'நம்ம தாசில்தார்': அரசு ஊழியர் தேர்வுக்கு மாணவ, மாணவிகளை தயார்படுத்தும் தன்னார்வலர்

விருதுநகர், கல்வி, அரசு வேலை
படக்குறிப்பு, தாசில்தார் மாரிமுத்து
    • எழுதியவர், ஹேமா ராக்கேஷ்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

“சிறு வயதில் சாக்கு விரித்துதான் தினமும் படுத்திருப்பேன். கொஞ்சம் கையை நீட்டி படுத்தால் சுவற்றில் இருந்து மண் கொட்டும். மேலே பார்த்தால் 50 வருட பழமையான கூரை.காலை வெளியே நீட்டினால் சாக்கடை ஓடும் . வறுமை தான் எனது மிகப்பெரிய ஆசான். இப்படிபட்ட சூழலில் வாழ்வின் பெரும் நம்பிக்கையாய் என் முன்னே இருந்தது கல்வி மட்டுமே. அந்த கல்வி தான் வறுமையின் பிடியில் இருந்த என்னை இன்று தாசில்தாராக உயர்த்தியிருக்கிறது “ என உருக்கமாக கூறுகிறார் மாரிமுத்து.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தாரில் தாசில்தாராக இருப்பவர் மாரிமுத்து. கடந்த 15 ஆண்டுகாலமாக அரசு போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் மாணவ மாணவிகளுக்கு இலவசமாக பயற்சி வகுப்பு நடத்தி வருகிறார். இவரிடம் படித்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு அலுவலங்களில் அரசு பணிகளில் வேலை பார்த்து வருகிறார்கள்.

பிபிசி தமிழுக்காக விருதுநகர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் மாணவர்களுக்காக வகுப்புகளை நடத்தி கொண்டிருக்கும் தாசில்தார் மாரிமுத்துவை சந்தித்தோம்.

“ நான் ஸ்ரீவில்லிபுத்தூரில் தேசிய நெடுஞ்சாலை நில எடுப்பு அலுவலகத்தில் தனி தாசில்தாராக பணிபுரிகிறேன். நான் அரசுப்பணிக்கு வந்து 27 ஆண்டுகள் ஆகிவிட்டது. அதில் 18 ஆண்டுகளாக , அரசு போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு இலவசமாக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பயிற்சி வகுப்புகளை வழங்கி வருகிறேன்.

நான் அனைத்து பாடங்களையும் நடத்துகிறேன். ஒவ்வொரு வாரமும் கிட்டத்தட்ட 4000 மாணவர்களுக்கு நான் வகுப்புகளை எடுத்து வருகிறேன். என்னிடம் படிக்கும் அத்தனை பேரும் கிராமப்புறத்தை சேர்ந்த மாணவர்கள்.

அதில் பல பேருக்கு போட்டித்தேர்வுகளில் பங்கு பெற வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். ஆனால் போட்டித் தேர்வுக்கு எப்படி தங்களை தயார் படுத்திக் கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வு அதிகம் இருக்காது. அப்படிப்பட்ட மாணவர்களை அரசு போட்டித் தேர்வுக்கு தயார்படுத்தி அவர்களை அரசு பணிகளில் அமர்த்துவது தான் எனது லட்சயம் “ எனக் கூறுகிறார் மாரிமுத்து.

பயிற்சி மையங்கள் என்றாலே பளபளக்கும் கட்டிடங்கள், வண்ண வண்ண நிறங்களில் உட்கட்டமைப்பு என்ற பிம்பமே பல பேருக்கு இருக்கிறது. விருதுநகர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்க இடத்தில், மாரிமுத்து பயிற்சி அளிக்கும் இடம் தென்னை ஓலைகள் மற்றும் அதன் மேல் சாதாரண சில்வர் கூரைகளால் வேயப்பட்ட இடமாக காட்சியளிக்கிறது.

உள்ளே நுழைந்தவுடன் நூற்றுக்கணக்கான ப்ளாஸ்டிக் சேர்கள். ஆனால் மாணவர்கள் எண்ணிக்கை அதிகம் இருப்பதால் தார்பாய்கள் விரிக்கப்பட்டு அதிலும் மாணவர்கள் உட்கார்ந்து பாடங்களை கவனிக்கிறார்கள்.

ஒரு கரும்பலகை மற்றும் ஒரு சின்ன மைக் மற்றும் ஸ்பீக்கர் செட். இவ்வளவு தான் பயிற்சி மையம். ஆனால் இந்த சாதாரண இடம் ஆயிரக்கணக்கான மாநில அரசு பணியாளர்களை உருவாக்கி இருக்கிறது.ஆயிரணக்கணக்கான மத்திய அரசு பணியாளர்களை உருவாக்கி இருக்கிறது. இங்கு தரையில் அமர்ந்து படித்தவர்கள் தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு அலுவலங்களில் அரசு ஊழியர்களாக பணியாற்றி வருகிறார்கள்.

விருதுநகர், கல்வி, அரசு வேலை

“வறுமை மட்டுமே மிச்சம் இருந்த குடும்பத்தில் பிறந்ததால் சிறு வயதில் நான் பெரிதாக எந்த வசதியையும் அனுபவித்ததில்லை. ஆனால் கல்வி மட்டுமே எனக்கு ஆகப்பெரும் நம்பிக்கையை கொடுத்தது.

கல்வி கற்றால் மட்டுமே வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு முன்னேற முடியும் என எனக்கு நானே எப்போதுமே சொல்லிக் கொள்வேன். சிறு வயதில் சாக்கு விரித்து தான் தினமும் படுத்திருப்பேன். கொஞ்சம் கையை நீட்டி படுத்தால் சுவற்றில் இருந்து மண் கொட்டும். அண்ணாந்து பார்த்தால் 50 வருட பழமையான கூரை. காலை வெளியே நீட்டினால் சாக்கடை ஓடும் . வறுமை தான் எனது மிகப்பெரிய ஆசான்.

பள்ளி படிக்கும் போது எங்கள் ஊரில் இருந்து 8 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பிளவக்கல் அணை கட்டப்பட்ட போது எங்கள் ஊரில் இருந்து அதிகாரிகள் ஜீப்பில் சென்று வருவார்கள். அதைப் பார்த்து நானும் ஒரு நாள் அரசு ஜீப்பில் செல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அப்போது என் வாழ்வின் பெரும் நம்பிக்கையாய் இருந்த கல்வி , வறுமையின் பிடியில் இருந்த என்னை இன்று தாசில்தாராக உயர்த்தியிருக்கிறது. கல்வியின் மகத்துவத்தை நான் நேரிடையாக பார்த்து உணர்ந்ததால் அதை அடுத்த தலைமுறைக்கும் எடுத்துச் செல்ல முடிவு செய்து இந்த பயிற்சி வகுப்புகளை இலவசமாக நடத்த தொடங்கினேன் “ என்கிறார் மாரிமுத்து.

இந்த பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்பவர்கள் பெரும்பாலும் பின்தங்கிய பகுதிகளில் இருந்து வருகிறார்கள். சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் முன்பதிவு செய்யப்படாத ரயில்களில் ஏறியும், பேருந்துகளில் நூறு கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்தும் இங்கே படிக்க வருகிறார்கள். இந்த வளாகத்தில் 5 அரசுப்பேருந்துகளும் மாணவ மாணவிகளின் நலன் கருதி ஆட்சியர் அலுவலகம் உள்ளே வந்து அவர்களை இறக்கி விட்டு செல்கின்றது.

பெரும்பாலும் இங்கு படிப்பவர்களுடைய குடும்பங்களின் பெற்றோர் விவசாயம் மற்றும் கூலி வேலைக்கு செல்பவர்கள் . ஆனால் அவர்களின் குழந்தைகளுக்கு கல்வியின் முக்கியத்துவம் தெரிந்திருக்கிறது.

விருதுநகர், கல்வி, அரசு வேலை

“ இங்கு நான் முதலில் நேரிடையாக வகுப்புகளை தொடங்க மாட்டேன். முதலில் அனைவரும் வகுப்பறைக்குள் வந்து அமர்ந்ததும் அவர்கள் அனைவரையும் எழுந்து நிற்க சொல்லி , நான் நிச்சயம் அரசு அதிகாரியாக பணியில் சேர்ந்து சாதிப்பேன் என 3 முறை உறுதி மொழி எடுக்க வைப்பேன்.

அது அவர்களுக்கு புதிய உத்வேகத்தை கொடுக்கும். முதல் 10 நிமிடங்கள் தன்னம்பிக்கை வகுப்புகளை நடத்துவேன். ஒரு சிலருக்கு நம்மால் இந்த தேர்வை எதிர்கொள்ள முடியுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். ஆனால் தன்னம்பிக்கை வகுப்புகளில் மாணவர்கள் தங்கள் நம்பிக்கையை மீட்டெடுத்து வகுப்புகளில் கவனம் செலுத்த தொடங்குவார்கள். பிறகு எந்த கவனச்சிதறலும் இன்றி மாணவர்கள் வகுப்புகளை கவனிக்க தொடங்குவார்கள் என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் மாரிமுத்து.

இந்த பயிற்சி மையத்தில் படிக்கும் மாணவர்களில் கிட்டத்தட்ட 70 சதவீதம் பேர் பெண்களாக இருக்கிறார்கள். இன்னும் சில பெண்கள் தங்கள் சிறிய குழந்தைகளோடு இங்கே படிக்க வருகிறார்கள். கணவனை இழந்த பெண்கள், தங்கள் குடும்பத்தை பொருளாதார ரீதியிலாக உயர்த்த வேண்டும் என நினைக்கும் பெண்கள், பள்ளிப்படிப்பு முடித்து பல வருடங்கள் ஆனாலும் வேலைக்கு போய் சுயமாக சம்பாதிக்க வேண்டும் என்று நினைக்கும் பெண்கள் என ஒவ்வொருவரும் ஒவ்வொரு பின்னணியை கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் இவர்கள் அனைவரின் நோக்கமும் ஒன்றுதான். அது நன்றாக படித்து அரசு வேலைக்கு செல்ல வேண்டும் என்பது. அதனால் பல கஷ்டங்கள் மற்றும் சங்கடங்களை தாண்டி படிக்கிறார்கள்.இங்கு பயின்ற சுந்தரம்மாள் என்ற பெண் பள்ளிப்படிப்பு முடித்து 10 ஆண்டுகளுக்கு பிறகு மாரிமுத்துவின் பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து அரசு பணியில் சேர்ந்திருக்கிறார்.

விருதுநகர், கல்வி, அரசு வேலை
படக்குறிப்பு, சுந்தரம்மாள்

“ என்னுடைய சொந்த ஊர் தேசியாபுரம். விருதுநகர் மாவட்டத்தின் கடைசி கிராமம். நான் பனிரெண்டாம் வகுப்பு வரை தான் படித்திருக்கிறேன். படித்து முடித்ததும் எனக்கு திருமணம் செய்து வைத்து விட்டார்கள். 2015 இல் என்னுடைய கணவர் இறந்து விட்டார், எனக்கு ஒரே ஒரு ஓட்டு வீடு மட்டும் தான் இருந்தது. எனக்கு வேறு எந்த சொத்தும் கிடையாது. எனக்கு ஒரு பெண் குழந்தை இருந்தது. கணவர் இறந்த பிறகு எனக்கு என்ன செய்வதன்றே தெரியவில்லை. தற்கொலை செய்து கொள்ளலாம் என்று கூட யோசித்தேன்.

ஆனால் பெண் குழந்தைக்காக வாழ வேண்டும் என்று நினைத்து மில் வேலைக்கு சென்றேன். அப்போது என் தோழி, மாரிமுத்து சார் நடத்தும் பயிற்சி வகுப்புகள் குறித்து சொன்னார். 2015 ஆம் ஆண்டு முதல்,வாரத்தில் 6 நாட்கள் மில் வேலைக்கு சென்று கொண்டே வாரத்தில் ஒரு நாள் இந்த இலவச பயிற்சி வகுப்புகளில் படித்து வந்தேன். கிட்டத்தட்ட இரண்டரை வருடங்கள் அரசுப் பணியில் சேர்வது என்ற குறிக்கோளுடன் படித்தேன். சரியான தூக்கம்,ஓய்வு என எதையும் நான் யோசிக்கவில்லை. உழைப்பும் , பயிற்சியும் , மாரிமுத்து சார் வழிகாட்டல் என தொடர்ந்து முயற்சித்தேன். 2018 இல் என் கனவு நனவானது. நான் அரசுப்பணியில் சேர்ந்துவிட்டேன். இப்போது பிடிஓ அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிகிறேன் என உணர்ச்சி பெருக்கோடு கூறினார் சுந்தரம்மாள்.

இன்று அரசுப்பணியில் மகிழ்ச்சியாக பணிபுரியும் சுந்தரம்மாள் தன்னை சுற்றி இருப்பவர்களுக்கும் பெண் கல்வியின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைக்கிறார். இவருடைய பெண் குழந்தையும் 8 ஆம் வகுப்பு படிக்கிறார்.

விருதுநகர், கல்வி, அரசு வேலை
படக்குறிப்பு, திவ்யா

“ எனக்கு 27 வயதாகிறது. நானும் என் கணவரும் காதல் திருமணம் செய்தவர்கள். திடீரேன என் கணவர் ஒரு விபத்தில் இறந்துவிட்டார். என் வாழ்க்கையே நிலைகுலைந்து போனது. வீட்டிலேயே முடங்கி கிடந்தேன். ஏதாவது ஒரு மனமாற்றம் ஏற்படும் , வெளியே கொஞ்சமாவது வா என்று என்னை சுற்றி இருப்பவர்கள் சொன்னார்கள். அப்போது தான் மாரிமுத்து சார் வகுப்புகள் குறித்து கேள்விப்பட்டு இங்கே வந்தேன். முதலில் வரும் போது எனக்கு அவ்வளவாக விருப்பம் இல்லை.

ஆனால் நாள் போக போக எனக்கு படிப்பில் ஆர்வம் வந்து ஆர்வத்துடன் படிக்க தொடங்கினேன். தேர்வுக்கு 15 நாட்கள் இருந்தது. திடீரென எனக்கு இதயத்தில் வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். எனக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று சொன்னார்கள். மாரிமுத்து சாரிடம் விஷயத்தை சொன்னதும் அவர் எனக்கு நம்பிக்கை ஊட்டினார். அறுவை சிகிச்சையை முடித்துவிட்டு அடுத்த 15 நாட்களில் தேர்வு எழுதினேன். ஆனால் நான் தேர்வாக வில்லை. ஆனால் அடுத்த முறை மீண்டும் தேர்வு எழுதி இப்போது அரசுப்பணியில் இருக்கிறேன் என்று நெகிழ்ச்சியுடன் கூறுகிறார் திவ்யா.

இப்படி பல பெண்கள் தன்னம்பிக்கையோடும் சுய பொருளாதாரத்தோடும் சொந்த காலில் நிற்க மாரிமுத்துவின் பயிற்சி வகுப்புகள் பெரும் உதவி புரிந்திருக்கிறது.

விருதுநகர், கல்வி, அரசு வேலை
படக்குறிப்பு, சரவணக்குமார்

“ நான் விவசாய குடும்பத்தை சேர்ந்தவன். எனக்கு அரசு வேலையில் சேர வேண்டும் என்ற லட்சியம் சிறு வயதில் இருந்தே இருக்கிறது. என் அப்பா, அம்மா இருவரும் விவசாயிகள். எங்களுக்கு அவ்வளவு வசதியில்லை என்னால் பணம் கொடுத்து பயிற்சி நிலையங்களில் சேர முடியாது. அதனால் மாரிமுத்து சாரிடம் இலவச பயிற்சி வகுப்பில் சேர்ந்து படிக்கிறேன். நிச்சயம் நான் அரசு வேலையில் சேர்ந்து விடுவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது என்கிறார் சரவணக்குமார்.

இப்படி பல மாணவர்களின் அரசு வேலை கனவை நனவாக்கும் முயற்சியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார் மாரிமுத்து. மேலும் பயிற்சி வகுப்புகளுக்கு வரும் பல மாணவர்கள் பசியுடன் வருதை அறிந்த அவர், இங்கு பயிலும் மாணவர்களுக்கு சூடாக மதிய உணவும் இலவசமாக வழங்கிவருகிறார்.கிட்டத்தட்ட 20 மாவட்டங்களில் இருந்து இங்கு பயிற்சிக்கு மாணவர்கள் வந்து செல்கின்றனர்.

மேலும் பல ஆயிரம் மாணவர்களை அரசு பணிகளில் பணியமர்த்த வேண்டும் என்பதற்காக தனக்கு வந்த உதவி ஆட்சியர் பதவி உயர்வையையும் மறுத்திருக்கிறார் மாரிமுத்து.

காணொளிக் குறிப்பு, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை அரசு ஊழியர்களாக மாற்றிய தாசில்தார்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: