மகாராஷ்டிராவில் ஆணவக்கொலை: இரண்டு மாத கர்ப்பிணியை கொன்ற தாயும் சகோதரரும்

பட மூலாதாரம், Prashant Tribhuwan
மகாராஷ்டிரா மாநிலத்தில் மீண்டும் ஓர் ஆணவக்கொலை உலுக்கியிருக்கிறது. அவுரங்காபாத்தின் கோயேகானிலுள்ள வைஜபூர் தாலுகாவில் தாயும் சகோதரரும் சேர்த்து ஒரு இளம்பெண்ணின் தலையை துண்டித்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கொடூர செயல் திங்கள்கிழமையன்று நடந்தது. தனது பெற்றோர் மற்றும் குடும்பத்தினரின் விருப்பத்திற்கு மாறாக, அப்பெண் வீட்டை விட்டு சென்று, தனது காதலரை திருமணம் செய்து கொண்டார். இது அவரின் குடும்பத்தினருக்கு கடும் கோபத்தை உண்டாக்கியது. இதனால், அவரது தாயும், சகோதரரும் அப்பெண்ணை கொலை செய்துள்ளனர் என காவல்துறை கூறுகிறது.
மேலும் அதிர்ச்சியளிக்கும் விதமாக, அந்த பெண் இரண்டு மாத கர்ப்பிணியாக இருந்தது தாய்-சகோதரருக்கு தெரிந்துள்ளது. இந்த சம்பவத்திற்கு பின், அப்பெண்ணின் தாயும் சகோதரரும் காவல்துறையில் சரணடைந்து, தங்களின் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளதாகவும் இதுகுறித்த அறிக்கையில், காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கொல்லப்பட்ட பெண்ணும் அவரது கணவரும் ஒரே கிராமத்தைச் சேர்ந்தவர்கள். கொலை செய்யப்பட்ட கீர்த்தி என்கிற கிஷோரி மோதே மற்றும் அவரது கணவர் அவினாஷ் தோரேவும் கோயேகானில் வசித்தனர்.
இந்த கிராமத்தில் கிட்டத்தட்ட 500 பேர் வசிக்கின்றனர். அவினாஷ் லட்கோனில் ஒரு பண்ணை வீட்டில் வசித்து வந்தார். இது கிராமத்தின் மையப்பகுதியிலிருந்து 2-3 கிலோமீட்டர் தூரம் உள்ளது.
கிஷோரியும் அவினாஷும் ஒரே கல்லூரியில் படித்தனர். கல்லூரி நாட்களில் இருவரும் காதலித்தனர். ஆனால், கிஷோரியின் குடும்பம் அவர்கள் காதலை எதிர்த்தனர்.
இரு குடும்பங்களுக்கு இடையே உள்ள சமூக மதிப்பும் பொருளாதார வேறுபாடுமே இந்த எதிர்ப்புக்கு முக்கிய காரணங்கள் என்று பிபிசி மாரத்தியிடம் உள்ளூர் பத்திரிகையாளரான பிரஷாந்த் புவன் கூறியுள்ளார்.
அவர்களின் குடும்பங்களுக்கிடையே பொருளாதார வேறுபாடுகள் இருப்பினும், அவினாஷும் கிஷோரியும் காதலித்து, மோதே குடும்பத்தின் விருப்பத்திற்கு மாறாக திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.
வீட்டை விட்டு வெளியேறி திருமணம்

பட மூலாதாரம், PRASHANT TRIBHUWAN
ஆறு மாதங்களுக்கு முன், ஜூன் மாதம் அவினாஷும் கிஷோரியும் வீட்டை விட்டு வெளியேறினர். அலந்தியில் அவர்கள் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு, அவினாஷ் கிஷோரியை தனது மனைவியாக அவரது வீட்டிற்கு அழைத்து சென்றார். அன்று முதல், லட்கோனில் உள்ள அவினாஷ் வீட்டிற்கு கிஷோரி வசித்து வந்தார்.
இந்த நிலையில், கிஷோரி தனது குடும்பத்தினருடன் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளவில்லை. ஆனால், கொல்லப்படுவதற்கு எட்டு நாட்கள் முன்னர், அவரை காண அவரது தாய் அவினாஷ் வீட்டிற்கு வந்திருந்ததாகவும் அவரது வீட்டில் தேநீர் அருந்தியதாகவும் காவல்துறை கூறுகிறது.
இரண்டு மாத கர்ப்பிணியின் படுகொலை
"தனது மருமகன் வீட்டிற்கு சென்று வந்த ஒரு வாரத்திற்கு பின், கடந்த டிசம்பர் 5ம் தேதி, கிஷோரியின் தாய் ஷோபா மோதேவும் சகோதரர் சஞ்ஜய் மோதேவும் மீண்டும் லட்கோனுக்கு சென்றனர். அங்கு கிஷோரியை சஞ்ஜய் மோதே கூர்மையான ஆயுதத்தால் தாக்கினார். அதற்கு உதவியாக, கிஷோரியின் கால்களை உறுதியாக ஷோபா மோதே பற்றிக்கொண்டார். சஞ்ஜய் கிஷோரியின் தலையை எடுத்துக் கொண்டு அங்குள்ளவர்களுக்கு காட்டினார். அந்த வீட்டின் முன் தலையை வைத்து விட்டு, அவர்கள் சென்றனர்" காவல்துறை வெளியிட்ட செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், PRASHANT TRIBHUWAN
அதன் பிறகு,அவர்கள் காவல்துறையிடம் சரணடைந்தனர். உயிரிழந்த கிஷோரி இரண்டு மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார் என்றும், இது அவரது தாய்க்கு தெரியும் எனவும் காவல்துறை கூறுகிறது.
இது குறித்து சமூக ஆர்வலர் மங்களா கிவன்சாரா கூறுகையில், "நம் சமூகத்தில் பல விஷயங்கள் சமூகத்திலுள்ள குடும்பத்தின் மதிப்பு என்ற பிம்பத்தை வைத்து முடிவு செய்யப்படுகிறது. இந்த பிம்பம் பெரும்பாலும் பெண்கள் மீது விழுகிறது. இதனால்தான் இத்தகைய சம்பவங்கள் நடக்கிறது", என்றார்.
இந்த நிலையில், இரு குடும்பத்தினரையும் நாம் தொடர்பு கொள்ள முயற்சி செய்தோம். ஆனால், எங்களால் யாரிடமும் பேச முடியவில்லை.
பிற செய்திகள்:
- கட்டாய தடுப்பூசி: வேண்டும், வேண்டாம் என்பதற்கு உலகளவில் எழும் 3 வாதங்கள்
- குழந்தைகளை விற்கும் தாய்கள்: தமிழ்நாட்டில் குழந்தை விற்பனை எப்படி நடக்கிறது?
- நாகாலாந்தில் பாதுகாப்புப் படையினரால் பொதுமக்கள் சுட்டுக்கொலை: விசாரணைக்கு உத்தரவு
- 'மனிதாபிமானமற்ற, இழிவான நிலையில் வாழும் மலையகத் தமிழர்கள்' - ஐ.நா அலுவலர் கவலை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












