ராமேஸ்வரத்தில் ஆள் கடத்தல்: டாட்டூ போட வந்ததை போல் நடித்து பணத்திற்காக இளைஞரை கடத்திய கும்பல்

டாட்டூ

ராமேஸ்வரம் அருகே டாட்டூ கடை நடத்தி வரும் இளைஞரை பணத்திற்காக கடத்தல் கும்பல் ஒன்று காரில் கடத்தி அடித்து சித்ரவதை செய்த சம்பவம் ராமேஸ்வரம் தீவு பொதுமக்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம், பாம்பன், தங்கச்சிமடம், அக்காள்மடம், மண்டபம் உள்ளிட்டவை கடற்கரை கிராமம் என்பதால் இப்பகுதிகளில் வசிக்கும் பெரும்பாலானோர் மீன்பிடி தொழில் செய்யும் மீனவர்கள்.

கடலில் மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள் இயற்கை பேரிடர்; அல்லது விபத்துக்குள்ளாகி கடலில் தவறி விழுந்து மாயமாகி விடுவார்கள். மீனவர்களின் உடல் நீண்ட நாட்களுக்கு பின் இறந்த நிலையில் கடற்கரைகளில் கரை ஒதுங்கும் போது அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்படும்.

இதனால் மீனவர்கள் பலரும் தங்களது உடல் பாகங்களில் தங்களுக்கு பிடித்தமானவர்களின் பெயர்கள் அல்லது குறியீடுகள் சிலவற்றை அடையாளமாக பச்சை குத்தி கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

ஆனால் தற்போது பலரும் பேஷனுக்காக உடலில் பச்சை குத்தி கொள்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கலாம் நினைவகம் அருகே டாட்டூ ஸ்டுடியோ

ராமேஸ்வரம் அடுத்த தங்கச்சிமடம் பகுதியில் வசித்து வரும் லெபனோன் என்ற இளைஞர் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் தேசிய நினைவகம் அருகே டிவின் என்ற பெயரில் டாட்டூ ஸ்டுடியோ (பச்சை குத்தும் கடை) நடத்தி வருகிறார்.

ராமேஸ்வரம் தீவு பகுதியில் இவர் ஒருவர் மட்டுமே இந்த கடை வைத்திருப்பதால் இவரிடம் ராமேஸ்வரம், தங்கச்சிமடம், பாம்பன், சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் அதிகமானோர் வந்து டாட்டூ குத்தி செல்கின்றனர். இதனால் இவரது கடையில் பெரும்பாலான நேரங்களில் கூட்டமாக இருக்கும்.

லெபனோன் டாட்டூ வின் அளவு மற்றும் டிசைன் அடிப்படையில் 2 ஆயிரம் ரூபாய் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை வாடிக்கையாளர்களிடம் பெற்று வருகிறார். இதனால் லெபனோனுக்கு டாட்டூ குத்தும் தொழிலில் நல்ல வருமானம் கிடைத்து வருகிறது.

இவர் விலை உயர்ந்த இரு சக்கர வாகனம் ஒன்றை பயன்படுத்தி வருகிறார். கடந்த வாரம் தங்கச்சிமடம் பகுதியில் வீடு ஒன்று புதிதாக கட்டியுள்ளார்.

இதனை நோட்டமிட்ட ஒரு கும்பல் லெபனோவிடம் இருந்து பணம் பறிக்க வேண்டும் என திட்டமிட்டு தொடர்ந்து லெபனோனை கண்காணித்து வந்துள்ளனர்.

முகத்தில் மிளகாய் பொடி தூவி கடத்திய கடத்தல் கும்பல்

கடந்த 3ஆம் தேதி இரவு 7 மணியளவில் லெபனோன் கடைக்கு டாட்டூ போடுவதற்கு கோபி, காளீஸ், முனீஸ் என மூவர் மது போதையில் வந்துள்ளனர். முதலில் காளிசுக்கு இடது கையில் சிவன் படம் போட சொல்லியுள்ளனர். லெபனோன் காளீசுக்கு டாட்டூ போட தொடங்கி தொடர்ந்து இரண்டு மணி நேரமாக டாட்டூ போட்டுள்ளார்.

இரவு பத்து மணிக்கு மேலானதால் அருகே உள்ள கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டது. இதனை பயன்படுத்தி மது போதையில் இருந்த மூவரும் லெபனோன் முகத்தில் மிளகாய் பொடியை தூவி தலையில் பலமாக தாக்கி கடைக்கு முன் நின்று கொண்டிருந்த சொகுசு காரில் ஏற்றி கடத்தி சென்று பின்னர் ராமநாதபுரம் அருகே நதிப்பாலம் என்ற இடத்தில் வைத்து காருக்குள் இருந்த இருவர் உட்பட ஐந்து பேர் லெபனோனை சரமாரியாக அடித்து உதைத்து சித்ரவதை செய்துள்ளனர்.

டாட்டூ

பட மூலாதாரம், Getty Images

பின்னர் கத்தியை காட்டி மிரட்டி வீட்டில் உள்ளவர்களுக்கு போன் செய்து ஒரு கோடி ரூபாய் பணம் வாங்கி கொடுக்கும் படி மிரட்டியுள்ளனர்.

கடத்தல் கும்பல் அடிக்கு பயந்து லெபனோன் தன் கழுத்தில் கிடந்த தங்க சங்கலியை கழற்றி கொடுத்துள்ளார். ஆனால் தொடர்ந்து அந்த கும்பல் பணம் கேட்டு மிரட்டியதால் லெபனோன் தனது வங்கி கணக்கில் இருந்து ஜி பே மூலம் கடத்தி சென்ற கும்பலில் இருந்த காளிஸ் என்பவர் வங்கி கணக்குக்கு ரூபாய் 20 ஆயிரம் அனுப்பியுள்ளார்.

செல்போனை மறந்து டாட்டூ கடையில் விட்டு சென்ற கொள்ளையன்

லெபனோன் அனுப்பிய பணம் தனது வங்கி கணக்கிற்கு வந்து விட்டதா என சரி பார்பதற்காக காளிஸ் தனது செல்போனை பார்த்த போது செல்போனை காணவில்லை. காளிஸ் டாட்டூ போடும் போது லெபனோன் கடையில் தனது செல்போனை சார்ஜ் போட்டு வைத்துள்ளார். லெபனோனை கடத்தி வரும் அவசரத்தில் செல்போனை எடுக்க மறந்தது பின்னர் தெரிய வந்துள்ளது.

லெபனோன் கடையில் உள்ள காளீஸ் செல்போனை வைத்து காவல்துறை தங்களை பிடித்து விடுவார்கள் என்ற அச்சத்தில் செய்வதறியாது லெபனோனை காரில் வைத்து அடித்து பல இடங்களில் சுற்றியுள்ளனர்.

போதை குறைந்ததால் மீண்டும் மது குடிப்பதற்கு தண்ணீர் பாட்டில் வாங்க ராமநாதபுரம் பேருந்து நிலையத்திற்கு கார் வந்துள்ளது.அப்போது காரில் இருந்து மூவர் இறங்கி தண்ணீர் பாட்டில் வாங்க சென்றிருக்கின்றனர்.

டாட்டூ

காருக்குள் இருவர் மட்டுமே இருந்துள்ளனர். கார் கண்ணாடி திறந்திருந்தால் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி லெபனோன் கார் கதவை தள்ளிவிட்டு காரிலிருந்து தப்பி வெளியே குதித்துள்ளார்.

பின்னர் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த பயணிகளிடம் தன்னை காப்பாற்றுமாறு உடலில் காயங்களுடன் லெபனோன் கேட்டுள்ளார். இதனையடுத்து அங்கு பேருந்துக்காக நின்று கொண்டிருந்த சிலர் லெபனோனை அந்த கும்பலிடம் இருந்து மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து பின் லெபனோன் பெற்றோருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் விசாரணை

தகவலறிந்து அதிர்ச்சியடைந்த லெபனோன் தந்தை ஆரோக்கியதாஸ் தங்கச்சிமடம் காவல் நிலையத்தில் உடனடியாக புகார் அளித்தார். பின்னர் லெபனோனை பத்திரமாக தங்கச்சிமடம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

தங்கச்சிமடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து டாட்டூ கடைக்கு அருகே உள்ள பேக்கரி மற்றும் பாம்பன், தங்கச்சிமடம் தேசிய நெடுஞ்சாலையில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

பின்னர் போலீசார் லெபனோன் டாட்டூ கடையில் மறந்து விட்டு சென்ற காளீஸின் செல்போன் அதன் பின் இருந்த நகை அடகு வைத்த சீட்டு உள்ளிட்டவைகள் அடிப்படையில் உடனடியாக கடத்தலில் ஈடுபட்ட பெருங்குளம் பகுதியை சேர்ந்த கோபி என்ற இளைஞரை மட்டும் கைது செய்து ராமநாதபுரம் சிறையில் அடைத்தனர். மேலும் கடத்தல் கும்பலை சேர்ந்த நபர்களை பிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

"ஒரு கோடி ரூபாய் கேட்டு மிரட்டல்"

இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய லெபனோன், என்னை கடத்தி சென்ற கும்பலில் ஒருவர் கடந்த 7 மாதத்திற்கு முன்பு எனது ஸ்டூடியோவிற்கு வந்து என்னிடம் டாட்டூ போட்டு சென்றுள்ளார்.

என்னை கடத்தி காரில் கொண்டு செல்லும் போது அடித்து துன்புறுத்தினர். எங்களை பற்றி போலீசில் புகார் அளித்தால் கொலை செய்து விடுவதாக மிரட்டினர்.

'நீ வைத்திருக்கும் பைக், புதிதாக கட்டிய வீடு உள்ளிட்டவற்றின் மதிப்பு எங்களுக்கு தெரியும் எனவே உடனடியாக ஒரு கோடி கொண்டு வரச் சொல்லு' என மிரட்டினர்.

கடத்தல் கும்பலைச் சேர்ந்த ஒருவர் என் கடையில் விட்டுச்சென்ற செல்போன் மற்றும் நகையை அடகு வைத்த ரசீது உள்ளிட்டவைகளை நாங்கள் போலீசிடம் கொடுத்தோம் அதன் அடிப்படையில் இதுவரை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்றார் லெபனோன்.

"என் மகன் உயிருக்கு ஆபத்து"

இது குறித்து லெபனோன் தாய் பிரேமா பிபிசி தமிழிடம் பேசும்போது, எனது மகனை கடத்தல் கும்பல் கடத்தி அடித்து துன்புறுத்தி பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். அன்றிலிருந்து என் மகன் மனநிலை பாதிக்கப்பட்டவன் போல் இருக்கிறான்.

டாட்டூ

யாரைப் பார்த்தாலும் பயப்படுகிறான். அந்த கும்பலிடம் இருந்து தப்பி வந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளாமல் இருக்கிறான். கடத்திச் சென்ற கும்பல் குறித்து போலீசில் சொன்னால் என் மகனை கொலை செய்து விடுவதாக மிரட்டிய நிலையில் இன்று வரை ஒருவர் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்னும் பலர் கைது செய்யப்படாமல் உள்ளது. எனவே எனது மகனின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது. காவல்துறை உடனடியாக சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார் பிரேமா.

மறந்து விட்டு சென்ற செல்போனால் சிக்கிய கொள்ளையன்

இச்சம்பவம் குறித்து ராமேஸ்வரம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தீபக் சுச்ரஜிடம் கேட்ட போது, சம்பவம் நடந்ததாக காவல்துறைக்கு தகவல் கிடைத்த ஒரு சில மணி நேரத்தில்; லெபனோன் கடையில் இருந்த செல்போன் வைத்து ஒருவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

சிறையில் அடைக்கபட்ட கோபி மீது கடந்த 10 நாட்களுக்கு முன் உச்சிப்புளி பகுதியில் வழிப்பறி செய்ததாக வழக்கு ஒன்று உள்ளது. மேலும் அவரது கூட்டாளி காளீஸ் மீது வழிப்பறி வழக்கு உள்ளது.

தப்பிச் சென்றவர்களை பிடிக்க ஒரு சார்பு ஆய்வாளர் மற்றும் நான்கு காவலர்கள் என 5 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு தொடர்ந்து தேடி வருகிறோம். விரைவில்; கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் அனைவரும் கைது செய்யப்படுவார்கள்.

இது போன்ற சம்பவங்கள் ராமேஸ்வரம் சுற்றுவட்டார பகுதியில் நடைபெறாமல் இருப்பதற்கு பகல் மற்றும் இரவு நேரங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என ராமேஸ்வரம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தீபக் சுச்ரஜ் தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: