திமுக தேர்தல் அறிக்கை வெளியிட்டார் மு.க.ஸ்டாலின்: பெட்ரோல், டீசல் விலை குறைக்க, சிலிண்டருக்கு ரூ.100 மானியம் தர உறுதி

திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு

பட மூலாதாரம், MK Stalin/twitter

படக்குறிப்பு, திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு

ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான அதிமுக அமைச்சர்களை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்கப்படும், நீட் தேர்வை ரத்து செய்ய முதல் சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே சட்டம் இயற்றப்படும், தமிழ்நாடு ஆறுகள் பாதுகாப்புத் திட்டம் செயல்படுத்தப்படும், முதல் கட்டமாக 500 இடங்களில் கலைஞர் உணவகம் அமைக்கப்படும், பால் விலை லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்படும், பெட்ரோல் விலை ரூ.5 குறைக்கப்படும், டீசல் விலை ரூ.4 குறைக்கப்படும் என்பது போன்ற வாக்குறுதிகள் திமுக தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன.

சமையல் கேஸ் சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.100 மானியம் தரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கையை சனிக்கிழமை வெளியிட்டார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். அறிக்கையின் முதல் படியை அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் பெற்றுக்கொண்டார். திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, கே.என்.நேரு உள்ளிட்ட தலைவர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

500க்கும் மேற்பட்ட வாக்குறுதிகள் இந்த தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றிருப்பதாகத் தெரிவித்தார் ஸ்டாலின்.

இந்த அறிக்கையின் முக்கிய அம்சங்களை மட்டும் அவர் வாசித்தார்.

பெண்கள் இட ஒதுக்கீடு 40 சதவீதம் ஆக்கப்படும்

அரசு வேலை வாய்ப்புகளில் பெண்களுக்கு 40 சதவீதம் ஒதுக்கீடு செய்யப்படும், பெண்களுக்கு பேறுகால விடுப்பு 12 மாதங்களாக அதிகரிக்கப்படும், பேறுகால உதவித் தொகை ரூ.24 ஆயிரமாக உயர்த்தப்படும், மகளிர் கூட்டுறவு சங்க கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்பது போன்ற அறிவிப்புகளும் இந்த தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றிருப்பதாகத் தெரிவித்தார் ஸ்டாலின். பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்களைக் களைய சைபர் காவல் நிலையங்கள் அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார் ஸ்டாலின்.

நீட் தேர்வு ரத்து செய்ய சட்டம்

கல்வியை பொதுப் பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு கொண்டுவர சட்டம் கொண்டுவரப்படும். நீட் தேர்வில் இருந்து வெளியேற முதல் சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே சட்டம் இயற்றப்படும் என்பது உள்ளிட்ட வாக்குறுதிகளும் இடம் இந்த அறிக்கையில் இடம் பெற்றுள்ளன.

இந்து கோயில்களை சீரமைக்கு 1000 கோடி

எல்லா மலைக்கோயில்களிலும் ரோப்கார் இயக்கப்படும், அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் திட்டத்தின் கீழ் முறையாக அர்ச்சகர் பயிற்சி பெற்ற 205 பேருக்கும் உடனடியாக வேலை தரப்படும், இந்து கோயில்களை சீரமைக்க ரூ.1000 கோடி ஒதுக்கப்படும், மசூதி, கிறிஸ்தவ தேவாலயங்களை சீரமைக்க ரூ.200 கோடி ஒதுக்கப்படும் என்பது உள்ளிட்ட வாக்குறுதிகளையும் அவர் வெளியிட்டார்.

ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்புகள்:

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு

அங்கன்வாடி, சத்துணவு ஊழியர்கள் அரசு ஊழியர்கள்

அங்கன்வாடி, சத்துணவு ஊழியர்கள் அரசு ஊழியர்கள் ஆக்கப்படுவார்கள் என்றும் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. மாதம் ஒரு முறை மின் கட்டணம் செலுத்தும் முறை அறிமுகம் செய்யப்படும் என்றும் ஒரு வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் திராவிட இயக்க தீரர்கள் கோட்டம் அமைக்கப்படும். கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பு சரியாகும் வரையில் சொத்து வரி உயர்த்தப்படாது.

பெருந்தொற்று காலத்தில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட, அரசி ரேஷன் அட்டை வைத்துள்ளவர்களுக்கு ரூ.4 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும். பெரிய மாநகராட்சிகளில் பறக்கும் சாலைத்திட்டம் அமல்படுத்தப்படும். நியாய விலைக்கடைகளில் 1 கிலோ கூடுதல் சர்க்கரை வழங்கப்படும், உளுத்தம்பருப்பு மீண்டும் வழங்கப்படும். சட்டம் ஒழுங்கை காக்கும் பணியில் உயிரிழக்கும் காவலர் குடும்பங்களுக்கு 1 கோடி ரூபாய் வழங்கப்படும் என்பது உள்ளிட்ட வாக்குறுதிகளையும் ஸ்டாலின் வாசித்தார்.

கலைஞர் சிறப்பு வீட்டு வசதித் திட்டம்

குடிசைகளே இல்லாத தமிழகத்தை உருவாக்க கலைஞர் சிறப்பு வீட்டு வசதித் திட்டம் உருவாக்கப்படும். நகர்ப்புறங்களில் ஆட்சேபனை இல்லாத இடங்களில் குடியிருப்போருக்கு வீட்டுமனைப்பட்டா வழங்கப்படும். கிராம நத்தங்களில் குடியிருப்போருக்கு பட்டா வழங்கப்படும் என்ற வாக்குறுதிகளையும் அவர் அளித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :