'2006ல் செய்த பிழையை செய்ய மாட்டோம்': திமுக - காங்கிரஸ் உரசல் எதை நோக்கி நகரும்?

'2006ல் செய்த பிழையை செய்ய மாட்டோம்': காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணியில் என்ன நடக்கிறது?

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

2006-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சியில் பங்கு பெறும் வாய்ப்பை தவறவிட்டதாகவும் 2026ல் அதனை சாத்தியமாக்க விரும்புவதாகவும் சொல்கிறார் அக்கட்சியின் எம்.பியான மாணிக்கம் தாகூர். ஆனால், தி.மு.க. அதனை ஏற்பதாகத் தெரியவில்லை. என்ன நடக்கிறது கூட்டணியில்?

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் சிலர் ஆட்சியிலும் பங்கு வேண்டுமென்ற குரலைத் தீவிரமாக ஒலிக்க ஆரம்பித்துள்ளனர்.

2006ல் செய்த பிழையை இந்த முறை செய்ய மாட்டோம் என்கிறார் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான மாணிக்கம் தாகூர்.

2026ஆம் ஆண்டின் சட்டமன்றத் தேர்தலுக்கு என தமிழ்நாட்டில் தி.மு.க. தலைமையில் அமையவிருக்கும் கூட்டணியில் காங்கிரஸ் இடம்பெறும்போது, ஆட்சியிலும் பங்களிக்க வேண்டும் என கடந்த சில நாட்களாக தீவிரமாக வலியுறுத்தி வருகிறார் மாணிக்கம் தாகூர்,

அவரது இந்தக் கருத்துக்கு தி.மு.க. தலைமை நேரடியாகப் பதிலளிக்கவில்லையென்றாலும் அடுத்தகட்டத் தலைவர்களில் சிலர் இந்தக் கோரிக்கையை கடுமையாக விமர்சித்து வருகின்றன.

தமிழக காங்கிரஸ் கமிட்டியின் மாநிலத் தலைவரான செல்வப் பெருந்தகை, சேதத் தடுப்பு நடவடிக்கையாக ஒரு அறிக்கையை வெளியிட்டார்.

அந்த அறிக்கையில் " தமிழ்நாடு காங்கிரஸ் தலைமை, அகில இந்திய காங்கிரஸ் தலைமையோடு கலந்து பேசி முடிவெடுக்க வேண்டிய நிலையில், இதுகுறித்து பொதுவெளியில் காங்கிரஸ் கட்சியினர் எவரும் கருத்து கூறுவதை தவிர்க்க வேண்டும்" என்று குறிப்பிட்டார்.

மாணிக்கம் தாகூர்
படக்குறிப்பு, மாணிக்கம் தாகூர்

காரணம் என்ன?

இந்த நிலையில், மாணிக்கம் தாகூர் பிபிசி தமிழுக்கு பிரத்யேகப் பேட்டி ஒன்றை அளித்தார்.

அந்தப் பேட்டியில் 2026ஆம் ஆண்டு அமையவுள்ள கூட்டணியில் அதிகாரத்தில் பங்கு என்ற அம்சம் இடம்பெற வேண்டுமென்பதை வலியுறுத்தினார். இதற்கென ஒரு காரணத்தையும் முன் வைக்கிறார் அவர்.

"காங்கிரஸ் போட்டியிடும் ஒவ்வொரு மாநிலத்திலும் நாங்கள் வாக்குறுதிகளை அளிக்கிறோம். அந்த வாக்குறுதிகள் கட்சியின் மூத்த தலைவர்களால் அளிக்கப்படுகின்றன. அந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற ஆட்சியில் பங்கு வேண்டும். ஆட்சியில் பங்கு இல்லாவிட்டால் அந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத நிலை ஏற்படுகிறது. எங்களுடைய உறுப்பினர்கள் அந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற சட்டமன்றத்தில் பேசினாலும் அது பேச்சோடு போய்விடுகிறது. ஆகவே எங்கள் தோழர்களும் அமைச்சரவையில் பங்குபெற வேண்டும் . அதற்கு இது சரியான காலம் என நினைக்கிறோம்" என்று பிபிசியிடம் தெரிவித்தார் மாணிக்கம் தாகூர்.

கூட்டணி ஆட்சி வேண்டும் என்பதற்கு ஆதரவாக மேலும் சில வாதங்களை அவர் முன்வைத்திருக்கிறார்.

அதாவது, தி.மு.கவும் காங்கிரஸ் கட்சியும் கூட்டணியாக இணையும்போது அந்தக் கூட்டணியின் வாக்குகள் பன்மடங்கு அதிகரிப்பதாகக் கூறுகிறார் அவர்.

"2014ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தனித்தனியாக நின்றபோது தி.மு.க. 23.9 சதவீத வாக்குகளைப் பெற்றது. காங்கிரஸ் 4.3 சதவீத வாக்குகளைப் பெற்றது. ஆனால், 2016ல் இரு கட்சிகளும் கூட்டணி அமைத்தபோது, வாக்கு 39 சதவீதமானது. 23.9 சதவீதமும் 4.3 சதவீதமும் சேர்ந்தால் 28 சதவீதமாகியிருக்க வேண்டும். ஆனால், அது எப்படி 39 சதவீதமானது? ஏனென்றால் காங்கிரசுடன் சேர்ந்தால் அது பன்மடங்கு வாக்குகளைப் பெற்றுத் தரும்.'' என்றார்

மேலும் ''2019ல் இதே கூட்டணியில் இடதுசாரிகள், ம.தி.மு.க. ஆகியோர் சேர்ந்து நின்றபோது வாக்கு சதவீதம் 52ஆக உயர்ந்தது. அப்போது ராகுல் காந்தியை பிரதமராக மு.க. ஸ்டாலின் முன்னிறுத்தினார். 2021ல் முதல்வராக மு.க. ஸ்டாலினை முன்னிறுத்தியபோது 46 (45.38) சதவீத வாக்குகளைப் பெற்றோம். 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின்போது ராகுல் காந்தியை முன்னிறுத்தவில்லை. அதனால் 46 சதவீத வாக்குகளைப் பெற்றோம். இந்த 46 சதவீத வாக்கு என்பது எந்த ஒரு கட்சியின் தனிப்பட்ட வாக்குகள் அல்ல. இது ஒட்டுமொத்த கூட்டணியின் வாக்கு" என்கிறார் மாணிக்கம் தாகூர்.

கு செல்வப்பெருந்தகை

பட மூலாதாரம், K.Selvaperunthagai/FB

'வாய்ப்பே இல்லை'

தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவரான கு. செல்வப்பெருந்தகை போன்றவர்கள் பொதுவெளியில் கூட்டணி குறித்துப் பேசவில்லையென்றாலும் கட்சிக்குள் அதைப்பற்றிப் பேசுவதாகவும் தான் காங்கிரஸ் கட்சித் தொண்டர்களின் மனநிலையையே பிரதிபலிப்பதாகவும் தமிழக காங்கிரஸ் கட்சிக்கான பொறுப்பாளரின் மனநிலையும் இதுதான் என்றும் குறிப்பிடுகிறார் மாணிக்கம் தாகூர்.

ஆனால், ஆட்சி அதிகாரத்தில் பங்களிக்கும் வாய்ப்பே இல்லையென அமைச்சர் ஐ. பெரியசாமி மறுத்திருக்கிறார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் நடந்த பொங்கல் விழா ஒன்றில் பங்கேற்ற தி.மு.கவின் துணை பொதுச் செயலாளரும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி செய்தியாளர்களிடம் பேசும்போது, "ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணிக் கட்சிகளின் உரிமை. ஆட்சி - அதிகாரத்தில் பங்கு என்பது எப்போதும் கிடையாது. தனிப்பட்ட கட்சியின் ஆட்சிதான் இருந்திருக்கிறது. இனியும் கூட்டணி ஆட்சி இருக்காது. கூட்டணி ஆட்சி இல்லை என்பதில் தமிழக முதல்வர் உறுதியாக இருக்கிறார்" என்று குறிப்பிட்டார்.

அவரது இந்தக் கருத்து குறித்து கருத்துத் தெரிவித்திருக்கும் கு. செல்வப்பெருந்தகை, "அது அவரது கருத்து.கூட்டணி குறித்து இரு கட்சிகளின் தலைமைகள்தான் பேசி முடிவெடுப்பார்கள்" என்றும் தெரிவித்திருக்கிறார்.

பராசக்தி பற்றி விவாதம்

இதற்கிடையில் தனது எக்ஸ் தளத்தில் மாணிக்கம் தாகூர் தெரிவித்துவரும் கருத்துகளும் கவனத்திற்கு உள்ளாகியிருக்கின்றன.

"ரெட் ஜெயன்ட் வெளியிட்ட பராசக்தி படத்தில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக வசனம்" என்று ஒரு ஊடகம் வெளியிட்ட கார்டைப் பகிர்ந்து, "இந்த Parasakthi படம் தோல்வி என நண்பர்கள் சொன்னார்கள். ஏன் நம்ம உழைத்த காசை விண்ணாக்க வேண்டும் என நான் படம் பார்க்கவில்லை" என்று கூறியிருந்தார்.

அதேபோல, பராசக்தி திரைப்படத்தில் ஒரு காட்சியின் ஸ்க்ரீன் ஷாட்டை எடுத்து பகிர்ந்து, மோசமாகப் பதிவிட்ட காங்கிரஸின் மாணவர் இயக்கத்தைச் சேர்ந்தவர் ஒருவர் பிறகு அந்தப் பதிவை அகற்றியிருந்தார்.

அதற்கு விளக்கம் அளித்து ஒரு பதிவையும் செய்திருந்தார். அந்தப் பதிவை மேற்கோள்காட்டியிருந்த மாணிக்கம் தாகூர், " இந்த IT விங் போல நாம் தரம் தாழகூடாது" எனக் குறிப்பிட்டிருந்தார்.

அவர் எந்தக் கட்சியின் ஐடி விங்கைக் குறிப்பிடுகிறார் என்று தெளிவுபடுத்தவில்லையென்றாலும் தி.மு.க. கூட்டணியைச் சேர்ந்தவர்கள் அவரது அந்தப் பதிவை கடுமையாக விமர்சித்திருந்தனர்.

உரசலை நோக்கி நகர்கிறதா?

இந்த நிலையில், அதிகாரம் - ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கை இரு கட்சிகளுக்கும் இடையிலான உரசலை நோக்கி நகர்கிறதா? என்ற கேள்விகளும் இருக்கின்றன.

ஆனால், அப்படி நடப்பதற்கு வாய்ப்பில்லை என்கிறார் மூத்த பத்திரிகையாளர் ஆர். மணி.

"காங்கிரசைப் பொறுத்தவரை கூடுதல் இடங்களைப் பெற வேண்டும் என நினைக்கிறார்கள். குறைந்தது வரும் தேர்தலில் 38 இடங்களையாவது பெற வேண்டுமென நினைக்கிறார்கள். அதை நேரடியாகக் கேட்டால் கிடைக்காது என்பதால் அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்கிறார்கள். சோடங்கர், பிரவீண் சக்ரவர்த்தி போன்றவர்கள் இதைப் பேசுகிறார்கள் என்றால் ராகுலின் கவனத்திற்குச் செல்லாமல் இது நடந்திருக்காது.

ஆனால், ஆச்சரியமளிக்கும் விதமாக இரண்டு விஷயங்கள் நடந்திருக்கின்றன. முதலாவதாக காங்கிரசின் கருத்துக்கு தி.மு.கவின் மூத்த அமைச்சர் ஒருவர் பதிலளித்திருக்கிறார். இரண்டாவதாக, 'அமைச்சர் சொன்னது அவருடைய சொந்தக் கருத்து; முதல்வர் முடிவெடுப்பார்' என்கிறார் செல்வப்பெருந்தகை. ஆகவே, மாணிக்கம் தாகூர் போன்றவர்களின் கருத்தை முதல்முறையாக மாநில காங்கிரசின் கருத்து என்பதைப்போலப் பேசியிருக்கிறார். ஆகவே, இந்த விஷயத்தை காங்கிரஸ் தீவிரமாக்கத் துவங்கியிருக்கிறது என்பது புரிகிறது. ஆனால், இது எல்லாமே கூடுதல் இடங்களைப் பெறுவதற்காகத்தான்" என்கிறார் ஆர். மணி.

 தி.மு.கவின் செய்தித் தொடர்பாளரான ரவீந்திரன் கான்ஸ்டைன்டீன்
படக்குறிப்பு, தி.மு.கவின் செய்தித் தொடர்பாளரான ரவீந்திரன் கான்ஸ்டைன்டீன்

இந்த ஆட்சியில் பங்கு கோரிக்கை தீவிரமடைந்து, கூட்டணி உடையும் நிலைக்கு செல்லுமா?

"அதற்கான வாய்ப்பு மிகக் குறைவு. காங்கிரசைப் பொறுத்தவரை தமிழ்நாட்டில் கிடைக்கும் எம்.எல்.ஏ. இடங்களைவிட, தி.மு.கவிடம் இருக்கும் எம்.பிக்களும் முக்கியமானவர்கள். தேசிய அளவில் பா.ஜ.கவை எதிர்த்து அரசியல் செய்ய அந்த இடங்கள் முக்கியமானவை. அப்படியிருக்கும்போது அந்த பலத்தை இழக்க சோனியா விரும்ப மாட்டார். இந்தக் கூட்டணி பிரிவது, காங்கிரசிற்கு மட்டுமல்ல தி.மு.கவுக்கும் இழப்பாக இருக்கும். ஆகவே இது பெரிய பிரச்னையாக மாறி, காங்கிரஸ் த.வெ.க. கூட்டணிக்குச் செல்வார்கள் என சொல்ல முடியாது" என்கிறார் ஆர். மணி.

ஆனால், தி.மு.கவைப் பொறுத்தவரை தெளிவாக இருக்கிறது.

"தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடம் கிடையாது. தமிழக மக்கள் அதை ஒப்புக்கொள்ளவே மாட்டார்கள். மத்தியில் கூட்டணி ஆட்சியை ஏற்றுக்கொள்வார்கள்; ஆனால், மாநிலத்தில் கூட்டணி ஆட்சியை ஒப்புக்கொள்ள மாட்டார்கள். மக்களின் எதிர்பார்ப்பிற்கு எதிரான ஒரு விஷயத்தை அவர்களிடம் திணிக்க முடியாது. ஒரே கட்சியின் ஆட்சி இருந்தால்தான், செய்ய விரும்பும் விஷயங்களை செய்ய முடியும். கூட்டணி ஆட்சியிருந்தால் ஒருமித்த கருத்தை எட்டி, ஒவ்வொன்றையும் செய்வது கடினமாக இருக்கும்" என்கிறார் தி.மு.கவின் செய்தித் தொடர்பாளரான ரவீந்திரன் கான்ஸ்டைன்டீன்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

2006ஆம் ஆண்டு தி.மு.க. அறுதிப் பெரும்பான்மையைப் பெற முடியாமல் போனபோது, கூட்டணி அரசை அமைத்திருக்கக்கூடிய வாய்ப்பை இழந்துவிட்டதாக காங்கிரஸ்கட்சியினர் பேசுவது குறித்துக் கேட்டபோது, அதனை அப்போதும் தி.மு.க. ஏற்கவில்லை என்கிறார் கான்ஸ்டைன்டீன்.

"2006ல் 'புதுச்சேரி ஆட்சியில் நாங்கள் பங்கு கேட்க மாட்டோம். அதேபோல தமிழ்நாட்டில் எங்கள் ஆட்சி' என்றோம். அதனால்தான் அப்படி நடந்தது. அதற்கு முன்பாக, 1996ல் புதுச்சேரியில் த.மா.கா. ஆட்சியமைத்தபோது அப்போதைய முதல்வரான கண்ணன், தி.மு.கவுக்கு அமைச்சரவையில் இடம் தருவதாகச் சொன்னார். ஆனால், நாங்கள் அதை ஏற்கவில்லை. ஆகவே, மத்தியில் கூட்டணி ஆட்சி, மாநிலத்தில் தனிக் கட்சியின் ஆட்சி என்பதில் எப்போதுமே தெளிவாக இருக்கிறோம்" என்கிறார் அவர்.

தவிர, இன்னொரு விஷயத்தையும் சுட்டிக்காட்டுகிறார் அவர்.

"ஐ. பெரியசாமி போன்ற மூத்த தலைவர் ஒருவர் இந்த விஷயத்தில் கருத்துத் தெரிவிக்கிறார் என்றால், கட்சித் தலைமையின் அனுமதியின்றி அதனைத் தெரிவித்திருக்க மாட்டார் என்பதுதான் அர்த்தம்" என்கிறார் அவர்.

பிபிசிக்கு அளித்த பேட்டியில் மாணிக்கம் தாகூர் சொல்வதைப் போல, கூட்டணிப் பேச்சு வார்த்தைகளை விரைவில் முடிக்க காங்கிரஸ் கட்சி விரும்புகிறது. ஆனால், தி.மு.க. இன்னும் அதில் தீவிரம் காட்டவில்லை என்பதும் கவனிக்கத்தக்கதாக இருக்கிறது.

இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு