ஆஸ்கர் மேடையில் தமிழில் பேசியது ஏன் - ஏ.ஆர். ரகுமான் பகிர்ந்த தகவல்

காணொளிக் குறிப்பு, ஆஸ்கர் மேடையில் தமிழில் பேசியது ஏன் - ஏ.ஆர். ரகுமான் பகிர்ந்த தகவல்
ஆஸ்கர் மேடையில் தமிழில் பேசியது ஏன் - ஏ.ஆர். ரகுமான் பகிர்ந்த தகவல்

2009ல் ஆஸ்கர் விருது வென்றதும், விழா மேடையில் ஏ ஆர்.ரஹ்மான் எல்லா புகழும் இறைவனுக்கே என தமிழில் பேசியது அனைவருக்கும் நினைவிருக்கலாம். இது தொடர்பாக பல சுவாரஸ்யமான அனுபவங்களை அவர் பகிர்ந்துள்ளார்.

2009ம் ஆண்டு நடந்த ஆஸ்கர் விருது விழாவில், ஸ்லம்டாக் மில்லினியனர் படத்திற்காக சிறந்த பின்னணி இசை மற்றும் சிறந்த பாடல் ஆகிய 2 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகளை வென்றார் ஏ.ஆர்.ரஹ்மான். இதன் மூலம் ஆஸ்கர் வென்ற முதல் தமிழர் என்கிற பெருமையை பெற்றார்.

விருது பெற்ற அனுபவம் குறித்து, "பின்னணி இசை விருதுக்காக என் பெயர் அறிவிக்கப்பட்டபோது இது கனவா அல்லது நிஜமா என நினைத்தேன். மொத்த இந்தியாவும் ஆர்ப்பரித்தது. நான் ஒரு க்ளேடியேட்டரை போல உணர்ந்தேன். மேடையில் பேசுவதற்குக்கூட ஏதும் தயாரித்து வைக்கவில்லை. இயல்பாக என்ன தோன்றுகிறதோ அதையே பேச நினைத்தேன். நான் கீழே அமர்ந்திருந்தபோது பெனோலோபி கிருஸ் ஸ்பானிஷ் மொழியில் பேசினார். ஓ.. இது நன்றாக உள்ளதே. நாமும் தமிழிலேயே பேசிவிடலாம் என நினைத்தேன். மேடையில் எல்லா புகழும் இறைவனுக்கே என தமிழில் கூறினேன். நான் சொன்ன இந்த வார்த்தைகள் புனித நூலில் இருந்து எடுக்கப்பட்டவை. கடவுள் அனைவருக்கும் பொதுவானவர்.

2வது முறையாக சிறந்த பாடலுக்கான விருது அறிவிக்கப்பட்டபோது நான் ஸ்லம்டாக் மில்லினியர் படம் குறித்து சொல்லியிருந்தேன். இந்த படம் வாழ்வில் நம்பிக்கையின் சக்தியை உணர்வது பற்றியது. நல்லதொரு எதிர்காலம் மற்றும் நம்பிக்கையை இந்த படம் பேசுகிறது என்றேன். காரணம் அந்த சமயம் உலகம் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டிருந்தது. ஸ்லம்டாக் மில்லினியரும் அதையொட்டிதான் வெளியானது. யார் படத்தை பார்த்தாலும் அவர்களை உயர்வாகவே அது நினைக்க வைக்கும். அதுமட்டுமின்றி என் வாழ்வில் எனக்கு இரண்டு வாய்ப்புகள் இருந்தன. ஒன்று வெறுப்பு மற்றொன்று அன்பு. நான் அன்பை தேர்ந்தெடுத்தேன். அதனால்தான் நான் இங்கு நிற்கிறேன். கடவுள் அருள் புரியட்டும் என்று சொன்னேன். சிலர் இதை தவறாக புரிந்து கொண்டனர். மதத்தை ஒப்பிட்டு பேசினர்.

ஆஸ்கரை வென்று நாடு திரும்பியபோது அதனை என் கைப்பையில் வைத்திருந்தேன். விமான நிலையத்தில் பாதுகாவலர்கள் என் பையை பரிசோதித்தபோது, சுமார் 100 அதிகாரிகள் வரை திரண்டிருந்தனர். ஒரு அதிகாரி தனது கையில் 2 ஆஸ்கரை தூக்கிக்காட்டி நான் என்ன வைத்திருக்கிறேன் பாருங்கள் என்றார். உடனே அங்கு சிரிப்பலை எழுந்தது" என அவர் நினைவுகூர்ந்தார்.

ஏ.ஆர்.ரஹ்மானின் இந்த வீடியோ சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. 95வது அகாடமி விருதுகள் மார்ச் 12ம் தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில், ஏ.ஆர். ரஹ்மானின் ஆஸ்கர் அனுபவம் தொடர்பான வீடியோவை அகாடமி விருதுகளின் அதிகாரப்பூர்வ பக்கம் வெளியிட்டிருக்கிறது.

ஆஸ்கர் விருது ஏ.ஆர். ரகுமான் பேச்சு

பட மூலாதாரம், Getty Images

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: