கோகுல்ராஜ் கொலை: `சாதி வெறியின் மற்றொரு ரத்த சரித்திரம்' -தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்

பட மூலாதாரம், MOHAN ADVOCATE/FACEBOOK
- எழுதியவர், ஆ விஜயானந்த்
- பதவி, பிபிசி தமிழுக்காக
சேலம் பொறியியல் பட்டதாரி இளைஞர் கோகுல்ராஜ் படுகொலை வழக்கில் தீரன் சின்னமலை பேரவையின் நிறுவனர் யுவராஜுக்கு மூன்று ஆயுள் தண்டனைகள் வழங்கி 2022ஆம் ஆண்டு மதுரை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அப்போது, "ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே காதல் ஏற்படுவது உணர்வு மற்றும் மனது சம்பந்தப்பட்ட விஷயம். அதை பல சரிதங்களும் இதிகாசங்களும் நமக்கு உணர்த்துகின்றன" என தீர்ப்புக் குறிப்பில் நீதிபதி சம்பத்குமார் தெரிவித்தார்.
அந்தத் தீர்ப்பை இன்று சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. அப்போது, "கோகுல்ராஜ் கொலை வழக்கில் சந்தேகத்திற்கு இடமின்றி குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது. சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பில் எந்தப் பிழையும் இல்லை," என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்தது.
தீரன் சின்னமலை கவுண்டர் பேரவையைச் சேர்ந்த யுவராஜ் உள்ளிட்ட 10 பேருக்கு மதுரை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தண்டனையை இன்று சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது.
திருச்செங்கோடு மலையில் என்ன நடந்தது?
சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்தவர் பொறியியல் பட்டதாரி இளைஞர் கோகுல்ராஜ். இவர் நாமக்கல்லில் உள்ள தனியார் கல்லூரியில் படித்தபோது வகுப்புத் தோழியுடன் நட்புடன் பழகி வந்துள்ளார். இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 23 ஆம் தனது வகுப்புத் தோழியை சந்திப்பதற்காக நாமக்கல் வந்துள்ளார். முன்னதாக தனது செல்போன் பழுதடைந்துவிட்டதாக கோகுல்ராஜ் கூறவே, அதற்காக பணம் தருவதற்காகவே அவரை அப்பெண் அழைத்ததாகக் கூறப்படுகிறது. இருவரும் நேரில் சந்தித்தபோது இரண்டு ஐநூறு ரூபாய் தாள்களை அப்பெண் கொடுத்துள்ளார். இதன்பின் இருவரும் திருச்செங்கோடு மலையில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக சென்றுள்ளனர்.
அப்போது அங்கு வந்த தீரன் சின்னமலை பேரவையின் நிறுவனத் தலைவர் யுவராஜ் உள்ளிட்டவர்கள், அப்பெண்ணிடமும் கோகுல்ராஜிடமும் விசாரித்துள்ளனர். அப்பெண்ணின் முகவரியை எழுதிக் கேட்டுள்ளனர். இதில் அப்பெண்ணின் சாதி விவரம் தெரியவரவே, கோகுல்ராஜிடம் விசாரித்துள்ளனர். அவர் பட்டியல் இனத்தவர் என்று தெரிந்ததும் இருவரின் செல்போன்களையும் பறித்துவிட்டு பெண்ணை மட்டும் வீட்டுக்கு அனுப்பிவிட்டனர். இதன்பின்னர் மறுநாள் தொட்டிபாளையம் அருகே உள்ள ரயில்வே தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் பிணமாக கோகுல்ராஜ் கண்டெடுக்கப்பட்டார்.
உடற்கூராய்வில் வெளிப்பட்ட உண்மை
தொடக்கத்தில் இந்த வழக்கை விசாரித்து வந்த திருச்செங்கோடு டி.எஸ்.பி விஷ்ணுபிரியா, இது தற்கொலை வழக்கு என்றே பதிவு செய்தார். அதன்பிறகு சில நாள்களில் அவரும் தற்கொலை செய்து கொள்ளவே வழக்கு பரபரப்பானது. இது தொடர்பாக, கோகுல்ராஜுடன் மலைக்கு வந்த பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கும் பதிவு செய்யப்படுகிறது. பிறகு அந்தப் பெண்ணும், கோகுல்ராஜ் யார் என்றே தெரியாது என பிறழ் சாட்சியாக மாறிய சம்பவமும் நடந்தது.
`கோகுல்ராஜின் உடலை உடற்கூராய்வு செய்வதற்கு தனி மருத்துவர் ஒருவரை நியமிக்க வேண்டும், அரசு மருத்துவர் உடற்கூராய்வு செய்தால் அழுத்தம் கொடுத்துவிடுவார்கள்' எனக் கூறி பார்த்திபன் என்ற வழக்குரைஞர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இதையடுத்து, ராமச்சந்திரா மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர் சம்பத்குமாரை நியமித்து உடற்கூராய்வு நடத்தப்பட்டது. அவர்தான், `இது தற்கொலையல்ல, இது ஒரு கொடூரமான கொலை' எனக் குறிப்பிட்டார். அதன்பின்னர்தான் வழக்கு திசை மாறியது. இதன்பின்னர் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் ஏ1 ஆக குற்றம் சுமத்தப்பட்ட யுவராஜ், தலைமறைவாக இருந்தபோதே ஊடகங்களுக்குப் பேட்டியளித்தார். இந்த வழக்கை டி.எஸ்.பி விஷ்ணுபிரியாவால் சரிவர கையாள முடியாததால் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு சென்றது.
புலனாய்வில் இல்லாத ஒன்று
இதையடுத்து, இந்த வழக்கு நாமக்கல் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், `தங்களுக்கு நியாயம் கிடைக்க வாய்ப்பில்லை' என கோகுல்ராஜின் தாயார் சித்ரா, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து, மதுரையில் உள்ள வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வந்தது. இதில் 106 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். தனது மகனின் கொலைக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்றால் பவானியை சேர்ந்த ப.பா.மோகனிடம் வழக்கை ஒப்படைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார். இதையடுத்து, கோகுல்ராஜ் படுகொலை வழக்கை ப.பா.மோகன் நடத்தி வந்தார்.

பட மூலாதாரம், Getty Images
இந்த வழக்கில் திருச்செங்கோடு மலைக்கு யுவராஜ் சென்று வந்த சி.சி.டி.வி காட்சிகள், தனியார் தொலைக்காட்சியில் யுவராஜ் அளித்த பேட்டி என தொழில்நுட்ப ஆதாரங்களை வைத்தே ப.பா.மோகன் வாதிட்டார். காரணம், யுவராஜ் மீதான குற்றத்தை நிரூபிக்கப் போதுமான சாட்சியங்கள் கிடைக்காததுதான். இதைப் பற்றி பிபிசி தமிழிடம் பேசிய வழக்கறிஞர் ப.பா.மோகன், `தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் விஷ்ணுபிரியா தற்கொலைக்கான காரணம் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றை நடத்தியுள்ளனர். அப்போது அந்த நிகழ்ச்சியில் தானாகவே பங்கேற்ற யுவராஜ், `மலைக்கு மேலே சென்றது, செல்போனை தான் பிடுங்கவில்லை, அவர்களே கொடுத்தது' என அனைத்தையும் ஒப்புக் கொண்டார். இது புலனாய்வில் இல்லாத ஒன்று. இதனை இணைத்து புதிதாக சாட்சிகளை உருவாக்கினோம். சி.சி.டி.வி உள்பட தொழில்நுட்பரீதியிலான தடயங்களையும் சேர்த்து வழக்குக்கு உயிர் கொடுத்தோம்'' என்கிறார்.
மேலும், `ஒரு வழக்கில் புலன் விசாரணை தவறாகவே இருந்தாலும் சரியான ஆவணங்கள் ஆங்காங்கே இருக்கும்போது அவற்றைத் தொகுத்து நீதிமன்றத்தில் வெற்றி பெற வைக்க முடியும் என்பதற்கு இந்த வழக்கு ஒரு உதாரணம்' எனவும் குறிப்பிடுகிறார்.
சாகும் வரையில் சிறைத் தண்டனை
இந்த வழக்கின் விசாரணைகள் முழுமையாக நிறைவுற்ற நிலையில, கடந்த 8 ஆம் தேதி நீதிபதி சம்பத்குமார் தீர்ப்பினை வாசித்தார். அப்போது கோகுல்ராஜ் கொலை வழக்கில் முதல் குற்றவாளியான யுவராஜுக்கு மூன்று ஆயுள் தண்டனைகளும் ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுவதாகக் கூறினார். யுவராஜின் கார் ஓட்டுநர் அருணுக்கும் மூன்று ஆயுள் தண்டனைகள் விதிக்கப்பட்டன. இந்த வழக்கில் தொடர்புடைய குமார் என்கிற சிவக்குமார், சதீஷ்குமார், ரகு என்கிற ஸ்ரீதர், ரஞ்சித் ஆகியோருக்கு தலா இரண்டு ஆயுள் தண்டனைகளும் சந்திரசேகர், பிரபு, கிரிதர் ஆகியோருக்கு தலா ஒரு ஆயுள் தண்டைனையும் வழங்கப்பட்டன.

பட மூலாதாரம், MOHAN ADVOCATE/FACEBOOK
இந்தத் தீர்ப்புக்கு பின்னர் வெளியில் வந்த யுவராஜ், `தீர்ப்பை நான் மறுதலிக்கிறேன். கோகுல்ராஜ் தற்கொலைதான் செய்து கொண்டார். என் தரப்பு நியாயம் வெளியில் வரவில்லை' என செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
கோகுல்ராஜ் கொலை வழக்கில் சாகும்வரையில் குற்றவாளிகளுக்குத் தீர்ப்பு கொடுத்த விவகாரம் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. இந்த வழக்கு மேல்முறையீடுக்குச் செல்லும்போது, அங்கும் தமிழ்நாடு அரசு சட்ட நிபுணர்களோடு ஆலோசித்து வாதிட வேண்டும் எனவும் மனித உரிமை ஆர்வலர்கள் பேசி வருகின்றனர்.
368 பக்க தீர்ப்பில் என்ன உள்ளது?
இந்த வழக்கில் பட்டியல் வகுப்பினர் மற்றும் பட்டியல் பழங்குடியினருக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி (பிசிஆர்) டி.சம்பத்குமாரின் தீர்ப்புக் குறிப்புகளும் விவாதப் பொருளாக மாறியுள்ளன.
368 பக்கங்கள் உள்ள தீர்ப்புக் குறிப்பின், 86 ஆவது பத்தியில், `அரசு சிறப்பு குற்றத்துறை வழக்கறிஞர் தனது வாதத்தில் கோகுல்ராஜ் கொலை செய்யப்பட்டது மிகவும் கொடூரமான ஆணவக் கொலை என்றும், குற்றத்தின் தன்மை மிகவும் கடுமையானது என்றும், எனவே அதற்குத் தகுந்தார்போல தண்டனை வழங்க வேண்டும் என்றும், ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த கோகுல்ராஜ் கொலை செய்யப்பட்டுள்ளார் இந்த வழக்கு அரிதிலும் அரிதான வழக்காக கருதப்பட வேண்டும், 1,2 ஆகிய எதிரிகள்தான் இந்தக் கொலைக்கு மூலக்காரணம் என்றும் வாதிட்டார்.
பிரிவு 15 ஏ(5) பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடைச்சட்டத்தின்கீழ் புகார்தாரர் சித்ராவிடம், `எதிரிகளுக்கு வழங்கப்பட உள்ள தண்டனை பற்றி ஏதும் கூற விரும்புகிறாரா?' எனக் கேட்டபோது, அவர், `மரண தண்டனை வழங்க வேண்டும்' எனக் கேட்டுக் கொண்டார். எதிரிகள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், நீதிமன்றத்தின் முடிவுக்கு விட்டுவிடுவதாகத் தெரிவித்தார்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
காதலுக்கு சாதி, மதம், இனம் முக்கியமல்ல
அடுத்ததாக, 87ஆவது பத்தியில் நீதிபதி சம்பத்குமார், `இறந்துபோன கோகுல்ராஜ் பொறியியல் படிப்பை முடித்த இளைஞர், அவரது விதவை தாயான சித்ராவின் இளைய மகன். கோகுல்ராஜ் நிச்சயமாக வாழ்க்கையில் ஒரு பெரிய இடத்தை அடைய வேண்டுமென்ற கனவோடு இருந்திருப்பார். அதுபோல தனது இளைய மகனின் நிழலில் மற்றும் பாதுகாப்பில் தனது கடைசிக்காலம் வரையில் சந்தோஷமாக வாழலாம் என்று ஒரு கனவுடன் இருந்திருப்பார். ஆனால், மேலே கண்ட எதிரிகளால் அந்தக் கனவு சிதைக்கப்பட்டுள்ளது.

ஆதிக்கசாதி என்ற ஆணவத்தால் எதிரிகள் தாழ்த்தப்பட்ட பொறியியல் படித்த ஒரு இளைஞனை தங்கள் சாதியை சேர்ந்த பெண்ணை காதலித்துள்ளார் என்ற சந்தேகம் கொண்டு அந்த இளைஞன் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே காதல் ஏற்படுவது உணர்வு மற்றும் மனது சம்பந்தப்பட்ட விஷயம். அதை பல சரிதங்களும் இதிகாசங்களும் நமக்கு உணர்த்துகின்றன. காதலுக்கு சாதி, மதம், இனம் போன்றவை முக்கியம் அல்ல. அவற்றால் காதலை தடுக்கவோ அழிக்கவோ முடியாது. கோகுல்ராஜின் ஆணவக் கொலை ஆதிக்கசாதி வெறியின் மற்றொரு ரத்த சரித்திரம்' எனப் பதிவு செய்துள்ளார். மேலும், `சாதிகளை உடைக்க வேண்டும் எனில் கலப்புத் திருமணம்தான் ஒரே பரிகாரம்' என்று டாக்டர் அம்பேத்கர் குறிப்பிட்டுள்ளார் எனவும் நீதிபதி பதிவு செய்துள்ளார்.
`கலப்பு சாதி திருமணம் செய்யும் ஆணும் பெண்ணும் துன்புறுத்தலுக்கும் மிரட்டலுக்கும் ஆளாகிறார்கள் என்றால் அந்தக் குற்றங்களைச் செய்யும் நபர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் என்று Latasingh Vs State of U.P. and Another வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது' எனவும் மேற்கோள் காட்டியுள்ளார்.
கொலையின் பின்னணி என்ன?
தொடர்ந்து, 91 ஆவது பத்தியில், `இந்த வழக்கில் எதிரிகளின் குற்றச் செயல் தொடர்பான சூழ்நிலைகள், குற்றத்தின் கடுமைத்தன்மையைக் குறைக்கும் வகையில் அமைந்துள்ளதா அல்லது அதிகப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதா என்பதை ஆராய்கையில் 2,8,9,10,14 ஆகிய எதிரிகள் சம்பவ காலத்தில் 20 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள். 1,3,11, 13 ஆகிய எதிரிகள் 30 முதல் 35 வயதுக்குட்பட்டவர்கள். 12 ஆவது எதிரிக்கு மட்டும் சம்பவ காலத்தில் 44 வயது. இவரைத் தவிர மற்றவர்கள் அனைவரும் இளம் வயதினர்.
குற்றவாளிகள் எனக் கண்டறியப்பட்ட எதிரிகளுக்கும் இறந்து கோகுல்ராஜ் மற்றும் பெண்ணுக்கும் இடையே சம்பவ காலத்துக்கு முன்பு அறிமுகமே கிடையாது. கோகுல்ராஜை கொலை செய்யக் கூடிய அளவுக்கு அவர்களுக்கு இடையே ஆழமான முன்விரோதமும் இல்லை. ஒரு சாதிய அமைப்பின் தவறான கொள்கை மற்றும் சிந்தாந்தத்தின் அடிப்படையில் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் தங்கள் சாதிப் பெண், கோகுல்ராஜை காதலிக்கிறார் என சந்தேகம் அடைந்து அதனால் ஏற்பட்ட திடீர் கோபம் மற்றும் ஆத்திரத்தின் தொடர்ச்சியால் கொலைச் சம்பவம் அரங்கேறியுள்ளது.
1 ஆவது எதிரியைத் தவிர இதர எதிரிகள் இதற்கு முன்னர் வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக அரசுத் தரப்பில் சாட்யிம் எதுவும் அமையவில்லை. 1 ஆவது எதிரியைப் பொறுத்தவரையில் பெருந்துறை காவல்நிலையத்தில் 2 வழக்குகள் உள்ளதாக குறியிடப்பட்டுள்ளது. மேற்படி வழக்குகள் எல்லாம் 1 ஆவது எதிரி மீது இருந்ததாகக் கூறப்பட்டாலும் அவற்றில் சில வழக்குகளில் மட்டுமே குற்ற இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேற்படி வழக்குகளில் அவர் மீதான குற்றம் இன்னும் நிரூபிக்கப்படவில்லை. மேலும் எதிரி மீதான முதல் தகவல் அறிக்கைகள் கடுமையான குற்றங்கள் சார்ந்தது அல்ல. அவை தவிர 1 ஆம் எதிரியின் கெட்ட நடத்தையைக் காட்ட வேறு ஆவணங்கள் எதுவும் அரசுத் தரப்பில் தாக்கல் செய்யப்படவில்லை.
ஆயுள் தண்டனை மட்டும் போதுமானது அல்ல
எனவே, இவ்வழக்கு சம்பவம்நடந்த சூழ்நிலைகளை ஆராயும்போது குற்றச் செயல் தொடர்பான சூழ்நிலைகள், குற்றத்தின் கடுமைத்தன்மையைக் குறைக்கும் வகையிலேயே அமைந்துள்ளதாக மேலே சுட்டிக் காட்டப்பட்ட உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளின் அடிப்படையில் ஆராயும்போது துலங்குகிறது. இருப்பினும், வெறுமனே ஆயுள் தண்டனை மட்டுமே வழங்கினால் போதுமானது அல்ல என இந்த நீதிமன்றம் கருதுகிறது. மாறாக, Swamy Shraddananda @ Murali Manohar Mishra ... Appellant Vs State of Karnataka Hari & Anr.. Appellant Vs The State of Uttar Pradesh ஆகிய இரு வழக்குகளில் வழங்கப்பட்டதுபோல எதிரிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கி அவர்கள் இறுதிமூச்சுவரை (சாகும்வரை) சிறையில் இருந்து தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தால் நீதியின்பால் உகந்ததாக இருக்கும் என இந்நீதிமன்றம் கருதுகிறது' எனவும் நீதிபதி சம்பத்குமார் குறிப்பிட்டுள்ளார்.
முடிவில், `இந்த வழக்கில் அரசுத் தரப்பில் ஆஜரான சிறப்பு குற்றத்துறை வழக்கறிஞர் ப.மோகன் மற்றும் எதிரிகளுக்கு ஆஜரான மூத்த வழக்கறிஞர் கோபால கிருஷ்ணராஜு ஆகிய இருவரும் மூத்த வழக்கறிஞர்கள். அவர்கள் பல்வேறு நீதிமன்றங்களில் பல்வேறு வழக்குகளில் தினந்தோறும் ஆஜராகி வருகிறார்கள். இருப்பினும், இருவரும் தங்களது வழக்கறிஞர் தொழில் தொடர்புடைய கடினமான வேலைப் பளுவுக்கிடையிலும் இந்த வழக்கு விசாரணையின்போது நீதிமன்றத்துக்கு முழு மனதோடு தங்களது ஒத்துழைப்பையும் வழங்கினர்.
மேலும், பல்வேறு சட்டப் பிரிவுகளையும் உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களின் முன்மாதிரி தீர்ப்புகளையும் மேற்கோள் காட்டி இவ்வழக்கில் ஒரு நியாயமான முடிவை எட்டுவதற்கு மகத்தான பங்களிப்பை வழங்கியுள்ளனர். அவர்களுக்கு நீதிமன்றம் பாராட்டுதல்களை தீர்ப்பில் பதிவு செய்து கொள்கிறது' எனக் குறிப்பிட்டுள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












