கர்நாடக சட்டமன்ற தேர்தல்: ஐ.டி ஊழியர்கள் என்ன நினைக்கிறார்கள்? கள நிலவரம்

கர்நாடகா தேர்தல் 2023

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

கர்நாடக மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், இங்குள்ள இளம் ஐடி ஊழியர்கள் இந்தத் தேர்தல் மூலம் பல விஷயங்கள் மாற வேண்டுமென எதிர்பார்க்கிறார்கள். கடந்த காலம் குறித்த சிறு அதிருப்தியும் அவர்களிடம் தென்படுகிறது. அவர்களுடைய எதிர்பார்ப்புகளும் ஏமாற்றங்களும் என்னென்ன?

கர்நாடக மாநிலத்தின் பொருளாதாரத்தில் தகவல் தொழில்நுட்பத் துறையின் பங்கு மிக அதிகம். இந்தியாவின் மென்பொருள் ஏற்றுமதியில் சுமார் 40 சதவீதம் கர்நாடக மாநிலத்திலிருந்தே நடக்கிறது. பெங்களூருவில் மட்டும் சுமார் பத்து லட்சம் பேர் நேரடியாகவும் சுமார் முப்பது லட்சம் பேர் மறைமுகமாகவும் இந்தத் துறையால் வேலை வாய்ப்பைப் பெற்றிருக்கின்றனர். கர்நாடகத்தின் மென்பொருள் ஏற்றுமதியில் சுமார் 95 சதவீதம் பெங்களூரில் இருந்தே நடக்கிறது.

ஆனால் இந்த வளர்ச்சி, பல புதிய பிரச்னைகளையும் கொண்டு வந்திருக்கிறது. நகருக்குள் வாகனங்கள் பெருகியிருப்பதால், இந்தியாவிலேயே போக்குவரத்து நெரிசல் மிகுந்த மாநிலங்களில் ஒன்றாக பெங்களூர் உருவெடுத்திருக்கிறது.

பெங்களூரு நகருக்குள் நிலத்தின் மதிப்பு பல மடங்கு உயர்ந்து விட்டது. இதனால், வாடகையும் விண்ணைத் தொடுகிறது. பெங்களூரு நகரின் ஒரு பகுதி இப்படி வளர்ந்து வரும் நிலையில், வேறு சில பகுதிகள் குடிசைகளும் நெரிசல் மிகுந்த தெருக்களுமாக காட்சியளிக்கின்றன.

இதனால், பல ஆண்டுகளாக தொழில்துறை ரீதியாகவும் கட்டமைப்பு ரீதியாகவும் தொடர்ந்து வளர்ச்சியைச் சந்தித்து வந்த பெங்களூரு நகரம் பின்தங்கி விட்டது என்ற உணர்வு பொதுவாக ஐடி துறை இளைஞர்களிடம் காணப்படுகிறது. பெங்களூரு நகரத்தின் உள் கட்டமைப்பு மேம்பட வேண்டும், இலவசங்கள் தேவையில்லை என்பதையும் இவர்கள் குறிப்பிட்டுச் சொல்கிறார்கள்.

பெங்களூருவின் எலெக்ட்ரானிக் சிட்டிக்கு அருகில் வசிக்கும் ஐ.டி ஊழியரான காளியப்பன், "பெங்களூர் மேம்படவில்லையென்றால் புதிய முதலீட்டு வாய்ப்புகளை வேறு மாநிலங்கள் பயன்படுத்திக் கொள்ளக் கூடும்," என கருதுகிறார்.

"புதிதாக வரும் அரசில் ஸ்திரத்தன்மை இருக்கவேண்டும். நல்ல கட்டமைப்பு வேண்டும். நல்ல வளர்ச்சி வேண்டும். பத்தாண்டுகளுக்கு முன்பு நல்ல வளர்ச்சி இருந்தது. இப்போது தேங்கிப் போனதைப் போல இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளில் இன்னும் சிறப்பாக அரசு செயல்பட்டிருக்கலாம் எனத் தோன்றுகிறது. பெங்களூரு நன்றாக வளர்ந்த நகரம். இந்த வளர்ச்சிக்குப் பின்னால் 15 ஆண்டுகால கடின உழைப்பு இருக்கிறது. இப்போது இந்த வேகத்தை விட்டுவிடக்கூடாது. அந்த வேகத்தை விட்டுவிட்டால், ஹைதராபாத், புனே போன்ற மற்ற நகரங்கள் இந்த வாய்ப்புகளைப் பறித்துக்கொள்ளும்" என்கிறார் அவர்.

கர்நாடகா தேர்தல் பாஜக காங்கிரஸ்

பட மூலாதாரம், Getty Images

சௌகர்யமான பாதுகாப்பான சூழலை உருவாக்குவதோடு, சாலைகளையும் மேம்படுத்த வேண்டுமென்கிறார் இவர். கர்நாடக மாநிலத்தில் நடக்கும் மத ரீதியான சம்பவங்கள் இந்தத் தேர்தலில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்கிறார் காளியப்பன்.

கர்நாடகா தேர்தல் 2023
படக்குறிப்பு, பெங்களூருவில் நடந்துவரும் மெட்ரோ ரயில் பணிகளும் பாலம் கட்டும் பணிகளும் ஏற்கெனவே மோசமாக உள்ள போக்குவரத்து நெரிசலை இன்னும் மோசமாக்குகின்றன.

பெங்களூரு நகரின் மிகப் பெரிய பிரச்னையாக உருவெடுத்திருப்பது அதன் போக்குவரத்து நெரிசல். இந்தப் பிரச்னைக்கு ஒரு தீர்வாக மெட்ரோ ரயில் கட்டமைப்பு விரிவாக்கப்பட்டு வந்தாலும், கார்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மெட்ரோ கட்டுமானப் பணிகள், பாலங்களின் கட்டுமானப் பணிகள் போன்ற எல்லாம் சேர்ந்து மக்களை மூச்சுத் திணற வைக்கின்றன. நகரின் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குச் செல்வதே கடினமான காரியமாக மாறியிருக்கிறது.

கர்நாடகா தேர்தல் 2023
படக்குறிப்பு, நகரின் போக்குவரத்து மிக மோசமாக இருப்பதால் பெங்களூரு நகரின் அடிப்படையான கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும் என்கிறார் பெங்களூரின் முன்னணி ஐடி நிறுவனத்தில் பணியாற்றும் யோகானந்த் சந்திரய்யா.

"புதிய அரசிடம் எனக்கு நிறைய எதிர்பார்ப்புகள் இருக்கின்றன. அடிப்படையான கட்டமைப்பு, குறிப்பாக சாலைகள் படு மோசமாக இருக்கின்றன. நாட்டிலேயே பெங்களூரில்தான் போக்குவரத்து மோசமாக இருக்கிறது. அதை கண்டிப்பாக சரி செய்ய வேண்டும்.

பெங்களூரு நகரை முன்பு 'க்ரீன் சிட்டி' என்பார்கள். இப்போது எல்லாம் மாறிவிட்டது. நூலகங்கள் இல்லை. ஆனால், இவர்கள் வெளியிட்டிருக்கும் தேர்தல் அறிக்கையில் நிறைய இலவசங்களை அளிப்பதாகச் சொல்கிறார்கள். எந்த தேர்தல் அறிக்கையும் நல்ல கல்வி குறித்து பேசுவதில்லை. நல்ல கட்டமைப்பு பற்றி பேசுவதில்லை. எனக்கு நீண்டகால நோக்கில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய திட்டங்களே தேவை" என்கிறார் முன்னணி தகவல் தொழில் நுட்ப நிறுவனமொன்றில் பணிபுரியும் இளைஞரான யோகானந்த் சந்திரய்யா..

கர்நாடகா தேர்தல் 2023
படக்குறிப்பு, பெங்களூரில் வாடகை உயர்ந்துகொண்டே போவதால் வாடகைக் கட்டுப்பாட்டுச் சட்டம் வேண்டும் என்கிறார் மனோஜ் ஏஇஎஸ் சைப்ரியம் நிறுவனத்தைச் சேர்ந்த மனோஜ் பாலா ராதாகிருஷ்ணன்.

கர்நாடக மாநிலத்தில் புதிதாக அலுவலகங்களைத் துவங்க விரும்பும் நிறுவனங்கள் அனைத்தும் பெங்களூரையே தேர்வுசெய்வதால், நிலத்தின் விலையும் வாடகையும் உச்சத்தைத் தொட்டிருக்கின்றன. பெங்களூரு நகரின் சில இடங்களில் நிலத்தின் விலை சதுர அடி 60,000 வரை விற்பனையாகிறது. இது தொழில்துறையை மிக மோசமான நிலைக்கு இட்டுச் செல்லும் என்கிறார் மனோஜ் ஏஇஎஸ் சைப்ரியம் என்ற ஒரு புதிய ஸ்டார்ட் - அப் நிறுவனத்தைத் துவங்கியிருக்கும் மனோஜ் பாலா ராதாகிருஷ்ணன்.

"கடந்த இரண்டு ஆண்டுகளில் நிலத்தின் விலை இரு மடங்காகிவிட்டது. வாடகைகள் உயர்ந்துவிட்டன. ஆனால், ஐடி துறையில் சம்பளம் வெகு குறைவாகவே உயர்கிறது. முன்பு 10,000 ரூபாய் சம்பாதித்தவர்கள் தற்போது 11 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கலாம். பெங்களூருவில் உள்ள வாடகை, நிலத்தின் விலையோடு ஒப்பிட்டால் அந்த அளவுக்கு சம்பளம் உயரவில்லை. ஆகவே, புதிதாக வரும் அரசு வாடகைக் கட்டுப்பாட்டிற்கு ஒரு சட்டம் வர வேண்டுமென நினைக்கிறேன்.

கர்நாடகா தேர்தல் 2023
கர்நாடகா தேர்தல் 2023

பொதுப் போக்குவரத்தை மேம்படுத்த வேண்டும். மெட்ரோ லைன்களை விரிவுபடுத்த வேண்டும். தற்போதைய சாலைகள் எல்லாம் நெருக்கடி மிகுந்தவையாக இருக்கின்றன. நிறையப் பேர் கார் வாங்குகிறார்கள். எதிர்காலத்தில் இந்த நெருக்கடி இன்னும் அதிகரிக்கும்.

தற்போது கர்நாடகாவில் ஸ்டார்ட் - அப் நிறுவனங்கள் நிறைய வருகின்றன. இங்கே நல்ல திறமையானவர்கள் இருக்கிறார்கள். ஒரு சர்வதேச தயாரிப்பை இங்கே எளிதாகச் செய்ய முடியும். நிறைய பொறியியல் கல்லூரிகள் இருக்கின்றன. இதனால் பல ஐ.டி சார்ந்த நிறுவனங்கள் இங்கே வருகின்றன.

பெங்களூருவுக்குள் இடம் போதாது என்பதால், நகரிலிருந்து 20 - 25 கி.மீ தொலைவில் புதிய ஐ.டி பார்க்குகளைக் கட்ட வேண்டும். ஏனென்றால் தற்போது 95 சதவீத ஐடி நிறுவனங்கள் பெங்களூருக்குள்ளேயே இருக்கின்றன. பெங்களூருவுக்கு அருகே இடம் கிடைத்தால், அவர்கள் அங்கு செல்வார்கள். இது நிலைமையை மேம்படுத்தும்" என்கிறார் மனோஜ் பாலா.

போராட்டம்

பட மூலாதாரம், Getty Images

புதிதாக தொழில் துவங்கி அரசின் ஆதரவைப் பெற விரும்புவர்களால், தற்போதைய அரசை எளிதில் அணுக முடியவில்லை என்ற குறை இருக்கிறது. இளம் தலைவர்கள் இருந்தால் புதிய சிந்தனைகளுக்குக் காதுகொடுப்பார்கள்; நிலைமை மாறும் எனக் கருதுகிறார்கள் சில தொழில்முனைவோர்.

கர்நாடகா தேர்தல் 2023
படக்குறிப்பு, வயசான தலைவர்கள் புதிய சிந்தனைகளை ஏற்பதில்லை என்பதால் இளமையான தலைவர்கள் தேவை என்கிறார் பெங்களூருவைச் சேர்ந்த ஸ்ரீநீவாஸ்.

பெங்களூருவை சேர்ந்த ஸ்ரீ நிவாஸ், ஆம்புலன்ஸ்கள் தொலைவில் வரும்போதே சிக்னலில் நிற்கும் வாகனங்களை எச்சரிக்கும் வகையிலான தொழில்நுட்பம் ஒன்றை உருவாக்கி, அதை அரசிடம் முன்வைக்க பல முறை முயன்றும் நடக்கவில்லை என்கிறார்.

"இங்கிருக்கும் தலைவர்களை எளிதில் அணுக முடியவில்லை. சுகாதார அமைச்சர், போக்குவரத்துத் துறை அமைச்சர்களை அணுகவே முடியவில்லை. ஆம்புலன்ஸ் போக்குவரத்து மிகப் பெரிய பிரச்னை. அவற்றால் டிராஃபிக்கில் நகர முடிவதில்லை. அதற்குத் தீர்வு இருக்கிரது. ஆனால், அவர்களை அணுகி இதைச் சொல்ல முடியவில்லை. புதிய விஷயங்களைக் கேட்பது போன்ற தலைவர்கள் வேண்டும். இப்போது வரை அதுபோலத் தலைவர்கள் கிடைக்கவில்லை. எதிர்காலத்திலாவது கிடைக்க வேண்டுமென எதிர்பார்க்கிறோம்.

இங்கிருக்கும் தலைவர்கள் எல்லோருமே வயதானவர்கள. அவர்கள் எங்கள் தேவைகளைப் புரிந்து கொள்வதேயில்லை. புதிய தொழில்நுட்பங்களைப் பற்றி சொன்னால் கவனிப்பதில்லை. புதிய சிந்தனைகளை ஏற்பதில்லை. இளைஞர்கள் வந்தால் நன்றாக இருக்கும். ஆனால், மூத்த தலைவர்கள் மட்டும்தான் இருக்கிறார்கள்" என்கிறார் ஸ்ரீநிவாஸ்.

இந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கைகளில் மக்களின் அடிப்படையான விஷயங்களுக்கு முக்கியத்துவம் தரப்படவில்லை என்கிறார்கள் இளம் வாக்காளர்கள்.

கர்நாடகா தேர்தல்

பட மூலாதாரம், Getty Images

"பெங்களூரு நகரச் சாலைகளின் நிலை எப்படியிருக்கிறது என்பதை நீங்களே பார்க்கலாம். இதனால் போக்குவரத்தே எங்கள் எல்லோருக்கும் மிகப் பெரிய பிரச்னையாக இருக்கிறது. அடுத்ததாக, மருத்துவம் மிகப் பெரிய வியாபாரமாகி விட்டது. கல்வியும் விலை உயர்ந்ததாகிவிட்டது. ஒரு குழந்தையைப் பள்ளியில் சேர்க்க லட்சக் கணக்கில் செலவழிக்க வேண்டியிருக்கிறது. பணக்காரர்களால் நிலைமையைச் சமாளிக்க முடியும். ஆனால், குறைந்த சம்பளம் பெறுபவர்களை நினைத்துப் பாருங்கள். அவர்களால் குழந்தைகளுக்கு நல்ல கல்வியைக் கொடுக்க முடியாது" என்கிறார் ஒரு மென் பொருள் நிறுவனத்தில் நிதி ஆலோசகராக இருக்கும் தீபா.

கர்நாடகா தேர்தல் 2023
படக்குறிப்பு, இலவசங்களைத் தருவதற்குப் பதிலாக கல்வியையும் வேலை வாய்ப்பையும் தர வேண்டும் என்கிறார் பெங்களூர் மென் பொருள் நிறுவனமொன்றில் நிதி ஆலோசகராக பணியாற்றும் தீபா.

பெரிய கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளில் இலவசங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருப்பதைப் பலர் ஏற்கவில்லை. "இந்தத் தேர்தல் அறிக்கைகளில் எனக்குப் பெரிய திருப்தியில்லை. இலவசங்களைக் கொடுப்பதற்கு பதிலாக, வேலை வாய்ப்புகளை அளிக்க வேண்டும். இதுபோல இலவசங்களை அளிப்பது குறுகிய கால பலன்களையே தரும். அது சரியல்ல. மக்களுக்குக் கல்வியையும் வேலை வாய்ப்பையும் தர வேண்டும். நீண்ட கால நோக்கில் அவர்களே தங்களைப் பார்த்துக்கொள்ளும் நிலையை ஏற்படுத்தித் தர வேண்டும்" என்கிறார் தீபா.

காளியப்பனும் அதே கருத்தையே பிரதிபலிக்கிறார்.

கர்நாடகா தேர்தல் 2023
படக்குறிப்பு, பல ஆண்டு கடின உழைப்பில் உருவான பெங்களூர் நகரின் வளர்ச்சி தேங்கிவிட அனுமதிக்கக்கூடாது என்கிறார் முன்னணி ஐ.டி நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் காளியப்பன்.

"இது போன்ற இலவசங்கள் பெரிய தாக்கத்தை சமூகத்தில் ஏற்படுத்தாது. யார் முதிர்ச்சியான கொள்கைகளை முன்வைக்கிறார்களோ அவர்களுக்கே வாக்களிப்போம். நாங்கள் முதிர்ச்சியான அரசை எதிர்பார்க்கிறோம். இலவசங்களை நம்பி எங்களைப் போன்ற படித்தவர்கள் செல்ல மாட்டார்கள்" என்கிறார் அவர்.

பாஜக ஆர்ப்பாட்டம்

பட மூலாதாரம், Getty Images

ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது பெங்களூருவின் ஐ.டி துறை பணியாளர்களைப் பொறுத்தவரை, வீட்டு வாடகை தொடர்ந்து உயர்ந்து வருவது, போக்குவரத்து நெரிசல், கல்வி - மருத்துவம் போன்றவற்றுக்கான செலவு அதிகரித்திருப்பது ஆகியவை முக்கியப் பிரச்சனைகளாக இருக்கின்றன. இலவசங்களை அளிப்பதற்குப் பதிலாக, அந்த நிதியை உள்கட்டமைப்பில் முதலீடு செய்ய வேண்டுமென பலர் கருதுகிறார்கள்.

ஆனால், ஐடி மற்றும் ஐடி சார்ந்த தொழில்துறையைச் சேர்ந்த இளைஞர்கள் வாக்களிப்பதில் பெரிதாக ஆர்வம் காட்டுவதில்லை என்ற புகாரும் இருக்கிறது. இதனால், இளம் வாக்காளர்களை ஈர்க்க தேர்தல் ஆணைய அதிகாரிகள், ஐ.டி நிறுவனங்களின் நிர்வாகிகளைச் சந்தித்து, தங்கள் ஊழியர்களை வாக்களிக்க ஊக்குவிக்கும்படி கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: