பிபின் ராவத்: பாஜகவின் குரலில் பேசியதாக விமர்சிக்கப்பட்ட ராணுவ அதிகாரி

பிபின் ராவத்

பட மூலாதாரம், Hindustan Times/Getty Images

    • எழுதியவர், சுபீர் பாமிக்
    • பதவி, பிபிசி நியூஸ், கொல்கத்தா

இந்திய பாதுகாப்பு படைகளின் மூத்த அதிகாரியான முப்படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் புதன்கிழமை அன்று நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்துள்ளார்.

2019ஆம் ஆண்டு முப்படைகளின் தலைமைத் தளபதியாக நியமிக்கப்பட்டார். அதற்கு முன்பு சுமார் 10 லட்சம் வீரர்களை கொண்ட இந்திய ராணுவத்தின் தளபதியாக பணியாற்றியவர். மிகவும் வலிமையான ராணுவ வீரர் என்றும் , முன்னுதாரணமான ராணுவ தளபதியாகவும் அறியப்பட்டவர் 63 வயதாகும் பிபின் ராவத்.

அரசியல் சூழ்நிலைகள் குறித்து அவர் தெரிவித்த கருத்துக்கள் சில நேரங்களில் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது. 1958ஆம் ஆண்டு மார்ச் மாதம் 16ம் தேதி உத்தராகண்ட் மாநிலத்தில் பிறந்தவர் பிபின் ராவத். இவரது தந்தை இந்திய ராணுவத்தில் லெட்டினன்ட் ஜெனரலாக பணியாற்றியவர். அவரது தாய் ஒரு அரசியல்வாதியின் மகள். இவர் ராணுவ வீரராக பயிற்சி பெற்ற காலத்தில் முதன்மையான மாணவராக திகழ்ந்தார்.

நேஷனல் டிபன்ஸ் கல்லூரி மற்றும் இந்தியன் மிலிட்டரி அகாடமிகளில் படித்த பொழுது "ஸ்வார்ட் ஆப் ஹானர்" வழங்கப்பட்டு பாராட்டப்பட்டவர். கன்சாஸின் ஃபோர்ட் லீவன்வொர்த்தில் உள்ள ஜெனரல் ஸ்டாஃப் கல்லூரி மற்றும் யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆர்மி கமாண்ட்இல் பயிற்சிப் படிப்பையும் முடித்தார். இவரது தந்தை பணியாற்றிய அதே ராணுவ படைக்கான பதினோராம் ரைபிள் பிரிவில் 1978ஆம் ஆண்டு சேர்ந்தார்.

அதன்பின்பு ராணுவத்தின் பல முக்கிய பொறுப்புகளில் பணியாற்றினார் உயரமான பகுதிகளில் போரிடுதல் மற்றும் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றவராக அவர் இருந்தார். தாம் தலைமையேற்ற படைப்பிரிவுகளை அமைதியற்ற பிராந்தியங்களில் வழி நடத்தியதற்காக பாராட்டப்பட்டவர் பிபின் ராவத்.

இந்திய ராணுவத்தில் கோலோணலாக பணியாற்றிய பொழுது 1980களில் அருணாச்சலப் பிரதேச மாநிலத்தை ஒட்டியுள்ள மெய்யான கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் தமது படையை வழி நடத்தியவர் பிபின் ராவத். அப்போது சீனாவுடன் ராணுவ ரீதியான மோதல் இருந்தது. 2015 ஆம் ஆண்டு 3 காப்ஸ் பிரிவுக்கு இவர் தலைமை ஏற்றிருந்த பொழுது இந்தியாவால் அலுவல் பூர்வமாக அறிவிக்கப்பட்ட முதல் வெளிநாட்டு மண்ணின் மீதான துல்லியத் தாக்குதலுக்கு அடித்தளமிட்டவராக பிபின் ராவத் இருந்தார்.

இந்தியப் படையினர் தாக்குதலுக்கு உள்ளான பின்பு மியான்மர் எல்லைக்குள் பதுங்கியிருந்த நாகா கிளர்ச்சியாளர்களை தாக்குவதற்காக பேரா படைப்பிரிவை மியான்மர் எல்லைக்குள் அனுப்பி வைத்தார் ஜெனரல் ராவத். அதே ஆண்டில் நாகலாந்து மாநிலத்தில் நடைபெற்ற ஒரு ஹெலிகாப்டர் விபத்தில் இருந்து தப்பினார். இவரைவிட முதல் நிலையில் இவருக்கு முன்னால் பணியில் சேர்ந்த இரண்டு அதிகாரிகள் இருந்தபொழுதும் 2016 ஆம் ஆண்டு இவர் இந்தியாவின் இருபத்தி ஏழாவது இராணுவத் தளபதியாக நியமனம் செய்யப்பட்டார்.

பிபின் ராவத்

பட மூலாதாரம், Getty Images

2017ல் இந்திய ஆளுகையின் கீழ் இருக்கும் காஷ்மீரைச் சேர்ந்த ஒருவரை ராணுவ வாகனத்தில் கேடயமாக பயன்படுத்தி ஜீப் முன்பு கட்டி சென்ற ராணுவ அதிகாரி ஒருவருக்கு இந்திய ராணுவம் பதக்கம் வழங்கி கவுரவித்தது சர்வதேச அளவில் விமர்சனங்களை உண்டாக்கியது.

ஒரு அழுக்கான போரில் மேற்கொள்ளப்பட்ட புதுமையான நடவடிக்கை என்று பிபின் ராவத் அந்த ராணுவ அதிகாரியின் செயலை நியாயப்படுத்தினார். "மக்கள் எங்களை நோக்கி கற்களை எறிகிறார்கள். பெட்ரோல் குண்டுகளை எறிகிறார்கள். என்ன செய்வது என்று எனது வீரர்கள் என்னிடம் கேட்டால் நான் என்ன சொல்வது? அப்படியே பொறுத்திருந்து செத்துப் போங்கள் என்று சொல்வதா? தேசியக்கொடியுடன் ஒரு அருமையான சவப்பெட்டியுடன் நான் வந்து அவர்களது உடலை முழு மரியாதையுடன் வீட்டுக்கு அனுப்பி வைப்பேன் என்று அவர்களின் தளபதியாக நான் அவர்களிடம் சொல்ல வேண்டுமா? அங்கு பணியாற்றும் எனது படையினர் உத்வேகத்துடன் இருப்பதை நான் உறுதி செய்ய வேண்டும்" என்று அப்பொழுது பிபின் ராவத் தெரிவித்திருந்தார்.

பிபின் ராவத்

பட மூலாதாரம், EPA

இந்திய ராணுவம் கடற்படை மற்றும் விமானப் படை ஆகியவற்றின் இடையே இருக்கும் ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதற்காக 2019 ஆம் ஆண்டு நரேந்திர மோதி தலைமையிலான அரசு முப்படைகளின் தலைமைத் தளபதி எனும் பொறுப்பை உண்டாக்கியது. பாதுகாப்பு படைகளுக்கு ஒதுக்கப்படும் நிதி குறித்தும் இந்த புதிய தளபதிக்கு முடிவெடுக்கும் அதிகாரம் இருந்தது. இந்த பொறுப்புக்கு வந்தபொழுது ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கு நெருக்கமாக இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தன.

ஆனால் அவர் அவற்றை தொடர்ந்து மறுத்தார். அரசியல் அற்ற நிலையை கடைபிடிக்கும் இந்திய பாதுகாப்பு படைகளின் பாரம்பரியத்திலிருந்து இவரது சில கருத்துகள் விலகிச் செல்வதாக விமர்சகர்கள் கூறினார்கள். அசாமில் இருக்கும் அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி எனும் கட்சி பெரும்பாலும் இஸ்லாமியர்களை கொண்டது. இந்த கட்சி வளர்ந்து வருவது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று அப்பொழுது பிபின் ராவத் தெரிவித்திருந்தார்.

பாரதிய ஜனதா கட்சியின் அதே நிலையை கடைப்பிடிப்பதாக சிறுபான்மையினருக்கான தலைவர்கள் அப்பொழுது கடுமையாக விமர்சித்தனர். சமீப காலமாக இந்திய பாதுகாப்புப் படைகளை நவீனமயமாக்கலில் தமது கவனத்தைச் செலுத்திவந்தார் பிபின் ராவத். பாதுகாப்பு படைகளின் ஒருங்கிணைவு இவரின் தலைமையின் கீழ் தொடங்கியது.

ஆனால் முப்படைகளுக்கும் ஒருங்கிணைந்த தியேட்டர் கட்டளைகள் இன்னும் உருவாக்கப்படவில்லை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :