தைராய்டு பிரச்சனை இருந்தால் கர்ப்பம் தரிப்பதில் சிக்கல் ஏற்படுமா?

பட மூலாதாரம், Getty Images
இந்தியாவில் 10 பேரில் ஒருவருக்கு தைராய்டு பிரச்சனை உள்ளது. 2021 புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவில் 4.2 கோடி தைராய்டு நோயாளிகள் உள்ளதாக சுகாதாரத்துறை புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
தைராய்டு நோய் உண்டானவர்களுக்கு இருக்கும் பிரச்னை என்னவென்றால் அதனால் பாதிக்கப்பட்டவர்களில் மூன்றில் ஒரு பங்கு பேருக்குத் தங்களுக்கு பாதிப்பு இருப்பதே தெரியாது. இது அதிகம் பெண்களிடையே நிலவுகிறது.
தேசிய குடும்ப சுகாதார ஆய்வு (5) மூலம் வெளியான புள்ளிவிவரங்களின் படி, இந்தியாவில் அதிகபட்சமாக, கேரளாவில் பத்து லட்சம் பெண்களில் 8,696 பேருக்கு தைராய்டு பிரச்னை இருப்பதாகவும், நாகலாந்தில் பத்து லட்சம் பெண்களில் 505 பெண்களுக்கு இந்தப் பிரச்சனை இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. தமிழ்நாட்டில் பத்து லட்சம் பெண்களில் 4,076 பேருக்கு இந்தப் பிரச்சனை இருப்பதாகப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
கருவுற்றிருக்கும் பெண்கள் மற்றும் குழந்தை பெற்ற பெண்களுக்கு மகப்பேறுக்கு பிந்தைய முதல் மூன்று மாத காலத்தில் 44.3 சதவீதம் பேருக்கு தைராய்டு சுரப்பி குறைபாடு உண்டாகிறது.
ஆனால் தற்காலத்தில் பலர் முப்பது வயதிலேயே தைராய்டு பிரச்சனைகளை சந்திக்கின்றனர். மாதவிடாய் தவறுவது தைராய்டின் முக்கிய அறிகுறியாகும்.
இவ்வாறு மாதவிடாய் தவறிவருவது பல பெண்களை தைராய்டு பிரச்சினை பற்றி சிந்திக்க வைக்கின்றன, ஏனென்றால் கர்ப்பத்தைப் பற்றி சிந்திக்கும்போது, தைராய்டு பாதிப்பால் என்ன ஆகும்? என்ற கேள்வியை அவர்கள் எதிர்கொள்ளத் தொடங்குகிறார்கள்.
தைராய்டு என்றால் என்ன?
தைராய்டு என்பது மனிதர்களின் உடலின் கழுத்துப் பகுதியில் இருக்கும் பட்டாம்பூச்சி வடிவிலான சுரப்பி ஆகும். இந்த சுரப்பியில் இருந்து சில ஹார்மோன்கள் சுரக்கின்றன. மூளை, இதயம், தசைகள் மற்றும் பிற உறுப்புகளின் சரியான செயல்பாட்டிற்கு இந்த ஹார்மோன்கள் அவசியம் ஆகும். உடல் தனக்குக் கிடைக்கும் ஆற்றலைப் பயன்படுத்திக் கொள்ளவும் கதகதப்புடன் வைத்துக் கொள்ளவும் இது உதவுகிறது. தைராய்டு சுரப்பியால் சுரக்கும் ஹார்மோன்கள் T3 மற்றும் T4 ஆகியவை வளர்சிதை மாற்றம், உடல் வெப்பநிலை, இதயத் துடிப்பு ஆகியவற்றை ஒழுங்குபடுத்துவதற்கு அவசியம்.
நாம் உண்ணும் உணவு செரிமானம் ஆவதில் இருந்து மூளையின் செயல்பாடு, நகங்கள் மற்றும் சருமத்தின் ஆரோக்கியம் என அனைத்தும் இந்த ஹார்மோனுடன் தொடர்புடையது. இந்த தைராய்டு சுரப்பி செயலிழந்தால், இந்த சமநிலை பாதிக்கப்படலாம்.
தைராய்டு சுரப்பி, உடலுக்குத் தேவையான ஹார்மோன்களை உற்பத்தி செய்ய முடியாமல் போனால், அது 'ஹைப்போ தைராய்டிசம்' (hypothyroidism) எனப்படும். இதேபோல், உடலுக்கு தேவையானதை விட அதிக ஹார்மோகளை தைராய்டு சுரப்பி உற்பத்தி செய்யும்போது, ஹைப்பர் தைராய்டிசம் (hyperthyroidism) ஏற்படுகிறது.
அதிக காஃபின் உட்கொள்பவர் ஹைப்பர் தைராய்டால் பாதிக்கப்பட்டவர்கள் எதிர்கொள்ளும் அதே சூழலை எதிர்கொள்ளலாம்.

பட மூலாதாரம், Getty Images
தைராய்டு நோய்க்கான அறிகுறிகள் என்ன?
உடல் பருமன் அடைவது, முகம், கால்கள் ஆகியவை வீக்கமடைவது, சோர்வாகவும் சுறுசுறுப்பின்றியும் உணர்வது, பசி இல்லாமல் போவது, அதீத தூக்க உணர்வு, அதிகமாகக் குளிர்வது போன்ற உணர்வு, பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சியில் மாற்றம், முடி உதிர்தல் பிரச்னை போன்றவை ஹைப்போ-தைராய்டிசம் நோய்க்கான அறிகுறிகள்.
உடல் எடை குறைதல், கை- கால் நடுக்கம், இதயத்துடிப்பு சீரற்று இருப்பது, கண் பார்வை மங்குவது போன்றவை ஹைப்பர் தைராய்டிசத்தின் அறிகுறிகள் ஆகும்.
ஹைப்போ தைராய்டிசம் என்பது தைராய்டு ஹார்மோன் குறைபாடால் ஏற்படுவது ஆகும். எனவே, TSH ஹார்மோன் அளவு அதிகமாக இருக்கும். இந்த நோயாளிகளுக்கு தொடர்ந்து தைராய்டு ஹார்மோன் மாத்திரை வடிவில் வழங்கப்படுகிறது. தைராய்டு ஹார்மோனின் அளவு அதிகமாகவும், TSH குறைவாகவும் இருக்கும்போது ஹைப்பர் தைராய்டிசம் ஏற்படுகிறது. இந்த வகை சற்று சிக்கலானது. பல சமயங்களில் இது உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பு (Immune System) உடலுக்கு எதிராக வேலை செய்வதை உள்ளடக்கியது ஆகும். இந்த பிரச்சனைக்கு பல்வேறு பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் போன்றவை தேவைப்படலாம். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் ஹார்மோன்கள் தொடர்பாக நிபுணத்துவம் பெற்ற உட்சுரப்பியல் நிபுணரை அணுக வேண்டும்.
தைராய்டு பிரச்சனை ஒரு நோயல்ல, அது ஒரு குறைபாடு என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். தைராய்டால் ஏற்படும் பாதிப்பை விட நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் பல ஆண்டுகளாக உடலின் பல உறுப்புகளை பாதிக்கின்றன.

பட மூலாதாரம், Getty Images
தைராய்டு உள்ளவர்கள் கர்ப்பத்தை எப்படி திட்டமிடுவது?
கர்ப்ப காலத்தில் தைராய்டு பாதிப்பு ஏற்படுவது இயல்பானது. கர்ப்ப காலத்தில் ஏற்படும் சிக்கலான ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக, கர்ப்ப காலத்தில் தைராக்ஸின் தேவை அதிகமாக இருப்பதை நினைவில் கொள்வது அவசியம்.
இளம் பெண்கள் கர்ப்பத்தைத் திட்டமிட விரும்பினால், அவர்கள் சரியான தைராய்டு ஹார்மோன் அளவைக் கொண்டிருப்பது மிகவும் முக்கியம். இல்லையெனில், கருத்தரிப்பதில் சிக்கல்கள் இருக்கலாம்.
இது தொடர்பாக மகப்பேறு மருத்துவர் ஜெயஸ்ரீ சர்மா பிபிசி தமிழிடம் பேசுகையில், `சிலர் மகப்பேறு காலத்தில் தைராய்டுக்கு மாத்திரைகளை எடுத்துக்கொள்வதை நிறுத்துகின்றனர். அவ்வாறு செய்யக்கூடாது. தொடர்ந்து தைராய்டு மாத்திரையை எடுத்துக்கொள்ள வேண்டும். கர்ப்பம் உறுதியான பின்னர் 6வது அல்லது 7வது வாரத்தில் தைராய்டு டெஸ்ட் உட்பட அனைத்து பரிசோதனைகளையும் செய்வோம். தேவைப்பட்டால், மாத்திரை எடுத்துக்கொள்ளும் அளவை அதிகரிக்க சொல்வோம்` என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், ` கருவில் உள்ள குழந்தையில் இருந்து பெரியவர்கள் வரை தைராய்டு ஹார்மோன் மிகவும் அவசியம். கருவில் இருக்கும்போது குழந்தைக்கு தைராய்டு ஹார்மோன் சுரப்பதற்கு காலம் ஆகும். அதுவரை தாயிடம் இருந்துதான் குழந்தைக்கு தைராய்டு ஹார்மோன் செல்லும். அதனால் 6வது, 7வது வாரத்தில் தைராய்டு டெஸ்ட் எடுக்கிறோம். அப்போது, தாய்க்கு தைராய்டு ஹார்மோன் கொஞ்சம் குறைவாக இருந்தால் கூட அதற்கான மாத்திரையை உட்கொள்ள அவருக்கு பரிந்துரைப்போம்` என்று தெரிவித்தார்.
மேலும், பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் தைராய்டு பரிசோதனை செய்யப்படுகிறது. இது மிகவும் முக்கியமானது. பிறவி தைராய்டு பிரச்சனை சரியான நேரத்தில் கண்டறியப்படாவிட்டால், அது குழந்தையின் உடல் மற்றும் அறிவுசார் வளர்ச்சியில் மிகவும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்.

பட மூலாதாரம், Getty Images
தைராய்டு பிரச்சனை இருந்தால் என்ன செய்ய வேண்டும்?
பொதுவாக, தைராய்டு பிரச்சனைக்கு மாத்திரைகளை மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். இந்த மாத்திரைகளைத் தொடங்கிய பிறகு, ஒவ்வொரு ஆறு வாரங்களுக்கும் டோஸ் சரிசெய்யப்படும் வரையும் மேலும் ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் ஒரு முறை டோஸ் பொருந்திப்போகும் வரையும் TSH ஐப் பரிசோதிக்க வேண்டும். பல சமயங்களில் நோயாளிகள் இவ்வாறு பரிசோதிக்காமலேயே அதே டோஸை வருடக்கணக்கில் எடுத்துக்கொள்வார்கள். இது தவறு.
மேலும், தைராய்டு மாத்திரையை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும் என்று மருத்துவர் ஜெயஸ்ரீ சர்மா கூறுகிறார். `காலையில் வெறும் வயிற்றில் தைராய்டு மாத்திரையை சாப்பிட்ட பின்னர் குறைந்தது அரை மணி நேரத்திற்கு வேறு எதையும் சாப்பிட வேண்டாம். காபி, டீ குடிப்பதாக இருந்தாலும் அரை மணி நேரத்துக்கு பின்னரே எடுத்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் மாத்திரை சரியாக செயலாற்றும். நீங்களாகவே கூடக் குறைய மாத்திரைகளை எடுத்துக்கொள்வதையும் தவிர்த்துக்கொள்ள வேண்டும்` என்று அவர் கூறுகிறார்.
இதேபோல், பிற சிகிச்சைகளுக்காக தைராய்டு மாத்திரைகளை எடுத்துக்கொள்வதை நிறுத்துவதும் ஆபத்தானது என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். தைராய்டு மாத்திரைகளின் பாட்டிலை குளிர்ந்த மற்றும் உலர்ந்த இடத்தில் வைக்க வேண்டும். ஜன்னலில், வெயிலில், ஈரப்பதம் இருக்கும் இடத்தில் வைப்பதை தவிர்க்க வேண்டும்.
தைராய்டு அதிகப்படியான முடி உதிர்வை ஏற்படுத்தும். எடை அதிகரிப்பு, வறண்ட சருமம் போன்றவையும் காணப்படும். பல நேரங்களில் அதிக எடை கொண்ட நோயாளிகள் தாங்களும் மற்றவர்களும் தைராய்டு காரணமாக அதிக எடையுடன் இருப்பதாக நம்புகிறார்கள். ஆனால், சரியான நேரத்தில் மாத்திரைகள் சாப்பிட்டு, உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி ஆகியவற்றைத் தொடர்ந்தால், எடையை கட்டுக்குள் வைத்திருக்கலாம் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
தைராய்டு சரியான நேரத்தில் கண்டறியப்பட்டால், முடி மற்றும் தோல் பிரச்சினைகள் தீவிரமடைவதற்கு முன்பே சிகிச்சையைத் தொடங்கலாம். எனவே, மருத்துவர் தைராய்டு பரிசோதனையை பரிந்துரைத்தால், உடனடியாக அதைச் செய்வது நல்லது!

பட மூலாதாரம், Getty Images
தைராய்டு பிரச்சனை உள்ள நோயாளிகளிடம் கால்சியம் குறைபாடு அதிகமாக காணப்படும். மேலும், தைராய்டு கட்டுக்குள் இல்லாவிட்டால், கொழுப்பு அளவும் அதிகரிக்கும். எனவே, இந்த விஷயங்களிலும் கவனம் செலுத்த வேண்டும்.
அயோடின் குறைபாடு காரணமாகவும் தைராய்டு பிரச்சனை ஏற்படலாம். எனவே, உப்பில் அயோடின் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். இது தைராய்டு ஏற்படும் ஆபத்தை குறைக்கிறது. அயோடின் உப்புக்கு பதிலாக வெவ்வேறு உப்பை சாப்பிடும் சிலர் இந்த அபாயத்தை அறிந்துகொள்ள வேண்டியது அவசியம்.
தைராய்டு பிரச்சனையை எந்த விதமான உடற்பயிற்சியாலும் சரி செய்ய முடியாது என்பது மருத்துவ உண்மை. உடற்பயிற்சியால் ஏற்படும் எடை குறைப்பின் மூலம் தைராய்டு அளவைக் குறைக்கலாம். உடற்பயிற்சி அவசியம்தான். அதற்காக தைராய்டை குறைக்கிறேன் என்ற பெயரில் கழுத்துக்கு தேவையில்லாத பயிற்சிகளை வழங்குவது நிச்சயம் தைராய்டை குறைக்காது. அதற்கு பதிலாக, வலியை ஏற்படுத்திவிடும். எனவே, இந்த விஷயத்தில் கவனம் அவசியம்.
தைராய்டுக்கு மாத்திரையை தொடர்ந்து எடுத்துகொள்ள வேண்டும் என்பதால், சிலர் மாத்திரை எடுத்துக்கொள்வதை தவிர்க்கின்றனர். இது தவறானது என்று கூறும் ஜெயஸ்ரீ சர்மா, "தைராய்டு மாத்திரை மிகவும் சிறியதாக தான் இருக்கும். அதனால் பக்க விளைவுகள் எதுவும் ஏற்படப்போவதில்லை. ஒரு சிலருக்கு வாழ்நாள் முழுவதும் மாத்திரை சாப்பிடும் நிலை ஏற்படும். சிலருக்கு படிப்படியாக சரியாகக்கூடும். தினமும் காபி, டீ குடிக்கிறோம். அதிகளவு காஃபின் உடலுக்குள் செல்கிறது. அதனுடன் ஒப்பிடும்போது தைராய்டு மாத்திரையை சாப்பிடுவது ஒன்றும் தவறில்லை" என்றார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












