இலங்கை பொருளாதார நெருக்கடி: கணவர் பெட்ரோல் நிலைய வரிசையில், மனைவி மண்ணெண்ணெய் வரிசையில் – கள நிலவரம்

- எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்,
- பதவி, இலங்கையிலிருந்து பிபிசி தமிழுக்காக
இலங்கையில் அத்தியாவசிய பொருட்களுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவி வருகின்ற நிலையில், கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் மக்கள் நீண்ட வரிசைகளில் நின்று பொருட்களை வாங்கி வருகின்றனர்.
இலங்கையில் சமையல் எரிவாயு விநியோகிக்கும் நிறுவனங்களான லிட்ரோ மற்றும் லாஃப் ஆகிய நிறுவனங்கள் திடீரென எரிவாயு விநியோகத்தை இடைநிறுத்தியிருந்தது.
வெளிநாடுகளிடமிருந்து கொள்வனவு செய்வதற்கு போதுமான டாலர் இல்லாமல்போனதை அடுத்தே, இந்த நிறுவனங்கள் எரிவாயு விநியோகத்தை நிறுத்தியது.

எனினும், எரிவாயுவிற்கான பணம் செலுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு நேற்று அறிவித்திருந்தது.
இந்த நிலையில், கடந்த ஓரிரு வாரங்களாக சமையல் எரிவாயு கிடைக்காத நிலையில், மண்ணெண்ணெய் வாங்க ஆயிரக்கணக்கான மக்கள், எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்பாக ஒன்று திரண்டிருந்தார்கள்.

இன்று அதிகாலை 4 மணி முதல் இந்த நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்து, மண்ணெண்ணெய் கொள்வனவு செய்தனர்.
சிறுவர்கள் முதல் கர்ப்பணித் தாய்மார்கள், முதியோர்கள் என பலரும் வரிசைகளில் நின்றுக்கொண்டிருந்ததை காண முடிந்தது.
இவ்வாறு வரிசையில் நின்ற பெரும்பாலானோர், அதிகாலை முதல் உணவு உட்கொள்ளாதிருந்ததாக அங்கு சென்ற என்னிடம் தெரிவித்தனர்.
மண்ணெண்ணை வரிசையில் நின்றுக்கொண்டிருந்த வயோதிக பெண்ணொருவர் பிபிசி தமிழுக்காக பேசினார்.
''காலையில் 8.15ல இருந்து இருக்கிறேன். லாம்பு எண்ணை (மண்ணெண்ணெய்) எடுக்க தான் வந்தேன். வீட்டில் நிறைய எவ்வளவு வேலை கிடக்கிறது?" என அந்த வயோதிப பெண் கூறினார்.

அதே வரிசையில் நீண்ட நேரமாக காத்திருந்த இளைஞர் ஒருவர், பிபிசிக்காக பேசியபோது,
''காலையில நாலு மணிக்கு வந்தோம். இன்னும் லாம்பு எண்ணை (மண்ணெண்ணை) வாங்கி முடியல." என்றார்.
நாம் வரிசையில் நின்றுக் கொண்டிருந்த மக்களின் கருத்துக்களை பதிவு செய்யும் போது, நேரம் மாலை 6 மணி.
அந்த தருணம் வரை தான் உணவு உட்கொள்ளவில்லை என அங்கு நின்றுக் கொண்டிருந்த பெண்ணொருவர் என்னிடம் தெரிவித்தார்.
''காலை 7 மணி இங்கே நிற்கிறோம். வீட்டில் புள்ளைக பசியில் அழுகுறாங்க. அப்பா போயிட்டு மண்ணெண்ணெய் வாங்கிட்டு வாங்கனு சொன்னாங்க. இங்க வந்து பார்த்தா, இந்த நிலைமை. நெஞ்சு வலிக்குது. அந்தளவுக்கு கஷ்டமா இருக்கு. எங்களுக்கு அரசி பொங்க வழியில்லை. எந்த பொருளும் வாங்க முடியல. கையில ஒரு 1000 ரூபா வச்சு இருக்கேன் மண்ணெண்ணெய் வாங்க. பசிக்குது சாப்பிட வழி இல்ல. சாப்பிட போன பனிஸ் 80 ரூபா.... 100 ரூபா சொல்லுறான். டீ குடிச்சா 100 ரூபா சொல்லுறான். என்ன செய்றதுனு தெரியல," என்றார்.

தனது கணவர் பெட்ரோல் வரிசையிலும், தான் மண்ணெண்ணை வரிசையில் காத்திருப்பதாக அங்கிருந்த பெண்ணொருவர் கூறினார்.
இவ்வாறான நிலையில், வீட்டிலுள்ள பிள்ளைகளை பார்த்துக்கொள்ள யாரும் இல்லை என அவர் தனது ஆதங்கத்தை வெளியிட்டார்.
"புள்ளைகல பார்த்துக் கொள்ள யாரும் இல்ல. இப்படி ஒரு நிலைமையா இருக்கு. 9 மணில இருந்து நாங்க இருக்கிறோம். விலைவாசி அதிகமா இருக்கும் இவ்வளவு நேரம் வரிசையில் நின்று, கிட்ட போனதும் சொல்லுறாங்க லாம்பு எண்ணை இல்லனு. அப்போ எவ்வளவு ஒரு கஷ்டம். நாங்க கஷ்டப்படுறோம்." என அங்கிருந்த பெண் தனது ஆதங்கத்தை வெளியிட்டார்.
இவ்வாறு அதிகாலை முதல் இரவு 7 மணி வரை வரிசையில் காத்திருந்த ஆயிரக்கணக்கான மக்களுக்கு, இறுதியில் மண்ணெண்ணெய் கிடைக்கவில்லை.
தமது கையிருப்பிலுள்ள மண்ணெண்ணெய் முடிவடைந்து விட்டதாக எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்கள் அறிவித்த நிலையில், அந்த பகுதியில் நேற்றிரவு அமைதியின்மை நிலவியது.

அதிகாலை முதல் இரவு வரை காத்திருந்த தமக்கு எரிபொருளை வைத்து கொண்டு, வழங்க ஊழியர்கள் மறுப்பதாக கூறி மக்கள் ஆவேசமடைந்து, குழப்பத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் போலீஸார் கடமைகளுக்கு அழைக்கப்பட்ட போதிலும், மக்கள் தமது எதிர்ப்பை தொடர்ந்தும் வெளியிட்ட வந்தனர்.
எவ்வாறாயினும், எதிர்ப்பில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடல்களை நடத்திய போதிலும், அவர்கள் தமக்கான நியாயத்தை கோரியிருந்தனர்.
எனினும், அதிகாலை முதல் இரவு வரை வரிசையில் காத்திருந்த பலர், மண்ணெண்ணை இன்றி, ஏமாற்றத்துடனேயே வீடு திரும்பியிருந்தனர்.
எரிபொருளுக்கு தட்டுப்பாடு கிடையாது என அரசாங்கம் அறிவித்து வருகின்ற போதிலும், மக்கள் நாளாந்தம் நீண்ட வரிசைகளில் காத்திருப்பதை எங்களால் காண முடிகின்றது.
பிற செய்திகள்:
- சிந்து மாகாண வான்பரப்பில் பறந்த மர்ம பொருள்? இந்திய எதிர்ப்பை கடுமையாக்கும் பாகிஸ்தான் தலைவர்கள்
- "புதின் ஒரு போர்க் குற்றவாளி" என்று முதல் முறையாக கூறிய பைடன் - சீறிய ரஷ்யா - நடந்தது என்ன?
- ஹிஜாப் அணிந்ததால் ரயிலில் அனுமதி மறுப்பா? - ட்விட்டரில் குவிந்த கண்டனம்
- எங்கள் வானத்தை காப்பாற்றுங்கள் - அமெரிக்க நாடாளுமன்றத்தில் யுக்ரேன் அதிபர் உருக்கம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












