ஹிஜாப் அணிந்ததால் ரயிலில் உட்கார அனுமதி மறுப்பு: மும்பையில் நடந்த சம்பவத்துக்கு குவியும் கண்டனம்

ஹிஜாப்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப்படம்

இன்றைய (மார்ச் 17) தமிழ் நாளிதழ்களில் வெளியான செய்திகள் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.

மும்பையில் ஹிஜாப் அணிந்து சென்றதால் தனது மனைவிக்கு ரயிலில் உட்கார அனுமதி மறுக்கப்பட்டதாக மருத்துவர் ஒருவர் காவல் துறையில் புகார் அளித்துள்ளதாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.

இது குறித்த அந்த செய்தியில், ''மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பர்வேஷ் மண்டிவாலா என்பவர் மருத்துவராக உள்ளார். இவரது மனைவி ஹிஜாப் அணிந்திருந்ததால் ரயிலில் அமர அனுமதி மறுக்கப்பட்டதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதற்கு மும்பை காவல் ஆணையர் சஞ்சய் பாண்டே ட்விட்டரில் அளித்த பதிலில், "ரயிலில் புடவை கட்டிய சில பெண்களை அமர அனுமதித்துள்ளனர். ஆனால், குழந்தையோடு இருந்தும் ஹிஜாப் அணிந்திருந்ததால், அமர இடம் தராதது முட்டாள்தனமானது என்று தெரிவித்துள்ளார்'' என்று அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு

கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய தடை விதித்தது செல்லும் என்று கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட மேல் முறையீட்டு மனுவை, ஹோலி விடுமுறைக்கு பின்னர் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பஞ்சாப் பதவி ஏற்பு விழாவிற்காக பயிர் சேதம், அதிக செலவு - மத்திய அமைச்சர் குற்றச்சாட்டு

மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்

பட மூலாதாரம், Anurag Thakur/Twitter

தினத் தந்தி நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில், பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக ஆம் ஆத்மி கட்சியின் பகவந்த் மான் நேற்று பதவியேற்றுக் கொண்டார். இந்த நிகழ்ச்சி ஆளுநர் மாளிகைக்கு பதிலாக, புகழ்பெற்ற விடுதலை போராட்ட வீரர் பகத்சிங்கின் பூர்வீக கிராமமான கத்கர் காலனில் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்காக மிகப்பெரிய அளவில் நிதி செலவழிக்கப்பட்டு உள்ளதாக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'பகத்சிங்கின் பூர்வீக கிராமத்தில் பதவியேற்பு விழாவை நடத்தியிருப்பதன் மூலம், ஆம் ஆத்மியின் மக்கள் சார்புத்தன்மை நிரூபிக்கப்பட்டு உள்ளது. இந்த நிகழ்ச்சிக்காக அதிக அளவிலான பணத்தை தவறாக செலவழித்து உள்ளனர். இந்த பிரமாண்ட விழாவுக்காக விவசாயிகளின் பயிர்களும் சேதப்படுத்தப்பட்டு உள்ளன' என குற்றம் சாட்டினார்.

டெல்லியிலும் ஆம் ஆத்மியினர் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. இதனால்தான் உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், கோவா போன்ற மாநிலங்களில் அந்த கட்சியை மக்கள் முற்றிலுமாக நிராகரித்து விட்டனர் என்றும் அவர் தெரித்ததாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

சீமை கருவேல மரங்களை அகற்ற கொள்கை முடிவு

சென்னை உயர் நீதிமன்றம்

பட மூலாதாரம், Getty Images

தமிழ்நாடு முழுவதும் சீமை கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பாக விரைவில் கொள்கை முடிவு எடுக்கப்படும் என்று உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளதாக தி இந்து தமிழ் திசை நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இது குறித்த செய்தியில், ''தமிழ்நாட்டில் சீமை கருவேலமரங்களை அகற்றக் கோரி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோர் தாக்கல் செய்த வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம், சீமை கருவேல மரங்களை அகற்ற உத்தரவிட்டது. தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதிகள் சதீஷ்குமார், பரதசக்கரவர்த்தி அடங்கிய அமர்வில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தன.

அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர், "கடந்த விசாரணையின்போது பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய வனப்பணிகள் (ஐஎஃப்எஸ்) அதிகாரிகள் அடங்கிய குழு, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், குஜராத், கேரளா, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ராஜஸ்தான், ஒடிசா மாநிலங்களில் ஆய்வு செய்ய சென்றக் குழு அறிக்கையை அளித்துள்ளது.

இந்த மாநிலங்களில், 50 ஏக்கர் வீதம் பிரிக்கப்பட்டு, சீமைக் கருவேல மரங்கள் அகற்றப்படுகின்றன. தொடர்ந்து அப்பகுதியை கண்காணித்து, மீண்டும் சீமை கருவேல மரங்கள் வளராமல் பார்த்துக் கொள்கின்றன. அங்கு நாட்டு மரங்கள் நடப்படுகின்றன.

இதை தமிழ்நாடு அரசும் முடிவு செய்துள்ளது. வனத்துறை அதிகாரிகள் குழு அளித்த அறிக்கைகள், அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அரசு விரைந்து கொள்கை முடிவெடுக்கும். எனவே அதற்கு கால அவகாசம் வழங்க வேண்டும்" என கோரிக்கை விடுத்தார்.

இதை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், வழக்கை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர். இதற்கிடையில், ஒப்பந்தங்கள் முடிந்த நிலையில், மரங்களை அகற்றும் நடவடிக்கையை தொடர அனுமதிக்க கோரி தொடரப்பட்ட வழக்கும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது" இவ்வாறு அந்த செய்தியில் உள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: