இந்திய மாசிக்கருவாடுக்கு இலங்கையில் தடை: மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு

- எழுதியவர், பிரபுராவ் ஆனந்தன், ரஞ்சன் அருண் பிரசாத்
- பதவி, பிபிசி தமிழுக்காக
மாசிக் கருவாடு இறக்குமதிக்கு இலங்கை தடை விதித்துள்ளதால், இந்தியாவில் ரூ.100 கோடி மதிப்பிலான மாசிக் கருவாடு தேக்கம் அடைந்துள்ளது. இதனால் மாசிக் கருவாடு தயாரிப்பாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்ட மக்களின் பிரதான தொழில் மீன்பிடித்தல். மீன் பிடி சார்பு தொழில்களான மீன் உணவு உற்பத்தி, கருவாடு தயாரித்தல் உள்ளிட்ட தொழில்களும் அதிகளவில் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, அசைவ உணவு பிரியர்களின் தேவையை பூர்த்தி செய்யவும், மீனவ மக்களின் வருவாய்க்காகவும் மாசிக் கருவாடு தயாரிப்பு குடிசை தொழிலாக இங்கு செய்யப்பட்டு வருகிறது.
மாசிக் கருவாடு என்றால் என்ன?
மன்னார் வளைகுடாவில் கிடைக்கும் சூரை மீன்கள் மாசிக் கருவாடு தயாரிக்க முக்கிய மூலதனமாக உள்ளது. இங்கு பிடிக்கப்படும் சூரை மீன்களை கழுவி சுத்தம் செய்து பின் அவற்றை தண்ணீரில் நன்றாக அவித்து ஒரு வாரம் முதல் 10 நாட்கள் வரை வெயிலில் உலர்த்தப்படுகிறது. மீன்கள் கல்லை போல் கடினத்தன்மைக்கு மாறும் வரை காய வைக்கப்பட்டு மாசிக்கருவாடு தயாரிக்கப்படுகிறது.
அதன் பிறகு பேக்கிங் செய்யப்பட்டு தூத்துக்குடி துறைமுகம் வழியாக கப்பல்களில் வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. தற்போது சூரை மீன்பிடித்தொழில் நலிந்து வருவதால் மாசிக்கருவாடு உற்பத்தியும் குறைந்து வருகிறது.
வெளிநாடுகளில் தூத்துக்குடி மாசிக்கு நல்ல வரவேற்பு
தமிழகத்தில் தூத்துக்குடி, ராமநாதபுரம், நாகப்பட்டினம், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மாசிக் கருவாடு அதிகளவில் தயாரிக்கப்படுகிறது. இந்த கருவாடுக்கு இலங்கை, ஈரான், பாகிஸ்தான், மாலத்தீவு போன்ற நாடுகளில் நல்ல வரவேற்பு உள்ளது.

இதனால் தமிழகத்தில் இருந்து அதிகளவில் இந்த வகை கருவாடு ஏற்றுமதி செய்யப்படுகிறது. தூத்துக்குடியில் தயாரிக்கப்படும் மாசி கருவாடு ஒரு கிலோவுக்கு ரூ.800 முதல் ரூ.1000 வரை விற்பனை செய்யப்படுகிறது.
தூத்துக்குடி மாசிக் கருவாட்டுக்கு இலங்கை, மாலத்தீவு, இலட்சத்தீவு உள்ளிட்ட நாடுகளில் பெரும் வரவேற்பு இருந்து வருகிறது. இலங்கையில் தற்போது மாசி கருவாடு கிலோ 1500 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இலங்கையில் திடீர் தடை
இந்நிலையில், இலங்கை அரசு மாசிக் கருவாடு இறக்குமதிக்கு கடந்த நவம்பர் 5-ம் தேதி திடீரென தடை விதித்தது. இதனால் மாசிக் கருவாடு தொழில் பாதிப்பை சந்தித்து வருகிறது. இந்த ஏற்றுமதி தடையால் இந்தியாவிற்கு அதிகளவு அந்நிய செலாவணி ஈட்டி தரும் தொழில் நொடிந்து போகும் நிலை ஏற்பட்டுள்ளது.
மாசிக் கருவாடு ஏற்றுமதி செய்ய இலங்கை அரசு திடீரென தடை விதித்ததால் இந்த தொழிலை நம்பி வாழ்ந்து வந்த ஏற்றுமதி நிறுவன உரிமையாளர்கள், தொழிலாளர்கள், சார்பு தொழிலாளர்கள் என சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து மாசி கருவாடு தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டு வரும் ஞானராஜ் பிபிசி தமிழிடம் பேசுகையில், "நான் கடந்த 8 ஆண்டுகளாக மாசிக் கருவாடு ஏற்றுமதி தொழிலில் ஈடுபட்டு வருகிறேன். நேரடியாக தருவைகுளம் மீனவர்களிடம் இருந்து சூரை மீன்களை கொள்முதல் செய்து பின் மாசியாக மாற்றி இலங்கை தலைநகர் கொழும்புக்கு ஏற்றுமதி செய்து வந்தோம்.
கொரோனா பரவல் காரணமாக இலங்கையில் கடந்த நவம்பர் மாதம் 5ம் தேதி தற்காலிகமாக இந்தியாவில் இருந்து வரும் மாசிக் கருவாடுக்கு தடை விதித்தனர்.

நான்கு மாதங்களுக்கு மேலாகியும் ஏற்றுமதி தடை நீடித்து வருகிறது. இதனால் சுமார் 60 ஆயிரம் கிலோ மாசி கருவாடு தேக்கம் அடைந்துள்ளது. இதன் மதிப்பு சுமார் ரூ. 100 கோடியை தாண்டும்.
என் கம்பெனியில் சுமார் 30க்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர். கடந்த நான்கு மாதங்களாக கருவாடு ஏற்றுமதி செய்யப்படாமல் உள்ளதால் தொழிலாளர்களுக்கு என்னால் வேலை கொடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். மாற்று தொழில் தேடி செல்ல முடியாமல் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு எதிர்காலம் கேள்விகுறியாகி உள்ளது.
எனவே மாசிக் கருவாடு மீதான தடையை இலங்கை அரசு நீக்க மத்திய மாநில அரசுகள் இலங்கை அரசுடன் பேசி உரிய நடவடிக்கை எடுத்து இந்த தொழிலை நம்பி வாழ்ந்து வரும் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேலான மக்களின் வாழ்வாதாரத்தை காத்திட வேண்டும்," என ஞானராஜ் கோரிக்கை விடுத்தார்.
மாசி கருவாடு ஏற்றுமதி தடையால் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் பெண் தொழிலாளி விஜய ராணி பிபிசி தமிழிடம் பேசுகையில், "கடந்த 2019 ஆம் ஆண்டு மாசி கருவாடு ஏற்றுமதி மிகவும் சிறப்பாக நடைபெற்று வந்தது. அப்போது பெண்கள் இரவு பகலாக மாசி கருவாடு ஏற்றுமதி கம்பெனிகளில் வேலை செய்து வந்தோம். நல்ல சம்பளம் கிடைத்தது.
என்னை போல் சுமார் 200க்கும் மேற்பட்ட பெண்கள் மாசிக் கருவாடு ஏற்றுமதி கம்பெனிகளை நம்பி வாழ்ந்து வருகின்றனர். தற்போது கருவாடு ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளதால் வேலை இல்லாமல் குடும்பத்துடன் தவித்து வருகிறோம்.
என் குழந்தைகள் ஆங்கில வழி கல்வி பயின்று வருகின்றனர். மாசி கருவாடு ஏற்றுமதி கம்பெனியில் இருந்து கிடைக்கும் வருமானத்தை நம்பி நல்ல பள்ளிகளில் சேர்த்தேன் இப்போது வேலை இல்லாததால் எப்படி பள்ளி கட்டணம் கட்ட போகிறேன் என தெரியாமல் குழப்பத்தில் உள்ளேன். எனவே உடனடியாக ஏற்றுமதி தடையை நீக்க வேண்டும் என்கிறார்.
ஒரே கம்பெனியில் 8 வருடத்திற்கு மேலாக வேலை செய்து வந்ததால் வேறு கம்பெனிகளில் வேலைக்கு செல்ல முடியவில்லை. இன்னும் சில நிறுவனங்களின் முதலாளிகள் தங்களது கம்பெனிகளை மூட திட்டமிட்டு வருகின்றனர்.

இந்த நிலை நீடித்தால் மாற்று தொழில் தேடி அண்டை மாநிலங்களுக்கு பஞ்சம் பிழைக்க செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படும்," என்றார் விஜயராணி
இது குறித்து தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளத்தைச் சேர்ந்த மாசிக் கருவாடு ஏற்றுமதியாளர் நிக்சன் பிபிசி தமிழிடம் பேசுகையில்,
"தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து மட்டும் இலங்கைக்கு தினமும் 20 டன் மாசிக் கருவாடு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது.
கடந்த 4 மாதங்களாக ஏற்றுமதி இல்லாததால், குடோன்களில் மாசிக் கருவாடு பெருமளவில் தேக்கம் அடைந்துள்ளது. நாடு முழுவதும் ரூ.200 கோடி அளவுக்கு மாசிக் கருவாடு தேக்கம் அடைந்துள்ளது.
ஏற்றுமதி தடைபட்டுள்ளதால் மாசிக் கருவாடு உற்பத்தியும் கடந்த 2 மாதங்களாக குறைந்துள்ளது. இதனால் சூரை மீன் விலையும் சரிந்துள்ளது. துருவைகுளத்தில் கிலோ ரூ.70 வரை விற்பனை செய்யப்பட்ட சூரை மீன், தற்போது ரூ.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதனால் மீனவர்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மாசிக் கருவாடு தயாரிப்பு நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். மாசிக் கருவாடு இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை இலங்கை அரசு நீக்க, மத்திய அரசு மூலம் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்றார்.
இலங்கை நிலைப்பாடு என்ன?
இலங்கை அரசு ஏன் மாசிக் கருவாடு ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளது என்பது குறித்து இலங்கையிலிருந்து பிபிசி தமிழுக்காக செய்தியாளர் அருண் வழங்கிய தகவல்களை இங்கே வழங்குகிறோம்.
உலகம் முழுவதிலும் இருந்து இலங்கைக்கு கடுவாடு இறக்குமதி நிறுத்தப்பட்டுள்ளதாக அலங்கார மீன்கள், நன்னீர் மீன்கள், இறால் வளர்ப்பு, கடற்றொழில் துறைமுகங்கள் அபிவிருத்தி, பல நாள் கடற்றொழில் அலுவல்கள் மற்றும் மீன் ஏற்றுமதி இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவிக்கின்றார்.

இது தொடர்பாக பிபிசி தமிழுக்காக அவரிடம் பேசியபோது, "இலங்கையில் பிடிக்கப்படும் மீன்களை உரிய முறையில் ஏற்றுமதி செய்ய முடியவில்லை. இலங்கையிலிருந்து கருவாடு ஏற்றுமதி அதிகளவில் இடம்பெறுவதால், வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கருவாடுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது," என்று குறிப்பிட்டார்.
இந்த விவகாரத்தில் எந்தவித முன்னறிவித்தலும் இன்றி இலங்கையில் இறக்குமதி தடை அமல்படுத்தப்பட்டுள்ளதாக தமிழக மீனவர்கள் குற்றம்சாட்டி வருவது குறித்து இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகரவிடம் கேள்வி எழுப்பினோம்.
அதற்கு அவர், "இது நாட்டின் தீர்மானம். உள்நாட்டிலேயே கருவாடு உற்பத்தி செய்யப்படுவதால், வெளிநாட்டில் இருந்து அதே வகையை இறக்குமதி செய்யும் போது உள்நாட்டு கருவாடுகளுக்கான விற்பனை வீழ்ச்சி அடையும்." என குறிப்பிட்;டார்.
இவ்வாறான பின்னணியில், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வெளிநாடுகளிலிருந்து கருவாடுகளை இறக்குமதி செய்ய வேண்டாம் என உள்நாட்டு மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக கூறிய இராஜாங்க அமைச்சர், உள்நாட்டு மீனவர்களின் நன்மையை கருத்திற்கொண்டு தாம் இந்த தீர்மானத்தை எட்டியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
எதிர்காலத்தில் கருவாட்டை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கும் எண்ணம் உள்ளதா என பிபிசி தமிழ், விடயத்திற்கு பொறுப்பான இராஜாங்க அமைச்சரிடம் கேள்வி எழுப்பியது. அதற்கு பதிலளித்த இராஜாங்க அமைச்சர், கருவாடு இறக்குமதிக்கான வரியை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறினார்.
எனினும், இலங்கையில் கருவாட்டு உற்பத்தியை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், இலங்கை கருவாட்டுக்கு வெளிநாட்டு சந்தையில் பாரிய கேள்வி காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எதிர்காலத்தில் கருவாடு இறக்குமதிக்கான அனுமதி வழங்கப்படும் என கூறிய அவர், அந்த சந்தர்ப்பத்தில் இறக்குமதி வரி பெருமளவு அதிகரிக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.

எனினும், தற்போதைய சூழ்நிலையில் கருவாடு இறக்குமதிக்கான தேவை கிடையாது என இராஜாங்க அமைச்சர் தெரிவிக்கின்றார்.
இதேவேளை, பேலியகொட மீன் சந்தையில் உருவான கோவிட் கொத்தணி காரணமாக, இலங்கையின் மீன் விற்பனை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் நினைவூட்டினார்.
இலங்கையில் மீன் பயன்பாடு கடந்த காலங்களில் சுமார் 40 வீதம் வரை வீழ்ச்சி அடைந்துள்ளதாக அவர் கூறுகின்றார்.
இந்த நிலையில், மக்கள் கருவாடு பயன்பாட்டை இந்த சந்தர்ப்பத்தில் அதிகரித்துள்ளதாகவும், இலங்கை கருவாடுக்கு உள்நாட்டு சந்தையில் தற்போது தேவை அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.
உள்நாட்டு கடற்றொழிலாளர்களின் கருவாடு, தேவைக்கு அதிகமாகவே நாட்டில் உள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.
கருவாடு மற்றும் மாசி ஆகியவற்றுக்கான இறக்குமதி மாத்திரமே நிறுத்தப்பட்டுள்ளதாக கூறிய அவர், நெத்தலி மற்றும் மீன் இறக்குமதிக்கு தடைவிதிக்கவில்லை என தெரிவித்தார்.
இலங்கைக்கு மீன்களை இறக்குமதி செய்து, கருவாடு உற்பத்தியை மேற்கொள்ள முடியும் எனவும் விடயத்திற்கு பொறுப்பான இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர குறிப்பிடுகின்றார்.
பிற செய்திகள்:
- அதிருப்தியில் கோவை அதிமுக - பாஜக தொண்டர்கள்; தொகுதி ஒதுக்கீட்டில் ஏமாற்றம்
- தமிழக சட்டமன்ற தேர்தல் 2021: அதிமுக – தேமுதிக கூட்டணி உடைந்ததன் காரணம் இதுதான்
- தங்க பத்திரத்தை எவ்வாறு வாங்கலாம்? தங்க நகைகள் தவிர பிற முதலீடுகள் என்னென்ன?
- எடப்பாடி பழனிசாமியின் 3 ஃபார்முலாக்கள்! பாஜகவை மிரட்டும் உள்கட்சி மோதல்கள்
- "இலங்கை மலையக மக்களுக்கு ரூ. 1,000 சம்பளம் தராவிட்டால் நடவடிக்கை"
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












