மே தினம்: இந்தியாவில் முதல் முறையாக சென்னையில் கொண்டாடப்பட்டது எப்படி? இதில் சிங்காரவேலர் பங்கு என்ன?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், பிரசாந்த் முத்துராமன்
- பதவி, பிபிசி தமிழ்
மே 1 என்றால், தொழிலாளர் தினம் என்பது நீங்கள் அறிந்ததே. ஆனால், மே தினம் கொண்டாடுவதில் இந்தியாவுக்கே முன்னோடி சென்னைதான் என்பது எல்லோருக்கும் தெரியாது இல்லையா? அதுவும் ஓர் இடத்தில் அல்ல, சென்னையில் மட்டுமே இரண்டு இடங்களில் ஒரே நாளில் நடந்த மே தின நிகழ்வுகள்தான் இந்தியாவின் முதல் மே தினக் கொண்டாட்டம்.
எங்கு நடந்தது? நடத்தியது யார்?
மே தினம் உருவான கதை
முதலில் மே தினம் உருவான கதையை சுருக்கமாகப் பார்த்து விடுவோம். நாளொன்றுக்கு 15 முதல் 18 மணி நேரம் வரை உழைக்க வேண்டிய கட்டாயத்தால் உலகின் பல நாடுகளில் தொழிலாளர்கள் அவதிப்பட்டுக்கொண்டிருந்த சமயம் அது. இதை எதிர்த்து அவ்வப்போது வேலை நிறுத்தங்களும் போராட்டங்களும் நடக்கும். குறிப்பாக இங்கிலாந்தில் நடைபெற்ற சாசன இயக்கம் இதில் பிரபலமானது. அதேபோல, ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற தொழிலாளர் போராட்டத்தில்தான் முதல்முறையாக 8 மணி நேர வேலை என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த வரிசையில் 1886ஆம் ஆண்டு சிகாகோவில் நடந்த தொழிலாளர் போராட்டமும் ஹேமார்க்கெட் படுகொலை சம்பவமும் தொழிலாளர் போராட்டங்களின் மைல் கற்கள்.
1889ஆம் ஆண்டு ஜூலை 14ஆம் தேதி அன்று பாரிசில் நடந்த சர்வதேச தொழிலாளர் நாடாளுமன்ற கூட்டத்தில், 8 மணி நேர வேலைக்கான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வது என்றும், 1890ஆம் ஆண்டு மே 1ஆம் தேதி அன்று உலகளாவிய தொழிலாளர்கள் நாள் விடுமுறை நாளாக அறிவிக்கப்பட வேண்டும் என்றும் அறைகூவல் விடப்பட்டது. இந்த அறைகூவலின் விளைவாகத்தான் ஆண்டுதோறும் மே 1 தொழிலாளர் நாள் கொண்டாடப்படுகிறது. (மே தினம். அறிஞர் அண்ணா,1975)

பட மூலாதாரம், Getty Images
அப்படியென்றால் இந்தியாவில் எப்போதிருந்து மே தினத்தை கொண்டாடத் தொடங்கினர் என்பதுதான் அடுத்த கேள்வி.
இந்தியாவின் முதல் தொழிலாளர் யூனியன்:
"ஒருங்கிணைந்த தொழிலாளர் கூட்டமைப்பு என்று வந்துவிட்டால் மெட்ராஸ் மாகாணத்தின் பங்கு மிகப்பெரியது. காரணம், 1918ஆம் ஆண்டு ஏப்ரல் 27ஆம் தேதி மெட்ராஸ் மாகாணத்தில் தொடங்கப்பட்ட 'மெட்ராஸ் லேபர் யூனியன்'தான் இந்தியாவின் முதல் ஒருங்கிணைக்கப்பட்ட தொழிலாளர் கூட்டமைப்பு," என்கிறது டி.வீரராகவன் எழுதிய 'மேக்கிங் ஆஃப் மெட்ராஸ் ஒர்கிங் கிளாஸ்' என்ற ஆய்வு நூல்.
இதிலிருந்து தொடங்குவோமானால், தொழிலாளர்களின் உரிமையை ஒருங்கிணைந்து கேட்கும் முறை 1918ல் இருந்தே இந்தியாவில் உருவாகியுள்ளது. இதைத்தொடர்ந்து அடுத்த 6 மாதங்களுக்குள் பல்வேறு ஆலைகளிலும் தொழிலாளர் அமைப்புகள் உருவாகத் தொடங்கின. இதில் திருவிக, நடேச முதலியார் (நீதிக்கட்சி நிறுவனர்களில் ஒருவர்), சர்க்கரைச் செட்டியார் உள்ளிட்ட மெட்ராஸ் மாகாணத்தின் செல்வாக்கு மிக்க தலைவர்கள் பலரும் மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் துணை புரிந்தனர்.
நாளுக்கு நாள் அதிகரித்த தொழிலாளர் பிரச்னைகளும், அவர்களின் கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட வேண்டும் என்றால், அரசியல் ரீதியாகவே இதற்கு தீர்வு காண வேண்டும் என்ற எண்ணம், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரும் பல்வேறு தொழிலாளர் அமைப்புகளில் இடம் வகித்தவருமான சுப்ரமணிய ஐயருக்கு எழுந்தது. இதே எண்ணம் பரவலாக தலைவர்கள் மத்தியில் இருந்து வந்தது. இந்த நிலையில், 1922ஆம் ஆண்டு ஜூலை மாதம் மெட்ராஸ் அலுமினிய தொழிற்சாலை ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்தனர். இதை வழி நடத்தியவர் சிங்காரவேலர் என்ற கம்யூனிச சிந்தனை கொண்ட காங்கிரஸ்வாதி. இதற்கு முன்னதாகவும், சென்னை உயர் நீதிமன்றத்தின் அருகே கடற்கரையில் அடிக்கடி தொழிலாளர்கள் கூட்டத்தை நடத்துவதை வழக்கமாக கொண்டிருந்தார் சிங்காரவேலர். இதன் விளைவாக, 1922ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சிங்காரவேலரின் திருவான்மியூர் இல்லத்தில் பிரிட்டிஷ் இந்திய காவல்துறை சோதனை நடத்தியது.

பட மூலாதாரம், Prasanth/BBC
காங்கிரஸ் கட்சியின் பிரதான தலைவர்களில் ஒருவராக இருந்தபோதும், கம்யூனிச சிந்தனைகளில் பேரார்வம் கொண்டிருந்த சிங்காரவேலர்தான் இந்தியாவின் பொதுவுடைமை இயக்க வளர்ச்சியில் மெட்ராஸ் மாகாணத்தில் பெரும்பங்கு வகித்தவர் என்கிறது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழாமலர்.
இந்தச் சூழ்நிலையில், அதே ஆண்டு செப்டம்பரில் நடந்த, காங்கிரஸ் மாநாட்டில், காங்கிரஸ் கட்சி இனி தொழிலாளர் நலனில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று பேசினார் சிங்காரவேலர். இதைத் தொடர்ந்து அடுத்தடுத்து ட்ராம்வே ஊழியர்கள், அடிசன் ப்ரெஸ் ஊழியர்கள் என பல துறை தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் அறிவித்தனர். இது காங்கிரசுக்கு பிரச்னையின் தீவிரத்தை உணர்த்தியது. இந்த முறை , "கூடுதல் கவனம் எடுத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை காங்கிரஸ் கவனிக்க வேண்டும்" என்று கூடுதல் அழுத்தம் தந்தார் சிங்காரவேலர்.

பட மூலாதாரம், Getty Images
இதன் விளைவாக, கயாவில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் சிங்காரவேலர், சுவாமி தீனாநாத், சி.எஃப். ஆண்ட்ரூஸ், எஸ்.என்.ஹால்டர், டாக்டர் டி.டி.சத்யா, ஜே.எம்.சென் குப்தா ஆகிய 6 பேர் கொண்ட AITUC என்ற தொழிலாளர்களுக்கான குழுவை ஏற்படுத்தியது காங்கிரஸ். நாடெங்கும் உள்ள தொழிலாளர் சங்கங்கள் மற்றும் குழுக்களுடன் தொடர்பு கொண்டு விவசாய மற்றும் தொழிற்சாலை தொழிலாளர்களை ஒருங்கிணைப்பது இந்த குழுவின் பிரதான பணி. ஆனால், இங்குதான் காங்கிரஸ் ஒன்றை கவனிக்க மறந்தது.
புதிய கட்சி
சிங்காரவேலரைப் பொறுத்தவரை, தொழிலாளர்களின் பொருளாதார கோரிக்கைகள் மட்டும் அவரது குறிக்கோள் அல்ல. அவரது கனவு தொழிலாளர்களின் சுயாட்சி. இதை நிறைவேற்றும் பொருட்டு, உழைக்கும் வர்க்கத்துக்கான தனது இத்தனையாண்டு கால போராட்டத்தில், தான் கண்டெடுத்த தொழிலாளர் நலன் சார்ந்து சிந்திக்கும் ஒத்த கருத்துள்ள காங்கிரஸ் தலைவர்களையெல்லாம் இணைக்கத்தொடங்கினார். அதுவரையில், சுதந்திரப் போராட்டத்தில் தொழிலாளர் பங்களிப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்த ஒரு தலைவராக மட்டுமே பார்க்கப்பட்ட சிங்காரவேலர் தற்போது தனித்துவமிக்க தலைவராக பார்க்கப்பட்டார். காரணம், இந்தியாவில் முதல் முறையாக மே தினத்தை தான் அனுசரித்து அந்த தேதியில் ஒரு புதிய கட்சிக்கான அறிவிப்பை வெளியிடப்போவதாகவும் கூறினார்.
இந்தியாவின் முதல் மே தினம்
1923ஆம் ஆண்டுதான் இந்தியாவில் முதல்முறையாக மே தினம் கொண்டாட வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார் சிங்காரவேலர். அதற்கு முன்னதாகவே 1923ஆம் ஆண்டு ஏப்ரல் 26ஆம் தேதி, AITUC குழு உறுப்பினர் சுவாமி தீனந்த்துக்கு தந்தி ஒன்றை அனுப்பினார். " உலகம் முழுக்க தொழிலாளர்கள் மே தினத்தை கொண்டாடி வரும் நிலையில், இந்தியாவிலும் தொழிலாளர் தினத்தைக் கொண்டாட வேண்டும் " என்று வலியுறுத்தினார். இதன் தொடர்ச்சியாகவே சென்னையில் மே தினம் கொண்டாட முடிவு செய்தார்.
இந்தியாவில் பொதுவுடைமை இயக்கம் தலைதூக்கத் தொடங்கிய சமயத்தில் அதன் நிறுவனத்தலைவர்களில் ஒருவராக இருந்த சிங்காரவேலர்தான் இந்த மே தினக் கூட்டத்துக்கான மூளையாக செயல்பட்டார் என்கிறது 'சிங்காரவேலர் - தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட்' என்ற ஆய்வு நூல்.

பட மூலாதாரம், AD Bala/BBC
வழக்கத்துக்கு மாறாக பெரும் கூட்டம் அன்று கடற்கரையில் கூடியிருந்தது. தொழிலாளர்கள் விவாசாயிகள் என பலரும் கூடியிருந்தனர். கூட்டத்துக்கு தலைமை தாங்கினார் ஒரு தமிழர். ஆம், தென்னிந்தியாவின் முதல் பொதுவுடமைவாதி என்று அழைக்கப்ப்படும் சிங்காரவேலர் இந்த கூட்டத்தின் நடு நாயகமாக நின்று கொண்டிருந்தார்.
முதல்முறையாக மே தினத்தை கொண்டாடுவதற்காகவும், அந்த கொண்டாட்டத்தின்போது, தொழிலாளர் அரசு அமையவேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்ட புதிய கட்சி குறித்த அறிவிப்பை வெளியிடவும் அந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கயா காங்கிரஸ் மாநாட்டில் சந்தித்த கம்யூனிச சிந்தனை கொண்ட தலைவர்களின் ஈர்ப்பாலும், தொழிலாளர் நலன் மீது கொண்டிருந்த அக்கறையாலும் செங்கொடி ஏற்றி அந்த விழாவை நடத்த வேண்டும் என்று திட்டமிட்டிருந்தார் சிங்காரவேலர். திட்டமிட்டபடி வட சென்னைக்கு இன்றைய சென்னை மெரினா கடற்கரையிலும், தென் சென்னைக்கு திருவான்மியூர் கடற்கரையிலும் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சென்னை உயர் நீதிமன்றம் அருகிலுள்ள (இன்றைய மெரினா) கடற்கரை கூட்டத்தில் சிங்காரவேலர் தலைமையேற்று விழாவை நடத்தினார். லேபர் கிசான் கட்சி என்ற புதிய கட்சி தொடங்கியதாக அறிவிப்பை வெளியிட்டு, தங்கள் கட்சியின் கொள்கை விளக்க அறிக்கையையும் வெளியிட்டார். மேலும் காங்கிரஸ் கட்சியின் கிளை அமைப்பாகவே லேபர் கிசான் கட்சி செயல்படும் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
அதே சமயம், திருவான்மியூர் கூட்டத்தில், லேபர் கிசான் கட்சியின் செயலாளராக தெரிவு செய்யப்பட்டிருந்த எம்.பி.எஸ்.வேலாயுதம் தலைமையில், சுப்ரமணிய சிவா உள்ளிட்ட தலைவர்கள் உரையாற்றி இந்தியாவின் முதல் மே தினம் கொண்டாடப்பட்டது.
இதனை அப்போதைய 'தி இந்து' ஆங்கில நாளிதழ் செய்தியாக வெளியிட்டது. 99 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இந்த மே தினம்தான் இந்தியாவில் செங்கொடி ஏற்றப்பட்ட முதல் மே தினமும் ஆகும்.
இதன் பிறகு, இந்த மேதினம் கொண்டாடப்பட்டது, இந்தியாவின் பிற பகுதிகளுக்கும் (பம்பாய், பஞ்சாப், வங்காளம்) தந்தி செய்தி இவ்வாறு அனுப்பப்பட்டது.

பட மூலாதாரம், Prasanth/BBC
மே தினம் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது தொடர்பாக, கல்கத்தாவுக்கு தந்தி ஒன்றும் அனுப்பப்பட்டது. அந்த தந்தியில், 'சென்னையில் மே தினத்தில் லேபர் கிசான் கட்சி தொடங்கப்பட்டது. தோழர் சிங்காரவேலு தலைமையில். மே தினத்தை விடுமுறையாக அறிவிக்கவும் கோரிக்கை வைக்கப்பட்டது. கட்சியின் அகிம்சை வழிமுறை குறித்து தலைவர் விளக்கினார். பொருளாதார நிவாரணம் கோரப்பட்டது. தொழிலாளர் விடுதலைக்கு உலகத் தொழிலாளர்களின் ஒற்றுமை தேவை என வலியுறுத்தப்பட்டது' என்று தகவல் இடம் பெற்றிருந்ததாக 1923ஆம் ஆண்டு மே 2-ம் தேதி வெளியான 'தி இந்து' நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது.
என்ன பேசினார் சிங்காரவேலர்?

பட மூலாதாரம், GAVASKAR
"மே1 உலகத் தொழிலாளர்கள் அனைவருக்கும் புனிதமான நாள். இந்தியாவின் தொழிலாளர்கள் அனைவரும் மே தினத்தைக் கொண்டாடி நம் ஆதரவை உலகெங்கும் இருக்கும் தொழிலாளர்களுக்கு உணர்த்த வேண்டும். அதேபோல, உலகெங்குமுள்ள துன்பப்படும் தொழிலாளர்களுக்கு பலமாக இன்னும் சில ஆண்டுகளில் மாறும் அளவுக்கு ஒரு பெருங்கூட்டமாக உருவாவதற்கான அடிக் கல்லை இன்று பதியுங்கள். அது அவர்களை நாம் எல்லோரும் ஒரே வர்க்கத்தை சேர்ந்தவர்கள் என்று உணர வைக்க வேண்டும். மெட்ராஸ் மெயில் பத்திரிகையில், சான்றளிக்கப்பட்ட தொழிலாளர்கள் மட்டுமே இந்த மே தினத்தை கொண்டாடுகிறார்கள் என்று சொல்லப்பட்டுள்ளது. ஆனால், லேபர் கிசான் கட்சி ஒவ்வொரு கடைக்கோடி சாதராண தொழிலாளிகளுக்காகவும் நிற்க வேண்டும் என்றே எண்ணம் கொண்டுள்ளது."
இதைத் தொடர்ந்து கட்சியின் திட்டங்கள் மற்றும் கொள்கைகள் குறித்து விளக்கிப் பேசினார் சிங்காரவேலர். பின்னர் கட்சியின் திட்ட அறிக்கையை தொழிலாளர்கள் முன்னிலையில் வாசித்தார். இப்படித்தான் நடந்தது இந்தியாவின் முதல் மே தினம்.
இந்தியாவின் முதல் ஒருங்கிணைந்த தொழிலாளர் கூட்டமைப்பு தொடங்கப்பட்ட நாள், இந்தியாவின் முதல் மே தினம், இந்தியாவின் முதல் முறையாக செங்கொடி பயன்படுத்தப்பட்ட நிகழ்வு ஆகிய மூன்று முக்கியத்துவத்தை 1923ஆம் ஆண்டு மே 1-ம் தேதி கொண்டிருந்தது.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












