பி.ஆர்.அம்பேத்கர் அரசியல் சட்டத்தை வகுத்தபோது ஏற்பட்ட தடைகள் என்னென்ன?

பட மூலாதாரம், VIJAY SURWADE'S COLLECTION, COURTESY NAVAYANA
- எழுதியவர், சௌதிக் பிஸ்வாஸ்
- பதவி, பிபிசி செய்தியாளர்
1949 நவம்பர் 25 ஆம் தேதி, இந்திய அரசியலமைப்பின் இறுதி வாசிப்பின் முடிவில், இந்தியாவின் தலைசிறந்த அரசியல்வாதிகளில் ஒருவரும், நாட்டின் தலித்துகளின் மறுக்கமுடியாத தலைவருமான டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர், முன்னுணர்வுடன் கூடிய ஒரு உரையை நிகழ்த்தினார்.
"1950 ஜனவரி 26 ஆம் தேதி நாம் முரண்பாடான ஒரு வாழ்க்கையில் நுழையப் போகிறோம். அரசியலில் சமத்துவம் இருக்கும். ஆனால் சமூக மற்றும் பொருளாதார வாழ்க்கையில் சமத்துவமின்மை நிலவும்" என்று அம்பேத்கர் கூறினார்.
அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்தவுடன் இந்தியா தன்னை ஒரு இறையாண்மை, ஜனநாயக மற்றும் குடியரசு நாடாக அன்றைய தினம் அறிவித்தது. தனது உரையில் அம்பேத்கர் ஒரு இளம் குடியரசிற்கும் பழைய நாகரிகத்திற்கும் இடையிலான முரண்பாடுகளை மறைமுகமாக குறிப்பிட்டார் என்றே தோன்றுகிறது. ஜனநாயகம் என்பது ’அடிப்படையில் ஜனநாயகமற்ற’ ’இந்திய மண்ணின் மேலாடை’ மட்டுமே என்றும், கிராமம் என்பது "உள்ளூர்வாதம், அறியாமை, குறுகிய மனப்பான்மை மற்றும் வகுப்புவாதத்தின் தொட்டி" என்றும் அவர் மற்றொரு இடத்தில் கூறியிருந்தார்.
தீண்டாமை ஒழிப்பு, உறுதியான நடவடிக்கை, எல்லா வயது வந்தோருக்கும் வாக்குரிமை வழங்குதல் மற்றும் அனைவருக்கும் சம உரிமைகளை வழங்குதல் ஆகியவை இந்தியா போன்ற ஏழையான, சமத்துவமற்ற நாட்டிற்கு ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாகும். புகழ்பெற்ற ஜெர்மன் தத்துவஞானி ஜார்ஜ் வில்ஹெல்ம் ஃபிரெட்ரிக் ஹெகல், இந்தியாவை ‘மாற்றமே இல்லாத, ஒரே நிலையில் இருக்கும்’ நாடு என்று வர்ணித்திருந்தார்.
299 உறுப்பினர்களைக் கொண்ட அரசியல்சாசன நிர்ணய சபை 1946 மற்றும் 1949 க்கு இடையில் ஒரு கொந்தளிப்பான நேரத்தில் மூன்று ஆண்டுகள் பணியாற்றியது. இந்த காலகட்டத்தில் மதக் கலவரம் மற்றும் பிரிவினை ஏற்பட்டது. இந்தியாவுக்கும் புதிய நாடான பாகிஸ்தானுக்கும் இடையே மனித வரலாற்றிலேயே மிகப்பெரிய குடிபெயர்வு நிகழ்ந்தது. நூற்றுக்கணக்கான சமஸ்தானங்களை இந்தியாவுடன் இணைக்கும் மிகவும் கடினமான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
சட்ட அறிஞரான அம்பேத்கர், ஏழு பேர் கொண்ட முக்கிய குழுவிற்கு தலைமை தாங்கினார். இந்தக்குழு 395 பிரிவுகள் கொண்ட ஆவணத்தை உருவாக்கியது.

பட மூலாதாரம், VIJAY SURWADE'S COLLECTION, COURTESY NAVAYANA
அஷோக் கோபால் எழுதிய ’எ பார்ட் அபார்ட்’ என்ற புதிய சுயசரிதை, அம்பேத்கர் உலகின் மிக நீண்ட ஸ்தாபக ஆவணங்களில் ஒன்றை உருவாக்க, எப்படி மோசமான உடல்நிலையை எதிர்த்துப் போராடினார் என்றும் இந்தியாவின் சுதந்திர போராட்டத்தின் முக்கிய தலைவர்களுடன் கருத்து வேறுபாடுகளை எப்படி ஒதுக்கி வைத்தார் என்றும் விளக்குகிறது.
அம்பேத்கரின் ஆளுமை, எவ்வாறு அவருக்கு பரவலான உள்ளூர் மற்றும் சர்வதேச ஆதரவைப் பெற உதவியது என்பதை இந்தப் புத்தகம் வெளிப்படுத்துகிறது. வரைவுக் குழுவின் ஏழு உறுப்பினர்களில் ஐந்து பேர் உயர் சாதியினர். ஆனால் அவர்கள் அனைவரும் குழுவை வழிநடத்துமாறு அம்பேத்கரை கேட்டுக் கொண்டனர்.
இந்திய சுதந்திரப் போராட்டத்தை ஆதரித்த அயர்லாந்தின் அரசியலமைப்பை எழுதிய ஐரிஷ் அரசியல்வாதியான எமன் டி வலேரா, இந்தக்குழுவின் தலைமை பதவிக்கு அம்பேத்கரின் பெயரை, பிரிட்டிஷ் இந்தியாவின் கடைசி வைஸ்ராய் மவுண்ட்பேட்டன் அல்லது இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவிடம் பரிந்துரைத்தார் என்று கோபால் எழுதுகிறார். (வைஸ்ராயின் மனைவி எட்வினா மவுண்ட்பேட்டன் அம்பேத்கருக்கு எழுதிய கடைசி கடிதத்தில் இது தெரியவந்துள்ளது.)
"ஒவ்வொரு வர்க்கத்திற்கும் சமயத்திற்கும் சமமான நீதியை வழங்கக்கூடிய ஒரே மேதை" அவர் என்பதால் அரசியலமைப்பின் உருவாக்கத்தை அவர் "மேற்பார்வை" செய்வது தனக்கு "தனிப்பட்ட மகிழ்ச்சி" அளிப்பதாக எட்வினா மவுண்ட்பேட்டன் அம்பேத்கரிடம் கூறினார்.
1947 மார்ச் மாதம் வைஸ்ராயாக பொறுப்பேற்றவுடன் மவுண்ட்பேட்டன் பிரபு, அம்பேத்கருடன் "மிகவும் சுவாரசியமான மற்றும் மதிப்புமிக்க பேச்சுக்களை" நடத்தினார் என்று கோபால் எழுதுகிறார். நேருவின் இடைக்கால மத்திய அமைச்சரவையில் உள்ள 15 அமைச்சர்கள் பட்டியலில் அம்பேத்கரின் பெயரைப் பார்த்தபோது தனக்கு "மிகப்பெரும் திருப்தி" ஏற்பட்டதாகவும் வைஸ்ராய் ஒரு மூத்த பிரிட்டிஷ் அதிகாரியிடம் கூறினார்.
1947 மே மாதம் அரசியல்சாசன நிர்ணய சபையில் சமர்ப்பிக்கப்பட்ட அரசியலமைப்பின் முழு வரைவையும் அம்பேத்கரின் குழு ஆய்வு செய்தது. அது, சம்பந்தப்பட்ட அமைச்சர்களுக்கும் பின்னர் காங்கிரஸ் கட்சிக்கும் அனுப்பப்பட்டது. சில பிரிவுகள் ஏழு முறை வரை மாற்றியமைக்கப்பட்டன.

பட மூலாதாரம், VIJAY SURWADE'S COLLECTION, COURTESY NAVAYANA
அரசியல் சாசன நிர்ணய சபையின் தலைவரான ராஜேந்திர பிரசாத்திடம் அம்பேத்கர் சமர்ப்பித்த திருத்தப்பட்ட வரைவில் 20 திருத்தங்கள் செய்யப்பட்டன. நீதி, சமத்துவம், சகோதரத்துவம் என்ற உறுதிமொழிகளை வழங்கும் மற்றும் ஸ்தாபக ஆவணத்தின் அடிப்படை அம்சங்களை உள்ளடக்கிய முகவுரையில் செய்யப்பட்ட திருத்தமும் இதில் அடங்கும்.
அசல் முன்னுரையில் சேர்க்கப்பட்ட "சகோதரத்துவம்" என்ற வார்த்தையும் "உண்மையிலேயே அற்புதமான மற்றும் வரலாற்று சிறப்புமிக்க 81 சொற்களின் தொகுப்பான" மற்ற திருத்தங்களும் முழுவதுமாக அம்பேத்கர் செய்தவை. தத்துவஞானி ஆகாஷ் சிங் ரத்தோர் எழுதிய “அம்பேத்கர்ஸ் பிரியம்பிள் : சீக்ரெட் ஹிஸ்ட்ரி ஆஃப் தி கான்ஸ்டிட்யூஷன் ஆஃப் இண்டியா” என்ற புத்தகத்தை மேற்கோள்காட்டி கோபால் இதை தெரிவிக்கிறார்.
அம்பேத்கர்தான் இந்தப்பணியில் பெரும்பகுதியைச் செய்தார். அவர் நீரிழிவு மற்றும் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தாலும் சுமார் 100 நாட்கள் அரசியல்சாசன நிர்ணய சபையில் நின்று "ஒவ்வொரு உட்பிரிவையும் பொறுமையாக விளக்கி, காரணங்களைச் சொன்னார் அல்லது பரிந்துரைக்கப்பட்ட ஒவ்வொரு திருத்தத்தையும் நிராகரித்தார்".
கூட்டத்தில் எல்லா உறுப்பினர்களும் கலந்து கொள்ளவில்லை. "இந்த [திருத்தப்பட்ட] அரசியலமைப்பை உருவாக்கும் சுமை அம்பேத்கர் மீது விழுந்தது. ஏனெனில் பெரும்பாலான உறுப்பினர்கள் ’இறப்பு, நோய் மற்றும் பிற வேலைகள்’ காரணமாக ’கணிசமான பங்களிப்பை’ அளிக்க முடியவில்லை,” என்று கமிட்டி உறுப்பினர்களில் ஒருவரான TT கிருஷ்ணமாச்சாரி 1948 நவம்பம் மாதம் சபையில் கூறினார்.
வரைவு, 7,500 க்கும் மேற்பட்ட திருத்தங்களை பரிந்துரைத்தது. அவற்றில் கிட்டத்தட்ட 2,500 ஏற்றுக்கொள்ளப்பட்டது. "மிக சிக்கலான முன்மொழிவுகளை எளிமையான சட்ட வடிவில் வைக்கும் திறன்" கொண்ட மூத்த அரசு ஊழியரான எஸ்.என்.முகர்ஜிக்கு, வரைவை உருவாக்கியதற்கான ’அதிக பெருமையை’ அம்பேத்கர் அளித்தார்.

பட மூலாதாரம், Getty Images
இந்தியாவின் ’பின்தங்கிய வர்க்கங்களின்’ ஆதரவாளர் என்ற பிம்பம் இருந்தபோதிலும் கூட எல்லா பிரிவினரின் நலன்களுக்கும் அம்பேத்கர் இடமளித்தார். தனி தொகுதிகளுக்கான அவரது கோரிக்கை, அரசியல் சாசன நிர்ணய சபையின் சிறுபான்மையினர் தொடர்பான குழுவால் நிராகரிக்கப்பட்டது. முக்கிய தொழில்களை தேசியமயமாக்குவதற்கான அவரது ஆரம்பகால கோரிக்கையும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அரசியலமைப்பின் நோக்கங்களில் சோஷியலிசம் குறிப்பிடப்படவில்லை.
1946 டிசம்பரில் முதன்முறையாக அரசியல்சாசன நிர்ணய சபை கூடியபோது அம்பேத்கர். "இன்று நாம் அரசியல், சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பிளவுபட்டுள்ளோம் என்பதை நான் அறிவேன். நாம் சண்டையிடும் முகாம்களின் குழுவாக இருக்கிறோம். ஒருவேளை அத்தகைய ஒரு முகாமின் தலைவராக நான் இருக்கலாம் என்பதை ஒப்புக்கொள்ளும் அளவிற்கு நான் போகலாம்,” என்று குறிப்பிட்டார்.
"அம்பேத்கர் தனது முந்தைய கோரிக்கைகளை கையாண்ட விதம் அவருடைய அரசியல் பாத்திரத்தை சுட்டிக் காட்டுகிறது. பட்டியல் சாதிகள் என்ற குறிப்பிட்ட ஒரு பிரிவினரின் நலன்களை மட்டுமல்லாமல் எல்லாருடைய நலன்களையும் அவர் கருத்தில் கொண்டார்,” என்று கோபால் குறிப்பிடுகிறார். (இந்தியாவின் 140 கோடி மக்களில் 23 கோடி பேர் பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடியினர்)
இவை அனைத்தையும் பார்க்கும்போது அம்பேத்கர் அரசியலமைப்பின் முதன்மை சிற்பி என்றும், "ஒரு பரந்த பார்வையைக் கொண்டவர்" மற்றும் ஆவணத்தின் "ஒவ்வொரு பகுதியையும்" இறுதி செய்வதற்கு வழிகாட்டியவர் என்றும் உறுதிப்படுத்த முடிவதாக கோபால் தெரிவிக்கிறார்.
’அரசியலமைப்புச் சட்டத்தின் திறமையான வழிகாட்டி’ யாக அம்பேத்கர் இருந்தார் என்று பல ஆண்டுகளுக்குப் பிறகு ராஜேந்திர பிரசாத் ஒப்புக்கொண்டார். ’அரசியலமைப்பு உருவாக்கத்தில் டாக்டர் அம்பேத்கரை விட அதிகமாக யாரும் அக்கறை காட்டவில்லை’ என்று 1956 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதி தனது 63 வது வயதில் அம்பேத்கர் காலமான சில மணிநேரங்களுக்குப் பிறகு பிரதமர் நேரு கூறினார்.
ஏழு தசாப்தங்களுக்கு பிறகுm இந்தியாவின் மாபெரும் மற்றும் பன்முகத்தன்மை கொண்ட ஜனநாயகம் கடுமையான சவால்களை எதிர்கொண்டு உள்ளது. அதிகரித்து வரும் ஒருமுனைப்படுத்தல் மற்றும் சமூக ஏற்றத்தாழ்வுகள் அதன் எதிர்காலத்தைப் பற்றி பலரைக் கவலையடையச் செய்கின்றன. அரசியல் சாசனத்தின் திருத்தப்பட்ட வரைவை அறிமுகம் செய்யும் போது அம்பேத்கர் ஆற்றிய மற்றொரு முன்னுணர்வு கொண்ட உரையை அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
"இந்தியாவில் உள்ள சிறுபான்மையினர் பெரும்பான்மை ஆட்சியை விசுவாசமாக ஏற்றுக்கொண்டுள்ளனர். சிறுபான்மையினருக்கு எதிராக பாகுபாடு காட்டாமல் இருக்கும் கடமையை இந்த பெரும்பான்மையினர் உணர வேண்டும்," என்று அவர் கூறியிருந்தார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












