இந்தியப் பிரிவினையை தடுக்க முயன்ற மௌலானா அபுல் கலாம் ஆசாத் தோல்வியடைந்தது ஏன்?

பட மூலாதாரம், ALEPH BOOK COMPANY
- எழுதியவர், ரெஹான் ஃபசல்
- பதவி, பிபிசி செய்தியாளர்
மௌலானா அபுல் கலாம் ஆசாத் தனது வாழ்க்கையின் ஆரம்ப ஆண்டுகளிலேயே மிக அதிகமான புகழைச் சம்பாதித்தார். அவரைப் பற்றி சரோஜினி நாயுடு, "ஆசாத் எந்த நாளில் பிறந்தாரோ, அன்றே அவருக்கு 50 வயதாகிவிட்டது," என்று குறிப்பிட்டார்.
குழந்தையாக இருந்தபோதே உயரமான மேடையில் நின்றுகொண்டு அவர் உரை நிகழ்த்துவார். தனது பேச்சுக்கு கைதட்டுமாறு தன் சகோதரிகளிடம் சொல்லுவார். பிறகு மேடையில் இருந்து கீழே இறங்கி பெரிய தலைவர்களைப் போல மெதுவாக நடப்பார்.
ஆசாத்தின் முழுப் பெயர் அபுல் கலாம் மொகியுத்தீன் அகமது.
இவர் செளதி அரேபியாவில் உள்ள மெக்காவில் பிறந்தார். அவரது தந்தை கைருத்தீன் 1857 கிளர்ச்சிக்கு முன்பு செளதி அரேபியா சென்றுவிட்டார். அங்கு அவர் 30 ஆண்டுகளைக் கழித்தார். அவர் அரேபிய மொழியின் சிறந்த அறிவாளியாகவும் இஸ்லாமிய சமய நூல்களின் அறிஞராகவும் இருந்தார்.
செளதி அரேபியாவில் ஒரு கால்வாயைப் பழுதுபார்க்க அவர் உதவினார். அரேபிய மொழியில் புத்தகம் எழுதினார். ஆலியா என்ற அரேபியப் பெண்ணை மணந்தார்.
கைருத்தீன் 1895இல் தனது குடும்பத்துடன் இந்தியாவுக்குத் திரும்பி கல்கத்தாவில் குடியேறினார். ஆசாத், பள்ளியிலோ, மதரஸாவிலோ அல்லது பல்கலைக்கழகத்திலோ படிக்கவில்லை. அவர் தனது எல்லா படிப்பையும் வீட்டிலேயே செய்தார், அவரது தந்தைதான் அவருடைய முதல் ஆசிரியர். ஆசாதுக்கு 11 வயதாக இருந்தபோது அவரது தாயார் இறந்துவிட்டார், 11 ஆண்டுகளுக்குப் பிறகு அவரது தந்தையும் காலமானார்.

பட மூலாதாரம், OXFORD UNIVERSITY PRESS
‘முஸ்லிம் தலைவர்’ என்பதை விரும்பாத ஆசாத்
ஆசாத் ஒரு சிறந்த தேசியவாதி. மகாத்மா காந்தியுடனான அவரது முதல் சந்திப்பு 1920 ஜனவரி 18ஆம் தேதி நடந்தது. சுதந்திரப் போராட்டத்தில் அவரது பங்கு, கிலாஃபத் இயக்கத்துடன் தொடங்கியது. 1923ஆம் ஆண்டு முதல்முறையாக அவர் காங்கிரஸ் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1940இல் மீண்டும் காங்கிரஸ் தலைவரானார்.
சமீபத்தில் ஆசாத்தின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய சையத் இர்பான் ஹபீப், "முஸ்லிம் தலைவர்கள் என்று தாங்கள் அழைக்கப்படுவதை விரும்பாத ஹக்கிம் அஜ்மல் கான், டாக்டர் எம்.ஏ. அன்சாரி, கான் அப்துல் கஃபர் கான் மற்றும் ஹஸ்ரத் மொஹானி போன்ற தலைவர்களின் வகையைச் சேர்ந்தவர் ஆசாத்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
"தனிப்பட்ட வாழ்க்கையில் அவர்கள் அனைவரும் அர்ப்பணிப்புள்ள முஸ்லிம்களாக இருந்தனர். ஆனால் கிலாஃபத் இயக்கத்தைத் தவிர, அவர்கள் ஒருபோதும் தங்கள் மதம் பொது வாழ்க்கையில் முன்னுக்கு வரவிடவில்லை," சையத் இர்பான் ஹபீப் எழுதுகிறார்.
அபுல் கலாம் ஆசாத், குர்ஆனை உருது மொழியில் மொழிபெயர்க்க முன்முயற்சி எடுத்தார். 1929 வாக்கில், குர்ஆனின் 30 அத்தியாயங்களில் 18 அத்தியாயங்களை உருது மொழியில் மொழிபெயர்த்தார்.

பட மூலாதாரம், ALEPH BOOK COMPANY
ஆசாத்திடம் கடுமையாக இருந்த ஜின்னா
இரண்டாவது முறையாக காங்கிரஸ் தலைவராக ஆசாத் பதவியேற்ற நேரத்தில், முகமது அலி ஜின்னாவின் தனி முஸ்லிம் நாடு கோரிக்கை வேகம் பெற்றிருந்தது. வெள்ளைக்கார ஆட்சியாளர்களின் இடத்தில் இந்து ஆட்சியாளர்களை வைக்கும் தவறைச் செய்ய வேண்டாம் என்று ஜின்னா முஸ்லிம்களிடம் சொல்ல ஆரம்பித்தார்.
இந்துக்களும் முஸ்லிம்களும் நூற்றுக்கணக்கான ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த பிறகு, பிரிவினைக்கான கோரிக்கை ஆக்கப்பூர்வமாக இருக்காது என்று ஜின்னாவுக்கு புரியவைக்கும் பொறுப்பு ஆசாத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
"உங்களுடன் எந்தப் பேச்சும், கடிதப் பரிமாற்றமும் செய்ய நான் விரும்பவில்லை. இந்திய முஸ்லிம்களின் நம்பிக்கையை நீங்கள் இழந்துவிட்டீர்கள்.
காங்கிரஸ் உங்களைப் பெயரளவுக்கு முஸ்லிம் தலைவராக்கியுள்ளது என்று உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் முஸ்லிம்களையோ இந்துக்களையோ பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. உங்களுக்கு சுயமரியாதை இருந்தால் காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்யுங்கள்,” என்று ஜின்னா அவருக்குக் கடிதம் எழுதினார்.

பட மூலாதாரம், Getty Images
ஜின்னாவின் கடிதத்திற்கு ஆசாத் நேரடியாகப் பதிலளிக்கவில்லை, ஆனால் அவர் "இந்துக்களும் முஸ்லிம்களும் இருவேறு நாகரிகங்கள் மற்றும் அவர்களின் காவியங்களும் நாயகர்களும் வேறுபட்டவர்கள். பெரும்பாலும் ஒரு சமூகத்தின் ஹீரோக்கள் மற்றவர்களுக்கு வில்லன்கள்," என்ற ஜின்னாவின் வாதத்தை எதிர்த்தார்.
மஹாதேவ் தேசாய், ஆசாத்தின் வாழ்க்கை வரலாற்றில் இவ்வாறு எழுதியுள்ளார்.
"ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இயற்கை, இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் ஒன்றுசேர வாய்ப்பளித்தது. நாம் ஒருவருக்கொருவர் சண்டையிட்டிருக்கலாம், ஆனால் உண்மையான சகோதரர்களிடையேயும் சண்டை நடக்கும். நமக்கு இடையிலான வேறுபாடுகளை வலியுறுத்துவதால் எந்த நன்மையும் ஏற்படாது.
இரண்டு மனிதர்கள் ஒரே மாதிரியாகத்தானே இருப்பார்கள். அமைதிக்காக விரும்பும் ஒவ்வொருவரும் இந்த இருவருக்கும் இடையிலான சமத்துவத்தை வலியுறுத்த வேண்டும் என்று ஆசாத் தெரிவித்தார்."
ஜின்னா vs ஆசாத் - இருவேறு ஆளுமைகள்

பட மூலாதாரம், Getty Images
ஆசாத்தின் அரசியல் வாழ்வின் மிகப்பெரிய போட்டியாளர் முகமது அலி ஜின்னா.
ராஜ்மோகன் காந்தி தனது 'At Lives: A Study of the Hindu-Muslim Encounter' என்ற புத்தகத்தில்,"ஜின்னா எப்போதும் விலையுயர்ந்த மேற்கத்திய பாணி உடைகளை அணிந்திருந்தார். அதே நேரத்தில் ஆசாத்தின் ஆடை ஷெர்வானி, சுரிதார் பைஜாமா மற்றும் ஃபைஸ் தொப்பியாக இருந்தது," என்று எழுதியுள்ளார்.
"ஆசாத் மற்றும் ஜின்னா இருவரும் உயரமானவர்கள். இருவரும் அதிகாலையில் எழுந்திருப்பார்கள். இருவரும் செயின் ஸ்மோக்கர்கள். இருவரும் சாதாரண மக்களைச் சந்திப்பதை விரும்ப மாட்டார்கள். ஆனால் இருவருமே அடிக்கடி பெரிய மக்கள் கூட்டத்தின் முன் உரை நிகழ்த்தினர்.
ஜின்னா தனியாக இருந்தபோது அவர் தனது அரசியல் திட்டங்களை வகுத்து வந்தார். ஆசாத் பல மொழிகளில் வரலாற்றுப் புத்தகங்களைப் படிப்பதில் தனது நேரத்தைச் செலவிட்டார்,” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மகாத்மா காந்தியின் செயலாளராக இருந்த மகாதேவ் தேசாய், ஆசாத்திடம் ஒருபோதும் சரியான வார்த்தைகளுக்குக் குறைவு இருக்கவில்லை என்றும், காங்கிரஸ் கூட்டங்களில் அதிகம் பேசியவர் ஆசாத் என்றும் கருதினார்.
ஜின்னாவை தேசியத் தலைவராக மாற்றியதில் காந்தியின் பங்கு இருப்பதாக மௌலானா ஆசாத் நம்பினார்.
ஆசாத் தனது சுயசரிதையான 'இந்தியா வின்ஸ் ஃப்ரீடம்' இல் எழுதுகிறார், "இருபதுகளில் காங்கிரஸை விட்டு வெளியேறிய பிறகு ஜின்னா தனது அரசியல் முக்கியத்துவத்தை இழந்தார். ஆனால் காந்தியின் காரணமாக ஜின்னா மீண்டும் இந்திய அரசியலுக்கு வருவதற்கான வாய்ப்பு கிடைத்தது.
இந்திய முஸ்லிம்களின் பெரும் பகுதியினருக்கு ஜின்னாவின் அரசியல் திறனைப் பற்றிய சந்தேகம் இருந்தது. ஆனால் காந்திஜி ஜின்னாவுக்குப் பின்னால் ஓடுவதைக் கண்டதும் ஜின்னாவின் மீது அவர்களுக்கு ஒரு புதிய மரியாதை ஏற்பட்டது."
"காந்தி, ஜின்னாவுக்கு எழுதிய கடிதத்தில் 'காய்தே-இ-ஆஸம்' என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார். இந்தக் கடிதம் உடனடியாக செய்தித்தாள்களில் அச்சிடப்பட்டது. காந்திஜி அவரை 'காய்தே-இ-ஆஸம்' என்று அழைக்கிறார் என்றால், அவருக்குள் ஏதாவது சிறப்பு இருக்கவேண்டும் என்று அவர்கள் கருதினர்," என்று ஆசாத் எழுதுகிறார்.

பட மூலாதாரம், ORIENT BLACK SWAN
ஆசாத்துக்கும் நேருவுக்கும் கருத்து வேறுபாடு
1937 தேர்தலுக்குப் பிறகு வட மாநிலங்களில் காங்கிரஸ் அரசை அமைக்கும் பொறுப்பு ஆசாத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
உத்தர பிரதேசத்தில், முஸ்லிம் லீக்கின் இரு உறுப்பினர்களான கலிகுஜாமா, நவாப் இஸ்மாயில் கான் ஆகியோரை காங்கிரஸ் அமைச்சரவையில் சேர ஆசாத் அழைத்தார். அவர்களும் இதற்குத் தயாராக இருந்தார்கள். ஆனால் அப்போதைய காங்கிரஸ் தலைவர் ஜவஹர்லால் நேரு, முஸ்லிம் லீக்கிற்கு அமைச்சரவையில் ஓர் இடம் மட்டுமே வழங்க முடியும் என்று முடிவு செய்தார்.
"ஆசாத் சொன்னதன் பேரில் மகாத்மா காந்தியும் உத்தர பிரதேச அமைச்சரவையில் முஸ்லிம் லீக்கை சேர்ந்த இருவரைச் சேர்க்க பரிந்துரைத்தார், ஆனால் நேரு தனது முடிவை மாற்றிக்கொள்ளவில்லை. முஸ்லிம் லீக்கும் அந்த ஒரு இடத்தை ஏற்கவில்லை. இதனால். உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ்-லீக் கூட்டணிக்கான மௌலானா ஆசாத்தின் முயற்சி தோல்வியடைந்தது,” என்று ராஜ்மோகன் காந்தி எழுதுகிறார்.

பட மூலாதாரம், PAKISTAN POSTAL DEPARTMENT
"நேருவின் அணுகுமுறையால்தான் முஸ்லிம் லீக்கின் ஆதரவை ஜின்னாவால் தக்க வைக்க முடிந்தது. ஒரு கட்டத்தில் ஜின்னாவை கைவிட அது தயாராக இருந்தது. நேருவின் இந்த நடவடிக்கை காரணமாக உத்தர பிரதேசத்தில் முஸ்லீம் லீக்கிற்கு ஒரு புதிய வாழ்க்கை கிடைத்தது.
ஜின்னா அதை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டார். அதன் இறுதி விளைவு பாகிஸ்தானின் உருவாக்கம்," என்று ஆசாத் பின்னர் தனது சுயசரிதையான 'இந்தியா வின்ஸ் ஃப்ரீடம்' இல் எழுதினார்.
சௌத்ரி காலிகுஜாமா தனது ‘பாத்வே டு பாகிஸ்தான்’ என்ற புத்தகத்தில், “உத்தர பிரதேசத்தில் முஸ்லிம் லீக்-காங்கிரஸ் பேச்சுவார்த்தை தோல்வியடைந்த பிறகுதான் பாகிஸ்தானுக்கான அடித்தளம் போடப்பட்டது என்று ஆசாத் நினைப்பதில் தவறில்லை,” என்று எழுதியுள்ளார்.
"ஆசாத் தனது வார்த்தையில் உறுதியாக இருந்திருந்தால், இந்த பிரச்னையில் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அச்சுறுத்தியிருந்தால் நிலைமை மாறியிருக்கும். ஆனால் ஆசாத் கடைசி நேரத்தில் பின்வாங்கினார்," என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆசாத் மீண்டும் காங்கிரஸ் தலைவரானார்

பட மூலாதாரம், ALEPH BOOKS
1938ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைவராக இருந்த சுபாஷ் சந்திர போஸின் பதவிக்காலம் முடிவடைந்தபோது, அனைவருடைய உதடுகளிலும் மௌலானா ஆசாத்தின் பெயர் ஒலித்தது.
மகாத்மா காந்தி ஆசாத்தை காங்கிரஸ் தலைவர் பதவியை ஏற்கச் சொன்னார். ஆனால் போஸ் இன்னும் ஒரு வருடம் காங்கிரஸ் தலைவராகத் தொடர விரும்பினார். ஆசாத் காந்தியின் யோசனையை ஏற்கவில்லை.
ஏனெனில் வங்காளத்தில் உள்ள தனது தொண்டர்களை ஏமாற்ற அவர் விரும்பவில்லை. ஆனால் அதற்குள் போஸ் வங்காளத்தின் ஹீரோவாகிவிட்டார் என்று மகாதேவ் தேசாய், மௌலானாவின் வாழ்க்கை வரலாற்றில் எழுதியுள்ளார்.
அந்த ஆண்டு நடந்த தேர்தலில் சுபாஷ் சந்திர போஸ் மீண்டும் காங்கிரஸ் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். காந்திஜி ஆதரித்த பட்டாபி சீதாராமையாவை அவர் தோற்கடித்தார்.
1939ஆம் ஆண்டில், காந்தி மீண்டும் மௌலானாவிடம் காங்கிரஸை வழி நடத்துமாறு கேட்டுக்கொண்டார். இந்த முறை ஆசாத் ஒப்புக்கொண்டார். அவர் மொத்தம் 1854 வாக்குகள் பெற்ற நிலையில் அவரை எதிர்த்து போட்டியிட்ட எம்.என்.ராய் 183 வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது.

பட மூலாதாரம், Getty Images
பிரிவினை திட்டத்திற்குக் கடும் எதிர்ப்பு
மகாத்மா காந்தி 1942ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9ஆம் தேதி 'வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தைத் தொடங்கியபோது, காங்கிரஸ் தலைவராக மௌலானா ஆசாத் இருந்தார்.
காங்கிரஸின் எல்லா பெரிய தலைவர்களுடன் அவரும் கைது செய்யப்பட்டு, அவர்கள் அகமதுநகர் கோட்டைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். காங்கிரஸுக்கு தடை விதிக்கப்பட்டது.
32 மாதங்களுக்குப் பிறகு 1945 ஏப்ரலில் அவர் விடுவிக்கப்பட்டார். 1946 செப்டம்பரில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டபோது, காந்தி மற்றும் நேருவின் கோரிக்கைகளுக்குப் பிறகும் ஆசாத் ஆரம்பத்தில் மத்திய அமைச்சரவையில் சேரவில்லை.
காந்தி மற்றும் நேருவின் தொடர்ச்சியான வற்புறுத்தல் காரணமாக அவர் நான்கு மாதங்களுக்குப் பிறகு கல்வி அமைச்சராகப் பதவியேற்றார். மவுன்ட்பேட்டன் பதவியேற்று இந்திய பிரிவினையை ஆரம்பித்தபோது, மௌலானா அபுல் கலாம் ஆசாத் அதைக் கடுமையாக எதிர்த்தார். ஓர் இந்தியனாக, நாடு துண்டாடப்படுவதை அவர் விரும்பவில்லை.

பட மூலாதாரம், Getty Images
“இந்து ஆதிக்க நாட்டில் லட்சக்கணக்கான முஸ்லிம்கள் கண் விழிக்கும்போது அவர்கள் தங்கள் சொந்த நாட்டில் அந்நியர்களாகவும் வெளியாளாக மாறியிருப்பதையும் பார்ப்பார்கள்,” என்று அப்போது மௌலானா அபுல் கலாம் ஆசாத் கூறினார்.
ஆசாத் தனது சுயசரிதையில், "இந்தியா முழுவதையும் எனது தாய்நாடாகக் கருதாமல், அதில் ஒரு பகுதியுடன் மட்டும் திருப்தியடைய ஒரு கணம்கூட நான் தயாராக இல்லை," என்று எழுதினார்.
1947 மார்ச் வாக்கில், சர்தார் படேல் இந்தியாவின் பிரிவினைக்குத் தயாரானார். நேரு இந்த உண்மையைக் கிட்டத்தட்ட ஏற்றுக்கொண்டார்.
"இடைக்கால அரசில் ஏற்பட்ட ஒருமுனைப்படுத்தலால் சலிப்படைந்த சர்தார் படேல், 'நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், இந்தியாவில் இரண்டு தேசங்கள் உள்ளன' என்று என்னிடம் ஒப்புக்கொண்டபோது நான் மிகுந்த வருத்தமும் ஆச்சரியமும் அடைந்தேன். பிரிவினையை எதிர்ப்பதை நான் நிறுத்தவேண்டும் என்று நேருவும் சோகமான தொனியில் என்னிடம் கூறினார்,” என்று ஆசாத் எழுதுகிறார்.

பட மூலாதாரம், Getty Images
மார்ச் 31 அன்று காந்தி கிழக்கு வங்காளத்திலிருந்து டெல்லி திரும்பியபோது, ஆசாத் அவரைச் சந்தித்தார்.
"பிரிவினை இப்போது பெரும் ஆபத்தாக மாறியுள்ளது. வல்லபாய் படேல் மற்றும் ஜவஹர்லால் கூட தங்கள் எதிர்ப்பைக் கைவிட்டதாகத் தெரிகிறது. நீங்கள் என்னை ஆதரிப்பீர்களா அல்லது நீங்களும் மாறிவிட்டீர்களா என்று காந்தி என்னிடம் கேட்டார். பிரிவினைக்கான எனது எதிர்ப்பு இதைவிட வலுவாக இருந்ததில்லை என்று நான் பதிலளித்தேன்,” என்று ஆசாத் எழுதுகிறார்.
"நீங்களும் இதை ஏற்றுக்கொண்டால் அது இந்தியாவின் தோல்வியாகும் என்றேன் நான். என் பிணத்தின் மீதுதான் பிரிவினையை காங்கிரஸ் ஏற்கும் என்று காந்தி சொன்னார்.
ஆனால் இரண்டு மாதங்களுக்குப் பிறகு, இனி பிரிவினையை நிறுத்த முடியாது என்று காந்திஜி கூறியது என் வாழ்வில் மிகப்பெரிய அடியாக இறங்கியது,” என்று அவர் மேலும் எழுதியுள்ளார்.

பட மூலாதாரம், SYEDA SAIYIDAIN HAMEED
முஸ்லிம்களுக்கு புரிய வைக்க முயற்சி
சுதந்திரத்திற்குப் பிறகு, இந்திய முஸ்லிம்கள் பாகிஸ்தானுக்கு செல்லத் தொடங்கியபோது, ஆசாத் அவர்களுக்கு அறிவுரை வழங்க முயன்றார்.
சையதா சைதேன் ஹமீது தனது 'மௌலானா ஆசாத், இஸ்லாம் அண்ட் தி இண்டியன் நேஷனல் மூவ்மெண்ட்' என்ற புத்தகத்தில், "உத்தரபிரதேசத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு செல்லும் இஸ்லாமியர்களிடம், நீங்கள் உங்கள் தாய்நாட்டைவிட்டு வெளியேறுகிறீர்கள்.
இதன் விளைவு என்ன ஆகும் என்று தெரியுமா?
இந்த வழியில் நீங்கள் வெளியேறுவது இந்திய முஸ்லிம்களை பலவீனப்படுத்தும் என்று மௌலானா கூறினார்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
"பாகிஸ்தானின் வெவ்வேறு பகுதிகள் தங்கள் தனி அடையாளத்தை நிலைநிறுத்தத் தொடங்கும் ஒரு காலம் வரும். வங்காளிகள், பஞ்சாபிகள், சிந்திகள், பலூச்சியர்கள் தங்களைத் தனி தேசங்களாகப் பிரகடனம் செய்வார்கள்.
பாகிஸ்தானில் உங்கள் நிலை அழைக்கப்படாத விருந்தினர்கள் போல ஆகிவிடாதா?
இந்துக்கள் உங்கள் மதப் போட்டியாளர்களாக இருக்கலாம். ஆனால் நிச்சயமாக அவர்கள் பிராந்திய மற்றும் தேசிய போட்டியாளர்கள் அல்ல என்று ஆசாத் சொன்னார்,” என்று அவர் எழுதியுள்ளார்.

பட மூலாதாரம், VIKAS PUBLISHING HOUSE
சிகரெட், மதுவை விரும்பினார்
ஆசாத், மகாத்மா காந்தியின் மீது அபரிமிதமான மரியாதை வைத்திருந்தார், ஆனால் அவருடைய எல்லா அறிவுரைகளையும் ஆசாத் ஏற்கவில்லை. காந்திஜியின் முன்னிலையில் அவர் வெளிப்படையாக சிகரெட் புகைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
அதேநேரத்தில் காந்திஜி புகைபிடிப்பவர்களை விரும்புவதில்லை என்பது அனைவரும் அறிந்ததே. ஆசாத் மது அருந்துவதையும் விரும்பினார்.
நேருவின் செயலாளரான எம்.ஓ.மத்தாய், தனது 'ரிமினிசென்ஸ் ஆஃப் நேரு ஏஜ்' புத்தகத்தில் எழுதுகிறார், "மௌலானா ஆசாத் ஒரு கற்றறிந்த முஸ்லிம் அறிஞர்.
ஆனால் அவர் உலகின் நல்ல விஷயங்களையும் விரும்பினார். அவர் கல்வி அமைச்சராக இருந்தபோது மேற்கு ஜெர்மனிக்கு பயணம் மேற்கொண்டபோது, இந்திய தூதர் ஏ.சி.என்.நம்பியார் தனது வீட்டில் அவரைத் தங்க வைத்தார். மௌலானாவுக்கு மது அருந்துவது பிடிக்கும் எனத் தெரிந்ததால், அவருக்காக வீட்டில் சிறிய பார் ஒன்றை உருவாக்கினார்.”
"மௌலானா வெளிநாடு செல்லும்போது ஷாம்பெயின் குடிக்க விரும்பினார். அவர் தனியாகவே குடிப்பார். வேறு யாரும் உடன் இருப்பதை விரும்பமாட்டார்.
மௌலானாவை கௌரவிக்கும் வகையில் நம்பியார் பல ஜெர்மன் அமைச்சர்களை அழைத்தார். ஆனால் இரவு உணவு முடிந்தவுடன், ஆசாத் சாப்பாட்டு அறையைவிட்டு வெளியேறி தன் அறைக்குச்சென்று தனியாக ஷாம்பெயின் குடிக்க ஆரம்பித்தார்," என்று அவர் மேலும் எழுதினார்.
மாலைவேளைக்குப் பிறகு ஒரு பணியும் இல்லை
"மௌலானா டெல்லியில் இரவு விருந்தில் கலந்து கொள்ளச் செல்லமாட்டார். நேருவின் இல்லத்தில்கூட வெளிநாட்டு விருந்தினர்களுக்கு மரியாதை செலுத்தும் பகல் நேர விருந்தில் மட்டுமே கலந்து கொள்வார்.
வழக்கமாக மாலை ஐந்து மணிக்கு நடக்கும் அமைச்சரவைக் கூட்டத்திலும், எந்த முக்கிய விஷயம் பற்றிப் பேச்சு நடந்துகொண்டிருந்தாலும் சரி, மௌலானா சரியாக ஆறு மணிக்கு எழுந்துவிடுவார். அவர் வீட்டிற்குச் சென்று ஒரு விஸ்கி, சோடா, சமோசா ஆர்டர் செய்வார்.
அவர் மது அருந்தும்போது அவரைச் சந்திக்க சிலருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. பிரதமர் நேரு, அருணா ஆசப் அலி மற்றும் ஆசாத்தின் தனிப்பட்ட செயலாளர் ஹுமாயுன் கபீர் ஆகியோர் இதில் அடங்குவர்,” என்று மத்தாய் எழுதுகிறார்.
நேரு மாலையில் அவரைச் சந்திப்பதற்கு பயப்படுவார். மிக முக்கியமான வேலைகள் வரும்போது மட்டுமே அவரைச் சந்திப்பார்.

பட மூலாதாரம், ORIENT BLACK SWAN
சுதந்திரத்திற்குப் பிறகு நேருவின் அமைச்சரவையில் ஆசாத் கல்வி அமைச்சரானார். ஆரம்பத்திலிருந்தே நேருவுக்கும் சர்தார் படேலுக்கும் இடையே பல விஷயங்களில் கருத்து வேறுபாடுகள் இருந்தன.
"நேருவுக்கும் படேலுக்கும் இடையில் மௌலானா மத்தியஸ்தராக செயல்பட்ட சந்தர்ப்பங்கள் உண்டு. நேரு மீதான கிருஷ்ண மேனனின் செல்வாக்கு, ஆசாத் மற்றும் படேல் இருவருக்கும் பிடிக்கவில்லை. சர்தாருக்கும் ஆசாத்துக்கும் பல விஷயங்களில் கருத்து வேறுபாடு இருந்தது. ஆனால் கிருஷ்ண மேனனை பற்றி இருவருக்கும் ஒரே கருத்து இருந்தது.
சர்தாரின் மரணத்திற்குப் பிறகு, நேரு மிகவும் சக்திவாய்ந்தவராக ஆனார். அவருக்கு ஆசாத்தின் முக்கியத்துவம் குறைந்துகொண்டே போனது. அவர் இன்னும் அவரது தோழராகவும் நண்பராகவும் இருந்தார், ஆனால் கிருஷ்ண மேனனின் முக்கியத்துவம் அதிகரித்தது. மேலும் ஆசாத்தின் செல்வாக்கு குறைந்துகொண்டே வந்தது," என்று ராஜ்மோகன் காந்தி எழுதுகிறார்.
1950களில் நேரு மற்றும் ஆசாத் ஆகியோருடன் தொடர்ந்து தொடர்பில் இருந்த பத்ருதீன் தியாப்ஜி, தனது சுயசரிதையான 'Memoirs of an Egoist' இல் "பண்டிட்ஜி மற்றும் ஆசாத்தின் சந்திப்புகள் குறையத் தொடங்கின. அதேநேரத்தில் கிருஷ்ண மேனன் அமைச்சரவையில் இல்லாதபோதும் தலைமை ஆலோசகராகப் பணிபுரிய ஆரம்பித்தார்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

பட மூலாதாரம், ORIENT BLACK SWAN
குளியலறையில் விழுந்ததால் மரணம்
மௌலானா ஆசாத் எப்பொழுதுமே உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். அவர் உடற்பயிற்சி செய்வதையும் காலையில் நடைப்பயிற்சி மேற்கொள்வதையும் முற்றிலும் விரும்பவில்லை. எப்பொழுதும் புத்தகங்களைப் படித்தபடியே இருப்பார். அவர் வீட்டை விட்டு வெளியே வரவும் மாட்டார். யாரையும் வீட்டிற்கு அழைக்கவும் மாட்டார்.
உடற்பயிற்சியின்மையால் அவரது கால்கள் விறைத்துவிட்டன. சற்று நொண்டியபடி நடந்து வந்த அவர், குளியலறையில் இரண்டு முறை விழுந்துள்ளார்.
1958 பிப்ரவரி 19 ஆம் தேதி அவர் மீண்டும் தனது குளியலறையில் விழுந்துவிட்டார். இந்த நேரத்தில் அவரது முதுகு எலும்பு முறிந்து மயங்கி விழுந்தார்.
சிறிது நேரத்தில் அவருக்கு சுயநினைவு திரும்பியது. நேரு அவரைப் பார்க்க வந்தபோது, அவரைப் பார்த்ததும், “ஜவஹர், குதா ஹாபீஸ்” என்றார்.
தொடர் முயற்சிகளுக்குப் பிறகும் இந்தக் காயத்தில் இருந்து அவரால் மீள முடியவில்லை. 1958 பிப்ரவரி 22ஆம் தேதி அதிகாலை இரண்டு மணிக்கு அவர் இந்த உலகத்திலிருந்து விடைபெற்றார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் டிவிட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












