கோவை சூயஸ் குடிநீர் திட்டம்: திமுகவின் நிலைப்பாடு தேர்தலுக்கு முன்பும் பின்பும் மாறியதா?

பட மூலாதாரம், CpimCoimbatore
- எழுதியவர், மோகன்
- பதவி, பிபிசி தமிழுக்காக
கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 24 மணி நேரமும் தங்கு தடையற்ற குடிநீர் வசதியை வழங்க, கடந்த 2018ஆம் ஆண்டு பிரெஞ்சு நிறுவனமான சூயஸ் நிறூவனத்துக்கு ரூ.3,000 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தை வழங்கியிருந்தது கோவை மாநகராட்சி இதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தன.
கோவை மாநகராட்சியில் குடிநீர் வீணாவதையும், திருடப்படுவதையும் கண்காணித்து தடுக்கும் பொருட்டு இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதாக அப்போது கூறப்பட்டது.
ஆனால் குடிநீர் வழங்கும் சேவையை தனியார்மயப்படுத்துவதாக இந்த ஒப்பந்தத்துக்கு பல தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியிருந்தது.
அப்போது எதிர்கட்சியாக இருந்த திமுக உள்ளிட்ட அதன் கூட்டணி கட்சிகள் சூயஸ் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. எதிர்க்கட்சி தலைவராக இருந்த தற்போதைய முதல்வர் ஸ்டாலினும் சூயஸ் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டதை கண்டித்திருந்தார்.
தேர்தல் அறிக்கை என்னானது?
கடந்த சட்டமன்ற தேர்தலின்போதும் திமுக ஆட்சிக்கு வந்தால் சூயஸ் ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என திமுக வேட்பாளர்கள் கூறி வந்தனர்.
திமுகவின் கோவை மாவட்டத்துக்கான தேர்தல் வாக்குறுதியிலும் சூயஸ் ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என்று தெரிவித்திருந்தது.
அதில் `கோயம்புத்தூர் மாநகராட்சி நிர்வாகம் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சூயஸ் நிறுவனத்தோடு போடப்பட்ட ஒப்பந்தம் ரத்து செய்யப்படும். கோயம்புத்தூர் மாநகராட்சியே மக்களுக்குக் குடிநீர் வழங்கும்` என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தொய்வுடன் நடைபெற்று வந்த சூயஸ் திட்டப்பணிகள் தற்போது வேகமெடுத்துள்ளன.
கோவை மாநகரின் பிரதான பகுதிகளில் தண்ணீர் தொட்டிகள், குடிநீர் குழாய்கள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
சூயஸ் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை வைத்துள்ளது. காங்கிரஸ் கட்சியும் சூயஸ் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என தமிழக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது.
ஆனால் சூயஸ் திட்ட பணிகள் மும்முரமாக நடைபெறுவதும் திமுகவினர் இந்த விவகாரத்தில் அமைதி காப்பதும் கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
என்ன சொல்கிறது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி?

பட மூலாதாரம், @tncpim
இது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஎம்) பத்மநாபன், "உள்ளாட்சி அமைப்பே இல்லாத சமயத்தில் முந்தைய அதிமுக அரசு இந்த ஒப்பந்த்தை சூயஸ் நிறுவனத்துக்கு வழங்கியுள்ளது. குடிநீர் விநியோகத்தை தனியார்மயப்படுத்துவன் முதல் படி இது தான்," என்றார்.
"பராமரிப்பு பணி மட்டுமே சூயஸ் நிறுவனத்திடம் வழங்கப்படுவதாக கூறப்பட்டாலும் இறுதியில் மொத்த கட்டுப்பாடும் அவர்களிடமே சென்றுவிடும் என்பதைத்தான் கடந்த கால அனுபவங்கள் உணர்த்துகின்றன. மாநகராட்சி பகுதிகளில் மூன்று நாட்களுக்கு ஒருமுறை வரும் தண்ணீர் நகரின் சுற்றுப்புரங்களில் 10, 15 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே வருகின்றன. இதையே நம்மால் சரி செய்ய முடியவில்லை. இந்தப் பாகுபாட்டை முதலில் களைய வேண்டும்," என்றும் தெரிவித்தார்.
அத்துடன், "24 மணி நேரமும் தொடர்ந்து குடிநீர் தருவதற்கான ஆதாரங்கள் நம்மிடம் இல்லை. நம்மிடம் உள்ள நீர் ஆதாரங்களை எவ்வாறு முறையாக பயன்படுத்தலாம் என்று தான் யோசிக்க வேண்டும். அதற்கு இவ்வளவு பிரமாண்டமான திட்டம் தேவையில்லை" என்றும் குறிப்பிட்டார்.
சி.பி.எம் கூட்டணியில் உள்ள திமுகவின் நிலைப்பாடு தொடர்பான கேள்வியை முன்வைத்தபோது, `மக்கள் பிரச்னையை எழுப்ப வேண்டியது எங்களுடைய கடமை. திமுக தங்களுடைய தேர்தல் வாக்குறுதியில் சூயஸ் திட்டத்தை ரத்து செய்வோம் என அறிவித்துள்ளது. அதை செய்ய வேண்டியது அவர்களுடைய கடமை. செய்வார்கள் என நம்புகிறோம்` என்றார்.
திமுகவின் நிலைப்பாடு என்ன?
இது தொடர்பாக திமுகவைச் சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் பிபிசி தமிழிடம் பேசுகையில், "கடந்த அதிமுக ஆட்சியில் சூயஸ் என்கிற வெளிநாட்டு நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டதைத் தான் எதிர்த்தோம். ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளில் பெரும்பாலான பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன," என்கிறார்.
"மக்களின் வரிப்பணம் பெரும் அளவில் செலவழிக்கப்பட்டுவிட்டன. இப்போது இதை முடக்கினால் யாருக்கும் பலன் அளிக்காது. இந்தத் திட்டத்தை தமிழக அரசு ஆராய்ந்து வருகிறது. பொதுமக்களுக்கும் தமிழக அரசுக்கும் பாதிப்பு ஏற்படாதவாறு இந்தத் திட்டத்தை மேம்படுத்தி செயல்படுத்துவோம்" என்கிறார் அவர்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
மாநகராட்சி நிர்வாகம் சொல்வது என்ன?
இது தொடர்பாக கோவை மாநகராட்சி நிர்வாகத்தை தொடர்பு கொண்டபோது இந்தத் திட்டத்தை செயல்படுத்தும் குழுவிடம் பேசிக்கொள்ளுமாறு தெரிவித்தனர்.
இது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய சூயஸ் திட்ட குழு தலைவர் கோபாலகிருஷ்ணன் , `இந்தத் திட்டம் பற்றி தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன. தண்ணீர் விநியோகம் செய்யும் கட்டமைப்பை மேம்படுத்துவது மட்டுமே சூயஸ் நிறுவனத்தின் பணி. குடிநீருக்கான கட்டணத்தை மாநகராட்சி தான் நிர்ணயம் செய்யும்," என்றார்.
"கோவையின் சில பகுதிகளில் தற்போது 24 மணி நேரமும் தண்ணீர் தடையின்றி கிடைத்து வருகிறது. தற்போது 20% பணிகள் முடிவடைந்துள்ளன. ஆகஸ்ட் 2023-க்குள் இந்தத் திட்டம் முழுமையாக நிறைவுபெறும் என நம்புகிறோம். அப்போது கோவை முழுவதும் தடையில்லாமல் குடிநீர் வழங்க முடியும். அதற்கான நீர் ஆதாரம் நம்மிடம் உள்ளன,"என்கிறார் அவர்.
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தபோது இந்த ஒப்பந்தம் வழங்கப்பட்டது. தற்போதைய சூழ்நிலையில் அவருடைய கருத்தையும் பெற தொடர்பு கொண்டபோது அவருடைய இணைப்பை பெற முடியவில்லை. அவர் தரப்பிலிருந்து விளக்கம் கிடைக்கும்போது அந்த பதிலும் பிரசுரிக்கப்படும்.
பிற செய்திகள்:
- மொரிஷியஸ் விமானத்தின் கழிவறை குப்பைத்தொட்டியில் பச்சிளம் குழந்தை
- சத்ய பால் மாலிக்கின் சர்ச்சை பேச்சுகள்: மோதி, அமித் ஷா பொறுமைக்கு என்ன காரணம்?
- வங்கதேசம் மீதான அமெரிக்காவின் கோபம் தொடர்ந்து அதிகரிக்க என்ன காரணம்?
- புதுக்கோட்டை சிறுவன் உயிரிழப்பு - கோபத்தில் உறவினர்கள் சாலை மறியல்
- சீனா: கொரோனா தனிமைப்படுத்துதலுக்காக நள்ளிரவில் கொண்டு செல்லப்படும் மக்கள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












