வானிலையில் குழப்பம்: கோடை வருவதற்கு பதிலாக குளிர்காலம் திரும்புவது ஏன்?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், சல்மான் ரவி
- பதவி, பிபிசி செய்தியாளர்
மே 10ஆம் தேதி வரை இந்தியாவின் எந்த மாநிலத்திலும் கடும் வெப்பம் இருக்காது என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பொதுவாக மே மாதத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடுமையான வெப்பம் நிலவும். வெப்ப அலை காரணமாக பல மாநிலங்களில் வெப்பநிலை 50 டிகிரி செல்சியஸுக்கு மேல் உயரும்.
இந்த செயல்முறை ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதத்தில் இருந்து தொடங்குகிறது. ஏப்ரல் முதல் மே மற்றும் ஜூன் வரை, சூரியன் முழு வீரியத்துடன் இருக்கும். ஆனால் இம்முறை வெப்ப அலை ஏப்ரல் 11 முதல் 20 வரை மட்டுமே இருந்துள்ளது. நாட்டின் வளிமண்டலவியல் புள்ளிவிவரங்கள் இதனைத் தெரிவிக்கின்றன. இந்த செயல்முறை வட இந்தியாவுடன் மட்டும் நின்றுவிடவில்லை. தெற்கு, மேற்கு, மத்திய மற்றும் கிழக்கு இந்தியாவிலும் ஏறக்குறைய இதே நிலைதான் நிலவுகிறது.
தென்னிந்தியாவிலிருந்து கிழக்கு, மத்திய மற்றும் வட இந்தியா வரை ஏறக்குறைய எல்லா மாநிலங்களிலும் ஏப்ரல் 29 முதல் மே 2 வரை குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 10 டிகிரி செல்சியஸ் குறைவாக இருந்துள்ளது. இதன் காரணமாக வடமேற்கு இந்தியாவில் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. கூடவே சமவெளிப்பகுதிகள், மத்திய மற்றும் கிழக்கு இந்தியாவில் இடியுடன் கூடிய மழை மற்றும் ஆலங்கட்டி மழை போன்ற சூழல் ஏற்பட்டுள்ளது.
இப்படி மாறிய வானிலை காரணமாக வெப்ப அளவுகளில் விசித்திரமான இறக்கம் காணப்படுகிறது. மக்கள் வானிலை குறித்த தங்கள் அனுபவங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இந்த முறை கோடை காலம் வராதா என்று சிலர் கேட்கிறார்கள்.
மாறும் வானிலை
புதிய சாதனைகளை படைக்கும் வெப்பநிலை
"கோடைகாலம் வருவதற்கு பதிலாக குளிர்காலம் திரும்பி வருகிறது" என்று வானிலை ஆய்வாளர் நவ்தீப் தஹியா ட்வீட் செய்துள்ளார்.
வட இந்தியாவின் மலைப்பாங்கான பகுதிகளில் பதிவான அதிகபட்ச வெப்பநிலையின் தரவுகளைப் பகிர்ந்து கொண்ட அவர், தரம்சாலாவில் அதிகபட்ச வெப்பநிலை 8.9 டிகிரி செல்ஷியஸாகவும், நாட்டின் தலைநகரான டெல்லியில் 26.1 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியுள்ளது என்று தெரிவித்துள்ளார். இது இயல்பைவிட 13 டிகிரி குறைவாகும்.
இதேபோல், பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்தரபிரதேசத்திலும் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 10 முதல் 17 டிகிரி செல்ஷியஸ் குறைவாக பதிவாகியுள்ளது, இது மே மாதத்தின் தனித்துவமான சாதனை அளவாகும்.
தென்னிந்தியாவில் பெய்து வரும் தொடர் மழையால் வெப்பநிலை வெகுவாக குறைந்துள்ளது. தமிழகம் மற்றும் கேரளாவில் கனமழை பெய்து வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சுமார் 90 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய இந்தியா, ஆந்திரா, தெலங்கானா, ஒடிஷா ஆகிய மாநிலங்களிலும் மழை பெய்து வருகிறது.
பாகிஸ்தானில் இருந்துவரும் காற்றழுத்தம்

பட மூலாதாரம், TWITTER/CLOUDMETWEATHER
இந்த நேரத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் புயலுடன் மழை பெய்து வருகிறது என்று பிபிசியிடம் பேசிய இந்திய வானிலை ஆய்வுத் துறை விஞ்ஞானி குல்தீப் ஸ்ரீவஸ்தவா தெரிவித்தார்.
இந்த நிலை தொடரும் என்கிறார் அவர். இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மேகாலயா மற்றும் அண்டை பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது.
பாகிஸ்தானின் திசையில் இருந்துவரும் காற்றழுத்தத்தின் பெரும் விளைவு, வட இந்தியா, வடமேற்கு ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் நோக்கி நகர்ந்து வருவதாகவும், இதன் காரணமாக புயலுடன் கூடவே மழை மற்றும் ஆலங்கட்டி மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை தகவல் அளிக்கும் 'டுவிட்டர் கணக்கு', கிளவுட்மெட்வெதர் செயற்கைக்கோள் படங்களை மேற்கோள்காட்டி தெரிவித்துள்ளது.
'கடந்த பல ஆண்டுகளில் இதுபோன்ற நிலை ஏற்பட்டதில்லை'
இம்முறை மே மாதத்தில் பதிவான வெப்பநிலை முந்தைய அனைத்து சாதனைகளையும் முறியடித்துள்ளது என்று 'லைவ் வெதர் ஆஃப் இந்தியா' அமைப்பின் தலைமைச் செயல் அதிகாரி ஷுபம் தெரிவித்தார்.
உத்தராகண்ட் மற்றும் இமாச்சல பிரதேசத்தின் வெப்பநிலை தகவல்களைப் பகிர்ந்து கொண்ட அவர், கடந்த பல ஆண்டுகளில் இதுபோல் ஏற்பட்டதில்லை என்று கூறினார். உத்தரபிரதேசத்தின் நஜிபாபாத்தில் திங்கள்கிழமை அதிகபட்ச வெப்பநிலை 20.5 டிகிரி செல்ஷியஸாக பதிவாகியுள்ளதாக அவர் கூறினார்.
வானிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக வானிலை ஆய்வாளர்கள் அதிக ஆராய்ச்சி செய்யத் தொடங்கியுள்ளனர். ஏனெனில் இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் வெப்பத்தின் முந்தைய அளவுகள் முறியடிக்கப்பட்டன.
1901 ஆம் ஆண்டு முதல் இந்த ஆண்டு வரையிலான காலகட்டத்தில், இந்த பிப்ரவரி மாதத்தில் இருந்த வெப்பம்போல முன்பு இருந்ததில்லை.
இதற்கிடையில், நாட்டின் எல்லா மாநிலங்களிலும் இந்த மாதம் இயல்பை விட அதிக மழை பெய்து வருவதைக் காட்டும் செயற்கைக்கோள் படங்களையும் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
மே 9 வரை வெப்ப அலை வராது

பட மூலாதாரம், Getty Images
இம்மாதம் 9ஆம் தேதி வரை நாட்டின் எந்தப் பகுதியிலும் வெப்ப அலைச் சலனம் இருக்காது. ஏனென்றால் இம்முறை 'மேற்கு இடையூறு' தொடர்ச்சியாக உருவாக்கப்படுகிறது, அதன் ஆதிக்கத்தின் கீழ் இந்தியாவின் பல மாநிலங்கள் வருகின்றன என்று மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய வானிலை ஆய்வுத் துறையின் மூத்த விஞ்ஞானி ராஜேந்திர குமார் ஜனாமணி பிபிசியிடம் தெரிவித்தார்.
”கடந்த 2020-ம் ஆண்டு ஏப்ரல், மே மாதங்களிலும் சாதாரணமாக இருப்பதைக்காட்டிலும் வெயிலின் தாக்கம் குறைவாக இருந்தது. இதுவரை 5 முறை 'மேற்கு இடையூறு' ஏற்பட்டு வெப்பம் குறைந்துள்ளது. மழை பெய்கிறது," என்று அவர் கூறினார்.
வரும் நாட்களில், இம்மாத நடுப்பகுதிக்குள் மேலும் ஒன்பது முறை இதுபோன்ற 'மேற்கத்திய இடையூறுகள்' ஏற்படும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
பூமி வெப்பமடைகிறது
இந்தியாவில் வானிலையில் பெரும் மாற்றங்கள் உணரப்படுகின்றன. பூமி முழுவதிலும் இரண்டு டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பநிலை அதிகரிப்பு உணரப்படுகிறது. சுற்றுச்சூழலில் ஏற்படும் மாற்றங்கள் இதற்குக் காரணம் என்று நம்பப்படுகிறது.
வட ஆசியா, ஐரோப்பா மற்றும் கனடாவின் வெப்பநிலையில் வரலாறு காணாத அதிகரிப்பு பதிவாகும் நேரத்தில் இந்தியாவில் அதிகபட்ச வெப்பநிலையில் கடுமையான வீழ்ச்சி பதிவு செய்யப்படுகிறது.
வானிலை மாற்றத்தின் காரணமாக, இந்தியாவில் சில பகுதிகளில் திடீர் புயல்கள், வெள்ளம் அல்லது வறட்சி போன்ற புவியியல் நிகழ்வுகள் காணப்படுகின்றன. அவை இந்த நாட்களில் அதிகரித்து வருகின்றன என்பதை விஞ்ஞானிகள் ஒப்புக்கொண்டுள்ளனர்.
வானிலையில் ஏற்படும் மாற்றம் இமயமலையையும் பாதிக்கிறது. அங்கு பனிப்பாறைகள் வேகமாக உருகுவது விஞ்ஞானிகளின் கவலையை அதிகரித்துள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












