வட கொரியாவில் நிலவும் உணவு பஞ்சம் - எச்சரிக்கை விடுக்கும் நிபுணர்கள்

வட கொரியா

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், கெல்லி என்ஜி
    • பதவி, பிபிசி நியூஸ்

வட கொரியாவில் கடும் உணவு பஞ்சம் நிலவி வருவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

வட கொரியாவுக்கு உணவு பஞ்சம் என்பது புதியதல்ல. ஆனால் கொரோனாவால் விதிக்கப்பட்ட எல்லைக் கட்டுப்பாடு, மோசமான வானிலை மற்றும் பொருளாதார தடை என எல்லாம் சேர்ந்து சமீப வருடங்களில் அங்கு நிலைமையை மோசமாக்கியுள்ளது.

விவசாய கொள்கைகளில் அடிப்படை மாற்றங்களை கொண்டுவர இந்த மாத இறுதியில் நாட்டின் மூத்த அதிகாரிகள் ஒன்று கூடி விவாதிக்கவுள்ளனர் என அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

“அதிகரிக்கும் விவசாய பிரச்னைகளுக்கு மத்தியில் இது முக்கியமான மற்றும் அவசரமான ஒரு பணி” என அரசு ஊடகமான கேசிஎன்ஏ தெரிவித்துள்ளது.

மறுபுறம் வட கொரியா தொடர்ந்து ராணுவ ஒத்திகையை நடத்திக் கொண்டிருக்கிறது.

வட கொரியாவுடன் நல்லுறவை உருவாக்குவதற்கான தென் கொரியாவின் அமைச்சகமும் உணவு தட்டுப்பாடு குறித்து எச்சரித்துள்ளது. உலக உணவு திட்டத்திடம் உதவியையும் கோரியுள்ளது.

தென் கொரிய அதிகாரிகள் எடுத்த செயற்கைக்கோள் புகைப்படத்தை வைத்து பார்த்தால் 2021ஆம் ஆண்டை விட, 2022ஆம் ஆண்டு ஒரு லட்சத்து 80 ஆயிரம் டன் குறைவாக உணவு உற்பத்தி செய்யப்பட்டுள்ளது என்பது தெரிகிறது.

கடந்த ஜூன் மாதம், வட கொரியாவில் வறட்சி, வெள்ளம் போன்ற தீவிர வானிலை காரணமாக குளிர்கால மற்றும் வசந்த கால அறுவடை கடுமையாக பாதிக்கப்படலாம் என உலக உணவுத் திட்டம் தெரிவித்தது. கடந்த வருடத்தின் இறுதியில் நாடு இரண்டாவது மோசமான வறட்சியை சந்தித்து வருவதாக அரசு ஊடகம் தெரிவித்தது.

எதிர்பார்த்ததை போல மோசமான அறுவடை காரணமாக உணவுப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. எனவே மக்கள் மாற்று உணவுகளை நோக்கி செல்கின்றனர் என்கிறார் வட கொரியாவை மையப்படுத்தி இயங்கும் 38North.org. என்ற நிறுவனத்தில் பணிபுரியும் கட்சேஃப் சில்பெர்ஸ்டெயின்.

எனவே மக்காசோளத்தின் விலை இந்த வருட தொடக்கத்தில் 20 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.

“மக்கள் மக்காசோளத்தை அதிகமாக வாங்கினால், மொத்த உணவுப் பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது என்று அர்த்தம். குறிப்பாக அரிசியின் விலை அதிகரித்திருக்கிறது,” என்கிறார் சில்பெர்ஸ்டெயின். ஒரு கிலோ அரிசி வட கொரியாவில் 3 ஆயிரத்து 4 வான் (வட கொரிய ரூபாய்) – ஆக உள்ளது.

farming

பட மூலாதாரம், Getty Images

உலகளவில் ஏழை நாடுகளில் ஒன்றாக வட கொரியா உள்ளது. சிஐஏ வேல்ட் பாக்ட்புக் தகவல்படி, 2015ஆம் ஆண்டில் தனிநபர் மொத்த உற்பத்தி சுமார் 1,700 அமெரிக்க டாலர்களாக இருந்தது.

ஆனால் வட கொரியாவின் வெளிப்படையற்றத் தன்மையால் இந்த கணக்கை துல்லியமாக சொல்ல இயலவில்லை.

“வட கொரியாவின் கடுமையான கொரோனா கட்டுப்பாடுகளால் வெளிநாட்டவர்கள் நாட்டின் உள்ளே சென்று என்ன நிலை என்பதை கூற இயலவில்லை” என என்கே செய்திகள் என்ற ஊடகத்தின் ஆய்வாளர் ஜேம்ஸ் ப்ரேட்வால் தெரிவிக்கிறார்.

அதேபோல இந்த சூழலால் நெருக்கடி சமயங்களில் வட கொரியாவுக்கு தேவையான உதவிகளை பிற நிறுவனங்களால் அனுப்பி வைக்க இயலவில்லை என்றும் அவர் கூறுகிறார்.

ஜனவரி 2020 முதல் எல்லை கடந்த வணிகத்திற்கு வட கொரியா கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தது.

வட கொரியா

பட மூலாதாரம், KIM WON JIN

படக்குறிப்பு, வட கொரியாவில் உள்ள நாம்போ நகரில், 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நெல் பயிரிடும் திருவிழாவில் வட கொரியர்கள் பங்கேற்றனர்.

வட கொரியாவில் உள்ள தொண்டு நிறுவனமான லிபர்டி இன் நார்த் கொரியாவின் தென் கொரிய இயக்குநர் சோகீல் பார்க், “கொரோனாவை கட்டுப்படுத்த தேவையற்ற மிக கடுமையான கட்டுப்பாடுகளை வட கொரியா விதித்தது,” என்கிறார்.

பார்க்கின் அமைப்பு, தென் கொரியா மற்றும் அமெரிக்காவில் உள்ள வட கொரியா அகதிகளின் மறுவாழ்விற்காக பணியாற்றி வருகிறது. வட கொரியாவில் மக்கள் பட்டினியால் செத்து கொண்டிருக்கின்றனர் என தனக்கு நம்பத்தகுந்த ஆதாரங்கள் தெரிவிப்பதாக பார்க் தெரிவிக்கிறார்.

சர்வதேச சமூகத்திடமிருந்து வட கொரியாவுக்கு கிடைக்கும் உதவிகள் பெருமளவில் குறைந்துவிட்டது. மனிதநேய விவகார ஒருங்கிணைப்பிற்கான ஐநா அலுவலகம் கடந்த வருடம் பிற சர்வதேச அமைப்புகள் மற்றும் முகமைகளிடமிருந்து வட கொரியாவுக்கு 2.3மில்லியன் அமெரிக்க டாலர்கள் உதவி மட்டுமே கிடைத்தது இது 2021ஆம் ஆண்டில் 14 மில்லியனாக இருந்தது என்று தெரிவித்துள்ளது.

நீண்ட காலத்திற்கு வட கொரியாவின் எல்லைகள் மூடப்பட்டிருந்ததும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். வட கொரியா மேற்கொண்ட ஏவுகணை சோதனைகளால் விதிக்கப்பட்ட பொருளாதார தடைகளின் காரணமாகவும் மனிதநேய உதவிகள் குறைந்திருக்கலாம் என மீட்புப் பணியில் ஈடுபட்ட பணியாளர்கள் சிலர் பிபிசியிடம் தெரிவித்தனர்.

வட கொரியா ராணுவத்திற்கு அதிக செலவு செய்வதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, வட கொரியா, ராணுவத்திற்கு அதிக செலவு செய்வதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்

இருப்பினும் தற்போது எல்லைத் தாண்டிய வணிகம் தொடங்குவதை போன்று தெரிகிறது. வட கொரியாவின் 90 சதவீத பொருட்களை கொண்ட ட்ரக் ஒன்று மீண்டும் இயங்க தொடங்கியதாக நிக்கெய் ஆசியா என்ற செய்தித்தாள் தெரிவித்துள்ளது.

இருப்பினும் இதனால் வட கொரிய மக்களின் வாழ்க்கை தரம் உயர்ந்துவிடும் என்று அர்த்தமில்லை.

வட கொரியா ஏவுகணைகளை உருவாக்குவதிலேயே தனது வளங்களை செலவு செய்தது என பார்க் தெரிவிக்கிறார்.

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் உட்பட 70க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை கடந்த வருடம் வட கொரியா ஏவியது. அதில் அமெரிக்கா வரையில் செல்லக்கூடிய ஏவுகணையும் உண்டு. இந்த மாத தொடக்கத்தில் வட கொரியா நடத்திய ராணுவ அணிவகுப்பில் இதுவரை இல்லாத அளவிலான கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

“வட கொரியாவில் நிலவும் தட்டுப்பாடு மக்களை தொடர்ந்து பாதித்து வந்தாலும், கிம் குடும்பம், ஏவுகணை, மக்கள் மீதான கடுமையான கட்டுப்பாடுகள் இதில் மட்டுமே கவனம் செலுத்தப்படுகிறது.” என்கிறார் பார்க்.

ஆனால் வட கொரியாவில் நிலைமை இன்னும் தீவிரமாகும் எனவும் வடகொரியாவில் 90களின் மத்தியில் ஏற்பட்டதுபோல மோசமான பஞ்சம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

அந்த பஞ்சத்தில் 6 லட்சத்திலிருந்து 10 லட்சம் மக்கள் வரை உயிரிழந்தனர் என சொல்லப்படுகிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: