ஹோமி பாபாவின் மரணம் - இந்தியாவின் அணு ஆற்றல் திட்டத்தை நிறுத்துவதற்கான சதியா அல்லது விபத்தா?

பட மூலாதாரம், TIFR
- எழுதியவர், ரெஹான் ஃபசல்
- பதவி, பிபிசி செய்தியாளர்
1966 ஜனவரி 23 ஆம் தேதி ஹோமி பாபா, டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபண்டமென்டல் ரிசர்ச் (TIFR) அலுவலகத்தின் நான்காவது மாடியில் நாள் முழுவதும் வேலை செய்துகொண்டிருந்தார்.
"அன்று பாபா என்னிடம் சுமார் இரண்டு மணி நேரம் பேசினார். நான்கு நாட்களுக்கு முன்பு பிரதமராக பதவியேற்க இருந்த இந்திரா காந்தியிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்ததாக அவர் என்னிடம் கூறினார். அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் ஒவ்வொரு விஷயத்திலும் நீங்கள் எனக்கு உதவ வேண்டும் என்று அவர் பாபாவிடம் கூறினார். அவர் இந்தப்பொறுப்பை ஏற்றுக்கொண்டிருந்தால் அவர் மும்பையிலிருந்து டெல்லிக்கு மாறியிருக்க வேண்டும். இந்திரா காந்தி அளித்த வாய்ப்பை தான் ஏற்றுக்கொண்டதாக பாபா என்னிடம் கூறினார். நான் வியன்னாவிலிருந்து திரும்பி வந்த பிறகு உங்களை TIFR இன் இயக்குநராக்க கவுன்சிலுக்கு முன்மொழிகிறேன் என்று பாபா என்னிடம் கூறினார்," என்று பாபாவின் சக ஊழியரான எம்.ஜி.கே. மேனன் நினைவு கூர்ந்தார்.
பாபாவின் சகோதரர் ஜெம்ஷெட், தாய் மெஹர்பாய், ஜேஆர்டி டாடா, நண்பர் பிப்சி வாடியா மற்றும் அவரது பல் மருத்துவர் ஃபாலி மேத்தா ஆகியோரும் இந்திரா காந்தி அளித்த இந்த வாய்ப்பைப் பற்றி அறிந்திருந்தனர்.
"இந்திரா காந்தி தனக்கு என்ன வாய்ப்பை வழங்கினார் என்று பாபா வெளிப்படையாக மேனனிடம் சொல்லவில்லை. ஆனால் இந்திரா காந்தி அவருக்கு தனது அமைச்சரவையில் அமைச்சர் பதவியை வழங்க முன்வந்தார் என்று மேனனுக்கு ஒரு சந்தேகம் இருந்தது,” என்று பக்தியார் கே. தாதாபோய், சமீபத்தில் வெளியான ஹோமி பாபாவின் சுயசரிதையான ’ஹோமி பாபா எ லைஃப்’ என்ற புத்தகத்தில் எழுதியுள்ளார்.
மலையில் மோதிய பாபாவின் விமானம்

பட மூலாதாரம், Getty Images
1966 ஜனவரி 24 ஆம் தேதி வியன்னா செல்ல ஏர் இந்தியா விமானம் 101 இல் பாபா ஏறினார். அந்த நாட்களில் பம்பாயிலிருந்து வியன்னாவிற்கு நேரடி விமானம் இருக்கவில்லை. வியன்னா செல்ல ஜெனிவாவில் விமானத்தை மாற்ற வேண்டியிருந்தது. பாபா ஒரு நாள் முன்னதாக ஜெனிவாவிற்கு விமானத்தை முன்பதிவு செய்திருந்தார். ஆனால் சில காரணங்களால் அவர் தனது பயணத்தை ஒரு நாள் ஒத்திவைத்தார்.
ஜனவரி 24 ஆம் தேதி ஏர் இந்தியாவின் போயிங் 707 விமானம் 'காஞ்சன்ஜங்கா' , காலை 7:02 மணிக்கு 4807 மீட்டர் உயரத்தில் மோப்ளான் (Mountblanc) மலைகளில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விமானம் டெல்லி, பெய்ரூட், ஜெனிவா வழியாக லண்டனுக்கு சென்று கொண்டிருந்தது. இந்த விபத்தில் 106 பயணிகளும் 11 விமான ஊழியர்களும் பலியானார்கள். 1950 நவம்பரில் மற்றொரு ஏர் இந்தியா விமானமான 'மலபார் பிரின்சஸ்' விபத்துக்குள்ளான அதே இடத்தில்தான் காஞ்சன்ஜங்காவும் விபத்துக்குள்ளானது.
'மலபார் பிரின்சஸ்' மற்றும் 'கஞ்சன்ஜங்கா' ஆகிய இரண்டு விமானங்களின் சிதைவுகள் மற்றும் அதில் இருந்தவர்களின் உடல்களை ஒருபோதும் கண்டுபிடிக்க முடியவில்லை. அந்த விமானத்தின் கருப்பு பெட்டியும் கண்டுபிடிக்கப்படவில்லை. மோசமான வானிலை காரணமாக விமானத்தின் சிதைவுகளை தேடும் பணி நிறுத்தப்பட்டது.
பிரெஞ்சு விசாரணைக் குழு 1966 செப்டம்பரில் மீண்டும் விசாரணையைத் தொடங்கியது. "மலையில் கடுமையான பனிப்பொழிவு மற்றும் விமானிக்கும் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளருக்கும் இடையே ஏற்பட்ட தவறான புரிதல் விபத்துக்கு காரணமாக அமைந்தது. விமானி மோப்ளான் மலையில் இருந்து தனது விமானத்தின் தூரத்தை தவறாகக் கணக்கிட்டார். விமானத்தின் ரிசீவர்களில் ஒன்றும் வேலை செய்யவில்லை." என்று 1967 மார்ச் மாதம் சமர்ப்பித்த அறிக்கையில் அது தெரிவித்தது.
பிரெஞ்சு விசாரணை அறிக்கையை இந்திய அரசு ஏற்றுக்கொண்டது.
இந்திய அணுசக்தி திட்டத்தின் தந்தை

பட மூலாதாரம், TIFR
56 வயதில் ஹோமி பாபா இந்த உலகத்திலிருந்து விடைபெற்றார். காஸ்மிக் கதிர்கள் பற்றிய அவரது பணிக்காக அவர் சிறப்பாக நினைவுகூரப்படுகிறார், அது அவருக்கு நோபல் பரிசுக்கான பரிந்துரையை பெற்றுத்தந்தது. ஆனால் இந்தியாவின் அணுசக்தி திட்டம் மற்றும் டாடா இன்ஸ்டிட்யூட்டை நிறுவுவதிலும் பாபாவின் உண்மையான பங்களிப்பு இருந்தது.
பாபாவின் திடீர் மரணம் இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்தக் காலத்தின் மிகப்பெரிய தொழிலதிபரான ஜே.ஆர்.டி.டாடாவுக்கு இது இரட்டை அடியாக அமைந்தது. அதே ஏர் இந்தியா விமானத்தில்தான், ஏர் இந்தியாவின் ஐரோப்பாவுக்கான பிராந்திய இயக்குனரான அவரது மைத்துனர் கணேஷ் பெர்டோலியும் பயணம் செய்தார்.
விமானத்தில் ஏறுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு பாபா, பிரதமர் லால் பகதூர் சாஸ்திரிக்கு மரியாதை செலுத்தும் இரங்கல் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். லால் பகதூர் சாஸ்திரியும் பாபாவை தனது அமைச்சரவையில் சேர்க்க முன்மொழிந்ததாக கூறப்படுகிறது. ஆனால் பாபா அரசியல் பதவிக்கு பதிலாக அறிவியல் பணிகளைத் தொடர முடிவு செய்தார்.
பாபாவின் மரணத்தில் சிஐஏ சம்மந்தப்பட்டிருந்தா?

பட மூலாதாரம், TIFR
2017 ஆம் ஆண்டில் சுவிட்சர்லாந்தின் மலையேற்று வீரர் டேனியல் ரோச், ஆல்ப்ஸ் மலையில் விமானத்தின் சிதைவுகளை கண்டுபிடித்தார். இது ஹோமி பாபா பயணித்த அதே விமானத்தின் சிதைவுகள் என்று கூறப்படுகிறது.
விபத்தில் அமெரிக்க புலனாய்வு அமைப்பான சிஐஏவின் கை இருக்கக்கூடும் என்று இது தொடர்பான சதி ஊகங்கள் சுட்டிக்காட்டுகின்றன. 2008 ஆம் ஆண்டில், 'கான்வர்சேஷன்ஸ் வித் தி க்ரோ' என்ற புத்தகம், முன்னாள் சிஐஏ அதிகாரி ராபர்ட் க்ரோலி மற்றும் செய்தியாளர் கிரிகரி டக்ளஸ் ஆகியோருக்கு இடையே நடந்ததாகக் கூறப்படும் உரையாடலை வெளியிட்டது. இந்த விபத்தில் சிஐஏ சம்மந்தப்பட்டிருக்கலாம் என்ற உணர்வு இதன் மூலம் மக்களுக்குக்கிடைத்தது.
CIA இல் க்ரோலி, 'க்ரோ' என்று அழைக்கப்பட்டார், மேலும் தனது முழு வாழ்க்கையையும் CIA இல் திட்டமிடல் இயக்குநரகத்தில் கழித்தார். இது 'டிபார்ட்மெண்ட் ஆஃப் டர்ட்டி ட்ரிக்ஸ்' என்றும் அறியப்பட்டது.
2000 வது ஆண்டு அவர் இறப்பதற்கு முன்பு டக்ளஸுடன் க்ரோலி பலமுறை உரையாடினார். அவர் டக்ளஸுக்கு இரண்டு பெட்டிகள் நிறைய ஆவணங்களை அனுப்பினார். தனது மரணத்திற்குப் பிறகு அவற்றைத் திறக்குமாறு அறிவுறுத்தினார்.
1996 ஜூலை 5 ஆம் தேதி நடந்த ஒரு உரையாடலில் க்ரோலி கூறியதை டக்ளஸ் மேற்கோள் காட்டினார். " அறுபதுகளில் இந்தியா அணுகுண்டு தயாரிப்பில் ஈடுபடத் தொடங்கியபோது எங்களுக்கு பிரச்சனைகள் ஏற்பட ஆரம்பித்தன. தாங்கள் எவ்வளவு புத்திசாலிகள் என்றும் விரைவில் ஒரு வல்லரசாக ஆகப்போவதாகவும் அவர்கள் காட்ட முயன்றனர். மற்றொரு விஷயம் என்னவென்றால் அவர்கள் சோவியத் யூனியனுடன் மிக நெருங்கிச்சென்றுகொண்டிருந்தார்கள்."
அதே புத்தகத்தில், பாபாவைப் பற்றி க்ரோ இவ்வாறு தெரிவித்துள்ளார் என்று கூறப்பட்டுள்ளது. "இந்தியாவின் அணுசக்தித் திட்டத்தின் தந்தை அவர். அணுகுண்டு தயாரிக்கும் முழுத் திறன் கொண்டவர். பாபாவுக்கு இது குறித்து பலமுறை எச்சரித்தும் அவர் அதை கண்டுகொள்ளவில்லை. அவரையும் இந்தியாவையும் மற்ற அணுசக்தி நாடுகளுக்கு இணையாக வருவதை உலகின் எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என்று அவர் தெளிவுபடுத்தினார். அவர் எங்களுக்கு ஒரு அச்சுறுத்தலாக மாறிவிட்டார். அவர் ஒரு விமான விபத்தில் காலமானார். அவர் பயணம் செய்த போயிங் 707 விமானத்தின் சரக்கு ஹோல்டில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததில் அவர் கொல்லப்பட்டார்.”
பாபாவுடன் இறந்த 116 பேர்

பட மூலாதாரம், BASILISK PRESS
வியன்னா மீது விமானத்தை வெடிக்கவைக்க விரும்பியதாகவும், ஆனால் உயரமான மலைக்கு மேலே வெடிப்பது குறைவான சேதத்தை ஏற்படுத்தும் என்று முடிவு செய்யப்பட்டதாகவும் க்ரோலி பெருமையடித்துக்கொண்டார் என்று அந்தப்புத்தகம் தெரிவிக்கிறது. ஒரு பெரிய நகரத்தில் ஒரு பெரிய விமானம் விழுவதைக்காட்டிலும் அது மலைகளில் விழுந்தால் குறைவான சேதத்தை ஏற்படுத்தும் என்பதை நான் புரிந்துகொண்டேன் என்றும் அவர் கூறினார். ஏஜென்சியின் உள்ளே க்ரோலி, சோவியத் உளவுத்துறை நிறுவனமான கேஜிபி தொடர்பான நிபுணராகக் கருதப்பட்டார்.
"உண்மையில் சாஸ்திரி இந்தியாவின் அணுசக்தித் திட்டத்தைத் தொடங்க விரும்பினார். எனவே நாங்கள் அவரையும் அகற்றினோம். பாபா ஒரு மேதை மற்றும் அணுகுண்டு தயாரிக்கும் திறன் கொண்டவர். எனவே நாங்கள் இருவரையும் அகற்றினோம். பாபாவுக்குப் பிறகு இந்தியாவும் அமைதியானது.’ என்று க்ரோலி சொன்னார் என்று புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"பாபாவின் மரணம் இத்தாலிய எண்ணெய் வர்த்தகர் என்ரிகோ மேட்டியின் மரணம் போன்றது. அவர் இத்தாலியின் முதல் அணு உலையை அமைக்கும் வேலையை மேற்கொண்டார். அவரது சொந்த விமானத்தை சிஐஏ நாசவேலையால் சேதப்படுத்தி அவரைக்கொன்றது என்று கூறப்படுகிறது," என்று பாபாவின் வாழ்க்கை வரலாற்றாசிரியர் பக்தியார் கே. தாதாபோய் குறிப்பிட்டுள்ளார்.
”இந்த அதிர்ச்சியூட்டும் கூற்றுகள் ஒருபோதும் சரிபார்க்கப்படவில்லை. ஒருபோதும் இந்த உண்மை வெளிவராமல் போகக்கூடும். கிரிகரி டக்ளஸ் ஒரு நம்பமுடியாத ஆதாரமாகவே கருதப்படக்கூடும். அமெரிக்கர்கள் இந்தியா அணுகுண்டு தயாரிப்பதை விரும்பவில்லை என்பது உண்மையாக இருந்தாலும் ஒருவரைக் கொல்ல 117 பேரைக் கொல்வது புரிந்துகொள்ள முடியாதது."
அணுகுண்டு விவகாரத்தில் பாபாவுக்கும் சாஸ்திரிக்கும் கருத்து வேறுபாடு

பட மூலாதாரம், RUPA
1964 அக்டோபர் 24 ஆம் தேதி ஹோமி பாபா அகில இந்திய வானொலியில் அணு ஆயுதக் குறைப்பு பற்றிப் பேசுகையில், "ஐம்பது அணுகுண்டுகளை தயாரித்துவைக்க 10 கோடி ரூபாய் மட்டுமே செலவாகும். பல நாடுகளின் ராணுவ வரவு செலவுத் திட்டத்தைக் கருத்தில் கொண்டுபார்க்கும்போது இந்தச் செலவு மிகவும் மிதமானது,” என்றார்.
நேருவின் வாரிசான லால் பகதூர் சாஸ்திரி ஒரு தீவிர காந்தியவாதி மற்றும் அணு ஆயுதங்களை எதிர்த்தவர் என்பது அனைவரும் அறிந்ததே. நேருவுடன் இருந்த நெருக்கம் காரணமாக பாபாவின் அணுசக்தி கொள்கையே பின்பற்றப்பட்டு வந்தது சாஸ்திரி வந்தவுடன் நிலைமை மாறியது.
"பிரதமர் அலுவலகத்துக்குள் அப்பாயின்ட்மென்ட் இல்லாமல் இனி நுழைய முடியாது என்ற உண்மையால் பாபா பெரிதும் கலக்கமடைந்தார். பாபா என்ன விளக்க முயல்கிறார் என்பதை புரிந்து கொள்ள சாஸ்திரி சிரமப்பட்டார். இந்திய அரசு முடிவு மேற்கொண்டால் 18 மாதங்களுக்குள் இந்தியா அணுசோதனையை மேற்கொள்ளமுடியும் என்று சீனாவின் அணு ஆயுத சோதனைக்கு முன்பாகவே 1964, அக்டோபர் 8 ஆம் தேதி பாபா லண்டனில் அறிவித்தார்,” என்று பக்தியார் தாதாபோய் எழுதுகிறார்.
அணுசக்தியை ஆக்கவழிகளுக்கு பயன்படுத்துவதற்கு எதிரான எந்த பரிசோதனையையும் மேற்கொள்ளக்கூடாது என அணுசக்தி நிர்வாகத்திற்கு கடுமையான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக, இது குறித்து லால் பகதூர் சாஸ்திரி கூறினார்.
சாஸ்திரியை சம்மதிக்க வைத்த பாபா

பட மூலாதாரம், TIFR
இது நடந்த சில நாட்களுக்குள், அணுசக்தியை அமைதியான முறையில் பயன்படுத்துவதற்கு சாஸ்திரியை பாபா சம்மதிக்க வைத்தார்.
"நாங்கள் வெடிகுண்டை உருவாக்கலாமா வேண்டாமா என்று விவாதிக்கவில்லை. அதை எப்படி தயாரிப்பது என்பது எங்களுக்கு முக்கியமாக இருந்தது. எங்களுக்கு அது சுய மரியாதை தொடர்பான விஷயமாக இருந்தது. 'தடுப்பு' என்ற பேச்சு வெகுகாலத்திற்கு பின்னர் வந்தது. இந்திய விஞ்ஞானிகளாகிய நாங்கள், எங்களாலும் அதைச் செய்ய முடியும் என்பதை மேற்கத்திய சகாக்களுக்குக் காட்ட விரும்பினோம்,"என்று பிரபல அணு விஞ்ஞானி ராஜா ராமண்ணா, இந்திரா செளத்ரிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
இந்த விஷயத்தில் அமெரிக்காவிடம் இருந்து எந்த உதவியும் கிடைக்காது என்று கருதிய பாபா, 1965 ஏப்ரலில் 'அமைதி நோக்கத்திற்கான அணு வெடிப்பு' என்ற சிறிய குழுவை உருவாக்கினார். அதன் தலைவராக ராஜா ராமண்ணாவை நியமித்தார்.
"1965 டிசம்பரில் லால் பகதூர் சாஸ்திரி பாபாவிடம் அமைதி நோக்கங்களுக்கான அணு சோதனைப்பணியை விரைவுபடுத்துமாறு கேட்டுக் கொண்டார். 1965 ஆம் ஆண்டு பாகிஸ்தானுடனான போரின் போது பாபாவிடம் ஏதாவது விசேஷமாகச் செய்யுமாறு சாஸ்திரி கேட்டுக் கொண்டார் என்று ஹோமி சேட்னா கூறுகிறார். இந்த திசையில் பணிகள் நடைபெற்று வருவதாக பாபா கூறினார். நீங்கள் உங்கள் பணியை தொடருங்கள். ஆனால் அமைச்சரவையின் ஒப்புதல் இல்லாமல் எந்த பரிசோதனையும் செய்ய வேண்டாம் என்று சாஸ்திரி கூறினார்,” என்று பக்தியார் தாதாபோய் எழுதியுள்ளார்.
15 நாட்கள் இடைவெளியில் இறந்த சாஸ்திரி மற்றும் பாபா

பட மூலாதாரம், DRDO
1966 ஜனவரி 11 ஆம் தேதி லால் பகதூர் சாஸ்திரி தாஷ்கண்டில் திடீரென இறந்தார். அவருக்குப் பின் வந்த இந்திரா காந்திக்கு பாபாவின் சேவைகளைப் பயன்படுத்த அதிக வாய்ப்பு கிடைக்கவில்லை. ஏனென்றால் அவர் பதவியேற்ற உடனேயே ஜனவரி 24 ஆம் தேதி விமான விபத்தில் பாபா காலமானார்.
பதினைந்து நாட்கள் இடைவெளியில் சாஸ்திரி மற்றும் பாபா இருவரும் காலமானார்கள். அணுகுண்டு தொடர்பான முடிவுகள் கோப்பில் எழுதப்படாததால், சாஸ்திரிக்கும் பாபாவுக்கும் இடையே விவாதிக்கப்பட்ட விவரங்கள் அரசில் வேறு யாருக்கும் தெரியாது. இந்தியாவின் அணுசக்தி கொள்கையை வகுப்பதில் பாபாவின் மரணம் மிகப்பெரிய வெற்றிடத்தை உருவாக்கியது.
”பாபா முன்பு செல்ல வேண்டிய விமானத்தில் அவர் பயணிக்காததை தனது தாயால் ஜீரணிக்கவே முடியவில்லை,” என்று ஹோமி பாபாவின் சகோதரர் ஜெம்ஷெட் பாபா, இந்திரா செளத்ரிக்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தார்.
"பாபா தனது பெண் தோழியான பிப்சி வாடியா காரணமாக பயணத்தை தள்ளிப்போட்டதாக ஆர்.எம். லாலா என்னிடம் கூறினார். பாபாவின் தாயார் மெஹர்பாய் இதனால் மிகவும் மனவேதனை அடைந்தார். அவர் பிப்சியை வாழ்நாள் முழுவதும் மன்னிக்கவில்லை. பிரதம மந்திரியின் பதவியேற்பு விழாவை விட ஒரு விஞ்ஞானியின் மரணம் முக்கியத்துவம் பெறுவது அடிக்கடி நடக்கக்கூடியது அல்ல. ஆனால் பாபாவின் விஷயத்தில் அப்படித்தான் நடந்தது. இந்திரா காந்தி பிரதமராக பதவியேற்ற நாளன்று விமான விபத்தில் பாபா இறந்தார். அடுத்த நாள் எல்லா செய்தித்தாள்களும் பாபாவின் மரணத்தை முக்கியச்செய்தியாக வெளியிட்டன,” என்று தாதாபோய் எழுதுகிறார்,
இளம் விஞ்ஞானிகளின் குழு

பட மூலாதாரம், THE STATESMAN
ஆகஸ்ட் 25 அன்று, டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபண்டமெண்டல் ரிசர்ச்சில் பாபாவின் நினைவாக இரங்கல் கூட்டம் நடைபெற்றது. ஒரு பிரபலம் இறந்தால் விடுப்பு கொடுக்கும் வழக்கத்தை பாபா எதிர்த்தார். ஏனென்றால் ஒரு நபரின் மரணத்திற்கு மிகப்பெரிய அஞ்சலி என்பது வேலையை நிறுத்துவது அல்ல, அதிக வேலை செய்வது என்று அவர் நம்பினார்.
பாபாவின் மரணத்திற்குப் பிறகு அவரது செல்ல நாய் ’க்யூபிட்’ சாப்பிடுவதை நிறுத்தியது. சில நாட்களுக்குப் பிறகு தனது எஜமானரைப் பிரிந்த துக்கத்தில் அதுவும் இறந்தது.
பாபா தனது தொழில் வாழ்க்கையின் உச்சக்கட்டத்தில் இறந்தார் என்றும் தனது வாழ்நாளிலேயே ஒரு ஜாம்பவானாக மாறிய ஒரு சிலரில் அவர் ஒருவர் என்றும் எம்.ஜி.கே மேனன் கருதினார்.
"நமது அணுசக்தி திட்டத்தின் முக்கியமான கட்டத்தில் ஹோமி பாபாவை இழந்துவிட்டது நமது நாட்டிற்கு பெரும் அடியாகும். அவரது பன்முக சிந்தனை மற்றும் வாழ்க்கையின் பல அம்சங்களில் அவரது ஆர்வம் மற்றும் நாட்டில் அறிவியலை மேம்படுத்துவதில் அவர் காட்டிய அர்ப்பணிப்பை என்றும் மறக்க முடியாது,” என்று இந்திரா காந்தி தனது இரங்கல் செய்தியில் கூறினார்.
அவருக்கு அஞ்சலி செலுத்திய ஜே.ஆர்.டி.டாடா, "இந்த உலகில் நான் அறியும் பாக்கியம் பெற்ற மூன்று பெரிய மனிதர்களில் ஹோமி பாபாவும் ஒருவர். அவர்களில் ஒருவர் ஜவஹர்லால் நேரு, இரண்டாவது மகாத்மா காந்தி, மூன்றாவது ஹோமி பாபா. அவர் சிறந்த கணிதவியலாளர் மற்றும் விஞ்ஞானி மட்டுமல்ல, சிறந்த பொறியாளர் மற்றும் கட்டடக்கலைஞரும் ஆவார். இது தவிர, அவர் ஒரு கலைஞரும்கூட. நான் குறிப்பிட்ட இரண்டு பேர் உட்பட எனக்கு தெரிந்த அனைத்து நபர்களிலும், ஹோமியை மட்டுமே ஒரு 'முழுமையான மனிதர்’ என்று குறிப்பிடமுடியும்" என்று கூறினார்.
பாபாவின் கனவு நிறைவேறியது

பட மூலாதாரம், TIFR
பாபாவின் மரணத்திற்குப் பிறகு, விக்ரம் சாராபாய் அணுசக்தி ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். ஆனால் இந்த பதவி வழங்கப்பட்ட முதல் நபர் அவர் அல்ல.
"பாபாவின் மரணத்திற்குப் பிறகு, பிரதமர் இந்திரா காந்தி இந்த பதவியை பிரபல விஞ்ஞானி எஸ். சந்திரசேகருக்கு வழங்கினார். ஆனால் சந்திரசேகர் ஒரு அமெரிக்க குடிமகன் என்பது அவருக்குத் தெரியாது. சந்திரசேகர் 1968 நவம்பரில் இரண்டாவது நேரு நினைவுரை ஆற்ற வந்தபோது பிரதமரை சந்திக்க விருப்பம் தெரிவித்தார். தன்னிடம் இந்திய குடியுரிமை இல்லை என்பதை அந்த சந்திப்பின்போது இந்திரா காந்தியிடம் அவர் தெளிவுபடுத்தினார். பின்னர் விக்ரம் சாராபாய்க்கு, அந்தப்பதவி வழங்கப்பட்டது,” என்று எஸ். சந்திரசேகரின் வாழ்க்கை வரலாறு கூறுகிறது.
விக்ரம் சாராபாய் அணு ஆயுதங்கள் மற்றும் அமைதியான அணு சோதனைத் திட்டத்திற்கு எதிரானவர். அணுசக்தி திட்டத்தை உருவாக்குவதன் தார்மீகத்தையும், அதன் பயன்பாட்டு குறித்தும் சாராபாய் கேள்வி எழுப்பினார். பாபா ஊக்குவித்த முழு திட்டத்தையும் மாற்றியமைக்கும் முயற்சிகளை அவர் மேற்கொண்டார்.
"பாபாவின் வாரிசு ஆவது அவ்வளவு எளிதல்ல. அது வெறும் பதவியை எடுத்துக்கொள்வது மட்டும் அல்ல, அவருடைய சித்தாந்தத்தை உள்வாங்குவதும் ஆகும்" என்று சாராபாய் அப்போதைய அமைச்சரவைச் செயலர் தரம்வீராவிடம் கூறினார்.
ஹோமி சேட்னாவின் எதிர்ப்பையும் சாராபாய் எதிர்கொண்டார். அவர் தன்னை பாபாவின் இயற்கையான வாரிசாகக் கருதி, அந்தப்பதவியைப் பெற கடுமையாக உழைத்து வந்தார்.
விக்ரம் சாராபாயும் மிக இளம் வயதிலேயே காலமானார். இறுதியில், ஹோமி பாபாவின் அணு சோதனை கனவை ராஜா ராமண்ணாவும், ஹோமி சேட்னாவும் 1974 மே மாதம் நிறைவேற்றினர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












