வரலாறு: இந்திய மக்கள் மீதே குண்டு மழை பொழிந்த இந்திய விமானப் படை – இந்திரா காந்தி ஆட்சியில் என்ன நடந்தது?

இந்திய மக்கள் மீதே குண்டு வீசிய இந்திய விமானப் படை

பட மூலாதாரம், NIRMAL NIBEDAN

    • எழுதியவர், ரெஹான் ஃபஸல்
    • பதவி, பிபிசி நிருபர்

இது ஜனவரி 21, 1966 அன்று நடந்த நிகழ்வு. இந்திரா காந்தி பிரதமராகப் பதவியேற்க இன்னும் மூன்று நாட்களே இருந்தன. மிசோ தேசிய முன்னணி (எம்என்எஃப்) தலைவர் லால்டெங்கா, இந்தோனேசிய அதிபர் சுகர்னோவுக்கு கடிதம் எழுதிக் கொண்டிருந்தார்.

இந்தக் கடிதத்தில் மிசோ வரலாற்றைக் குறிப்பிட்டு அவர் எழுதியிருப்பதாவது, "ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலும் நாம் சுதந்திரம் இல்லாத நிலையிலேயே வாழ்ந்து கொண்டிருந்தோம். அரசியல் விழிப்புணர்வில் பிறந்த தேசியவாதம் தற்போது இங்கு முதிர்ச்சியடைந்துள்ளது. எனது மக்களின் ஒரே ஆசை, தங்களுக்கான தனி நாட்டை உருவாக்குவதே."

லால்டெங்கா இந்தக் கடிதத்தில் கையெழுத்துப் போட்டுக் கொண்டிருந்தபோது, வெளியே நின்றிருந்த இரண்டு சிறுவர்கள், தாங்கள் சேகரித்து வைத்திருந்த 'பீச்' மற்றும் 'அன்னாசிப்பழம்' பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள்.

பீரங்கி குண்டுகளை 'பீச்' என்றும் கைக்குண்டுகளை 'அன்னாசி' என்றும் தங்கள் உரையாடலில் குறியீடாகப் பயன்படுத்துவது அருகில் நின்றவர்களுக்குத் தெரியாது.

அந்தக் காலகட்டத்தில், மிசோ கிளர்ச்சியாளர்களின் சங்கேத மொழியில், 'மூங்கில் குழாய்கள்' என்றால் 3 அங்குல மோட்டார் குண்டுகளைக் குறிக்கும். நீண்ட கழுத்து கொண்ட வெட்டுக்கிளி போன்ற 'Eupham' என்ற பூச்சியைக் குறிப்பிடும்போது, இலகுவான இயந்திரத் துப்பாக்கியைக் குறிப்பதாகப் பொருள். மலைப் பறவையான 'டுக்லோ'வின் அழகைப் பற்றி அவர்கள் பேசினால், டாமி துப்பாக்கியைக் குறிப்பிடுகிறார்கள் என்று பொருள்.

அரசுக் கருவூலம் கொள்ளை

பிப்ரவரி 28, 1966 அன்று, மிசோ நேஷனல் ஃப்ரண்டின் கிளர்ச்சியாளர்கள் மிசோரமில் இருந்து இந்திய பாதுகாப்புப் படைகளை விரட்ட 'ஆபரேஷன் ஜெரிகோ'வை தொடங்கினர். இந்தப் போராட்டத்தில், ஐஸ்வால் மற்றும் லுங்லாயில் உள்ள அசாம் ரைஃபிள்ஸின் கண்டோன்மென்ட் முதலில் குறி வைக்கப்பட்டது.

இந்திய மக்கள் மீதே குண்டு வீசிய இந்திய விமானப் படை

பட மூலாதாரம், NIRMAL NIBEDAN

அடுத்த நாள், மிசோ தேசிய முன்னணி இந்தியாவில் இருந்து சுதந்திரம் பெற்றுவிட்டதாக அறிவித்தது. சிறிது நேரத்தில், அவர்கள் ஐஸ்வாலில் உள்ள அரசாங்க கருவூலத்தையும் சம்பை மற்றும் லுங்லாய் மாவட்டங்களில் உள்ள ராணுவ தளங்களையும் கைப்பற்றினர்.

நிர்மல் நிபேதன் தனது 'மிசோரம்: த டேக்கர் பிரிகேட்' என்ற புத்தகத்தில், "கொரில்லாக்களின் ஒரு படைப்பிரிவு, துணைப் பிரிவு அதிகாரியையும் ஊழியர்களையும் பிணைக் கைதிகளாகப் பிடித்தது. மற்றொரு குழு பொதுப்பணித்துறை அலுவலகத்தின் அனைத்துப் பொருட்களையும் ஜீப்பில் ஏற்றிச் சென்றது. போராட்டக்காரர்களின் மற்றொரு குழு, அசாம் ரைஃபிள்ஸ் முகாமின் மீது தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்திக் கொண்டிருந்தது. லுங்லாய் அரசு கருவூலத்தில் சோதனை நடத்திய பிறகு இரும்புப் பெட்டிகள் ஜீப்பில் ஏற்றப்பட்டன. பின்னர் அதில் 18 லட்சம் ரூபாய் இருந்ததைக் கண்டறிந்தனர்," என்று எழுதுகிறார்.

இந்திய மக்கள் மீதே குண்டு வீசிய இந்திய விமானப் படை

பட மூலாதாரம், NIRMAL NIBEDAN

தொலைபேசித் தொடர்புகள் துண்டிப்பு

எல்லை நகரமான சம்ஃபாயில் உள்ள ஒன் அசாம் ரைஃபிள்ஸ் தளத்தின் மீது நள்ளிரவில் நடத்தப்பட்ட தாக்குதல் மிகவும் வேகமாக நடந்ததால், ஜவான்களுக்கு ஆயுதங்களை லோட் செய்யவோ லுங்லாய் மற்றும் ஐஸ்வாலுக்குத் தகவல் தெரிவிக்கவோ நேரம் கிடைக்கவில்லை.

அங்கு வைக்கப்பட்டிருந்த அனைத்து ஆயுதங்களையும் கொரில்லாக்கள் சூறையாடினர். அவர் கைகளில் ஆறு இலகுரக இயந்திரத் துப்பாக்கிகள், 70 துப்பாக்கிகள், 16 ஸ்டென் துப்பாக்கிகள் மற்றும் ஆறு கிரனேட் சுடும் துப்பாக்கிகள் இருந்தன. ஒரு ஜூனியர் கமிஷன் அதிகாரி மற்றும் 85 ஜவான்கள் சிறைபிடிக்கப்பட்டனர்.

இந்தத் தாக்குதலின் கதையை வெளியுலகுக்குச் சொல்வதற்கு இரண்டு ராணுவ வீரர்களால் மட்டுமே அங்கிருந்து தப்பிச் செல்ல முடிந்தது. ஒரு கொரில்லாக் குழு தொலைபேசித் தொடர்பகம் சென்று அனைத்து இணைப்புகளையும் துண்டித்தது. இதன் காரணமாக இந்தியாவின் மற்ற பகுதிகளுடன் ஐஸ்வாலின் தொடர்பு துண்டிக்கப்பட்டது.

அதிகாலை 3.30 மணியளவில், மிசோ தேசிய முன்னணியின் (எம்என்எஃப்) போராளிகள் லால்டெங்காவையும் அவரது அமைச்சரவையின் ஆறு உறுப்பினர்களையும் ஐஸ்வாலில் உள்ள எம்என்எஃப் தலைமையகத்தில் இருந்து, ஐந்து மைல் தொலைவில் தெற்கு ஹிலிமென் பகுதிக்கு அழைத்துச் சென்றனர்.

இந்திய ராணுவம் தனது வீரர்களையும் ஆயுதங்களையும் ஹெலிகாப்டர்கள் மூலம் அங்கு கொண்டு செல்ல முயன்றது. ஆனால் எம்என்எஃப்- இன் இடைப்பட்ட துப்பாக்கிச் சூடு அவர்களைத் தரையிறக்க அனுமதிக்கவில்லை.

இந்திய மக்கள் மீதே குண்டு வீசிய இந்திய விமானப் படை

பட மூலாதாரம், NIRMAL NIBEDAN

தூஃபானி மற்றும் ஹன்டர் விமானங்கள் குண்டு மழை

இந்திரா காந்தி தலைமையிலான மத்திய அரசு, முந்தைய மாதம்தான் நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றியது. இந்த நிகழ்வால் அவரது அரசாங்கம் அதிர்ச்சியடைந்தது, ஆனால் பதிலடி கொடுக்க நேரம் எடுக்கவில்லை.

மார்ச் 5, 1966 அன்று, காலை 11:30 மணியளவில், இந்திய விமானப்படையின் நான்கு தூஃபானி மற்றும் ஹண்டர் விமானங்களிடம் ஐஸ்வால் மீது குண்டுவீசும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. தேஜ்பூர், கும்பிகிராம் மற்றும் ஜோர்ஹாட் ஆகிய இடங்களிலிருந்து விண்ணிலிருந்து, இந்த விமானங்கள் முதலில் இயந்திரத் துப்பாக்கிகளால் கீழ் நோக்கிச் சுட்டன. மறுநாள் மீண்டும் வந்து தீ பிடிக்கும் குண்டுகளை வீசின.

மார்ச் 13 வரை ஐஸ்வால் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் குண்டுகள் வீசப்பட்டன. இதற்கிடையில், பயந்துபோன மக்கள் நகரத்தைவிட்டு வெளியேறி, சுற்றியுள்ள மலைகளுக்குத் திரும்பினர். சில கிளர்ச்சியாளர்கள் தப்பி ஓடி மியான்மர் மற்றும் பங்களாதேஷ் காடுகளில் தஞ்சம் புகுந்தனர். அது அப்போது கிழக்கு பாகிஸ்தான் என்று அழைக்கப்பட்டது.

மிசோ நேஷனல் ஃப்ரண்டின் உறுப்பினரான தங்காசாங்கா அந்த நாட்களை நினைவு கூர்ந்தார், "திடீரென்று நான்கு விமானங்கள் எங்கள் சிறிய நகரத்தின் மீது உறுமிக்கொண்டு பறந்தன. அவை மேலே இருந்து துப்பாக்கிச் சூடு நடத்தியதோடு குண்டுகளையும் வீசுகின்றன. பல கட்டடங்கள் தீப்பிடித்தன. வீடுகள் இடிந்து விழுந்தன, தூசி பரவியது. சுற்றிலும் மக்கள் அலறியபடி அங்கும் இங்கும் ஓடினர்."

மத்திய அரசு தனது சொந்தப் பகுதியில் வெடிகுண்டு வீசும் என்று யாரும் நினைத்துக்கூட பார்க்கவில்லை. இது குறித்து கிராம சபை உறுப்பினர் ராம்ருவாதா கூறுகையில், ''சீனாவுக்குள் விமானத்தை அனுப்பும் துணிச்சலை மேற்கொள்ள முடியாத அரசு, போர் விமானங்களைப் பயன்படுத்தி ஐஸ்வால் மீது குண்டு வீசியதைக் கண்டு அதிர்ந்தோம்," என்றார்.

இந்திய மக்கள் மீதே குண்டு வீசிய இந்திய விமானப் படை

பட மூலாதாரம், NIRMAL NIBEDAN

'நல்ல விமானம், கோபமான விமானம்'

காசி சட்டமன்ற உறுப்பினர்களான ஜி.ஜி. ஸ்வாலே மற்றும் ரெவரெண்ட் கோல்ஸ் ராய் தலைமையிலான மனித உரிமைக் குழுவிடம் உள்ளூர் மனிதர் ஒருவர் கூறினார், "அன்று ஐஸ்வால் மீது இரண்டு வகையான விமானங்கள் பறந்தன, நல்ல விமானம், கோபமான விமானம். நல்ல விமானம் ஒப்பீட்டளவில் மெதுவாகப் பறந்தது. அவற்றிலிருந்து நெருப்பு அல்லது புகை மழை இல்லை. கோபமான விமானங்களின் சத்தம் நம்மை அடையும் முன்பே அது கண்ணில் இருந்து மறைந்தது. அவை நெருப்பைப் பொழிந்தன."

மிசோ தேசிய ராணுவத்தைச் சேர்ந்த சி ஜாமா என்பவர் எழுதிய 'அன்டோல்ட் ஸ்டோரி' என்ற புத்தகத்தில் இந்தச் சம்பவத்தை விரிவாகக் குறிப்பிட்டுள்ளார்.

அவர், "குண்டு வீசப்பட்ட நேரத்தில் நான் என் தாத்தாவின் வீட்டின் அருகே ஒரு மரத்தடியில் ஒளிந்து கொண்டேன். வெடிப்புகள் என்னை பயமுறுத்தியது, நான் இரண்டு கைகளாலும் என் காதுகளை மூடிக்கொண்டேன். குண்டுவெடிப்பு நிறுத்தப்பட்டதும், நான் வீட்டிற்குச் சென்றேன், அங்கு யாரும் இல்லை. பிறகு நான் காட்டை நோக்கி ஓடினேன், காட்டில் என் அம்மாவைச் சந்தித்தேன், அவள் கைகளில் என் தங்கை இருந்தாள், அவள் முதுகு மற்றும் கைகளில் இருந்து இரத்தம் வருவதை நான் கண்டேன்." என்று எழுதுகிறார்.

ஐஸ்வால் தவிர, கவ்சல், புக்புய், வர்தேகாய், முவால்துவாம், சங்காவூ மற்றும் புங்கமூன் ஆகிய இடங்களிலும் இந்த குண்டுகள் வீசப்பட்டன.

இந்திய மக்கள் மீதே குண்டு வீசிய இந்திய விமானப் படை

பட மூலாதாரம், NIRMAL NIBEDAN

அடையாள அட்டை கட்டாயம்

லுங்லாய் நோக்கி அணிவகுத்துச் செல்லும் துருப்புக்கள், நகரம் முழுவதும் எம் என் எஃப் ஆல் கட்டுப்படுத்தப்பட்டதால், அங்கும் குண்டுகளை வீசுவதாக அச்சுறுத்தினர்.

சோங்சைலோவா தனது 'மிசோரம் ட்யூரிங் 20 டார்க் இயர்ஸ்' என்ற புத்தகத்தில், "குண்டுகளால் ஏற்படும் உயிர் மற்றும் உடைமை இழப்புகளில் இருந்து நகரத்தைக் காப்பாற்றுவதற்காக அப்பாவி பொதுமக்களுக்காக நகரத்தை விட்டு வெளியேறுமாறு சர்ச் தலைவர்கள் எம் என் எஃப்-ஐ கேட்டுக் கொண்டனர். இந்த கோரிக்கையை ஏற்று எம் என் எஃப் நகரத்தை விட்டு வெளியேறியது." என்று குறிப்பிடுகிறார்.

"மார்ச் 13 அன்று இந்திய இராணுவம் அங்கு நுழைந்தபோது, அது எந்த எதிர்ப்பையும் சந்திக்கவில்லை. ஆனால் மிசோ அரசாங்கம் அந்த பகுதியில் வசிக்கும் அனைத்து மிசோ அல்லாத மக்களையும் ஆகஸ்ட் 17, 1967 க்குள் அந்த பகுதியை விட்டு வெளியேற உத்தரவிட்டது. எங்கள் நிர்வாகத்தில் பணிபுரியாத மிசோ அல்லாதவர்கள், இந்திய அரசு ஊழியர்கள் மற்றும் இந்து மக்கள் செப்டம்பர் 1, 1967க்குள் மிசோரமை விட்டு வெளியேற வேண்டும்." என்று உத்தரவானது.

சில்சார்-ஐஸ்வால்-லுங்லாய் சாலையின் இருபுறமும் 10 மைல் பரப்பளவை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அரசாங்கம் அறிவித்தது. கிளர்ச்சியாளர்களுக்கும் உள்ளூர் மக்களுக்கும் இடையே வேறுபாடு காட்டுவதற்காக மாவட்டம் முழுவதும் அடையாள அட்டைகள் விநியோகிக்கப்பட்டன. அடையாள அட்டை இல்லாத நபரை உடனடியாகக் கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்திய மக்கள் மீதே குண்டு வீசிய இந்திய விமானப் படை

பட மூலாதாரம், NIRMAL NIBEDAN

மௌனம் காத்த அரசு

இந்த குண்டுவெடிப்பு அய்ஸ்வால் நகரில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது, ஆனால் இந்த முழு சம்பவத்திலும் 13 பொதுமக்கள் மட்டுமே கொல்லப்பட்டனர் என்பது பெருமைக்குரிய விஷயம். அரசாங்கம் மற்றும் விமானப்படை சார்பாக, இந்த விஷயத்தில் மௌனம் காக்கப்பட்டது அல்லது கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

பல தசாப்தங்களுக்குப் பிறகு இந்தச் சம்பவத்தை நேரில் கண்ட சிலர் வெளியுலகுக்குச் சொல்லத் தொடங்கியபோதுதான் இந்தச் சம்பவம் பற்றிய விவரம் வெளிச்சத்துக்கு வந்தது. இந்தியாவிற்குள் இந்திய மக்களைத் தாக்குவதற்கு விமானப்படை பயன்படுத்தப்பட்ட முதல் மற்றும் ஒரே முறை இதுவாகும்.

கொல்கத்தாவை சேர்ந்த செய்தித்தாள் ஹிந்துஸ்தான் ஸ்டாண்டர்ட், பிரதமர் இந்திரா காந்தி கூறியதை மேற்கோள் காட்டி, போர் விமானங்கள் துருப்புகளையும் பொருட்களையும் இறக்குவதற்கு அனுப்பப்பட்டன, ஆனால் உணவுப் பொருட்களை வீச, போர் விமானங்கள் ஏன் பயன்படுத்தப்பட்டன என்ற கேள்வியும் எழுப்பப்பட்டது.

இந்திய மக்கள் மீதே குண்டு வீசிய இந்திய விமானப் படை

பட மூலாதாரம், NIRMAL NIBEDAN

இந்திராகாந்தியின் பங்கு குறித்த கேள்வி

மிசோக்களுக்கு எதிராக இந்திரா காந்தி விமான சக்தியைப் பயன்படுத்தியது சரியா என்ற கேள்வியும் எழுந்தது. முன்னதாக பலுசிஸ்தானில் உள்ள தனது குடிமக்களுக்கும் லிபியாவில் கர்னல் கடாபிக்கும் எதிராக பாகிஸ்தான் விமானப்படையை பயன்படுத்தியது.

பிரபல பத்திரிக்கையாளரும், 'தி பிரிண்ட்' நாளிதழின் ஆசிரியருமான சேகர் குப்தா, 'இந்திரா காந்தி தனது சொந்த நாட்டு மக்களுக்கு எதிராக விமானப்படையைப் பயன்படுத்துவது சரியா?' என்ற தனது கட்டுரையில், அவரைக் குற்றமற்றவராகச் சித்தரித்துள்ளார்.

"இந்திரா காந்தியின் இடத்தில் உங்களை நிறுத்துங்கள். அவர் லால் பகதூர் சாஸ்திரி இறந்து ஆறு வாரங்களுக்குப் பிறகுதான் ஆட்சிக்கு வந்தார். பாகிஸ்தானுடனான இந்தியாவின் போர் ஒரு சில மாதங்களில் முடிவடைந்தது, அதில் உறுதியான முடிவு இல்லை. திராவிட இயக்கம் தெற்கில் வேகம் பிடித்து வருகிறது, சீனா மற்றும் பாகிஸ்தானின் வெளிப்படையான ஆதரவுடன் பிரிவினைவாத சக்திகள் நாகாலாந்தில் தலை தூக்கியுள்ளன," என்று சேகர் குப்தா எழுதுகிறார்.

1962இல் சீனாவுடனான போரில் தோல்வியடைந்த பிறகும் இந்திய எல்லையில் சீனாவின் அழுத்தம் குறையவில்லை. வறட்சிக்குப் பிறகு இந்தியா கடினமான பொருளாதாரச் சூழலைக் கடந்து சென்றது. அப்படிப்பட்ட நேரத்தில் லால்டெங்காவும் கிளர்ச்சிக் கொடியை உயர்த்தியிருந்தார்.

"அப்போது மிசோரமில் இந்தியத் துருப்புகள் அதிக அளவில் இல்லை. ஒரு சில துணை ராணுவப் படையினர், அசாம் ரைஃபிள்ஸ் மட்டுமே அப்பகுதியில் இருந்தனர். ஐஸ்வாலில், கிளர்ச்சியாளர்கள் அரசாங்கத் தலைமையகத்தின் மீது MNF கொடியை ஏற்றினர். ராம் மனோகர் லோஹியாவால் 'ஊமை பொம்மை' என்று அழைக்கப்பட்ட இந்திரா காந்தி, இந்திய விமானப்படையைப் பயன்படுத்த முடிவு செய்தார்.

இந்திய மக்கள் மீதே குண்டு வீசிய இந்திய விமானப் படை

பட மூலாதாரம், Getty Images

ராஜேஷ் பைலட் மற்றும் சுரேஷ் கல்மாடியின் பங்கு

அப்போது இந்திய விமானப்படைக்குக் கிழக்குப் பகுதியில் அதிக போர் திறன் இல்லாததால், காலாவதியான தூஃபானி மற்றும் ஹண்டர் விமானங்கள் இந்த நடவடிக்கைக்குப் பயன்படுத்தப்பட்டன.

சேகர் குப்தா, "இதன் முக்கிய நோக்கம் கிளர்ச்சியாளர்களிடையே அச்சத்தையும் குழப்பத்தையும் பரப்புவது, அதனால் இந்திய துருப்புகள் அங்கு செல்ல நேரம் கிடைக்கும். மெதுவாகப் பறக்கும் இந்த விமானங்களின் பின்புறத்தில் வெடிமருந்துகள் ஏற்றப்பட்டன, அது ஐஸ்வால் மீது எதேச்சையாக வீசப்பட்டது. இந்த விமான பைலட்டுகளில் இரண்டு பேர் பின்னர் இந்திய அரசியலில் பெயர் பெற்றவர்கள். ஒருவர் ராஜேஷ் பைலட் மற்றும் மற்றொருவர் சுரேஷ் கல்மாடி. இருவரும் பின்னர் மத்திய அமைச்சர்கள் ஆனார்கள்," என்று குறிப்பிடுகிறார்.

விமானப் படையைப் பயன்படுத்துவதை ஆதரித்து எத்தனை வாதங்கள் முன்வைக்கப்பட்டாலும், அது மிசோ கிளர்ச்சியாளர்களின் கைகளில் ஒரு பிரசார ஆயுதமானது. அதை அவர்களும் இந்தியாவுக்கு எதிராகக் கடுமையாகப் பயன்படுத்தினார்கள்.

இந்தியா தனது மக்களைப் பற்றிக் கவலைப்படுவதில்லை, அவர்கள் மீது குண்டுகளை வீசத் தயங்குவதில்லை என்ற தோற்றத்தை உருவாக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

இந்திய மக்கள் மீதே குண்டு வீசிய இந்திய விமானப் படை

பட மூலாதாரம், RAMA PILOT

கிராம மக்களை இடமாற்றம் செய்யும் சர்ச்சைக்குரிய திட்டம்

குண்டு மழைக்குப் பிறகு, 1967இல் மற்றொரு சர்ச்சைக்குரிய திட்டம் அரசாங்கத்தால் செயல்படுத்தப்பட்டது, அதன் கீழ் கிராமங்கள் மறுசீரமைக்கப்பட்டன.

இதன் கீழ், மலைகளில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மிசோக்கள் தங்கள் கிராமங்களில் இருந்து அகற்றப்பட்டு, பிரதான சாலையின் இருபுறமும் குடியேற்றப்பட்டனர், இதனால் இந்திய நிர்வாகம் அவர்களைக் கண்காணிக்கும்.

எகனாமிக் டைம்ஸ் நாளிதழில் வெளியான 'மிசோரமில் வான் தாக்குதல், 1966 - அவர் டர்ட்டி லிட்டில் சீக்ரெட்' என்ற கட்டுரையில், அபிக் பர்மன் எழுதுகிறார், "ராணுவத் திட்டம் எல்லா இடங்களிலிருந்தும் கிராம மக்களைச் சேகரித்து இந்தச் சாலையின் இருபுறமும் குடியேற்றுவதாக இருந்தது. ராணுவம் கிராம மக்களை தங்கள் முதுகில் சுமக்கக்கூடியதை மட்டும் எடுத்துச் செல்லுமாறும், மீதியை எரிக்குமாறும் கேட்டுக்கொண்டது. இதனால் மிசோரமில் விவசாயம் பெரும் சேதத்தைச் சந்தித்தது. அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு அப்பகுதியில் வறட்சி போன்ற சூழ்நிலை ஏற்பட்டது."

இந்திய மக்கள் மீதே குண்டு வீசிய இந்திய விமானப் படை

பட மூலாதாரம், Getty Images

20 ஆண்டுகளுக்குப் பின் அமைதி

கிராமவாசிகளை வேறு இடத்திற்கு மாற்றும் யோசனை பிரிட்டிஷ் காலனி அரசாங்கத்தின் யுக்தியிலிருந்து பிறந்ததாகும்.

20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் போயர் போரின்போது, ஆங்கிலேயர்கள் இதேபோல் கறுப்பின விவசாயிகளை இடம்பெயர்த்தனர். ஆனால் ஆங்கிலேயர்கள் தங்கள் அடிமைகளாக இருந்தவர்கள் மீது இந்தக் கொடுமைகளைச் செய்தனர்.

ஆனால் இங்கு இந்திய அரசு தனது சொந்த குடிமக்களை இடமாற்றம் செய்து அவர்களைச் சிக்கலில் ஆழ்த்தியது.

இந்திய மக்கள் மீதே குண்டு வீசிய இந்திய விமானப் படை

பட மூலாதாரம், NIRMAL NIBEDAN

மிசோரமில் உள்ள 764 கிராமங்களில் 516 கிராமங்களில் வசிப்பவர்கள் வெளியேற்றப்பட்டனர். 138 கிராமங்கள் மட்டுமே தொடப்படவில்லை. இந்த குண்டுவெடிப்பு அந்த நேரத்தில் மிசோ கிளர்ச்சியை ஒடுக்கியிருக்கலாம், ஆனால் அடுத்த இரண்டு தசாப்தங்களுக்கு மிசோரமில் அமைதியின்மை நிலவியது.

1986இல் புதிய மாநிலம் உருவானவுடன் மிசோரமில் நிலவிய கலவரம் முடிவுக்கு வந்தது. ராஜீவ் காந்தியுடனான ஒப்பந்தத்திற்குப் பிறகு, எம்என்எஃப்- இன் தலைவராக இருந்த லால்டெங்கா, மாநிலத்தின் முதல் முதலமைச்சராகப் பதவியேற்றார்.

20 ஆண்டுகளுக்கு முன்பு எம்என்எப் கொடி ஏற்றப்பட்ட அதே இடத்தில் இந்தியக் கொடியை ஏற்றினார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: