"கேலிகளுக்கு அஞ்சி என் பெண்மையை மறைத்தேன்" - திருநங்கை மரக்காவின் நெகிழ்ச்சி கதை

- எழுதியவர், திவ்யா ஜெயராஜ்
- பதவி, பிபிசி தமிழ்
”நீங்கள் யாராக இருந்தாலும் முதலில் உங்களை நீங்கள் நேசிக்கத் தொடங்குங்கள். உங்களுடைய உடலுக்கு, உணர்வுக்கு, ஆன்மாவிற்கு நீங்கள் அறம் செய்யத் தொடங்குங்கள்.
அதுதான் உங்களை நீங்களே முழுமையாக ஏற்றுகொள்வதற்கான முதல் படி. உங்களுடைய இயல்பை நீங்கள் ஏற்றுகொண்ட பின் இந்த சமூகத்தில் எதை வேண்டுமானாலும் தைரியமாக எதிர்கொள்ளலாம்” என்று தன்னம்பிக்கையுடன் நேர்மறை கருத்துகளை மக்களிடம் விதைத்து வருகிறார் திருநங்கை மரக்கா.
சென்னையில் கடந்த 9 ஆண்டுகளாக, சிறப்பு குழந்தைகளுக்கான பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வரும் மரக்கா, தற்போது பால் புதுமையினருக்கான ஒரு செயற்பாட்டாளராகவும் இயங்கி வருகிறார். கடந்த மாதம் “மெல்லக் கொல்லும் மன்னிப்புகள்“ என்ற பால் புதுமையினர் பற்றிய புத்தகம் ஒன்றையும் எழுதி வெளியிட்டுள்ளார்.
இவர் தனது பாலினம் சார்ந்த அடையாளத்தை பொதுவெளியில் வெளிபடுத்தத் துவங்கினார் என்பதற்காக சமீபத்தில் இவரது வேலை எந்தவொரு முன்னறிவிப்பும் இல்லாமல் பறிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அதன்பின் பல்வேறு தரப்பிலிருந்து எழுந்த அழுத்தங்களின் காரணமாக தற்போது மீண்டும் அவருக்கு அந்த வேலை வழங்கப்பட்டிருக்கிறது.
இந்தியா போன்ற நாடுகளில் திருநர் சமூகத்தையும் பால் புதுமையினரையும் இயல்பாக ஏற்றுகொள்ளும் பக்குவம் இன்றளவும் வரவில்லை. அவர்கள் இந்த சமூகத்தில் எதிர்கொள்ளும் சங்கடங்கள் ஏராளம்.
ஆனால் ”எவ்வளவு அவமானங்களைச் சந்தித்தாலும் எனது சோகங்களை நான் வெளியே காட்டிக்கொள்ள விரும்புவதில்லை. எப்போதும் மக்களிடம் அன்பையும் நேர்மறை எண்ணங்களையும் மட்டுமே வளர்க்க விரும்புகிறேன்” என்று கூறும் மரக்கா, தன்னுடைய வாழ்க்கை குறித்து பிபிசியிடம் பேசத் துவங்குகிறார்.
“எனக்குள் இருந்த பெண்மையை நான் உணர்வதற்கு முன்பாகவே என்னைச் சுற்றியிருந்தவர்கள் உணர்ந்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். ஏனென்றால் என்னுடைய ஆறு வயதிலேயே எனது நெருங்கிய உறவுக்கார ஆண் ஒருவர் என்னை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கினார்.
ரத்தம் சொட்டும் அளவிற்கு கொடூரமான பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகியிருந்தாலும், அந்தச் சிறு வயதில் அதை வெளியே சொல்ல முடியவில்லை. அதைத் தொடர்ந்து இன்னும் பல மோசமான அனுபவங்களைச் சந்தித்திருக்கிறேன்.
ஏழு வயதாக இருக்கும்போது எனது வீட்டு உரிமையாளரின் மகன், என்னை அனைவரின் முன்னாலும் நிற்க வைத்து, அந்தக் காலகட்டத்தில் திருநங்கைகளை இழிவுபடுத்தும் விதமாக வெளியாகியிருந்த ஒரு சினிமா பாடலை பாடச் சொல்லி கட்டாயப்படுத்தினார். அப்போது சுற்றியிருந்த அனைவரும் என்னைப் பார்த்து சிரித்தனர்.

பத்து வயதாக இருக்கும்போது, ஒரு கோயிலில் வைத்து இரண்டு பேர் என்னை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்தார்கள். இப்படிப் பல கசப்பான அனுபவங்களை சிறு வயதிலேயே அடுத்தடுத்து சந்தித்ததால், என்னை ஏன் எல்லோரும் இப்படி துன்புறுத்துகிறார்கள் என்று யோசிக்கத் துவங்கினேன்.
என்னுடைய உடல் அசைவுகளில் பெண்மை இருப்பது எனக்குப் புரிந்தது. நான் பருமனாக இருந்ததால் என்னுடைய உடல் வாகும் பெண் தன்மையுடன் தோற்றமளிக்கும்.
பத்தாவது படிக்கும்போது எனக்குள் பெண்மை இருப்பதை நான் முழுவதுமாக உணர்ந்தேன். ஆனால் இப்படியே இருந்தால் சுற்றி இருக்கும் அனைவரின் கேலி, கிண்டல்களுக்கும், துன்புறுத்தல்களுக்கும் ஆளாவோம் என்று நினைத்து, எனக்குள் இருந்த பெண்மை வெளியே தெரியாதவாறு கட்டுப்படுத்தத் துவங்கினேன்.
என்னை அனைவரிடமும் ஆணாகக் காட்டிக்கொள்ள பெரிதும் முயற்சி செய்தேன். ஆனால் அப்படியும் வளர வளர அனைத்து விதமான கேலி, கிண்டல்களும் தொடர்ந்த வண்ணம்தான் இருந்தன.
என்னுடைய கல்லூரி காலத்தில், நண்பர்கள் பலரும் என்னைப் போல நடந்து காட்டி அவமானப்படுத்தினர். இப்படி சுற்றி இருந்தவர்களுக்காக பயந்து பயந்து என்னுடைய இயல்புக்கு மாறாக என்னுடைய வாழ்வை வாழ்ந்துகொண்டிருந்தேன். அது மிகவும் கொடுமையாக இருந்தது” என்று வேதனையுடன் கூறுகிறார் மரக்கா.
கிட்டதட்ட 12 ஆண்டுகள் மனப் போராட்டத்திற்குப் பிறகு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர்தான் மரக்கா தன்னுடைய அடையாளத்தை இந்த சமூகத்திற்கு மத்தியில் தைரியமாக வெளிப்படுத்தத் துவங்கியிருக்கிறார்.

இதுகுறித்து அவர் பேசும்போது, “2018இல் எனக்கும் என் பெற்றோருக்கும் இடையே ஏற்பட்ட சில முரண்பாடு காரணமாக நான் வீட்டைவிட்டு வெளியேறி தனியாக வசிக்கத் துவங்கினேன். அதற்கு அடுத்ததாக 2019ஆம் ஆண்டு முதன்முதலாக பால் புதுமையினருக்கான “பிரைட் வாக்கில்” (Pride walk) கலந்துகொண்டேன்.
அங்குதான் முதன்முறையாக எந்தவொரு தயக்கமும் இன்றி ஆடிப்பாடி உற்சாகமாகச் சுற்றித் திரிந்தேன். என்னால் இவ்வளவு தூரம் உற்சாகமாக நடனமாட முடியும் என்பதையே நான் அப்போதுதான் உணர்ந்தேன்.
அந்த ’பிரைட் வாக்’ என் வாழ்வின் முக்கிய திருப்புமுனையாக அமைந்தது எனக் கூறலாம். அதன்பின்னர் 2020ஆம் ஆண்டு, கொரோனா ஊரடங்கு காலத்தில் அனைவரைப் போலவே நானும் முற்றிலுமாக வீட்டினுள் முடங்கிப் போனேன். ஆனால் அந்த நேரத்தில்தான் என்னைப் போன்ற மற்ற சில நண்பர்களின் நட்பும், ஆதரவும் எனக்குக் கிடைத்தது. என்னுடைய இயல்பை வெளிப்படுத்துவதில் எனக்குள் இருந்த தயக்கங்கள் கொஞ்சம் கொஞ்சமாக கலையத் துவங்கியன.
ஆனால் இங்கு நான் மற்றொரு விஷயத்தையும் குறிப்பிட வேண்டும். ’எனக்குள் இருந்த பெண்மையை என்னால் உணர முடிந்ததே தவிர, நான் எந்த பாலினத்தைச் சேர்ந்தவராக இருக்கிறேன் என்பதை முடிவு செய்வதில் எனக்கு குழப்பங்கள் நீடித்தன’.

முதலில் என்னை ஒரு ‘Non Binary’ நபராக உணர்ந்தேன், பின் நிலையான பாலின தேர்வை கொள்ள முடியாத ‘Gender fluid’ நபராக இருக்கிறேன் என நினைத்தேன், மற்றொரு நிலையில் என்னை தன்பாலின ஈர்ப்பாளராக உணர்ந்தேன்.
அதவாது LGBTQ+ல், Q என்பது ஒருவர் தான் எந்த பாலினத்தைச் சேர்ந்தவராக இருக்கிறோம் அல்லது எந்த பாலினத்தின் மீது ஈர்ப்புக் கொண்டவராக இருக்கிறோம் என்பதை முடிவு செய்ய முடியாமல் தவிக்கும் ஒரு நிலையற்ற தன்மையைக் குறிக்கிறது.
அப்படியான நிலையில்தான் இத்தனை ஆண்டுகளாக நான் இருந்தேன். ஆனால் இப்போது இந்த அனைத்து குழப்பங்களையும் கடந்து, நான் ஒரு திருநங்கையாகத்தான் இருக்கிறேன் என்பதை உறுதி செய்துவிட்டேன்” என்று விவரிக்கிறார் மரக்கா.
”மரக்கா என்பது நெல் அல்லது அரிசியை அளப்பதற்கு உபயோகிக்கப்படும் ஓர் அளவை. அதைப் போல மனித மனங்களையும் அவர்களுடன் உண்டாகும் அனுபவங்களையும் அளந்து எனக்குள் நானே கோனியாக இருந்து கொட்டிக்கொள்ள வேண்டும் என்பதற்காக மரக்கா என்ற பெயரை சூட்டிக்கொண்டேன்.
நண்பர் ஒருவர் எனக்கு பரிந்துரைத்த பெயர் இது. இந்தப் பெயரை முதலில் நான் எனது கவிதைகளுக்குத்தான் புனைப்பெயராகப் பயன்படுத்த துவங்கினேன். திருநங்கையாக மாறிய பிறகு இதையே எனது பெயராக மாற்றிக் கொண்டேன்” என்றும் தனது பெயர் குறித்த சுவாரஸ்யத்தை அவர் குறிப்பிடுகிறார்.

ஒருவர் தன்னை திருநங்கையாக அடையாளப்படுத்தி கொள்வதற்கு, அறுவை சிகிச்சை செய்திருக்க வேண்டுமென்ற அவசியம் இல்லை என்று சுட்டிக்காட்டுகிறார் மரக்கா.
அவர்கள் அறுவை சிகிச்சைகளையும் மற்ற சில மருத்துவ சிகிச்சைகளையும் எடுத்துக்கொள்ள வேண்டுமென்ற கட்டாயம் இல்லை எனவும், அறுவை சிகிச்சை செய்துகொண்டால்தான் நீங்கள் திருநங்கை என்று சொல்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை எனவும் அவர் குறிப்பிடுகிறார்.
அதேபோல இந்த பொதுச்சமூகத்திற்கு, திருநர் சமூகம் உட்பட ஒட்டுமொத்த ’குயர்’ (பால் புதுமையினர்) சமூதாயத்தின் மீதான முறையான புரிதல் இல்லை என்ற தனது வருத்தத்தையும் அவர் பிபிசியிடம் பகிர்ந்துக்கொண்டார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, “குயர் என்ற வார்த்தைக்கு இங்கு பலருக்கு அர்த்தம் தெரியாது. குயர் என்று நீங்கள் கூகுளில் போட்டு தமிழாக்கம் தேடினால் ’விசித்திரமான’ என்று பொருள் தரும். ஏனென்றால் ஆரம்ப காலத்தில் மேற்கத்திய நாடுகளில் எங்களைப் போன்ற மனிதர்களை விசித்திரமாக இருக்கிறோம் என்று கூறி ’குயர்’ என்று அழைக்கத் தொடங்கினர். ஆனால் ”உங்களை எதைக் கொண்டு தாக்குகிறார்களோ, அதையே உங்களது ஆயுதமாக மாற்றுங்கள்” என்று அம்பேத்கர் சொன்னது போல, இன்று குயர் என்ற வார்த்தையே எங்களது சக்திவாய்ந்த அடையாளமாக மாறியிருக்கிறது.
இந்த பொதுச் சமூகத்திடமிருந்து நாங்கள் சற்று வேறுபட்டவர்களாக இருக்கிறோம். எனவே விசித்திரமாக இருக்கிறவர்கள் என்பதைவிட வேறுபட்டவர்கள் என்று கூறுவதுதான் குயர் என்ற வார்த்தைக்கு சரியான பொருளாக இருக்கும். ஏனென்றால் இன்று நேற்று அல்ல, மனித குலம் தோன்றிய ஆதி காலத்திலிருந்தே எங்களைப் போன்ற மனிதர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். நாங்களும் இயற்கையின் ஓர் அங்கம்தான்.
ஒரு தனியார் யூடியூப் சேனல் என்னை நேர்காணலுக்கு அழைத்திருந்தார்கள். நானும் எனக்குப் பிடித்தவாறு புடவை அணிந்துகொண்டு, என்னுடைய அனுபவங்களைப் பகிர்வதற்குச் சென்றிருந்தேன்.
நேர்காணல் முடிந்த பிறகு, அங்கிருந்த தலைமை நிர்வாகி ஒருவர் என்னைப் பார்த்து ’சார்’ என்று அழைக்கிறார். அது மனதளவில் என்னை மிகவும் பாதித்தது. நான் ஒரு பெண்ணாகத்தானே என்னை உங்கள் முன் அடையாளப்படுத்திக் கொண்டிருக்கிறேன். எங்களைப் போன்றவர்களிடம் எப்படிப் பேச வேண்டும் என்ற அடிப்படைப் பண்புகூட தெரியாத மனிதர்களைப் பார்க்கும்போது வருத்தமாக இருக்கிறது.
சமீபத்தில் நடந்த சென்னை புத்தக கண்காட்சியில்கூட எங்கள் சமூக மக்களுக்கென ஒதுக்கப்பட்ட புத்தக ஸ்டால்களில் எங்களை சுதந்திரமாக இயங்கவிடவில்லை. என்னிடம் கையெழுத்து வாங்க வந்த வாசகர்களைக்கூட அனுமதிக்கவில்லை. அங்கே நாங்கள் எழுத்தாளர்களாகப் போய் நின்றாலும், எங்களை அவர்கள் ‘குயர்’ மக்களாக மட்டும்தான் பார்க்கிறார்கள்” என்று கூறுகிறார்.

தான் இப்படி எத்தனையோ அவமானங்களையும், கேலி கிண்டல்களையும் சந்தித்து வந்தாலும், இந்தச் சமூகத்தின் மீது தனக்கு எப்போதும் வெறுப்பு நிலை ஏற்பட்டதில்லை என்கிறார் மரக்கா.
இதுகுறித்து அவர் கூறும்போது, “இருபது ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தது போன்ற நிலைமை இப்போது எங்களுக்கு இல்லை. நிறைய மாறியிருக்கிறது. எங்களது அடையாளங்களை வெளிப்படுத்தி கொள்வதற்கு ஏதோ ஒரு கட்டத்தில் எங்களுக்கென ஓர் இடம் கிடைக்கிறது.
எங்கள் சமூகத்தைச் சேர்ந்தவர்களிடம் இணையம் மூலமாக எளிதாக இணைந்து நட்பு கொள்ள முடிகிறது. எங்களுக்கென கொண்டாட்டங்களை நடத்திக் கொள்ள முடிகிறது. ஊடகங்கள்கூட இதற்கு முந்தைய காலங்களைவிட தற்போது எங்களைப் பற்றி அதிகமாகப் பேசுகிறது. எங்கள் சமுதாய மக்கள் செய்துகொள்ளும் திருமணங்களை செய்திகளாக வெளியிடுகின்றன. இவை அனைத்தையும் ஒரு நேர்மறையான சமிஞ்கையாக நான் பார்க்கிறேன்.
என்னுடைய சொந்த அனுபவத்தில்கூட, எனக்குப் பல நேர்மறையான விஷயங்கள் நடந்து வருகின்றன. என்னுடைய பெண்மையையும் குயர் சமூகம் சார்ந்த என்னுடைய செயல்பாடுகளையும் சில இடங்களில் அங்கீகரிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

முந்தைய காலகட்டத்தில் என்னுடைய பெண்மையை வெளிப்படுத்துவதற்கே தயக்கப்பட்டுக் கொண்டு என்னுடைய உடலையும் மனதையும் ஏமாற்றிக்கொண்டிருந்தேன்.
ஆனால் இப்போது பக்குவ நிலையை அடைந்து, என்னுடைய இயல்பைப் புரிந்துகொண்டு என்னை நானே வெகுவாக நேசிக்கத் துவங்கியிருக்கிறேன். அதை அப்படியே சமூகத்திடமும் வெளிப்படுத்துகிறேன்.
அதனால்தான் சொல்கிறேன் நீங்கள் யாராக இருந்தாலும் உங்களை நீங்கள் நேசிக்கத் தொடங்குங்கள்.
உங்களுடைய உடலுக்கு, உணர்வுக்கு, ஆன்மாவிற்கு நீங்கள் அறம் செய்யத் தொடங்குங்கள். அதுதான் உங்களை நீங்களே முழுமையாக ஏற்றுகொள்வதற்கான முதல் படி.
உங்களுடைய இயல்பை நீங்கள் ஏற்றுகொண்ட பின் இந்தச் சமூகத்தில் எதை வேண்டுமானாலும் தைரியமாக எதிர்கொள்ளலாம்” என்று கூறும் மரக்கா, தற்போது பலரால் ‘Self Love Influencer’ ஆக பார்க்கப்படுகிறார்.

பொருளாதாரரீதியாக கடினமான சூழலில் தற்போது தவித்து வந்தாலும், எப்படியாவது ‘குயர் மக்களைப் பற்றிய படைப்புகள் குறித்து, ஒரு பிரத்யேக நூலகம் உருவாக்க வேண்டும்’ என்ற முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார் மரக்கா.
”என் வாழ்வின் மிகப்பெரும் முயற்சியாகவும் கனவாகவும் இதைப் பார்க்கிறேன். எங்களுடைய சமுதாயம் குறித்து, பொது மக்களும், ஊடகங்களும், ஏன் அரசங்கமும்கூட சற்று கூடுதலான புரிதலைப் பெறுவதற்கு எங்களைப் பற்றிய படைப்புகளை ஆவணப்படுத்துவது முக்கியம் என நினைக்கிறேன்.
இது முழுக்க முழுக்க என்னுடைய முயற்சி. ஆனால் இதைத் தனியாகச் செய்து முடிக்கும் அளவுக்கு எனக்குப் போதிய பொருளாதார சூழல் இல்லை. எனவே என்னுடைய நூலகத்திற்காக பலரிடமும் நிதியுதவி கேட்கத் துவங்கியிருக்கிறேன்.

புத்தகங்களை யாசகம் கேட்கத் துவங்கியிருக்கிறேன். இதில் எனக்கு எந்தக் கூச்சமும் இல்லை. இந்த நூலகம் வெற்றிகரமாக உருவாக்கப்படும்பட்சத்தில், தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்ட முதல் “குயர் நூலகமாக” இது இருக்கும் என கண்கள் விரியப் பேசுகிறார்.
அதேபோல் எதிர்காலத்தில் ஒரு குழந்தையைத் தத்தெடுத்து வளர்க்க வேண்டுமென்று தனக்கிருக்கும் ஆசை குறித்தும் அவர் பிபிசியிடம் பகிர்ந்து கொள்கிறார்.
”காதல் என்பது மிகவும் அழகான உணர்வு. ஆனால் என்னுடைய வாழ்வில் எப்படியான இணையர் அமைவார் என்பது குறித்துத் தெரியாது. அதுகுறித்த பெரிய எதிர்ப்பார்ப்பும் எனக்கில்லை.
தாய்மையை அடைய வேண்டும் என்ற ஆசை அதிகமாக இருக்கிறது. எங்களுக்கு கர்பப்பை கிடையாது. அதனால் மாதவிடாய் வருவதில்லை. ஆனால் பெண்களுக்கான அத்தனை உணர்வுகளும் ஆசைகளும் எங்களிடம் மிகுதியாகவே இருக்கிறது.
ஒவ்வொரு திருநங்கைக்கும் தான் தாயாக வேண்டுமென்ற ஆசை நிச்சயம் இருக்கும். எனக்கும் இருக்கிறது. நான் நிச்சயமாக ஒரு குழந்தையைத் தத்தெடுத்து வளர்ப்பேன். ஒரு குழந்தைக்கு என்னால் நல்ல தாயாக இருக்க முடியும் என்று நான் நம்புகிறேன்,” என்று நெகிழ்கிறார் மரக்கா.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












