பிபின் ராவத்: MI17 V5 ஹெலிகாப்டர்களின் திறன்கள் என்ன? உலகளவில் ராணுவ பயன்பாட்டில் அதன் முக்கியத்துவம் ஏன்?

பட மூலாதாரம், Getty Images
MI17 V5 ஹெலிகாப்டர்கள், ரஷ்ய அரசுக்குச் சொந்தமான ரஷ்யன் ஹெலிகாப்டர்ஸ் என்கிற நிறுவனத்தால் தயாரிக்கப்படுகிறது. இந்த ரக ஹெலிகாப்டருக்கு நீண்ட நெடிய ராணுவ பயன்பாட்டு பாரம்பரியம் உள்ளது.
இது Mi‑8/17 குடும்பத்தைச் சேர்ந்த இந்த ஹெலிகாப்டர், ஒரு மேற்பக்க முக்கிய இறக்கை மற்றும் வால்பக்க இறக்கையைக் கொண்டது. பல்வேறு தட்பவெப்ப நிலை மற்றும் வானிலையில் செயல்படக் கூடியது என ரஷ்ய ஹெலிகாப்டர்ஸ் நிறுவன வலைதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பல பயன்பாடுகளைக் கொண்ட ஹெலிகாப்டர்:
MI17 V5 ஒரு சரக்கு மற்றும் போக்குவரத்து ஹெலிகாப்டர். அதற்குள் தேவையான தொழில்நுட்ப சாதனங்கள் மற்றும் வெளிப்புறத்தில் சரக்கைக் கொண்டு செல்ல உதவும் சாதனத்தைக் கொண்டது.
இந்த ரக ஹெலிகாப்டர்கள் ராணுவ துருப்புகள் போக்குவரத்து, தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் அதிகம் ஈடுபடுத்தப்படுகின்றன.
காயமடைந்தவர்களை தேவையான மருத்துவ சாதனங்களோடு, ஓர் ஆம்புலன்ஸ் போல இடம்மாற்றுவது போன்ற ராணுவ பணிகளுக்கு பயன்படுத்தப்படுவதற்கு என்றே சிறப்பாக வடிவமைக்கப்படுள்ளது.
திறன் மற்றும் ஆயுதங்கள் விவரம்:
MI17 V5 அதிகபட்சமாக மணிக்கு 250 கிலோமீட்டர் வேகத்தில், 6,000 மீட்டர் உயரம் வரை பறக்கும் திறன் கொண்டது. அதி நவீன கண்ணாடி காக்பிட்களைக் கொண்ட ஹெலிகாப்டர் இது என்பதும் குறிப்பிடத்தக்கது. முதன்மை எரிபொருள் டேங்கைக் கொண்டு 675 கிலோமீட்டர் தூரமும், இரண்டு துணை எரிபொருள் டேங்குகளுடன் 1,180 கிமீ தொலைவு வரை பறக்கக் கூடியது.
அதிகபட்சமாக 13,000 கிலோ எடையுடன் டேக் ஆஃப் செய்யும் திறன் கொண்டது.

பட மூலாதாரம், Getty Images
விமானி அறையில் 3 பேரும் பயணிகளுக்கான முக்கிய அறையில் 36 பேரும் அமரலாம். அவசரத் தேவைக்கு நீரில் தரையிறங்குவது போன்ற மிதக்கும் அமைப்புகளும் உள்ளன.
இந்த ஹெலிகாப்டரில் கன ரகத் துப்பாக்கிகள், ஏவுகணைகள், வெடிகுண்டுகள், ஆறு இலகு ரக துப்பாக்கிகளைப் பொருத்தும் வசதி இருக்கிறது.
4,000 கிலோ சரக்கை அல்லது பே லோட் எனப்படும் ஆயுதங்கள் மற்றும் சாதனங்களோடு பறக்கும் திறன் கொண்டது. தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்குத் தேவையான பிரத்யேக சாதனங்களை கொண்டது.
காட்டுத் தீ போன்ற விபத்துகளின்போது, நீரைக் கொட்டி நெருப்பை அணைக்கும் ஹெச் எல் 5000 அமைப்பு, தரையிலிருந்து ஆட்களை மேல் நோக்கி இழுக்கும் வின்ச் போன்ற வசதிகளைக் கொண்டது.
பனி போன்ற இலகு தரையிறங்கும் தளங்களில் தரையிறங்கத் தேவையான சக்கர அமைப்பு, வானிலை ரேடார், இரவு நேரங்களில் பார்க்கும் நைட் விஷன் அமைப்பு போன்றவைகளைக் கொண்டது.
பாதுகாப்பு அம்சங்கள்:
ஹெலிகாப்டரை நோக்கி ஏவுகணைகள் ஏவப்பட்டால் அதிலிருந்து தன்னை தற்காத்துக் கொள்ள ஃப்ளேர்களை வெளியிடுவது, விமானிகளுக்கு ஆபத்து ஏற்பட்டால் விமானத்திலிருந்து தப்பிக்க உதவும் பாராசூட் அமைப்பு, பெலாஸ்டிக் ஏவுகணைகளை எதிர்கொள்ளும் ஆன்டி பெலாஸ்டிக் அமைப்பு, ஹெலிகாப்டர் பயணிக்கும் போது எந்த வித வொயர்களிலும் சிக்காமல் இருப்பதை உறுதி செய்யும் அமைப்பு போன்றவைகளைக் கொண்டது என அந்நிறுவனத்தின் வலைதள விவரங்கள் கூறுகின்றன.
பிற செய்திகள்:
- ஜமால் கஷோக்ஜி கொலை: சௌதியின் முன்னாள் அரச காவலர் பிரான்சில் கைது
- ரூ. 4.05 லட்சம் கோடி மதிப்பிலான பிட்காயின் ஒரு கம்ப்யூட்டர் விஞ்ஞானிக்கு சொந்தமானது எப்படி?
- இலங்கை கடற்பரப்பில் 70 நாட்களாக இருந்த சீன கப்பல், எங்கு செல்கிறது?
- வாரம் நான்கரை நாள் மட்டுமே வேலை: ஐக்கிய அரபு எமிரேட்ஸ் புதிய முடிவு
- தமிழ்நாடு அரசின் கொரோனா மரண இழப்பீடு: யாரெல்லாம் வாங்க முடியும்?
- ஆன்டி இண்டியன் - 'ப்ளு சட்டை' மாறன் படத்தின் விமர்சனம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












