உபி, உத்தராகண்ட், கோவா, மணிப்பூரில் ஆட்சியை தக்க வைக்கும் பாஜக - பஞ்சாபில் தடம் பதித்த ஆம் ஆத்மி

தேர்தல் நடந்த 5 இந்திய மாநிலங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி கிட்டத்தட்ட இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கிறது. இதுவரை வெளியான முடிவுகளின்படி உத்தர பிரதேசம், உத்தராகண்ட், மணிப்பூர், கோவா ஆகியவற்றில் ஆளும் பாஜக ஆட்சியை தக்க வைக்கும் நிலையில் உள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியைக் கைப்பற்றியிருக்கிறது.
இந்த தேர்தல் முடிவுகளை இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலும், Voter Helpline App என்ற செயலி மூலமாகவும் உடனுக்குடன் அறிந்துகொள்ளலாம் என, இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
உத்தர பிரதேசத்தில் 403 தொகுதிகளுக்கு ஏழு கட்டங்களாக வாக்குப்பதிவு நடந்தது. பிப்ரவரி மாதம் 10ஆம் தேதி முதல் கட்ட வாக்குப்பதி தொடங்கியது. மார்ச் 7ஆம் தேதி 7வது கட்டமாக நிறைவடைந்தது.
உத்தராகண்ட் மாநிலத்தின் 70 தொகுதிகள் , பஞ்சாப் மாநிலத்தின் 117 தொகுதிகள் மற்றும், கோவா மாநிலத்தின் 40 தொகுதிகளில் ஒரே காட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. மணிப்பூர் மாநிலத்தின் 60 தொகுதிகள் இரு கட்டங்களாகத் வாக்குப்பதிவு நடைபெற்றது.
ஆட்சியைத் தக்க வைக்கும் பா.ஜ.க

பட மூலாதாரம், ANI
இந்தியாவில் அதிக சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட மாநிலமான உத்தர பிரதேசத்தில் பெரும்பான்மைக்கும் அதிகமான இடங்களில் பா.ஜ.க முன்னிலையில் உள்ளது. முடிவுகள் வெளியாகியுள்ள 237 தொகுதிகளில் பாஜக 158 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மொத்தம் 96 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. அதாவது மொத்தம் 254 இடங்களைக் கைப்பற்றும் நிலையில் உள்ளது. சமாஜ்வாதி கட்சி 61 இடங்களில் வெற்றி பெற்று, 51 இடங்களில் முன்னிலையோடு இரண்டாவது இடத்தில் உள்ளது. காங்கிரஸ் கட்சி 2 இடங்களில் மட்டும் வெற்றியப் பதிவு செய்துள்ளது.
காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் அக்கட்சியின் தலைமைப் பொறுப்பை கையில் எடுத்துச் செயல்பட்டார். அவர் தற்போது, "மக்களின் முடிவுதான் முக்கியம்," என்று கட்சியின் மோசமான தோல்வி குறித்துப் பேசியுள்ளார்.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் தோல்வி குறித்து பிரியங்கா காந்தி தனது ட்விட்டர் பதிவில், "ஜனநாயகத்தில் மக்களின் வாக்குகள் முக்கியம். நம்முடைய உறுப்பினர்கள் மற்றும் தலைவர்கள் கடுமையாக உழைத்தனர். ஓர் அமைப்பை உருவாக்கினர். மக்கள் பிரச்னைகளுக்காகப் போராடினர். ஆனால், எங்களால் கடின உழைப்பை வாக்குகளாக மாற்ற முடியவில்லை. உத்தர பிரதேச மக்களின் முன்னேற்றத்திற்காக, எதிர்க்கட்சியாக இருந்து முழு பொறுப்புடன் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து போராடும்," என்று கூறியுள்ளார்.
பஞ்சாபில் ஆம் ஆத்மி ஆட்சி

பட மூலாதாரம், ANI
பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சியை உறுதி செய்துள்ளது. அக்கட்சி 92 இடங்களில் வென்றுள்ளது. ஆளும் காங்கிரஸ் கட்சி 18 இடங்களில் வெற்றி பெற்று, இரண்டாவது இடத்தில் உள்ளது. பா.ஜ.க 2 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. சிரோன்மணி அகாலி தளம் 3 இடங்களிலும் பகுஜன் சமாஜ் கட்சி 1 இடத்திலும் சுயேச்சை 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன.
உத்தராகண்ட் மாநிலத்தில் முடிவுகள் வந்த 56 இடங்களில் பா.ஜ.க 38 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மொத்தம் 9 இடங்களில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் 16 இடங்களில் வெற்றியும் 3 இடங்களில் முன்னிலையிலும் உள்ளது. பகுஜன் சமாஜ் 1, சுயேச்சை 1 இடத்திலும் வென்றுள்ளன. தலா ஒரு இடத்தில் முன்னிலையில் உள்ளன.
மணிப்பூர் மாநிலத்தில் பா.ஜ.க 27 இடங்களில் வெற்றியும் 5 இடங்களில் முன்னிலையும் பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 5 இடங்களில் வென்றுள்ளது. ஐக்கிய ஜனதா தளம் 6 இடங்களில் வென்றுள்ளது. தேசிய மக்கள் கட்சி 6 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. நாகா மக்கள் முன்னணி 5 இடங்களில் வென்றுள்ளது. சுயேச்சைகள் 3 இடங்களில் வென்றுள்ளன.
கோவா மாநிலத்தில் பா.ஜ.க 20 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் 10 இடங்களில் வென்று, 1 இடத்தில் முன்னிலை பெற்று 2ம் இடத்தில் உள்ளது. ஆம் ஆத்மி கட்சி 2 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பிற கட்சிகள் மொத்தம் 7 இடங்களில் முன்னிலையில் உள்ளன.
தேர்தல் முடிவுகள் குறித்து தலைவர்கள்
பா.ஜ.கவின் வெற்றிக் கொண்டாட்டக் கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோதி, "இந்த நான்கு மாநில வெற்றி, தேசிய ஜனநாயக கூட்டணியைச் சேர்ந்தவர்களின் உழைப்புக்குக் கிடைத்தவை. வெற்றியைச் சாத்தியமாக்கி, ஜனநாயக திருவிழாவில் பங்கெடுத்த அனைத்து வாக்காளர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்," என்றார்.

பட மூலாதாரம், ANI
தொடர்ந்து மோடி பேசுகையில், " உத்தராகண்டில் முதல்முறையாக ஒரே கட்சி இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்துள்ளது. கடந்த 2019-ஆம் ஆண்டு மத்தியில் ஆட்சிக்கு வந்தபோது, 2017-ஆம் ஆண்டு உத்தர பிரதேசத்தில் கிடைத்த வெற்றி அதற்குக் காரணம் என்று வல்லுநர்கள் கூறினர். இப்போது அதே வல்லுநர்கள், 2022 சட்டமன்ற தேர்தல் முடிவுகள், 2024 நாடாளுமன்ற தேர்தலின் தலையெழுத்தைத் தீர்மானிக்கும் எனக் கூறுவார்கள் என்று நம்புகிறேன்," என்று கூறினார்.
பாஜக தலைவர் ஜே.பி.நட்டா, ''நான்கு மாநிலங்களில் கிடைத்த வெற்றி பிரதமர் மோதியின் கொள்கைகள் மற்றும் திட்டங்களுக்குக் கிடைத்தது என்று கூறினார். "இன்று வந்துள்ள தேர்தல் முடிவுகள், இந்திய அரசியலில் மோதி தலைமையின் கீழான ஆட்சியை தொடர்ந்து ஆதரிப்பதைக் காட்டுகிறது.
கடந்த 37 ஆண்டுகளில் முதல் முறையாக ஒரே கட்சி உத்தர பிரதேசத்தில் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வருகிறது. அதேபோல், உத்தராகண்டிலும் தொடர்ந்து ஆட்சி மாறிக் கொண்டிருக்கும் நிலையில், மக்கள் மீண்டும் பாஜகவை தேர்ந்தெடுத்துள்ளனர். மணிப்பூரில் தனிப் பெரும்பான்மையில் முதல்முறையாக பாஜக ஆட்சி அமைக்கிறது. கோவாவில் மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கப்படுகிறது," என்று கூறினார்.
ராகுல் காந்தி கருத்து
ட்விட்டரில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, ''மக்களின் தீர்ப்பை பணிவன்புடன் ஏற்றுக் கொள்கிறேன். தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள். காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்காக உழைத்த நிர்வாகிகள், தன்னார்வலர்கள், செயல்வீரர்கள் ஆகியோருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தோல்வியில் இருந்து பாடம் கற்றுக் கொள்வதுடன் தொடர்ந்து நாட்டு மக்களுக்காக உழைப்போம்' எனப் பதிவிட்டுள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி பெற்ற வெற்றி தொடர்பாக செய்தியாளர்களிடம் அக்கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், '' மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். நாட்டின் அரசியலை நாங்கள் மாற்றியமைப்போம். மருத்துவம் படிப்பதற்காக எந்த மாணவரும் யுக்ரேன் செல்லாத சூழலை உருவாக்குவோம். பஞ்சாபில் புதிதாக மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளை உருவாக்குவோம். இந்தத் தேர்தல் முடிவுகளில் இருந்து நான் ஒரு தீவிரவாதி அல்ல, தேசபக்தன் என்பதை மக்கள் காட்டியுள்ளனர். விரைவில் புரட்சி ஏற்படும்'' எனக் குறிப்பிட்டார்.
தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறுகையில், ''கொரோனா காலகட்டத்தில், உ.பியில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவர் இறந்துள்ளார். அந்த மக்கள் எல்லாம் பா.ஜ.கவுக்கு வாக்களிக்க மாட்டார்கள் எனப்பேசி வந்தனர். அதையெல்லாம் கடந்து மக்கள் இந்த வெற்றியைக் கொடுத்துள்ளனர். இது கொரோனா பிரச்னையை பிரதமர் மோதி கையாண்டவிதத்துக்காக கிடைத்துள்ள மிகப் பெரிய வெற்றி. சுமார் 87 சதவீதமான இளைய சமூகத்தினருக்கு இரண்டு தவணை தடுப்பூசியை செலுத்தியுள்ளோம். பா.ஜ.கவின் உழைப்புக்குக் கிடைத்த ஊதியம் இது' என்றார்.
தமிழ்நாட்டிலும் மாற்றம் - பா.ஜ.க
மேலும், ''கிறிஸ்துவர்கள், இஸ்லாமியக்ள் உள்பட அனைத்து சமூக மக்களும் பா.ஜ.கவின் வளர்ச்சித் திட்டங்களுக்காக வாக்களித்துள்ளனர். இது தமிழ்நாட்டிலும் நிகழும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. தமிழ்நாட்டில் பா.ஜ.க 2024 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வருகிறதா அல்லது 2026 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வருகிறதா என நமக்குத் தெரியாது. காரணம், ஒரே நாடு-ஒரே தேர்தலுக்கு நாடு தயாராகிவிட்டதாக தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு பா.ஜ.கவும் தயாராக இருக்கிறது. தமிழ்நாட்டிலும் மிகப்பெரிய மாற்றம் காத்துக் கொண்டிருக்கிறது'' என்றார்.
அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல்களில் வெற்றி பெற்று மக்களின் இதயங்களை வென்ற உங்களுக்கு வாழ்த்துகள். பா.ஜ.கவின் நல்லாட்சி மற்றும் நலத்திட்டங்களுக்குக் கிடைத்த தீர்ப்பு. உங்கள் முயற்சிகள் வெற்றியடைய வாழ்த்துகள்'' எனத் தெரிவித்துள்ளார்
பிற செய்திகள்:
- யுக்ரேன்: மகப்பேறு, குழந்தைகள் மருத்துவமனை மீது ரஷ்யா குண்டுவீச்சு
- இஸ்லாமியரின் நிலத்துக்குள் அத்துமீறி பௌத்த விகாரை அமைக்க முயற்சி - மக்கள் கடும் எதிர்ப்பு
- ராமேஸ்வரத்தில் டாட்டூ போட வந்ததை போல் நடித்து இளைஞரை கடத்திய கும்பல்: என்ன நடந்தது?
- யுக்ரேன் போரை திரைக்குப் பின்னால் இருந்து இயக்கும் அதிபரின் மனைவி
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












