வாய்வழி பாலுறவு கொள்வதால் தொண்டை புற்றுநோய் ஏற்படும் அபாயம் - மருத்துவர்கள் எச்சரிப்பது ஏன்?

பாலியல் உடல்நலம்

பட மூலாதாரம், Getty Images

மருத்துவ அறிவியலின் தொழில்நுட்பம் உலக அளவில் என்னதான் வளர்ந்து வந்தாலும், புற்றுநோயை மட்டும் நவீன மருத்துவத்தால் இன்றும் முழுமையாக வெல்ல முடியவில்லை.

மார்பக புற்றநோய், கல்லீரல் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு புற்றுநோய்களுக்கு அன்றாடம் மனித உயிர்கள் இரையாகிக் கொண்டுதான் இருக்கின்றன. இவையெல்லாம் போதாதென்று, மனித உயிரைக் காவு வாங்கும் பட்டியலில் தொண்டை புற்றுநோயும் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.

குறிப்பாக கடந்த 20 ஆண்டுகளில் அமெரிக்கா, பிரிட்டன், ஸ்பெயின் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளில் தொண்டை புற்றுநோய்க்கு ஆளாவோரின் எண்ணிக்கை அதிரடியாக அதிகரித்து வருகிறது. புற்றுநோயின் இந்த அதிரடி உயர்வு காரணமாகவே சிலர் இதைத் தொற்றுநோய் என்றே கருதுகின்றனர்.

தொண்டைப் புற்றுநோயில் பல வகைகள் இருந்தாலும், oropharyngeal எனப்படும் குறிப்பிட்ட வகை புற்றுநோய்க்குத்தான் மனிதர்கள் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தொண்டையின் பின்புறம் மற்றும் டான்சிலை ( tonsils) சுற்றியுள்ள பகுதிகளைத் தான் இந்தப் புற்றுநோய் அதிகம் பாதிப்பதாக மருத்துவ பரிசோதனைகள் தெரிவிக்கின்றன.

பெரும்பாலான கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கு காரணமான பாபில்லோமா வைரஸ்தான் (Human papillomavirus,HPV) oropharyngeal தொண்டைப் புற்றுநோய்க்கும் முக்கிய காரணம் என்பதுதான் இதில் அதிர்ச்சியான தகவல்.

அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் தற்போது கர்ப்பப்பைவாய் புற்றுநோயைவிட oropharyngeal தொண்டை புற்றுநோய்க்கு ஆளாவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்து மருத்துவர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

இதேபோன்று, ஸ்பெயினில் மக்களை அதிகம் பாதிக்கும் நோய்களின் டாப் டென் பட்டியலில் இடம்பெற்றுள்ள தொண்டை புற்றுநோய்க்கு ஆண்டுக்கு சுமார் 8,000 பேர் புதிதாக பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

மத்திய மற்றும் தென் அமெரிக்க நாடுகளில் தொண்டைப் புற்றுநோய் மனித உடல்நலம் சார்ந்த தீவிர பிரச்னையாக உருவெடுத்துள்ளது. இந்த நிலை நீடித்தால் தொண்டைப் புற்றுநோயால் இறப்போரின் எண்ணிக்கை 2030இல் 17.2% ஆக அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

இந்த வகை தொண்டைப் புற்றுநோயை உண்டாக்கும் ஹெச்.பி.வி வைரஸ் ஆண்-பெண்ணுக்கு இடையிலான பாலியல் உறவின் மூலம் பரவுகிறது என்கின்றனர் மருத்துவரகள்.

குறிப்பாக, வாய்வழியாக உடலுறவு (Oral Sex) வைத்துக் கொள்ளும் பழக்கத்தை வழக்கமாகக் கொண்டுள்ளவர்களுக்குத் தொண்டை புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகம் என்று அவர்கள் எச்சரிக்கின்றனர்.

தங்களது வாழ்நாளில் ஆறு அல்லது அதற்கு மேற்பட்டவர்களுடன் வாய்வழி உடலுறவு கொள்பவர்களுக்கு, இந்தப் பழக்கம் இல்லாதவர்களுடன் ஒப்பிடும்போது, தொண்டைப் புற்றுநோய் உண்டாகும் வாய்ப்பு 8.5 மடங்கு அதிகம் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

பாலியல் உடல்நலம்

பட மூலாதாரம், Getty Images

வாய்வழி உடலுறவு கொள்ளும் 80% பேர்!

உடலுறவு விஷயத்தில் மனிதனின் நடவடிக்கைகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் ஆய்வுகள் மூலம், வாய்வழியாக உடலுறவு கொள்ளும் போக்கு மனிதர்கள் மத்தியில் அதிகரித்து வருவது தெரிய வந்துள்ளது.

பிரிட்டனில் புற்றுநோய் அல்லாத வேறு மருத்துவ காரணங்களுக்காக டான்சில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட சுமார் ஆயிரம் பேரிடம் அண்மையில் இதுதொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 80% பேர் தங்களது வாழ்நாளில் ஏதாவதொரு தருணத்தில் வாய்வழி உடலுறவு கொண்டவர்களாக இருப்பது இந்த ஆய்வில் தெரிய வந்ததுள்ளது.

இருப்பினும் அதிர்ஷ்டவசமாக இவர்களில் குறைவான பேர்தான் oropharyngeal தொண்டை புற்றுநோய்க்கு ஆளாகியுள்ளனர்.

இவர்கள் ஏன் தொண்டைப் புற்றுநோய்க்கு இலக்கு ஆகின்றனர் என்பதற்கான காரணங்கள் தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், இந்தப் புற்றுநோய்க்கு ஆளாவோரில் பெரும்பாலோருக்கு ஹெச்பிவி வகை வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதும், இந்தத் தொற்றில் இருந்து விடுபடுவதற்கான சிகிச்சை முறைகள் இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆனாலும், ஹெச்பிவி வைரஸ் தொற்றுக்கு ஆளாகும் நபர்களில் சிலரால் தொற்றில் இருந்து மீள முடிவதில்லை. தொற்றின் விளைவாக அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியில் ஏற்படும் எதிர்மறை பாதிப்பு இதற்குக் காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

தொற்றுக்கு ஆளாகும் இனனும் சில பேரின் உடம்புக்குள் ஹெச்பிவி வைரஸ் பல்கிப் பெருகி பெருமளவுக்கு திறன் பெற்று விடுவதாகவும், இவையே குறிப்பிட்ட கால இடைவெளியில் அந்த நோயாளியின் மரபணுக்களில் (DNA) தாக்கத்தை ஏற்படுத்தி, புற்றுநோய் உண்டாக வழிவகுத்து விடுவதாகவும் கூறுகின்றனர் மருத்துவ நிபுணர்கள்.

பாலியல் உடல்நலம்

பட மூலாதாரம், WIKIMEDIA COMMONS

புற்றுநோய்க்கு தடுப்பூசி

கர்ப்பப்பை வாய் புற்றுநோயை வராமல் தடுக்கும் நோக்கில் பல்வேறு நாடுகளிலும் இளம்பெண்களுக்கு ஹெச்பிவி தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

oropharyngeal தொண்டைப் புற்றுநோயைத் தடுக்கும் திறனும் இந்தத் தடுப்பூசிக்கு இருக்கிறது என்பதற்கான மருத்துவ சான்றுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.

இதுபோன்று 85% மேற்பட்ட பெண்களுக்கு ஹெச்பிவி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள நாடுகளில், ஆண்களுக்கு மந்தை நோய் எதிர்ப்பு சக்தி (herd immunity) உருவாகியிருப்பதற்கான மருத்துவ ஆதாரங்களும் உள்ளன.

இதன் பயனாக வரும் காலங்களில் oropharyngeal புற்றுநோய்க்கு ஆளாவோரின் எண்ணிக்கை குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அதேநேரம் உயர்கல்வி, வேலை, தொழில் உள்ளிட்ட காரணங்களால் மனிதர்கள் சர்வதேச பயணம் மேற்கொள்வது இன்றைய நவீன உலகில் சாதாரண நிகழ்வாகிவிட்டது.

இதனால், 85 சதவீதத்துக்கும் மேலான பெண்களுக்கு HPV வைரஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ள நாடுகளில் மட்டுமே, தொண்டைப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் குறைவு என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

மாறாக, குறைந்த எண்ணிக்கையிலான பெண்களுக்கு மட்டும் கர்ப்பப்பை வாய் புற்றுநோயைக்கான தடுப்பூசி செலுத்துப்படும் நாடுகளுக்கு இது பொருந்தாது எனவும் மருத்துவ வல்லுநர்கள் கூறுகின்றனர்.

இதுபோன்ற நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ளும் ஒரு நபர், அந்த நாடுகளைச் சேர்ந்த இளம்பெண்களுடன் உடலுறவு வைத்துக் கொண்டால், அப்போது பாலியல்ரீதியாக அவருக்கு ஹெச்பிவி வைரஸ் பரவும் என்றும், அதன் விளைவாக அந்த நபருக்கு தொண்டைப் புற்றுநோய் வரலாம் எனவும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

சான்றாக, 2020ஆம் ஆண்டு புள்ளிவிவரப்படி, அமெரிக்காவில் 13 -15 வயக்கு உட்பட்ட பதின்பருவ சிறுமிகளில் 54.3% பேர் மட்டுமே இரண்டு அல்லது மூன்று டோஸ்கள் ஹெச்பிவி வைரஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.

பாலியல் உடநலம்

பட மூலாதாரம், Getty Images

இளைஞர்களுக்கும் தடுப்பூசி

நாளுக்கு நாள் அதிகமாகிவரும் சர்வதேச பயணங்கள், இளம் பெண்களுக்கு ஹெச்பிவி தடுப்பூசி செலுத்தப்படுவதில் உலக நாடுகளுக்கு இடையே ஒரே மாதிரியான செயல் திட்டம் இல்லாதது போன்றவை ஆண்களுக்கு தொண்டைப் புற்றுநோயை உண்டாக்கும் முக்கியக் காரணிகளாக உள்ளன.

இதைக் கருத்தில் கொண்டு அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் தங்களது ஹெச்பிவி தடுப்பூசி செல்லும் திட்டத்தை இளைஞர்களுக்கும் விரிவுப்படுத்த உள்ளன. இந்நாடுகளின் தேசிய தடுப்பூசி கொள்கையில் இதற்கான பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன.

ஆனால், ஆண்களுக்கு ஹெச்பிவி தடுப்பூசி செலுத்தும் பரிந்துரைக்கு உலக அளவில் எதிர்ப்பும் இருக்கதான் செய்கிறது. இதுபோன்ற தடுப்பு முறைகள் பாலியல் தொழிலை மறைமுகமாக ஊக்குவிக்கும் என்பதே இந்த எதிர்ப்புக்கு பிரதான காரணம். மேலும் ஹெச்பிவி தடுப்பூசி எந்த அளவுக்குப் பாதுகாப்பானது என்பது குறித்தும் எதிர்ப்பாளர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இப்படி பாலியல்ரீதியான உறவுகளால் புற்றுநோய் ஏற்படாமல் இருக்க, தடுப்பூசி செலுத்த ஒருபுறம் ஆதரவும் எதிர்ப்பும் இருந்து வருகிறது.

மறுபுறம், பிறப்புறுப்பு வழியாக உடலுறவு கொள்வதால் பாலியல் நோய்களுக்கு ஆளாவதைத் தவிர்க்கும் நோக்கில் இளைஞர்கள் வாய்வழி உறவில் ஈடுபடுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இந்த பாலியல் உறவிலும் தொண்டைப் புற்றுநோய் உண்டாகும் அபாயம் இருப்பதை அவர்கள் அறியாமல் இருப்பதுதான் முரண்பாடு என்று கூறுகின்றன அந்த ஆய்வுகள்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: