திமுக மாவட்ட தேர்தல் அறிக்கை: "கோவையில் சூயஸ் குடிநீர்த் திட்டம் ரத்து செய்யப்படும்"

பட மூலாதாரம், DMK
ஒவ்வொரு சட்டமன்றத் தேர்தலின்போது, பிரதானமாக ஒரு தேர்தல் அறிக்கையை அரசியல் கட்சிகள் வெளியிடுவது வழக்கம். அதிலேயே மாவட்டங்களுக்குமான திட்டங்களும் சில இருக்கும். ஆனால், இந்த முறை தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் என்ன செய்யவிருக்கிறார்கள் என்பதை அறிக்கையாக வெளியிட்டிருக்கிறது தி.மு.க.
அதில் குறிப்பிடப்பட்டுள்ள சில முக்கியமான அம்சங்களை இங்கே பார்க்கலாம்:
முந்திரி ஆராய்ச்சி நிலையம்
அரியலூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை, ஜெயங்கொண்டத்தில் அனல் மின் நிலையமும் முந்திரி ஆராய்ச்சி நிலையமும் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்; அரியலூரில் புதிய பேருந்து நிலையம் கட்டப்படும்; ஜெயங்கொண்டத்தில் பாதாளச் சாக்கடை கொண்டுவரப்படும். அரியலூர் மாவட்டத்தில் கனரக மாவட்டங்களால் ஏற்படும் தொடர் விபத்துகளைத் தடுக்க சாலைகளை அகலப்படுத்தி, சென்டர் மீடியன்கள் அமைக்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் மதுராந்தகத்தில் அரசு கலை - அறிவியல் கல்லூரி திறக்கப்படும். செங்கல்பட்டில் மகளிர் அரசு கலை - அறிவியல் கல்லூரி தொடங்கப்படும். தாம்பரம் மாநகராட்சியாக மாற்றப்படும், மெட்ரோ ரயில் திட்டம் மீனம்பாக்கத்திலிருந்து வண்டலூர்வரை நீட்டிக்கப்படும், பறக்கும் ரயில் சேவை தாம்பரத்திலிருந்து வேளச்சேரி வரை நீட்டிக்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.
ஐ.ஐ.டி விடுதி வாயில் தீண்டாமைச் சுவர்
சென்னை மாவட்டத்தில் மழைக்காலத்தில் வெள்ளம் தேங்குவதைத் தடுக்க போர்க்கால நடவடிக்கை எடுக்கப்படும். கொடுங்கையூர் குப்பைக் கிடங்கு மாற்றப்படும். காசிமேடு அருகில் கடல்நீரை நன்னீராக்கும் திட்டம் செயல்படுத்தப்படும். திருவொற்றியூரில் தொழிற்பூங்கா அமைக்கப்படும். கொளத்தூரில் பெண்களுக்கான கலை - அறிவியல் கல்லூரி, தொழில் நுட்பப்பூங்கா ஆகியவை அமைக்கப்படும். கோட்டூர் புரத்தில் இருப்பதைப்போல திருவொற்றியூர் பகுதியிலும் மிகப் பெரிய நூலகம் அமைக்கப்படும். நின்றுபோன மதுரவாயல் - துறைமுகம் சாலைத் திட்டம் செயல்படுத்தப்படும். சென்னை மாநகராட்சிக்குள் உள்ள சுங்கச்சாவடிகள் அகற்றப்படும். சென்னையில் குடிநீர் பஞ்சத்தைத் தடுக்க செங்கல்பட்டில் புதிதாக ஒரு ஏரி அமைக்கப்படும். ஐஐடி கிருஷ்ணா விடுதி வாயில் தீண்டாமைச் சுவரை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
கோவை சூயஸ் திட்டம் ரத்து செய்யப்படும்
கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆனைமலை நல்லாறு நீர்த்தேக்கத் திட்டம் நிறைவேற்றப்படும். கோயம்புத்தூர் பிரான்ஸ் நாட்டின் சூயஸ் நிறுவனத்துடன் போடப்பட்ட குடிநீர் வழங்கும் ஒப்பந்தம் ரத்துசெய்யப்பட்டு மாநகராட்சியே அந்தப் பணியை மேற்கொள்ளும். டைடல் பார்க் இரண்டாம் நிலைத் திட்டம் தொடங்கப்படும். ஆயத்த ஆடை ஜவுளி பூங்கா தொடங்கப்படும்.

பட மூலாதாரம், DMK
கடலூர் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும். வீராணம் ஏரி சுற்றுலாத்தலமாக மாற்றப்படும். கடலூர் துறைமுகம் விரிவுபடுத்தப்படும். சிதம்பரம், மங்களூரில் கால்நடை மருத்துவமனை துவங்கப்படும். பரங்கிப்பேட்டை - அண்ணன் கோவிலில் மீன்பிடித் துறைமுகம் அமைக்கப்படும். தகவல் தொழில்நுட்பப்பூங்கா அமைக்கப்படும். சிதம்பரத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும். என்எல்சியின் பங்குகளை தனியாருக்கு விற்பது தடுக்கப்படும். கடலூரில் அரசு மருத்துவக் கல்லூரி துவங்கப்படும்.
நெக்குந்தி ராணுவ ஆராய்ச்சி மையம்
தருமபுரியில் உள்ள அனைத்து மலை கிராமங்களுக்கும் சுற்றுச்சாலை அமைக்கப்படும். நெக்குந்தியில் ராணுவ ஆராய்ச்சி மையத் திட்டம் செயல்படுத்தப்பட மைய அரசிடம் வலியுறுத்தப்படும்.
திண்டுக்கல் ஐந்து இடங்களில் கலைக்கல்லூரிகள் துவங்கப்படும். பழனியிலிருந்து கொடைக்கானலுக்கு ரோப்கார் வசதி செய்யப்படும்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும். சாயத் தொழிற்சாலை கழிவு நீர் காளிங்கராயன் கால்வாயில் கலக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஈரோட்டில் அரசு சட்டக்கல்லூரி, மொடக்குறிச்சியில் தொழிற்பேட்டை, அந்தியூரில் அரசு கலைக் கல்லூரி ஆகியவை அமைக்கப்படும்.
திருவண்ணாமலை - கள்ளக்குறிச்சி ரயில் போக்குவரத்துக்கு முயற்சி
கள்ளக்குறிச்சியில் புதிய பேருந்து நிலையம், பொறியியல் கல்லூரி, அரசு கலைக் கல்லூரி, மகளிர் கலைக் கல்லூரி ஆகியவை அமைக்கப்படும். திருவண்ணாமலைக்கும் கள்ளக்குறிச்சிக்கும் இடையில் ரயில்போக்குவரத்திற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் வண்டலூரில் துணை நகரம், வேளச்சேரியில் இருந்து மாமல்லபுரத்திற்கு பறக்கும் ரயில், காஞ்சிபுரத்திலும் செய்யாறிலும் சிப்காட் தொழிற்பேட்டைகள், ஸ்ரீபெரும்புதூரில் ராமானுஜருக்கு நினைவு மண்டபம், காஞ்சிபுரத்தில் அரசு மருத்துவமனை, மெட்ரோ ரயில் சேவையை மாமல்லபுரம் வரை விரிவுபடுத்துவது ஆகியவை செய்யப்படும்.

பட மூலாதாரம், DMK
மீன்பிடி துறைமுகம் விரிவாக்கம்
கன்னியாகுமரியில் குளச்சல் மீன்பிடி துறைமுகம் விரிவுபடுத்தப்படும். தகவல் தொழில்நுட்பப் பூங்கா அமைக்கப்படும். கரூர் மாவட்டத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை, புதிய பேருந்து முனையம், நம்மாழ்வார் பெயரில் இயற்கை வேளாண்மைக் கல்லூரி ஆகியவை அமைக்கப்படும் கரூர் மாநகராட்சி ஆக்கப்படும். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் அளிக்கப்படும். ஓசூரில் தகவல் தொழில்நுட்பப்பூங்கா அமைக்கப்படும். ஓசூர் - பெங்களூர் இடையே மெட்ரோ ரயில் போக்குவரத்தைத் துவங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மதுரையில் கலைஞர் நூலகம்
மதுரையின் மையப்பகுதியில் உள்ள வெங்காய மண்டி, பழ மார்க்கெட் ஆகியவை நகருக்கு வெளியே மாற்றப்படும். பூக்களை பாதுகாத்து வைக்க குளிர்பதனக் கிடங்கு ்மைக்கப்படும். முல்லைப்பெரியாறு அணையிலிருந்து சாத்தையாறு அணைக்கு நீரைக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும். காமராசர் பல்கலைக்கழகம் அருகில் உள்ள தகவல் தொழில்நுட்பப் பூங்காவை செயல்பட வைக்க நடவடிக்கை எடுக்கப்படும். சென்னையில் அமைந்துள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம் போல மதுரையில் கலைஞர் நூலகம் அமைக்கப்படும்.
மயிலாடுதுறையில் சட்டக்கல்லூரி, பூம்புகாரில் வேளாண்மைக் கல்லூரி ஆகியவை அமைக்கப்படும். நாமக்கல் மாவட்டத்தில் முட்டைகளை சேமித்து வைக்க குளிர்பதன கிடங்கு, அரசு பொறியியல் கல்லூரி ஆகியவை அமைக்கப்படும். நீலகிரியில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படுவதோடு, அங்கிருந்து குஜராத்திற்கு மாற்றப்பட்ட உருளைக்கிழங்கு ஆராய்ச்சி மையம் மாநில அரசால் மீண்டும் துவங்கப்படும்.
குன்னம் மருத்துவக் கல்லூரி
பெரம்பலூர் குன்னத்தில் மருத்துவக் கல்லூரி, பெரம்பலூரில் பொறியியல் கல்லூரி துவங்கப்படும். புதுக்கோட்டையில் பழமைவாய்ந்த நகராட்சிக் கட்டடம் வரலாற்றுச் சின்னமாக பாதுகாக்கப்படும். நகராட்சிக்கு புதிய கட்டடம் கட்டப்படும். ராணிப்பேட்டையில் புதிய பேருந்து நிலையம், மருத்துவக் கல்லூரி, சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவிலுக்கு ரோப் கார் ஆகியவை அமைக்கப்படும்.
சேலம் வீரபாண்டியில் ஜவுளிப்பூங்கா, ஓமலூரில் நறுமணத் தொழிற்சாலை, எடப்பாடியில் சிப்காட் தொழிற்பேட்டை சேலத்தில் அரசு வேளாண்மைக் கல்லூரி ஆகியவை அமைக்கப்படும். தென்காசியில் மருத்துவக் கல்லூரி, சட்டக் கல்லூரி, சங்கரன் கோவிலில் ஜவுளிப் பூங்கா ஆகியவை அமைக்கப்படும்
முல்லைப் பெரியாறு அணையை மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் பாதுகாப்பில்விட நடவடிக்கை எடுக்கப்படும். முல்லைப் பெரியாறில் 152 அடிக்கு நீரை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும். கண்ணகி கோட்டத்தை இரு மாநிலங்களுக்கு இடையிலான பொது இடமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
மதுரை - தூத்துக்குடி சாலை தொழில் மண்டலச் சாலையாக மேம்படுத்தப்படும்.
மாவட்டங்களுக்கான வாக்குறுதிகளைப் பொறுத்தவரை, பெரும்பாலான இடங்களில் மருத்துவ, பொறியியல், கலைக் கல்லூரிகள் திறப்பது பொதுவான வாக்குறுதிகளாக அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல, மேம்பாலம், சுரங்கப்பாதை போன்ற நகர்ப்புற உள்கட்டுமானத் திட்டங்களும் வாக்குறுதிகளாக அளிக்கப்பட்டுள்ளன.
பிற செய்திகள்:
- திமுக வேட்பாளர் பட்டியல் சுவாரசியங்கள்: படித்தவர்கள், வாரிசுகள் அதிகம், பெண்கள் குறைவு
- தொண்டாமுத்தூரில் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக கார்த்திகேய சிவசேனாபதி - வெற்றி யாருக்கு?
- அதிருப்தியில் கோவை அதிமுக - பாஜக தொண்டர்கள்; தொகுதி ஒதுக்கீட்டில் ஏமாற்றம்
- தமிழக சட்டமன்ற தேர்தல் 2021: அதிமுக – தேமுதிக கூட்டணி உடைந்ததன் காரணம் இதுதான்
- தங்க பத்திரத்தை எவ்வாறு வாங்கலாம்? தங்க நகைகள் தவிர பிற முதலீடுகள் என்னென்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












