பஞ்சாபில் நவ்ஜோத் சித்து காங்கிரஸை கிளீன் போல்டு ஆக்கி விட்டாரா ? - தேர்தல் முடிவுகள் சொல்வது என்ன?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ஜுபைர் அகமது
- பதவி, பிபிசி
இதுவரையிலான தேர்தல் முடிவுகளின் போக்குகளின்படி, பஞ்சாபில் ஆளும் காங்கிரஸ் கட்சியை ஆம் ஆத்மி கட்சி கிட்டத்தட்ட ஓரங்கட்டி விட்டது. பஞ்சாபில் காங்கிரஸின் தோல்வி உறுதி என்று அக்கட்சியின் மூத்த தலைவர்கள் சிலர் ஏற்கெனவே கூறியுள்ள நிலையில் முடிவுகள் ஆச்சரியம் தரவில்லை.
அந்த மாநிலத்தில் மொத்தம் உள்ள 117 இடங்களில் 92 இடங்களில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றிருக்கிறது. இரவு 7 மணி நிலவரப்படி இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள முடிவின்படி அந்த மாநிலத்தில் பகுஜன் சமாஜ் கட்சி ஒரு இடத்திலும் பாரதிய ஜனதா கட்சி 2 இடங்களிலும் காங்கிரஸ் 18 இடங்களிலும் சிரோமணி அகாலி தளம் 3 இடங்களிலும் சுயேச்சை ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதன் மூலம் பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைப்பது உறுதியாகி விட்டது.
அந்த மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியில் 46 ஆண்டுகள் இருந்த பிறகு, பிப்ரவரி நடுப்பகுதியில் அக்கட்சியில் இருந்து ராஜிநாமா செய்த மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய சட்ட அமைச்சருமான அஸ்வினி குமார், பஞ்சாப் சட்டப்பேரவைத்தேர்தலில் காங்கிரஸ் தோற்கடிக்கப்படும் என்றும், ஆம் ஆத்மி கட்சிக்கு வெற்றி கிடைக்கும் என்றும் கணித்திருந்தார்.
"நான் புரிந்து கொண்ட வரையில், பஞ்சாப் தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடையும், ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெறும். கிராமப்புறங்களில் அகாலிதளம், காங்கிரஸ் ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில், அங்கு இப்போது புதிய வேட்பாளர்களுக்கு ஆதரவு கிடைத்து வருகிறது," என்று அவர் கூறியிருந்தார்.
அப்போது அஸ்வினி குமார் கூறியதை, மார்ச் 7ம் தேதிக்கு பிறகு வெளியான கருத்துக்கணிப்புகளும் கூறின. கட்சித் தலைமை நவ்ஜோத் சிங் சித்துவிடம் அடிபணிந்ததில் இருந்தே, மாநில மக்கள் காங்கிரஸின் வீழ்ச்சியை கணித்ததாக கடந்த ஆண்டு பல நிபுணர்கள் கூறியிருந்தனர்.
பஞ்சாபில் காங்கிரஸ் கட்சியின் வீழ்ச்சிக்கு சித்து மட்டும்தான் காரணமா?
சட்டப்பேரவைத்தேர்தலுக்கு முன்பாக கேப்டன் அம்ரீந்தர் சிங்கை பஞ்சாப் அரசியலில் இருந்து மாற்றுவது விவேகமற்ற முடிவு என அரசியல் ஆய்வாளர்கள் எச்சரித்திருந்தனர்.
காங்கிரஸின் தோல்விக்கு பல காரணங்கள் இருந்தாலும், சித்துவும் இதற்கு ஒரு பெரிய காரணம் என்கிறார் பிபிசி பஞ்சாபி சேவையின் ஆசிரியர் அதுல் சங்கர்.
"கிரிக்கெட் வீரராக இருந்து, இரண்டு முறை மக்களவை உறுப்பினராக இருந்த நவ்ஜோத் சிங் சித்து , பஞ்சாப் தேர்தல் முடிவுகளில் காங்கிரஸின் அவமானகரமான நிலைக்கு முக்கிய காரணிகளில் ஒருவர் என்று நிரூபணமாகியுள்ளது. இருப்பினும், இதற்கு அவர் மட்டுமே காரணம் அல்ல," என்று அவர் கூறுகிறார்.
இதற்கு கட்சியின் தலைமையும் ஒரு காரணம் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.
தேர்தல் முடிவுகளின் போக்கு வெளியான பிறகு காங்கிரஸ் கட்சியின் கிளர்ச்சித் தலைவர் சஞ்சய் ஜா ஒரு ட்வீட்டில், "ஜி-23 (23 அதிருப்தி கட்சித் தலைவர்கள்) கேலி செய்யப்பட்டனர். நான் இடைநீக்கம் செய்யப்பட்டேன். ஆனால் நாங்கள் காங்கிரஸ் தலைமையை எச்சரித்தோம். அவர்கள் யாருமே அதைக்கேட்கவில்லை. யாரும் கவலைப்படவில்லை."என்று தெரிவித்துள்ளார்.
அதுல் சங்கரும் இதை ஒப்புக்கொள்வதுபோலத் தெரிகிறது. இது காங்கிரஸ் தலைமையின் கூட்டுத் தோல்வி என்று அவர் கூறுகிறார்.
இந்த முடிவுகளுக்கு காங்கிரஸ் மேலிடம் பொறுப்பேற்க வேண்டும் என்று அவர் கூறுகிறார். ''சித்து, ராகுல் காந்தி, ப்ரியங்கா காந்தியுடன் கூடவே, பஞ்சாபில் அப்போதைய முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங்கின் நாலரை ஆண்டுகால ஆட்சியில் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளும், அந்த அரசின் மோசமான செயல்பாடும்தான் இந்தத் தோல்விக்கு காரணம் என்று சொல்லலாம்,"என்று அவர் குறிப்பிட்டார்.
அம்ரீந்தர் vs சித்து

பட மூலாதாரம், Getty Images
சற்றே திரும்பிப் பார்த்தால், பஞ்சாப் மாநிலத்தை சுயேச்சையாக ஆளும் கேப்டன் அமரீந்தர் சிங்கைத் தடுக்க, ராகுல் காந்தியும் அவரது சகோதரி பிரியங்காவும் நவ்ஜோத் சிங் சித்துவுக்கு கிட்டத்தட்ட முழு சுதந்திரம் கொடுத்திருந்தனர் என்பதைக்காணமுடிகிறது.
சித்து, ஏறக்குறைய ஓராண்டு காலம் எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லாமல், நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் மற்றும் ஊழல்கள் தொடர்பாக கேப்டன் அம்ரீந்தர் சிங் மீது குற்றம்சாட்டி வந்தார்.
"சித்து ஒரு யூடியூப் சேனலைத் தொடங்கி அதில் கேப்டன் அம்ரீந்தர் அரசை விமர்சிக்கத் தொடங்கினார். அவர் கேப்டன் அம்ரீந்தர் அரசுக்கு எதிராக, ஆட்சிக்கு எதிரான அலையை உருவாக்கினார். பின்னர் பஞ்சாப் காங்கிரஸ் தலைவராகவும், முதலமைச்சராகவும் நியமிக்கப்பட்ட சரண்ஜித் சிங் சன்னி மீதும் அவர் தாக்குதலை தொடர்ந்தார்," என்று அதுல் சங்கர் கூறினார்.
தலித் தலைவர் சரண்ஜித் சிங் சன்னியை முதலமைச்சராகவும், முதல்வர் வேட்பாளராகவும் வைத்து காங்கிரஸ் மேலிடம் ஸ்மார்ட் கார்டு விளையாடியது. அது தாழ்த்தப்பட்டோர் மற்றும் ஏழைகளுக்காக கட்சி நிற்கிறது என்ற செய்தியை மீண்டும் மீண்டும் வலுப்படுத்தியது.
'பஞ்சாப் முதல்வர் சீக்கியராக இருக்க வேண்டும்' போன்ற அறிக்கைகளை வெளியிட்டு, கடந்த 20 ஆண்டுகளாக கட்சியுடன் இணைந்திருந்த பாரம்பரிய இந்து வாக்கு தளத்தையும், ஜாட் சீக்கிய வாக்காளர்களை அன்னியப்படுத்தியதையும் அக்கட்சி மறந்து விட்டது.
"கேப்டன் அம்ரீந்தர் அமைச்சரவையை அவதூறு செய்த பிறகு, காங்கிரஸ் அதன் பெரும்பாலான அமைச்சர்களை சன்னி அமைச்சரவையில் சேர்த்தது மட்டுமல்லாமல், அவர்களை தேர்தலிலும் நிறுத்தியது. சந்தேகத்திற்கு இடமின்றி, முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி உட்பட எல்லா அமைச்சர்களும் தங்கள் தொகுதிகளில் பின்தங்கி உள்ளனர். பஞ்சாப் தேர்தலில் கட்சியின் மிகப்பெரிய தோல்வியாக இது இருக்கலாம்,"என்று அதுல் சங்கர் கூறுகிறார்.
பஞ்சாபில் 'ஆம் ஆத்மியின் ஆட்சி மாதிரி' வெற்றி பெற்றதா?
மறுபுறம், 'கேஜ்ரிவால் மாதிரி ஆட்சிக்கு' பஞ்சாப் மக்கள் வாய்ப்பளித்துள்ளனர் என்று ஆம் ஆத்மி கட்சி கூறுகிறது.
''கேஜ்ரிவால் இருந்தால், தொழில், வேலைவாய்ப்பு, கல்வி, சுகாதாரம் ஆகியவை நேர்மையாக கிடைக்கும் என மக்கள் நினைப்பது இன்று நாடு முழுவதும் தெரிய வந்துள்ளது'' என்று ஆம் ஆத்மி கட்சி தலைவரும், டெல்லி துணை முதல்வருமான மனீஷ் சிசோடியா குறிப்பிட்டார்.
கடந்த 2017 ஆம் ஆண்டிலும், பஞ்சாப் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் அது தோல்வியை சந்திக்க வேண்டியிருந்தது.
ஆனால், அக்கட்சியின் தலைவர்கள் தைரியத்தை இழக்காமல், அன்றிலிருந்து அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலுக்கு ஆயத்தம் செய்யத் தொடங்கினர். அது நல்ல பலனை தந்துள்ளது.
கேஜ்ரிவாலும், பகவந்த் மானும், சுகாதாரம், கல்வி, வேலையின்மை மற்றும் பெண்களுக்கான வசதிகளில் மட்டுமே கவனம் செலுத்தினர்.
பாதுகாப்பு பிரச்சனைகள், காலிஸ்தான் குற்றச்சாட்டுகள், பஞ்சாபி - பஞ்சாபி அல்லாதோர் போன்ற குற்றச்சாட்டுகள் தங்கள் பிரச்சாரத்தை பாதிக்க அவர்கள் அனுமதிக்கவில்லை. பிற கட்சிகள் எல்லாமே, அவர்கள் மீது இதுபோன்ற குற்றச்சாட்டுகளை சுமத்திவந்தன என்பது நினைவுகூரத்தக்கது.
பிற செய்திகள்:
- யுக்ரேன்: மகப்பேறு, குழந்தைகள் மருத்துவமனை மீது ரஷ்யா குண்டுவீச்சு
- இஸ்லாமியரின் நிலத்துக்குள் அத்துமீறி பௌத்த விகாரை அமைக்க முயற்சி - மக்கள் கடும் எதிர்ப்பு
- ராமேஸ்வரத்தில் டாட்டூ போட வந்ததை போல் நடித்து இளைஞரை கடத்திய கும்பல்: என்ன நடந்தது?
- யுக்ரேன் போரை திரைக்குப் பின்னால் இருந்து இயக்கும் அதிபரின் மனைவி
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












