பகவந்த் மான் இனி பஞ்சாப் முதல்வர்: காமெடி நடிகரின் உற்சாக அரசியல் பயணக் கதை தெரியுமா?

பட மூலாதாரம், BHAGWANT MANN/FB
- எழுதியவர், குஷால் லாலி
- பதவி, பிபிசி பஞ்சாபி
பஞ்சாப் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளில் ஆம் ஆத்மி கட்சி முன்னிலை பெற்று வருகிறது. தனது நம்பிக்கைக்குரிய தலைவரான பகவந்த் மானை முதல்வர் வேட்பாளராக அறிவித்தது. அவரது பெயரை கட்சி தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால் அறிவித்தார்.
பகவந்த் மானை முதல்வர் வேட்பாளராக அறிவித்தபிறகு அரவிந்த் கேஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில், "பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளராக ஆகியிருக்கும் சர்தார் பகவந்த் மானுக்கு வாழ்த்துகள். பஞ்சாப் மக்கள் அனைவரும் ஆம் ஆத்மி கட்சியை ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக பார்க்கின்றனர். இது ஒரு பெரிய பொறுப்பு மற்றும் எல்லா பஞ்சாபி மக்களின் முகத்திலும் பகவந்த் மான் மீண்டும் புன்னகையை வரவழைப்பார் என்று நான் நம்புகிறேன்,"என்று பதிவிட்டார்.
பகவந்த் மானை ஒரு நகைச்சுவை நடிகராகவும், அரசியல்வாதியாகவும் மக்கள் அறிவார்கள். அவர் பஞ்சாபில் உள்ள சங்ரூர் மக்களவைத் தொகுதியில் இருந்து தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவர் ஆம் ஆத்மி கட்சியின் பஞ்சாப் மாநிலத் தலைவராகவும் உள்ளார்.
2014ஆம் ஆண்டு ஆம் ஆத்மி கட்சியில் இணைந்ததில் இருந்து கட்சியின் நட்சத்திர பிரசாரகராக பகவந்த் மான் இருந்து வருகிறார். பஞ்சாப் முழுவதிலும் மக்கள் ஆதரவை பெற்றுள்ள அக்கட்சியின் ஒரே தலைவர் இவர்தான். ஆம் ஆத்மி கட்சியின் மிகப்பெரிய பலமாகவும், பலவீனமாகவும் அவர் கருதப்படுகிறார்.
பகவந்த் மான் குறித்த சில சுவாரசியமான நிகழ்வுகள்

பட மூலாதாரம், LOK DHUN / FB
ஆம் ஆத்மி கட்சியின் பஞ்சாப் பிரிவின் ஊடக ஆலோசகரும், முன்னாள் பத்திரிகையாளருமான மஞ்சித் சிங் சித்து, பகவந்த் மானின் வகுப்புத் தோழராவார். "பகவந்த் மானின் ஆளுமையின் மிகப்பெரிய நேர்மறையான அம்சம், அவர் தனது வாதத்தை முன்வைக்கும் ஆற்றல் கொண்டவர். ஆயிரம் பேரிடம் பேசும் அதே உற்சாகத்துடனும், அழுத்தத்துடனும் நான்கு பேரிடமும் பேசுவார்,"என்கிறார் அவர்.
பகவந்தை ஒரு நகைச்சுவை நடிகராகவும் தலைவராகவும் மட்டுமே பெரும்பாலான மக்கள் அறிவார்கள். ஆனால் அவர் மிகவும் ஆழமான கவிஞர் என்பது பெரும்பாலானவர்களுக்குத் தெரியாது என்கிறார் மஞ்சித் சித்து. ஆனால், தனது கவிதைகள் அடங்கிய புத்தகத்தை இதுவரை அவர் வெளியிடவில்லை என்றும் மஞ்சித் கூறினார்.
பகவந்த் மான் விளையாட்டிலும் ஆர்வம் கொண்டவர். NBA, கிரிக்கெட், ஹாக்கி மற்றும் கால்பந்து போட்டிகளைப் பார்ப்பது அவருக்கு மிகவும் பிடிக்கும். அவர் உலகம் முழுவதிலும் இருக்கும் விளையாட்டு வீரர்களை ஆர்வமாக கவனிப்பதுடன் அவர்களைப் பற்றிய எல்லா தகவல்களையும் தெரிந்துவைத்துக்கொள்கிறார்.
சில சமயங்களில் இரவில் அலாரம் வைத்து தூங்கி இரவு 2-3 மணிக்கு எழுந்து விளையாட்டுப் போட்டியை பார்ப்பார். பகவந்த் மான் தனது கிராமத்தில் உள்ள எல்லா வகுப்பு தோழர்களையும் நண்பர்களையும் விமானத்தில் பயணம் செய்ய வைத்துள்ளார்.
பஞ்சாபிற்கு வெளியில் அவர் நிகழ்ச்சிக்கு செல்லும்போதெல்லாம், தனது ஏதாவது ஒரு நண்பரை தன்னுடன் அழைத்துச் செல்வார் என்று மஞ்சித் சித்து கூறுகிறார். கைபேசி எண்ணை நினைவில் வைத்திருப்பது இவரது சிறப்புகளில் ஒன்று.
நாளிதழ்கள் மற்றும் வானொலிகள் மீது அவருக்கு தனி ஈடுபாடு இருப்பதாக கூறப்படுகிறது. காலையில் எழுந்து செய்தித்தாள்களின் மாவட்ட பதிப்புகள் வரை அவர் பார்க்கிறார். மாநிலத்தின் ஒவ்வொரு மூலைமுடுக்கு பற்றிய கள நிலவரம் அவருக்கு வந்துவிடும் என்றும் கூறப்படுகிறது. வானொலியில் விளையாட்டுப்போட்டிகளின் வர்ணனையைக் கேட்பது அவரது சிறுவயது பழக்கம்., இன்றுவரை அதை அவர் விடவில்லை.
நகைச்சுவையில் காலடி

பட மூலாதாரம், BHAGWANT MANN / FB
பக்வந்த் மான் 1973 ஆம் ஆண்டு அக்டோபர் 17ஆம் தேதி பஞ்சாபின் சங்ரூர் மாவட்டத்தில் ஷீமா மண்டிக்கு அருகில் உள்ள சதோஜ் கிராமத்தில் பிறந்தார். அவரது தந்தை மகிந்தர் சிங் அரசு ஆசிரியராகவும், தாய் ஹர்பால் கெளர் இல்லத்தரசியாகவும் இருந்தார்.
பட்டப்படிப்பை முடித்த பிறகு, பகவந்த் மான் நகைச்சுவைத் துறையில் நுழைந்தார். சங்ரூரில் உள்ள சுனாம் ஷஹீத் உதம் சிங் கல்லூரியில் படிக்கும் போது, நகைச்சுவை மற்றும் கவிதைகளில் பல போட்டிகளில் வெற்றி பெற்றார். இதன் மூலம் அவர் தொழில்முறை நகைச்சுவை கலைஞரானார். அவரது முதல் நகைச்சுவை மற்றும் நையாண்டி பாடல்கள் ஒலிநாடா,1992 இல், 'கோபி தி ஏ கச்சியே வியாபர்னே' என்ற பெயரில் வெளியானது.இதன் மூலம் அவர் நகைச்சுவை உலகில் பிரபலமானார்.
12வது முடித்த பிறகு அவர் பி.காமில் சேர்ந்தார். ஆனால் நகைச்சுவைத் தொழிலில் பிஸியாக இருந்ததால் படிப்பை பாதியில் விட்டுவிட்டார். 1992 முதல் 2013 வரை 25 நகைச்சுவை ஆல்பங்களை ரெக்கார்ட் செய்துள்ளார். ஐந்து பாடல்களின் டேப்களையும் வெளியிட்டுள்ளார். பகவந்த் மான் 1994 முதல் 2015 வரை 13 ஹிந்தி திரைப்படங்கள் மற்றும் விளம்பரங்களில் நடித்துள்ளார்.
'ஜுக்னு', 'ஜண்டா சிங்', 'பீபோ புவா', 'பப்பு பாஸ்' போன்ற நகைச்சுவை கதாபாத்திரங்களில் பகவந்த் மான் சிறப்பாக நடித்துள்ளார். ஜக்தார் ஜக்கி, ராணா ரன்பீர் ஆகியோருடன் நகைச்சுவை பாத்திரத்தில் நடித்துள்ள பகவந்த் மான், 'ஜுக்னு மஸ்த் மஸ்த்' போன்ற நகைச்சுவை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும், ' நோ லைஃப் வித் வைஃப்' போன்ற மேடை நிகழ்ச்சிகளையும் செய்துள்ளார்.
பாடகர் கரம்ஜித் அன்மோலை நகைச்சுவை நிகழ்ச்சிகளுடன் இணைத்து நடிப்பில் இறக்கியவர் பகவந்த் மான். கரம்ஜித் அன்மோல் அவரது கல்லூரி நாள் நண்பர். பஞ்சாபி திரையுலகில் அன்மோலுக்கு பெரிய பெயர் உள்ளது.
பகவந்த் , இந்திரஜித் கெளரை மணந்தார். அவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மனைவி பகவந்த் மானிடம் இருந்து பிரிந்து அமெரிக்காவில் வசிக்கிறார். பகவந்த் மான் தனது தாயுடன் சதோஜ் கிராமத்தில் வசித்து வருகிறார். அவரது சகோதரிகளில் ஒருவரான மன்பிரீத் கெளர், சதோஜுக்கு அருகிலுள்ள ஒரு கிராமத்தில் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
பகவந்த் மானை அரசியலுக்கு கொண்டு வந்த சம்பவம்

பட மூலாதாரம், BHAGWANT MAAN / FB
பகவந்த் மான் சிறுவயதிலிருந்தே சொற்பொழிவாற்றுவதில் ஆர்வம் கொண்டவர். தான் நகைச்சுவை கலைஞராக வருவோமா அல்லது அரசியல்வாதியாக வருவோமா என்று கூட அப்போது அவருக்குத்தெரியாது. "பக்வந்த் மான் வயல்களில் தண்ணீர் பாய்ச்சும்போதும், மரம் வெட்டும்போதும் ஒரு கம்பை மைக் போல வைத்துக்கொண்டு பேசிக்கொண்டே இருப்பார்,"என்று மஞ்சித் சித்து கூறுகிறார்.
நகைச்சுவை ஒலி நாடாக்கள் மூலம், அரசியல் மற்றும் சமூகத்தின் பிரச்னைகளை நையாண்டி செய்வது அவரது கலையின் முக்கிய அம்சமாக இருந்ததாக சித்து கூறுகிறார். 2009-2010 இல், அவர் செய்தித்தாள்களுக்கு வழக்கமான கட்டுரைகளை எழுதத் தொடங்கினார். இதன் போது ஃபாசில்கா பகுதியில் சிறுமிகளை வினோதமான நோய் தாக்கும் செய்திகளை படித்தார்.
பகவந்த் மான் அடுத்த நாளே நானக் மற்றும் அதைச் சுற்றியுள்ள இரு கிராமங்களையும் அடைந்தார். குடிநீர் பிரச்னையால், மக்களின் நிலை மிகவும் மோசமாக இருந்தது. சில வெளிநாட்டு நண்பர்களின் உதவியுடன், பகவந்த் மான் இந்த பகுதியில் ஒரு குழாய் கிணற்றை நிறுவி தனது மட்டத்தில் சிறந்த முயற்சி மேற்கொண்டார்.
சமூக மற்றும் ஊடகத் துறையைச் சேர்ந்த சிலரையும் அழைத்துக் கொண்டு ஊடகவியலாளர் சந்திப்பின் மூலம் இந்த விஷயத்தை அவர் ஊடகங்களில் எழுப்பினார். 2011இல், பிரகாஷ் சிங் பாதலின் சகோதரர் மகனும், அப்போதைய நிதியமைச்சருமான மன்பிரீத் சிங் பாதல், அகாலி தளத்திற்கு எதிராகக் கிளர்ச்சி செய்தார்.
பிரபல விவசாய விஞ்ஞானி சர்தார் சிங் ஜோஹல் தலைமையில் பஞ்சாபின் பிரச்சனைகள் குறித்த மாநாடு ஜலந்தரில் ஏற்பாடு செய்யப்பட்டது. இங்கு பகவந்த் மான் மற்றும் மன்பிரீத் பாதல் சந்தித்தனர். அவர் பகவந்த் மானை தீவிர அரசியலில் நுழையுமாறு தூண்டினார்.
பகவந்த் மானின் அரசியல் பயணம்
பகவந்த் மான் அரசியலில் அடியெடுத்து வைத்த நேரத்தில் ஊடகவியலாளர்களுடன் உரையாடிய போது இவ்வாறு தெரிவித்தார். "எனது நகைச்சுவையின் மூலம் ஒரே ஒரு வகையான அரசியல் மற்றும் சமூக கருத்துகளை மட்டுமே சொல்லி வருகிறேன். சேற்றை சுத்தம் செய்ய, சேற்றில் இறங்க வேண்டும் என்று இப்போது உணர்கிறேன். அதனால் தான் இப்போது தீவிர அரசியலுக்கு வந்துள்ளேன்."
"அகாலியும், காங்கிரஸும் இணைந்து அதிகார வட்டத்தை உருவாக்கியுள்ளன. இதில் பஞ்சாப் மக்கள் நசுங்கி வருகின்றனர். பஞ்சாபுக்கு ஒரு மாற்று தேவை. இதைக்கொடுக்க நாங்கள் முயற்சிப்போம்,"என்றார் அவர்.
பகவந்த் மான் ஒரு தொழில்முறை நகைச்சுவைக் கலைஞராக இருந்தபோதும் அரசியல் மேடைகளுக்கு சென்றுள்ளார். ஆனால் அப்போது அவர் முறையாக அரசியலில் வரவில்லை. குறிப்பாக பல்வந்த் சிங் ராமுவாலியாவின் லோக் பாலாய் கட்சியை பஞ்சாபில் மூன்றாவது அணையாக்கும் ஆக்கும் பல நடவடிக்கைகளை பகவந்த் மான் எடுத்தார்.
ஆனால் அவர் எந்த அரசியல் கட்சியிலும் சேரவில்லை. கல்லூரி நாட்களில், இடதுசாரிகளின் சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டபோதிலும் அவர் எந்தக் கட்சியிலும் உறுப்பினராகவில்லை. 2011 மார்ச் மாதம் மன்பிரீத் பாதல் பஞ்சாபில் 'மக்கள் கட்சியை' உருவாக்கியபோது பகவந்த் மான் அரசியலில் குதித்தார். பஞ்சாப் மக்கள் கட்சியின் (பிபிபி ) நிறுவகத் தலைவர்களில் ஒருவரானார்.
ஜாம்பவான்களிடம் தோற்றவர், தோற்கடித்தவர்.

பட மூலாதாரம், BHAGWANT MAAN / FB
2012 பிப்ரவரியில்,பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் லெஹ்ராகாகா தொகுதியில் பிபிபி வேட்பாளராக பகவந்த் மான் போட்டியிட்டார். பஞ்சாப் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராஜீந்தர் கெளர் பட்டலிடம் பகவந்த் மான் தோல்வியடைந்தார்.
2012 சட்டப்பேரவைத்தேர்தலில், பிபிபி கட்சிக்கு எந்த இடமும் கிடைக்காததால், அகாலி தளம் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்தது. இதையடுத்து மன்பிரீத் சிங் பாதல் காங்கிரஸில் சேரத் தயாராகிவிட்டார். ஆனால் காங்கிரஸில் சேராமல் வேறு பாதையைத் தேர்ந்தெடுத்த பகவந்த் மான், 2014 ஆம் ஆண்டு 'ஆம் ஆத்மி 'கட்சியில் இணைந்தார்.
அன்னா ஹசாரே இயக்கத்தில் இருந்து உருவான ஆம் ஆத்மி கட்சிக்கு பஞ்சாபில் பெரும் ஆதரவு கிடைத்தது. 2014 மக்களவைத்தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 4 இடங்களில் வெற்றி பெற்றது.
இந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் பிரசாரத்தின் முகமாக பகவந்த் மான் இருந்தார். அவர் சங்ரூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு 2,11,721 வாக்குகள் வித்தியாசத்தில் அகாலிதளத்தின் மூத்த தலைவர் சுக்தேவ் சிங் திண்ட்சாவை தோற்கடித்தார். இந்தத் தேர்தலில் காங்கிரஸ் தலைவர் விஜய் இந்தர் சிங்லா மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.
2019 மக்களவை தேர்தல் நேரத்திற்குள் பஞ்சாபில் அரசியல் சூழ்நிலை மாறிவிட்டது. 2017 தேர்தலில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. ஆம் ஆத்மி கட்சியும் பிரிந்தது. சுக்பால் கைராவின் பஞ்சாப் ஏக்தா கட்சி மற்றும் தரம்வீர் காந்தியின் நியூ பஞ்சாப் கட்சி மற்றும் பெயின்ஸ் சகோதரர்களின் லோக் இன்சாஃப் கட்சி ஆகியவை கூட்டணி அமைத்தன, ஆனால் இந்த கூட்டணிக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை.
சிரோமணி அகாலி தளம் - பாஜக கூட்டணி மற்றும் காங்கிரஸ் தவிர, மூன்றாவது கட்சியில் இருந்து சங்ரூரில் மீண்டும் வெற்றி பெற்று மக்களவைக்கு வந்த ஒரே தலைவர் பகவந்த் மான் மட்டுமே. இதன் மூலம் ஆம் ஆத்மி கட்சியின் முன்னணி தலைவராக பகவந்த் மான் உருவெடுத்தார்.
2017 மே 8 அன்று, ஆம் ஆத்மி கட்சியின் பஞ்சாப் பிரிவு தலைவராக பகவந்த் மான் நியமிக்கப்பட்டார். ஆனால் அவர் சிறிது காலத்திலேயே ராஜினாமா செய்தார். அகாலி தலைவர் பிக்ரம் சிங் மஜிதியா போதைப்பொருள் மாஃபியாவுக்கு ஆதரவாக செயல்பட்டதான அவதூறு வழக்கில் அரவிந்த் கேஜ்ரிவால் நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டதால் அவர் வருத்தம் அடைந்தார்.
2017 சட்டப்பேரவைத் தேர்தலில் பகவந்த் மான், ஜலாலாபாத்தில் இருந்து ஆம் ஆத்மி கட்சி சார்பில் சுக்பீர் பாதலை எதிர்த்துப் போட்டியிட்டார். ஆனால் பகவந்த் மான் 18,500 வாக்குகள் வித்தியாசத்தில் பாதலிடம் தோல்வியடைந்தார்.
காங்கிரஸும் ரவ்னீத் பிட்டுவை இங்கு நிறுத்தியதால் பகவந்த் மான் முத்தரப்புப் போட்டியில் தோல்வியைச் சந்திக்க நேரிட்டது. 2019 மக்களவைத் தேர்தலில், பகவந்த் மான் மீண்டும் வெற்றி பெற்றார்.
மது தொடர்பான சர்ச்சை

பட மூலாதாரம், BHAGWANT MANN/FB
அரசியல்வாதிகள் மீது ஊழல், உறவினர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது, பணமோசடி போன்ற குற்றச்சாட்டுகள் அடிக்கடி முன்வைக்கப்படுகின்றன. ஆனால், ஏறக்குறைய பத்தாண்டு கால அரசியல் வாழ்க்கையில், பகவந்த் மான் மீதான மிகப்பெரிய குற்றச்சாட்டு அவர் மது அருந்தினார் என்பதுதான்.
ஆம் ஆத்மியின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்த, யோகேந்திர யாதவ் 2015-ம் ஆண்டு இதைத் தெரிவித்திருந்தார். "2014 ஆம் ஆண்டு ஜூலை மாதம் கட்சி எம்.பி.க்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. பகவந்த் மான் என்னுடன் அமர்ந்திருந்தார். அவரிடமிருந்து மதுவின் துர்நாற்றம் வந்தது," என்று ஊடகங்களில் அவர் கூறியிருந்தார்.
பகவந்த் மான் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் என்று கேப்டன் அமரீந்தர் சிங் பின்னர் குற்றம் சாட்டினார். கேப்டன் அமரீந்தர் சிங்கின் குற்றச்சாட்டுகளுக்கு சில நாட்களுக்குப் பிறகு, ஆம் ஆத்மி கட்சியில் இருந்த ஹரிந்தர் சிங் கால்ஸா, பகவந்த் மானிடம் இருந்து மது வாசனை வீசியதால், தனது இருக்கையை மாற்றுமாறு அப்போதைய மக்களவைத் தலைவர் சுமித்ரா மஹஜனிடம் எழுத்துப்பூர்வமாக வேண்டுகோள் விடுத்தார்.
நாடாளுமன்றத்தில் அவர் ஆற்றிய உரையின் போது, ஆளும் பாஜகவைச் சேர்ந்த உறுப்பினர்கள் அவர் குடிபோதையில் நாடாளுமன்றத்திற்கு வந்ததாகக் குற்றம்சாட்டினர். ஒருமுறை நாடாளுமன்றத்தில் நடந்த விவாதத்தில் பகவந்த் மான் பேசிக் கொண்டிருந்த போது, ஒரு பா.ஜ.க எம்.பி., அவருடைய அருகில் வந்து முகர்ந்து பார்த்த வீடியோ வைரலானது.

பட மூலாதாரம், BHAGWANT MANN/FB
இந்த நிகழ்வின் போது, அவர் மேடையை விட்டு வெளியேறிய வீடியோவும் வைரலானது. அதில் சிலர் அவர் மது அருந்தியதாக குற்றம் சாட்டினர். ஆனால் காரில் அமைதியாக அமர்ந்து தான் எந்தவித சர்ச்சையையும் உருவாக்க விரும்பவில்லை என்றும், இந்த குற்றச்சாட்டுக்கள் எல்லாம் தன்னை களங்கப்படுத்தும் நோக்கத்திலானவை என்றும் கூறிவிட்டு அவர் சென்றுவிட்டார்.
2016 நவம்பரில்ஆஸ்திரேலியாவில் படுகொலை செய்யப்பட்ட பாடகர் மன்மீத் அலிஷேரின் இறுதிச் சடங்கில் பகவந்த் மது அருந்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. பல தலைவர்கள் மது அருந்தினாலும், பகவந்த் மான் பகலில் கூட போதையில் இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. 2015 ஆம் ஆண்டு குரு கிரந்த் சாஹிப் அவமானப்படுத்தப்பட்டதை எதிர்த்து நடந்த ஆர்பாட்டத்தின் போது நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் இளைஞர்கள் கொல்லப்பட்டதை எதிர்த்து நடந்த ஆர்ப்பாட்டத்தின் போதும் பகவந்த் மான் மது அருந்தியிருந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
பஞ்சாபிலும், பகவந்த் மான் குடிபோதையில் இருப்பதாகக் கூறும் பொது நிகழ்ச்சிகளின் பல வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. பகவந்த் மான் மற்றும் அவரது ஆதரவாளர்கள், இதை அகாலி தளம், பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியின் சதி என்று கூறுகிறார்கள்.
2019 ஜனவரி 1 முதல் மதுவைத் தொடமாட்டேன் என்று சபதம் எடுத்துள்ளதாக, 2019 ஜனவரி 20ஆம் தேதி பர்னாலாவில் நடந்த கட்சிப் பேரணியின் போது, தனது தாயார் முன்னிலையில் பகவந்த் மான் அறிவித்தார்.
பிற செய்திகள்:
- யுக்ரேன்: மகப்பேறு, குழந்தைகள் மருத்துவமனை மீது ரஷ்யா குண்டுவீச்சு
- ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் இந்தியாவுக்குச் சொல்லப்போகும் செய்தி என்ன?
- யுக்ரேன் போரை திரைக்குப் பின்னால் இருந்து இயக்கும் அதிபரின் மனைவி
- இஸ்லாமியரின் நிலத்துக்குள் அத்துமீறி பௌத்த விகாரை அமைக்க முயற்சி - மக்கள் கடும் எதிர்ப்பு
- ராமேஸ்வரத்தில் டாட்டூ போட வந்ததை போல் நடித்து இளைஞரை கடத்திய கும்பல்: என்ன நடந்தது?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












