தொண்டாமுத்தூரில் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக கார்த்திகேய சிவசேனாபதி - வெற்றி யாருக்கு?

திமுக

பட மூலாதாரம், FACEBOOK

    • எழுதியவர், மு. ஹரிஹரன்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

கோவை மாவட்டத்தில் உள்ள தொண்டாமுத்தூர் தொகுதியில் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக போட்டியிட திமுக சார்பில் அக்கட்சியின் சுற்றுச்சூழல் அணிச் செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி களமிறக்கப்பட்டுள்ளார். இதனால், இத்தொகுதியில் போட்டி கடுமையாக இருக்கும்.

தமிழக சட்டமன்ற தேர்தலின் நட்சத்திர வேட்பாளர்கள் தொகுதிகளின் பட்டியலில் கோவை மாவட்டத்தில் உள்ள தொண்டாமுத்தூர் தொகுதி முக்கிய இடம் வகிக்கிறது.

அதிமுகவில் செல்வாக்குமிக்க தலைவராகவும், உள்ளாட்சித்துறை அமைச்சராகவும் உள்ள எஸ்.பி.வேலுமணி தற்போது எம்.எல்.ஏ.வாக உள்ள தொண்டாமுத்தூரில் மீண்டும் போட்டியிடுகிறார். இந்த நிலையில், அவருக்கு சவால் விடும்விதமாக திமுக சார்பில் கார்த்திகேய சிவசேனாபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் தமிழக இளைஞர்கள் மத்தியில் நன்கு அறிமுகமான கார்த்திகேய சிவசேனாபதியை களமிறக்கி இந்த தொகுதிக்கான போட்டியை கடும் சவால் மிக்கதாக மாற்றியுள்ளது திமுக.

முந்தைய தேர்தல்களில்...

2011ம் ஆண்டு முதல் தொடர்ந்து இரு முறை தொண்டாமுத்தூர் தொகுதியில் எஸ்.பி.வேலுமணி போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

2011 தேர்தலில் முதல்முறை போட்டியிட்டபோது 99,886 வாக்குகள் பெற்று வெற்றி அடைந்தார்.

2016ம் ஆண்டு தேர்தலில் மொத்தமிருந்த 1,88,899 வாக்குகளில் 1,09,519 வாக்குகள் பெற்று வேலுமணி வென்றால். அந்த தேர்தலில் இரண்டாம் இடம் பிடித்த மனித நேய மக்கள் கட்சி வேட்பாளர் சையது முகமது 45,478 வாக்குகள் மட்டுமே பெற்றார்.

கடந்த தேர்தல்களில் இவர் எளிதாக வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணம், தொகுதி மக்கள் மத்தியில் அவருக்கு இருந்த செல்வாக்குதான்.

தமது பதவிக் காலத்தில் சாலைகளைப் புனரமைத்தது, 24 மணி நேர குடிநீர் திட்டம் செயல்படுத்தியது, மின் விளக்கு உள்ளிட்ட அடிப்படைக் கட்டமைப்புகளை உருவாக்கியது, மேம்பாலங்கள் கட்டியது, ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளை மேற்கொண்டது போன்ற பணிகளைச் செய்துள்ளார் வேலுமணி.

இதுமட்டுமின்றி, தொகுதியில் நடைபெறும் கட்சி நிர்வாகிகளின் குடும்ப நிகழ்வுகளில் பங்கேற்பது, பண்டிகை காலங்களில் மக்களுக்கு தேவையான பொருட்கள் வழங்குவது போன்ற செயல்களால் தொகுதி மக்களிடம் இவருக்கு நல்ல மதிப்பு உள்ளது.

தேர்தலில் தன்னை எதிர்த்துப் போட்டியிடும் வேட்பாளர்களையும் தன்வசப்படுத்தும் அளவிற்கு செல்வாக்கு மிக்க அரசியல் பிரமுகராக இருந்தார்.

25 ஆண்டுகளுக்கு பின் நேருக்கு நேர் மோதல்

திமுக அதிமுக

பட மூலாதாரம், FACEBOOK

1996ம் ஆண்டுக்கு பிறகு, வரும் சட்டமன்ற தேர்தலில் தான் தொண்டாமுத்தூர் தொகுதியில் திமுகவும் அதிமுகவும் நேருக்கு நேர் மோதுகின்றன.

இதுவரை, திமுக கூட்டணியில் இருந்த கட்சிகள் மட்டுமே இத்தொகுதியில் அதிமுகவை எதிர்த்து போட்டியிட்டு வந்தன.

இதனைச் சுட்டிக்காட்டி டிவிட்டரில் பதிவிட்டுள்ள கார்த்திகேய சிவசேனாபதி, 'இனிமேல்தான் நீங்கள் உண்மையான போட்டியைப் பார்க்கப்போகிறீர்கள். களத்தில் சந்திப்போம்!' என நேரடியாகவே அதிமுகவின் வேலுமணிக்கு சவால் விட்டுள்ளார்.

2017ம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தில் முன்னிலை வகித்தவர்களில் ஒருவரான, கார்த்திகேய சிவசேனாபதி கால்நடை வளர்ப்பில் ஆர்வமிக்கவர். ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டபோது, அதற்கு எதிராக தொடர்ந்து சட்டப்போராட்டத்தில் ஈடுபட்டவர்.

திருப்பூர் மாவட்டத்தில் சொந்தமாக கால்நடை ஆராய்ச்சி அமைப்பினை நிறுவி நடத்தி வருகிறார். கடந்த நவம்பர் மாதம், திமுகவில் இணைந்த இவருக்கு, சுற்றுச்சூழல் அணி என்ற தனிப் பிரிவு உருவாக்கப்பட்டு அதில் செயலாளர் பதவி வழங்கப்பட்டது.

மக்கள் கருத்து என்ன?

தொண்டாமுத்தூர் தொகுதிக்குட்பட்ட ஆலந்துறை, புலுவப்பட்டி, தென்கரை, பேரூர் மற்றும் நரசீபுரம் பகுதி மக்களிடம் வரும் தேர்தலில் தங்களின் ஆதரவு யாருக்கு என கேட்டறிந்தோம்.

'எங்கள் அமைச்சருக்கு தான் எங்கள் ஓட்டு. கோவை மாவட்டத்தில் உள்ள மற்ற பகுதிகளை விட இங்கு அனைத்து வளர்ச்சிப் பணிகளும் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், எந்த குறையென்றாலும் அமைச்சர் வேலுமணியை அவரது வீட்டுக்கு சென்று நேரடியாகவே தெரிவிக்கிறோம். எங்கள் தொகுதியைச் சேர்ந்த எம்எல்ஏ அமைச்சராக இருப்பது தொகுதி மக்களுக்கு தான் நன்மை' என்கிறார் பேரூரில் டீக்கடை நடத்திவரும் ரவி.

'சாலைகளும், மேம்பாலமும் மட்டும் வளர்ச்சி என சொல்ல முடியாது. கோவையின் குடிநீர் ஆதாரம் தனியாருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சி வரியினங்கள் பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் குளக்கரைகளை அழகு படுத்தியுள்ளனர். ஆனால், குளம் முழுவதும் சாக்கடை நீர் தான் உள்ளது. இதையெல்லாம் கருத்தில்கொண்டு தான் எனது வாக்கு இருக்கும்' என தெரிவிக்கிறார் ஐ.டி பணியாளர் கீதா.

வேலுமணி

'தொண்டாமுத்தூர் தொகுதியில் தான் கோவைக்கு பெருமை சேர்த்த நொய்யல் நதி உருவாகிறது. சாயப்பட்டறைகளாலும், கழிவுகளாலும் நொய்யல் நதி, இன்று சாக்கடையாக மாறியுள்ளது. நொய்யல் புனரமைப்பு திட்டம் என்ற பெயரில் கான்க்ரீட் கால்வாய் மட்டுமே அமைக்க உள்ளனர். இது எப்படி புனரமைப்பாகும்?

'யானைகளின் வழித்தடங்களை கல்வி நிறுவனங்களும், ஆன்மிக அமைப்புகளும் ஆக்கிரமித்து வருகின்றன. இதுபோன்று பல பிரச்னைகளுக்கு தீர்வு காணாமல், ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் வீணான திட்டங்களை மட்டுமே அமல்படுத்தி வந்துள்ளனர். இதன் அடிப்படையில்தான் நான் வாக்களிப்பேன். அந்தவகையில் சுற்றுச்சூழலில் அக்கறைகொண்ட சிவசேனாபதிக்குதான் வாக்களிக்கவுள்ளேன்' என்கிறார் குணியமுத்தூரைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் கார்த்திக்.

இட ஒதுக்கீடு, குடியுரிமை திருத்தச் சட்டம்

தொண்டாமுத்தூர் தொகுதியில் உள்ள 3,24,053 வாக்காளர்களில், கணிசமானோர் இஸ்லாமியர்கள்.

குடியுரிமை திருத்த சட்டத்தில் அதிமுகவின் நிலைபாடு மற்றும் பாஜக கூட்டணி உள்ளிட்ட காரணங்களால் இங்குள்ள இஸ்லாமிய மக்கள் அதிமுகவின் மீது அதிருப்தியில் உள்ளனர்.

மேலும், வன்னியர்களுக்கு ஆதரவாக 10.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கியதும், இந்த தொகுதியை சேர்ந்த பிற சாதியினர் மத்தியில் அதிமுக மீது அதிருப்தி ஏற்பட்டிருப்பது தெரிகிறது.

இந்நிலையில், திமுக சார்பில் போட்டியிடும் கார்த்திகேய சிவசேனாபதி, அதிமுகவின் எஸ்.பி.வேலுமணிக்கு தொண்டாமுத்தூர் தொகுதியில் சவாலான போட்டியாளராக இருப்பார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :