ஐக்கிய அரபு எமிரேட்ஸ் புதிய முடிவு - வாரம் நான்கரை நாள் மட்டுமே வேலை

பட மூலாதாரம், Warren Little / getty images
அடுத்த ஆண்டு முதல் வாரத்தின் வேலை நாட்கள் நான்கரை நாட்களாக குறைக்கவும் வார இறுதி நாட்களை சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளுக்கு மாற்றவும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் முடிவு செய்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவிக்கிறது.
தங்கள் நாட்டின் பொருளாதாரத்தை சர்வதேச சந்தைகளுடன் ஒத்திசைந்து இருக்க வழிவகை செய்யும் வகையில் இந்த முடிவை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் எடுத்துள்ளது.
ஆனால், தங்களது வேலை நாட்கள் என்ன என்பதை தனியார் நிறுவனங்கள் தாங்களாகவே முடிவு செய்து கொள்ளலாம்.
எண்ணெய் உற்பத்தி செய்யும் வளைகுடா நாடான ஐக்கிய அரபு எமிரேட்ஸ், அரபு பிராந்தியத்தின் முக்கியமான ஒரு வர்த்தகம் மற்றும் சுற்றுலா மையமாகத் திகழ்கிறது.
அங்கு தற்பொழுது வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை ஆகிய நாட்கள் வார இறுதி நாட்களாக பின்பற்றப்பட்டு வருகின்றன.
2022ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் அங்கு வாரத்தின் விடுமுறை நாட்கள் வெள்ளிக்கிழமை மதியம் முதல் தொடங்கும் என்று அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ள சுற்றறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பள்ளிகளுக்கும் பொருந்தும்.
வெள்ளிக்கிழமை மதியம் இஸ்லாமியர்கள் தொழுகையைத் தொடங்குவதற்கு முன்பு, 12 மணிக்கு வாரத்தின் வேலை நாள் நிறைவடையும் என ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு தெரிவித்துள்ளது.
தாங்கள் பணிபுரியும் துறை மற்றும் தங்களுடைய தொழிலுக்கேற்ற தேவைகள் ஆகியவற்றின் அடிப்படையில் தங்கள் வார இறுதி நாட்கள் என்ன என்பதை அந்தந்த நிறுவனங்களே முடிவு செய்துகொள்ளலாம் என அந்நாட்டின் மனித வளத்துறை அமைச்சர் அப்துல் ரகுமான் அல்-அவர் தெரிவித்துள்ளார் என்கிறது ராய்ட்டர்ஸ் முகமை.

பட மூலாதாரம், Getty Images
சௌதி அரேபியா உடனான பொருளாதார போட்டி ஐக்கிய அரபு அமீரகத்திற்கு அதிகரித்து வரும் சூழ்நிலையில் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் கடந்த ஓராண்டு காலமாக அந்நாட்டு அரசு பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
சுன்னி பிரிவு முஸ்லிம்கள் ஆட்சியாளர்களாக இருக்கும் ஐக்கிய அரபு எமிரேட்சின் மக்கள் தொகையில் பெரும்பாலானவர்கள் வெளிநாட்டவர்களாகவே இருக்கிறார்கள்.
இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வாழும் இந்தோனீசியா, மொராக்கோ ஆகிய நாடுகளில் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வார இறுதி நாட்களாக பின்பற்றப்படுவதைக் குறிப்பிட்டுள்ள ஐக்கிய அரசு எமிரேட்ஸ் அரசின் சுற்றறிக்கை, புதிய நான்கரை நாள் வேலை நாள் திட்டம் தொழிலாளர்களின் பணி மற்றும் தனிப்பட்ட வாழ்க்கைக்கு இடையே சமநிலையை மேம்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளது.
புதிய வேலைத்திட்டம் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் வங்கிகள் பங்குச்சந்தைகள் உள்ளிட்டவற்றின் மீது தாக்கம் செலுத்தும்.
இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வாழும் பிற அரபு வளைகுடா நாடுகளில் வெள்ளிக்கிழமை வார விடுமுறையாக இருக்கிறது.
பிற செய்திகள்:
- ஒமிக்ரான் திரிபுக்கு தென்னாப்பிரிக்காவில் குறைவாக தடுப்பூசி செலுத்தியது ஒரு காரணமா?
- 450 குவாட்ரில்லியன் கிமீ நீளம் கொண்ட பூஞ்சை வலையமைப்புகள் - சுற்றுச்சூழலுக்குப் பயக்கும் நன்மை என்ன?
- ஒமிக்ரான்: தமிழ்நாட்டில் மரபணு மூலக்கூறு ஆய்வு அலட்சியப்படுத்தப்படுகிறதா?
- மகாராஷ்டிராவில் ஆணவக்கொலை: இரண்டு மாத கர்ப்பிணியை கொன்ற தாயும் சகோதரரும்
- மோதி - புதின் சந்திப்பு: இந்திய, ரஷ்ய உறவை அமெரிக்கா, சீனா விரும்பவில்லையா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












