பிபின் ராவத் பலியான குன்னூர் ஹெலிகாப்டர் சம்பவத்துக்கு எது காரணம்?

பட மூலாதாரம், Getty Images
இந்திய பாதுகாப்புப் படைகளின் தலைமை தளபதியாக இருந்த ஜெனரல் பிபின் ராவத், உள்ளிட்ட 14 பேரின் இறப்புக்குக் காரணமான, நீலகிரி மாவட்டம் வெலிங்டன் அருகே நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக முப்படைகளின் உயர்நிலைக்குழு விசாரணை அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.
அதில் ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் "சதி அல்லது அலட்சியம்" கண்டறியப்படவில்லை என்று உயர்நிலைக்குழு கூறியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய பாதுகாப்புப்படைகளின் முதலாவது தலைமைத் தளபதியாக இருந்த ஜெனரல் பிபின் ராவத் கடந்த மாதம் டிசம்பர் 8ஆம் தேதி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். (இந்த பதவியை இவருக்காகவே பிரதமர் நரேந்திர மோதி அரசு உருவாக்கியிருந்தது.)
இந்த விபத்தில் பல அதிகாரிகளும் உயிரிழந்தனர். ஜெனரல் ராவத்தின் மனைவியும் ஹெலிகாப்டரில் இருந்ததால் அவரும் விபத்தில் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கையில், "விபத்துக்கு காரணம் இயந்திர கோளாறோ, சதி அல்லது அலட்சியமோ அல்ல என்று கண்டறியப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல் கட்ட விசாரணையில் விமான டேட்டா ரெக்கார்டர் மற்றும் காக்பிட் குரல் ரெக்கார்டர் ஆகியவற்றை விசாரணைக்குழு ஆய்வு செய்துள்ளதாக இந்திய விமானப்படை சார்பில் கூறப்பட்டுள்ளதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
நீலகிரி மலைப்பகுதியில் வானிலையில் ஏற்பட்ட எதிர்பாராத மாற்றத்தால் மேகங்கள் நுழைந்ததன் விளைவாக இந்த விபத்து ஏற்பட்டதாக விசாரணைக்குழு கூறியுள்ளது.
அந்த மேக கூட்டங்களுக்குள் சிக்காமல் விமானி ஹெலிகாப்டரின் திசையை மாற்றும் கட்டாயத்துக்கு வழிவகுத்தது என்றும் அதன் விளைவாக நிலப்பரப்பில் ஹெலிகாப்டரை தரையிறக்குவதற்கு விசையை கட்டுப்படுத்த வழியின்றி சம்பவம் நடந்ததாக விசாரணைக்குழு கூறியுள்ளது.
இதே சமயம், இந்த விசாரணைக்குழு எதிர்காலத்தில் இதுபோன்ற அசாதாரண நிலையில் எத்தகைய நடைமுறைகளை கையாள வேண்டும் என்பது தொடர்பான சில பரிந்துரைகளை இந்திய பாதுகாப்பு அமைச்சகத்துக்கு வழங்கியிருக்கிறது.

பட மூலாதாரம், ANI
அவற்றின் விவரத்தை பாதுகாப்புத் துறையினர் வெளியிடவில்லை. இந்த குழுவின் அறிக்கை மீளாய்வு செய்யப்பட்டு வருவதாக பாதுகாப்புத்துறை கூறியுள்ளது.
முன்னதாக, பிபின் ராவத் பறந்து சென்ற ஹெலிகாப்டர் சம்பவம் குறித்து விசாரிக்க ஏதுவாக தமிழக காவல்துறை ஆரம்பநிலை முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தது. பிறகு இந்த சம்பவம் பற்றிய விசாரணையை பாதுகாப்புத்துறையே ஏற்றுக் கொண்டது.
இதைத்தொடர்ந்து சம்பவம் குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய உயர்நிலைக்குழுவை அமைப்பதாக இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கடந்த மாதம் நாடாளுமன்ற கூட்டத்தொடரின்போது அறிவித்தார். அதன்படி விசாரணைக்குழு தனது அறிக்கையை தாக்கல் செய்திருக்கிறது.

பட மூலாதாரம், Getty Images
Mi-17 V5 ரக ஹெலிகாப்டர் விபத்து தொடர்பான விசாரணை அறிக்கை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் கடந்த 5ஆம் தேதியே அளி.க்கப்பட்டது. இந்த ரக ஹெலிகாப்டர்கள், மிகவும் பாதுகாப்பானதாகவும் நம்பகமானதாகவும் கருதப்படும் ரஷ்ய தயாரிப்பு வடிவமைப்பாகும்.
பிபன் ராவத் பயணம் செய்த ஹெலிகாப்டர் குன்னூர் அருகே விபத்துக்குள்ளானபோது அதன் செயல் திறன் முழுமையாக சேவை செய்யக்கூடியதாகவே இருந்தது என பாதுகாப்புத்துறையினர் கூறுகின்றனர்.
எனினும் தாழ்வாகப் பறந்த நிலையில் அந்த ஹெலிகாப்டர், வெலிங்டனில் தரையிறங்குவதற்கு ஏழு நிமிடங்களுக்கு முன், மேக மூட்டத்தில் சிக்கியதால் கட்டுப்படுத்த முடியாத வகையில் கீழே விழுந்து நொறுங்கியிருப்பதாக விசாரணைக்குழு கண்டறிந்துள்ளது.
என்ன நடந்தது?
2021ஆம் ஆண்டு டிசம்பர் 8ஆம் தேதி, தமிழகத்தின் சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து காலை 11.48 மணிக்கு ஹெலிகாப்டர் புறப்பட்டு மதியம் 12.15 மணிக்கு வெலிங்டன் கோல்ஃப் மைதானத்தில் உள்ள ஹெலிபேடில் தரையிறங்க திட்டமிடப்பட்டது.

பட மூலாதாரம், Getty Images
இருப்பினும், சூலூரில் உள்ள விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டறை, ஹெலிகாப்டர் புறப்பட்ட 20 நிமிடங்களில், மதியம் 12.08 மணிக்கு, ஹெலிகாப்டருடனான தொடர்பை இழந்தது.இந்த விவகாரத்தில் முக்கிய பிரமுகர்களை ஏற்றிச் செல்லும் விமானங்களை நிர்வகிக்கும் நெறிமுறைகள் அடங்கிய தனது பரிந்துரைகளை விசாரணைக்குழு பாதுகாப்பு அமைச்சகத்திடம் அளித்துள்ளது. அவற்றை இந்திய விமானப்படை மதிப்பாய்வு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Mi-17V5 விபத்துக்குள்ளான நாளில் பிபின் ராவத், வெலிங்டனில் உள்ள பாதுகாப்பு சேவைகள் பணியாளர் கல்லூரிக்கு (DSSC) உரையாற்ற சென்றிருந்தார்.அந்த விபத்தில் பிபின் ராவத்தின் மனைவி மதுலிகா ராஜே சிங் ராவத், அவரது பாதுகாப்பு அதிகாரி பிரிகேடியர் எல்எஸ் லிடர், லெப்டினன்ட் கர்னல் ஹர்ஜிந்தர் சிங், விங் கமாண்டர் பிருத்வி சிங் செளஹான், Mi-17V5 விமானியான ஸ்குவாட்ரான் லீடர் குல்தீப் சிங், துணை விமானி. ஜூனியர் வாரண்ட் அதிகாரி ராணா பிரதாப் தாஸ், ஜூனியர் வாரண்ட் அதிகாரி அரக்கல் பிரதீப், ஹவில்தார் சத்பால் ராய், நாயக் குர்சேவக் சிங், நாயக் ஜிதேந்திர குமார், லான்ஸ் நாயக் விவேக் குமார் மற்றும் லான்ஸ் நாயக் பி சாய் தேஜா ஆகியோர் இறந்தனர்.
அந்த சம்பவத்தில் உயிர் தப்பிய ஒரே குரூப் கேப்டன் வருண் சிங், படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில், டிசம்பர் 15ஆம் தேதி தனது கடைசி மூச்சை இழுத்த பிறகு அவரது உயிர் பிரிந்தது.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
பிற செய்திகள்:
- மொரிஷியஸ் விமானத்தின் கழிவறை குப்பைத்தொட்டியில் பச்சிளம் குழந்தை
- சத்ய பால் மாலிக்கின் சர்ச்சை பேச்சுகள்: மோதி, அமித் ஷா பொறுமைக்கு என்ன காரணம்?
- வங்கதேசம் மீதான அமெரிக்காவின் கோபம் தொடர்ந்து அதிகரிக்க என்ன காரணம்?
- புதுக்கோட்டை சிறுவன் உயிரிழப்பு - கோபத்தில் உறவினர்கள் சாலை மறியல்
- சீனா: கொரோனா தனிமைப்படுத்துதலுக்காக நள்ளிரவில் கொண்டு செல்லப்படும் மக்கள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












