்கொண்டுள்ளதாக இந்த ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது.
இது தவிர 57 சதவிகிதம் பேர் பாஜக அரசு மீண்டும் வருவதை விரும்பவில்லை. முதல்வர் பதவிக்கு மிகவும் விருப்பமான தலைவர் சித்தராமையாதான் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
முதல்வர் பசவராஜ் பொம்மை மீண்டும் திரும்பவேண்டும் என்று 22 சதவிகிதம் பேர் விரும்புகின்றனர். ஜேடிஎஸ் தலைவரும், முன்னாள் முதல்வருமான எச்.டி.குமாரசாமியை 15 சதவிகிதம் பேர் விரும்புகின்றனர். இந்த முறை முதல்வர் பதவிக்கான போட்டியில் எடியூரப்பா இல்லை. மாநிலத்தின் 5 சதவிகித மக்கள் அவர் முதல்வராக வேண்டும் என்று விரும்புகின்றனர். காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார், 4 சதவிகித மக்களின் விருப்பமாக உள்ளார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












