கைமாற்று அறுவை சிகிச்சையும், கைவிடாத காதலும்: திண்டுக்கல் நாராயணசாமி இப்போது எப்படி இருக்கிறார்?

கைமாற்று அறுவை சிகிச்சை, நவீன மருத்துவ முறை, காதல்
    • எழுதியவர், திவ்யா ஜெயராஜ்
    • பதவி, பிபிசி தமிழ்

”இரண்டு கைகள் இல்லாமல் இவனெல்லாம் என்ன வாழ்ந்துவிடப்போகிறான் என சுற்றி இருந்த அனைவரும் பேசத் துவங்கினர். அவர்கள் அனைவரின் முன்னால் வாழ்ந்து காட்டி விட வேண்டும் என்ற வைராக்கியமே என்னை நம்பிக்கையுடன் போராட வைத்தது. இப்போது நானும் அனைவரை போலவும் சராசரியான வாழ்க்கையை தான் வாழ்ந்து வருகிறேன்” என்கிறார் தமிழ்நாடு அரசு மருத்துவமனையில் முதன்முறையாக கை மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட நாராயணசாமி.

கட்டட தொழிலாளியான நாராயணசாமி, 2015ஆம் ஆண்டு ஒரு கட்டுமானத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது, கட்டட கம்பிகளை உயரே தூக்கி சென்றிருக்கிறார். அப்போது அந்த கம்பிகள் எதிர்பாராத விதமாக மேலே இருந்த மின்சார கம்பிகளுடன் உரசி மின் விபத்தை ஏற்படுத்தியது.

இந்த விபத்தில் தன்னுடைய இரண்டு கைகளையும் பறிகொடுத்தார் நாராயணசாமி. மிகவும் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்த நாராயணசாமியை இந்த விபத்து முற்றிலும் முடக்கிப்போட்டது. இதனால், அவர் தனது காதலி நதியாவை கரம்பிடிப்பதிலும் பிரச்னை எழுந்தது. எப்படியாவது தன்னுடைய வாழ்வை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டுவரவேண்டுமென போராடி வந்த நாராயணசாமிக்கு மருத்துவ உலகின் நவீன சிகிச்சை முறைகள் உதவின.

ஆம், 2018ஆம் ஆண்டு திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த நாராயணசாமிக்கு, சென்னையில் மூளைச்சாவு அடைந்த வெங்கடேஷ் என்பவரின் கைகள் பொறுத்தப்பட்டன.

இந்த அறுவை சிகிச்சை நடைபெற்று தற்போது நான்கு ஆண்டுகள் முடிவடைந்திருக்கும் நிலையில், நாராயணசாமியின் கைகளுடைய நிலை தற்போது எப்படி இருக்கிறது, கை மாற்று அறுவை சிகிச்சை அவரது வாழ்க்கையை எப்படி மாற்றியிருக்கிறது என்பதை அறிந்து கொள்வதற்காக பிபிசி தமிழ் அவரை தொடர்பு கொண்டது.

“இப்படியொரு விபத்து நடைபெற்று விட்டது என்பதை நான் பெரிதாக நினைத்து வருந்துவதில்லை. கைகளே இல்லாமல் இருந்ததற்கு, இப்போது கைகளை தானம் பெற்று நிம்மதியுடன் வாழ முடிகிறது என்பதை மட்டுமே நினைத்துக்கொள்வேன்” என பிபிசியுடன் பேசத் துவங்கினார் நாராயணசாமி.

மேலும் அவர், “யாரையும் சாராமல் என்னுடைய வேலைகளை நானே செய்துகொள்கிறேன். தற்போது 50% வரை என்னுடைய வாழ்வு இயல்பு நிலைக்கு திரும்பி விட்டது. அறுவை சிகிச்சை செய்து கொண்ட ஆரம்ப காலகட்டத்தில், என்னால் அவ்வளவாக கைகளை இயக்க முடியாது. சட்டை அணியும்போது கூட பட்டன் போட்டுக்கொள்ள மற்றவரின் உதவி தேவைப்படும், அதிக எடையுள்ள பொருட்களை தூக்க முடியாது. ஆனால் இப்போது நானே சுயமாக சட்டை அணிந்து கொள்கிறேன். டிவிஎஸ் எக்செல் ஓட்டுகிறேன். நான் தொடர்ந்து நம்பிக்கையுடன் இயங்கி வருவதற்கு என்னுடைய மனைவி மட்டுமே காரணம்,” என்கிறார்.

தான் காதலித்து வந்த உறவு முறை பெண்ணான நதியாவையே திருமணம் செய்து கொண்டார் நாராயணசாமி. கை மாற்று அறுவை சிகிச்சை முடிந்து, அவர் வீடு திரும்பிய அடுத்த ஒரு மாதத்திலேயே இவர்களது திருமணம் நடைபெற்றிருக்கிறது.

“இவருக்கு இந்த விபத்து ஏற்படுவதற்கு முன்பாகவே, எங்களுடைய காதலுக்கு வீட்டில் பெரிதாக ஆதரவு இல்லை. விபத்திற்கு பின் சூழல் இன்னும் மோசமானது. எப்படியோ போராடி திருமணம் செய்து கொண்டோம். இப்போது எங்களுக்கு மூன்று வயதில் ஒரு மகன் இருக்கிறான். எங்களது இல்லற வாழ்க்கை மகிழ்ச்சியுடன் செல்கிறது” என கூறுகிறார் நதியா.

கைமாற்று அறுவை சிகிச்சை, நவீன மருத்துவ முறை, காதல்

அவர் மேலும் கூறுகையில், “ எங்கள் இரண்டு குடும்பங்களும் நெருங்கிய சொந்தங்கள்தான். சிறு வயதிலிருந்தே அவரை எனக்கு தெரியும். பள்ளிப்பருவத்திலிருந்தே அவரை நான் காதலிக்க துவங்கினேன். அவ்வப்போது தொலைபேசியில் பேசிக்கொள்வோம். ஆனால் அடிக்கடி சந்தித்து கொள்வது, வெளியே செல்வது போன்ற பழக்கங்கள் எங்களுக்குள் இல்லை. அதனால் விபத்து நடந்தபோது, அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டிருக்கிறது என்று மட்டுமே தெரிய வந்தது. அவரது கைகள் அகற்றப்பட்டது குறித்து எனக்கு தெரியாது.

நீண்ட நாட்களுக்கு பிறகே அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது கைகள் இல்லாமல் என் எதிரில் வந்து நின்ற அவரை என்னால் நம்ப முடியவில்லை. அதிர்ச்சியிலும், துக்கத்திலும் அழுக துவங்கினேன். இதற்கு மேல் இந்த கல்யாணம் நடக்குமா என்று தெரியாது, நீ வேறு யாரையாவது திருமணம் செய்துகொள் என்று அவர் கூறினார். ஆனால் நான் எங்களுடைய காதலில் உறுதியாக இருந்தேன்,” என்று நெகிழ்கிறார் நதியா.

அவரை தொடர்ந்து பேசிய நாராயணசாமி, ”என்னுடைய மனைவி என் மீது வைத்திருந்த நம்பிக்கையும், காதலும்தான் எனக்கு மீண்டும் வாழ்வதற்கான உந்துதலை கொடுத்தது. கைகள் இல்லாமல் இருந்த என்னுடைய நிலையை மாற்றுவதற்கு ஏதேனும் சிகிச்சை முறைகள் இருக்கிறதா என்று தேட வைத்தது,” என்கிறார்.

"கை மாற்று அறுவை சிகிச்சை முறை என ஒன்று இருப்பது குறித்து முதன்முதலில் கே.எம்.சி., மருத்துவமனையில்தான் எனக்கு தெரியப்படுத்தினார்கள். பெரிய பெரிய தனியார் மருத்துவமனைகளில் இதற்கு 50 லட்சம் வரை செலவாகும் என கூறினார்கள். கட்டடத் தொழிலாளியாக வேலை செய்து வந்த நான் 50 லட்சத்திற்கு எங்கு போவேன். பின்புதான் சென்னை ஸ்டான்லி மருத்துவமனை சென்று மருத்துவர் ரமாதேவியை சந்தித்தேன். அதேசமயம் எனக்கு உதவுமாறு எங்கள் மாவட்ட கலெக்டரிடமும் மனு அளித்திருந்தேன். அனைவரும் எனக்கு உதவுவதாக நம்பிக்கை அளித்தனர். மூன்று ஆண்டுகள் காத்திருப்புக்கு பின் 2018ஆம் ஆண்டுதான் எனக்கு கைகள் தானமாக கிடைத்தன” என விவரிக்கிறார் நாராயணசாமி.

கைமாற்று அறுவை சிகிச்சை, நவீன மருத்துவ முறை, காதல்

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில், மருத்துவர் ரமாதேவி தலைமையிலான மருத்துவக்குழு இந்த கை மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்தனர். இந்த அறுவை சிகிச்சை குறித்து கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்வதற்காக மருத்துவர் ரமாதேவியை பிபிசி தமிழ் தொடர்பு கொண்டது.

பிபிசியிடம் பேசிய மருத்துவர் ரமாதேவி, “நாராயணசாமி தனது நிலை குறித்து கலெக்டரிடம் மனு அளித்திருந்ததால், அப்போது சுகாதாரத்துறை செயலாளராக இருந்த ராதாகிருஷ்ணனும் என்னிடம் இவரது சிகிச்சை குறித்து பேசியிருந்தார். நாங்களும் ஏற்கெனவே இவருக்காக கைகள் தானம் கேட்டு முறையாக பதிவு செய்திருந்தோம். ஆனால் இதுபோன்ற உறுப்பு மாற்று சிகிச்சை மேற்கொள்ளும்போது, சம்பந்தபட்டவர்களின் உடல் நிலை மற்றும் ரத்த வகைக்கு ஏற்றவாறு சரியான Donor கிடைக்க வேண்டும். இவரது சிகிச்சை முறையிலும் அதனால்தான் மூன்று ஆண்டுகள் தாமதம் ஏற்பட்டது” என தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து பேசுகையில், “2018ஆம் ஆண்டு சென்னையை சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் மூளைச்சாவு அடைந்தார். அவரது இறப்பு குறித்தும், அவரது உடல் உறுப்புகளை தானம் செய்வதற்கு உறவினர்கள் முன் வந்திருப்பது குறித்தும் எங்களுக்கு இரவு 7 மணிக்குதான் தெரியவந்தது. உடனடியாக நாராயணசாமியை விமானத்தில் அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளையும், சிகிச்சைக்கான பணிகளையும் முனைப்புடன் மேற்கொண்டோம். இரவு இரண்டு மணி முதல் நாராயணசாமியை அறுவை சிகிச்சைக்காக தயார் செய்ய துவங்கினோம்.

மூளைச்சாவு அடைந்திருந்த வெங்கடேஷின் கைகள் காலை 5 மணிக்கு எடுக்கப்பட்டு, 6.30 மணி போல எங்களிடம் வந்தடைந்தது. பின் அறுவை சிகிச்சை துவங்கி, கிட்டதட்ட 13 மணி நேரம் தொடர்ச்சியாக நடைபெற்றது. மொத்தம் 75பேர் கொண்ட மருத்துவக்குழு எனது தலைமையில் இந்த அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்தோம். அறுவை சிகிச்சைக்கு பிறகு ஓர் ஆண்டு காலம் அவரை மருத்துவமனையிலேயே வைத்து கண்காணித்து, உடல்நிலை ஓரளவு இயல்பு நிலைக்கு திரும்பிய பிறகே அவரை வீட்டிற்கு அனுப்பினோம். தமிழ்நாட்டை பொறுத்தவரை அரசு மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட முதல் கை மாற்று அறுவை சிகிச்சை இதுதான்” என விவரிக்கிறார் மருத்துவர் ரமாதேவி.

“உடல் உள் உறுப்புகளை தானம் செய்வதற்கு இப்போது ஓரளவு மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. ஆனால் இதுபோன்ற வெளிப்புற உறுப்புகளை தானம் செய்வதற்கு அவ்வளவு எளிதில் யாரும் முன்வருவதில்லை” என்பது குறித்த தனது வருத்தத்தையும் அவர் பிபிசியிடம் குறிப்பிட்டார் .

கைமாற்று அறுவை சிகிச்சை, நவீன மருத்துவ முறை, காதல்

“நான் கைகளை இழந்தப்பின் இவனெல்லாம் என்ன வாழ்ந்து விட போகிறான். இவனது வாழ்க்கை அவ்வளவுதான் என சுற்றி இருந்த அனைவரும் பேசத்துவங்கினர். கைகள் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட பின்னும் கூட யாரும் என்னை பொருட்படுத்தவில்லை. இவர்களை போன்ற மனிதர்களின் முன்னால் வாழ்ந்து காட்ட வேண்டுமென்ற வைராக்கியமும், எனது மனைவியின் அன்பும்தான் என்னை தொடர்ச்சியாக போராட வைத்தன. இப்போது நானும் மற்றவர்களை போல சராசரியான வாழ்க்கையை தான் மேற்கொண்டு வருகிறேன்” என விவரிக்கிறார் நாராயணசாமி.

ஆனால் அதேசமயம் தனக்கு ஏற்றவாறு தற்போது சரியான வேலை மட்டும் இன்னும் அமையவில்லை என்பது குறித்த வருத்தத்தையும் அவர் பிபிசியிடம் பகிர்ந்து கொண்டார்.

இது குறித்து பேசிய அவர், “கருணையின் அடிப்படையில் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் தற்காலிக போஸ்டிங் கொடுத்துள்ளனர். முதலில் வார்டு மேலாளராக பணியமர்த்தப்பட்டேன். ஆனால் தற்போது கேசுவாலிட்டி செக்யூரிட்டியாக மாற்றிவிட்டனர். அங்கே நிறைய கூட்டம் வருகிறது. எனக்கு அறுவை சிகிச்சை செய்திருப்பதால் அதிகளவிலான கூட்டங்களில் தொடர்ச்சியாக இருக்கும்போது தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. எனது உடல்நலனை கருத்தில் கொண்டு எனக்கு சரியான வேலை வாய்ப்பை மட்டும் அரசு ஏற்படுத்தி கொடுத்தால் உதவியாக இருக்கும்” என கேட்டுக்கொண்டார் நாராயணசாமி.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: