தமிழ்நாடு அரசின் கொரோனா மரண இழப்பீடு: யாரெல்லாம் வாங்க முடியும்?

பட மூலாதாரம், Getty Images
கொரோனாவால் உயிரழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.50,000 இழப்பீடு வழங்குவதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் தற்போது வரை 4,73,757 கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டில் தற்போது வரை 36,539 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என்கின்றது அரசின் தரவுகள்.
கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்கிற கோரிக்கை தொடர்ந்து எழுப்பப்பட்டு வந்தது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டிருந்தது.
அந்த வழக்கில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க உரிய நெறிமுறைகளை வகுக்க தேசிய பேரிடர் மேலாண்மை வாரியத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இழப்பீடாக வழங்கப்படும் தொகையை மத்திய அரசே நிர்ணயிக்கலாம் எனவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
அதன்படி கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.50,000 இழப்பீடு வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. இதற்கான செலவுகளை மாநில அரசுகள் மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு மாநிலங்களில் இதற்கான அரசாணை வெளியிடப்பட்டு செயல்பாட்டிற்கு வந்துள்ளது.
தற்போது தமிழக அரசும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.50,000 இழப்பீடு வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவில் முதல் கொரோனா பாதிப்பு பதிவானதிலிருந்து தொடங்கி கொரோனா பேரிடராக நீடிக்கும் வரை இது அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா நிவாரணம் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு கொரோனா பாதித்து உயிரிழந்தவர்களுக்கும் இது பொருந்தும்.

ஏற்கனவே கொரோனாவால் ஏற்பட்டுள்ள இறப்புகளுக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து இழப்பீடு வழங்கப்பட்ட முன்களப் பணியாளர்கள் மற்றும் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு இது பொருந்தாது.
மாவட்ட ஆட்சியர்கள் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனாவால் தற்போது வரை 36,539 பேர் உயிரிழந்துள்ளதாக அலுவல்பூர்வ தரவுகள் கூறும் நிலையில் இழப்பீடு வழங்க ரூ.183 கோடி தேவைப்படுகிறது.
இது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய பேரிடர் மேலாண்மை துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "கொரோனா இழப்பீடு பெறுவதற்கான விண்ணப்பங்கள் அரசாங்கத்தின் பார்வைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அரசாங்கம் அதை இறுதி செய்த பிறகு விண்ணப்பங்கள் அதிகாரப்பூர்வமாக விரைவில் வெளியிடப்படும்."
"விண்ணப்பங்கள் வெளியிடப்பட்ட பிறகு அதனை பூர்த்தி செய்து மாவட்ட நிர்வாகத்திடம் சமர்பிக்க வேண்டும். மாவட்ட வருவாய் அலுவலர் அந்த விண்னப்பங்களை சரிபார்த்து உறுதி செய்த பிறகு மாவட்ட நிர்வாகம் அவர்களுக்கு இழப்பீடு வழங்கும்," என்றார்.
கொரோனாவால் தான் உயிரிழந்தார்கள் என்று சான்று அளிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே இழப்பீடு வழங்கப்படும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கொரோனா இல்லை என பரிசோதனை முடிவுகள் வந்த பிறகு உயிரிழந்தவர்கள், இறப்பு சான்றிதழில் கொரோனாதான் காரணம் எனப் பதிவு செய்யப்படாதவர்கள், கொரோனாவுக்குப் பிந்தைய பாதிப்புகளால் உயிரழந்தவர்களுக்கு இது பொருந்துமா என்கிற கேள்வி பரவலாக எழுந்துள்ளது.
இந்தக் கேள்வியையும் அதிகாரியிடம் முன்வைத்தோம். அதற்குப் பதிலளித்தவர், "அரசாணையில் குறிப்பிட்டுள்ளவாறு தான் பரிசீலிக்கப்பட்டு பட்டியல் தயாரிக்கப்படும். கொரோனா தான் இறப்புக்கு காரணம் என சான்றிதழில் பதிவாகாதவர்கள் உரிய ஆவணங்கள் இருந்தால் அதையும் சேர்த்து விண்ணப்பிக்கும்போது சமர்பிக்கலாம். அனைத்து விண்ணப்பங்களும் பரிசீலணையில் எடுத்துக் கொள்ளப்படும். இதில் ஏதேனும் சிக்கல்கள் எழுந்தால் அது அரசாங்கத்தின் பார்வைக்கு எடுத்துச் செல்லப்படும்," என்றார்.
பிற செய்திகள்:
- ஒமிக்ரான் திரிபுக்கு தென்னாப்பிரிக்காவில் குறைவாக தடுப்பூசி செலுத்தியது ஒரு காரணமா?
- 450 குவாட்ரில்லியன் கிமீ நீளம் கொண்ட பூஞ்சை வலையமைப்புகள் - சுற்றுச்சூழலுக்குப் பயக்கும் நன்மை என்ன?
- ஒமிக்ரான்: தமிழ்நாட்டில் மரபணு மூலக்கூறு ஆய்வு அலட்சியப்படுத்தப்படுகிறதா?
- மகாராஷ்டிராவில் ஆணவக்கொலை: இரண்டு மாத கர்ப்பிணியை கொன்ற தாயும் சகோதரரும்
- மோதி - புதின் சந்திப்பு: இந்திய, ரஷ்ய உறவை அமெரிக்கா, சீனா விரும்பவில்லையா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












