கோவை விசைத்தறி தொழிலாளர்கள்: "தினமும் 16 தறி ஓட்டினாலும் கூலி பத்தலை" - கள நிலவரம்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், மோகன்
- பதவி, பிபிசி தமிழுக்காக
இந்திய ஜவுளித்துறைக்கு நூற்பாலைகள் அடிப்படை தொழிலாக உள்ளதைப் போல 'விசைத்தறி' ஜவுளித்துறையின் முதுகெலும்பாக உள்ளது. தமிழ்நாட்டில் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் விசைத்தறிகள் அதிக அளவில் உள்ளன.
இந்த மாவட்டங்களைச் சேர்ந்த விசைத்தறி உரிமையாளர்கள் ஊதிய உயர்வு கோரி கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் 45 நாட்களுக்கும் மேலாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில் விசைத்தறி தொழிலாளர்களின் வாழ்நிலையைப் பற்றி அறிய அவர்களை பிபிசி தமிழ் நேரில் சந்தித்தது.
இந்தியா முழுவதும் 20 லட்சம் விசைத்தறிகள் உள்ளதாக தெரிவிக்கிறார் விசைத்தறி உரிமையாளர் சங்கத்தின் பொருளாளர் பூபதி.
மேலும், "இதில் தமிழ்நாட்டில் மட்டும் ஆறு லட்சம் விசைத்தறிகள் உள்ளன. கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 2,50,000 விசைத்தறிகள் உள்ளன. இதில் இரண்டு லட்சம் தொழிலாளர்களின் குடும்பங்கள் நேரடியாகவும் மூன்று லட்சம் தொழிலாளர்கள் மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு பெற்று வருகிறார்கள்," என்கிறார் அவர்.
முன்பணம் பெறும் முறை:
விசைத்தறி தொழிலில் நாள் ஒன்றுக்கு 12 மணி நேரம் வேலை செய்ய வேண்டிய நிலை உள்ளது என்கிறார் கணேசன். பிபிசி தமிழிடம் பேசிய அவர், "நான் கடந்த 25 வருடங்களாக விசைத்தறி பணியில் ஈடுபட்டு வருகிறேன். தினமும் 12 மணி நேரம் வேலை பார்க்க வேண்டும். இரவு பகலாக விசைத்தறிகள் இயங்கிக் கொண்டே தான் இருக்கும். இரண்டு ஷிஃப்டுகளில் தொழிலாளர்கள் வேலை பார்ப்பார்கள்
காலை ஏழு மணிக்கு தொடங்கினால் இரவு ஏழு மணி வரை வேலை செய்ய வேண்டும். ஞாயிறும் வேலை இருக்கும். ஒரு தறி ஓட்டினால் ரூ.50 வழங்கப்படும். இங்கு பெரும்பாலான தொழிலாளர்கள் அட்வான்ஸ் என்கிற பெயரில் முன்பணம் பெற்றிருப்பார்கள். அதற்கான வட்டி தினசரி ஊதியத்தில் பிடித்துக் கொள்ளப்படும். 16 தறி ஓட்டினால் நாள் ஒன்றுக்கு ரூ.800 கிடைக்கும். அட்வான்ஸ் பெற்றிருந்தால் ரூ.250லிருந்து 300 வரை பிடித்துவிட்டு ரூ.500 தான் ஒருநாள் ஊதியமாக கிடைக்கும்.

ஆனால் முன்பணம் பெற்ற தொகை கழிக்கப்படாது வட்டி மட்டும் தொடர்ந்து பிடித்துக் கொள்ளப்படும். இங்கிருந்து வேறு இடத்திற்கு பணிக்கு செல்ல வேண்டுமென்றால் முன்பணம் பெற்ற தொகையை முழுமையாக செலுத்திவிட்டு தான் விலக முடியும். இது ஒரு விதமான நவீன கொத்தடிமை முறை தான்," என்கிறார்.
பெண் தொழிலாளர்கள்
விசைத்தறிக்கு அடிப்படையாக இருப்பது தார் ஓட்டும் பணி. விசைத்தறியில் செலுத்தப்படுவதற்கான நூல் கண்டை தயார் செய்து தருவது தான் தார் ஓட்டும் பணி. பெண்கள் தான் இந்தப் பணியை பெரும்பாலும் செய்து வருகின்றனர்.
அந்தப் பணியில் ஈடுபட்டு வரும் பாப்பாத்தி பிபிசி தமிழிடம் பேசுகையில், "எங்களுக்கு வாரம் ஆறு நாட்கள் பணி, ஞாயிறு விடுமுறை. இந்த வார உற்பத்திக்கான நூல் கண்டுகளை தயார் செய்து கொடுக்க வேண்டும். தினமும் 8 மணி நேரம் வரை வேலை இருக்கும். வாரத்திற்கு ரூ.1,500 வரை தான் ஊதியமாக கிடைக்கும். இந்த ஊதியத்தை மட்டும் வைத்து வீட்டு வாடகை மற்றும் இதர செலவுகளை சமாளிக்க முடியாது," என்றார்.

"நாள் கணக்கில் பார்த்தால் ஒரு நாளைக்கு ரூ.240 தான் ஊதியமாக கிடைக்கும். தறி வேலை இல்லாமல் வீட்டு வேலை, தூய்மை பணி போன்ற வேறு எந்த வேலை கிடைத்தாலும் இந்தப் பணிகளை முடித்துவிட்டு அந்த வேலைகளுக்கும் செல்கிறோம்.அப்படி தான் செலவுகளை சமாளிக்க முடியும். ஒரு நாளைக்கு இரண்டு, மூன்று வேலைகள் கூட செய்துள்ளோம்" என்கிறார் பாப்பாத்தி.
வெளியூர் தொழிலாளர்கள்:
உள்ளூரைச் சேர்ந்த தொழிலாளர்கள் மட்டுமில்லாமல் வெளியூர்களைச் சேர்ந்தவர்களும் விசைத்தறிகளில் வேலை பார்த்து வருகின்றனர். திருச்செந்தூரைச் சேர்ந்த குமார் கடந்த 20 ஆண்டுகளாக கோவையில் தங்கி விசைத்தறி வேலை பார்த்து வருகிறார்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், "இவ்வளவு ஆண்டுகளில் ஊதியம் என்பது உயர்த்தப்படவே இல்லை. ஒரு மீட்டருக்கு ரூ.1.25, 1.30 தான் வழங்கப்படுகிறது. 12 மணி நேரம் தறி ஓட்டிய பிறகு அதை மடித்து வைத்துவிட்டு செல்ல வேண்டும். 12 மணி நேரத்திற்கும் அதிகமான வேலை என்பதை சமாளிக்க முடிவதில்லை. வேலை நேரத்தை 8 மணி நேரமாக மாற்ற வேண்டும். அதே போல் வாரம் ஒருநாள் விடுமுறை என்பதையும் உறுதி செய்ய வேண்டும்," என்கிறார்.

விசைத்தறி தொழிலாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த முத்துசாமி, "முன்பெல்லாம் விசைத்தறியாளர்கள் ஜவுளி உற்பத்தியாளர்களிடம் பெரும் ஊதியத்தில் மூன்றில் ஒரு பங்கை தொழிலாளர்களுக்கு வழங்கி வந்தனர். 1980களுக்குப் பிறகு இது நான்கில் ஒரு பங்கை தான் ஊதியமாக வழங்கினர், இவ்வாறு காலப்போக்கில் இந்த விகிதம் குறைந்து போனது. அட்வான்ஸ் என்கிற முன்பணம் வழங்குவது கை செலவுகளுக்கு என 50, 100 என வாங்குவதில் தொடங்கி இன்று 2 லட்சம் வரை முன்பணம் வாங்கியுள்ள தொழிலாளர்களும் உள்ளனர். போதிய ஊதியம் அவர்களுக்கு கிடைத்தால் முன்பணம் வாங்க வேண்டிய நிலை உருவாகாது," என்கிறார்.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்













