உலக வானொலி தினம்: கடலின் நடுவே பாட்டுச் சத்தம் - மீனவர்களுக்கான பிரத்யேக வானொலி

கோப்புப்படம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப்படம்
    • எழுதியவர், பிரபுராவ் ஆனந்தன்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

மீன் கிடைக்காமல் நடுக்கடலில் மன அழுத்தத்துடன் இருக்கும் மீனவர்களை இசையால் மகிழ்விப்பதுடன் அதிகமான மீன்கள் எங்கு கிடைக்கும் என்றும் தகவல் கொடுத்தால் அது அவர்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும்?

அந்தப் பணியைத்தான் செய்கிறது 'கடல் ஓசை' எனும் சமுதாய வானொலி.

உங்களுக்கு பிடித்த வீராங்கனைக்கு வாக்களிக்க CLICK HERE

இன்று (பிப்ரவரி 13) உலக வானொலி தினம் என்பதால் மீனவ சமுதாயத்துக்கு என்றே பிரத்யேகமாகச் செயல்படும் வரும் கடல் ஓசை 90.4 சமுதாய வானொலி குறித்த சிறப்பு செய்தி இது.

கடல் ஓசை எஃப்.எம்-ல் என்ன சிறப்பு?

மீனவர்களின் மேம்பாட்டிற்காக நேசக்கரங்கள் என்ற அறக்கட்டளை கடந்த 16 வருடங்களாக ராமேஸ்வரம் அருகே உள்ள பாம்பனில் இயங்கி வருகிறது. இந்த அறக்கட்டளை மூலம் இலங்கை சிறைகளிலுள்ள மீனவர்களை மீட்பது, இலங்கை கடற்படை வசமுள்ள படகுகளை மீட்பது, மற்றும் நலிவடைந்த மீனவ தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு இலவசக்கல்வி அளிப்பது உள்ளிட்ட சேவைகளை செய்து வருகிறது.

இந்நிலையில் கடந்த 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி நேசக்கரங்கள் அறக்கட்டளை சார்பில் இந்தியாவிலேயே முதன் முதலாக மீனவர்களுக்கான பிரத்யேக வானொலி நிலையமான கடல் ஓசை எஃப்.எம். சேவை துவங்கியது. கடல் ஓசை 90.4 நமது முன்னேற்றத்துக்கான வானொலி என்ற அறிவிப்புடன் ஒவ்வொரு நிகழ்ச்சியையும் தொடங்குகின்றனர். கடல் ஓசை மீனவ மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

கடல் ஓசை எஃப்.எம்

ராமேஸ்வரம் தீவு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியை சார்ந்த இளைஞர்களையே வானொலி வல்லுநர்களாக பயிற்சி அளித்து இது இயக்கப்படுகிறது.

இந்த வானொலியில் படகுகளில் மீன்பிடிப்புக்குச் செல்லும் பல்லாயிரக்கணக்கான மீனவர்களுக்கு சுனாமி, புயல், கடல் சீற்றம் போன்ற ஆபத்து காலங்களில் மீனவர்கள் செய்ய வேண்டியது என்ன, கடலில் அபாயகரமான பகுதிகள் எவை அதிக மீன்கள் கிடைக்கும் இடங்கள் குறித்த தகவல் ஒலிபரப்பப்படுகிறது.

'கடல் வாழ் உயிரினங்கள் குறித்த விழிப்புணர்வு'

மன்னார் வளைகுடா மற்றும் பாக் நீரிணை கடற்பகுதியில் உயிர் வாழக்கூடிய அரியவகை கடல் வாழ் உயிரினங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல், கடல் சூழலியல் மண்டலத்தை பாதிக்காத வண்ணம் மீன்பிடி முறைகளை குறித்த நிகழ்ச்சிகளையும் கடல் ஓசை வானொலியில் கேட்கலாம்.

கடல் ஓசை வானொலி நிலைய நிறுவனர் ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ
படக்குறிப்பு, கடல் ஓசை வானொலி நிலைய நிறுவனர் ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ

கடல் ஓசை வானொலி நிலைய நிறுவனர் ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ பிபிசி தமிழிடம் பேசுகையில், "முதலில் ராமேஸ்வரம் தீவைச் சுற்றியுள்ள இளைஞர்களுக்கு வானொலி வல்லுநர்களாக பயிற்சியளித்து கடல் ஓசை வானொலி 90.4 என்ற அலைவரிசையில் இயங்கத்துவங்கியது."

"இச்சேவையானது விசைப்படகு, நாட்டுப் படகில் மீன்பிடிக்கச் செல்பவர்களுக்கு சுனாமி, புயல், கடல்சீற்றம், பருவநிலை மாற்றம் மற்றும் பாக் நீரிணை மற்றும் மன்னார் வளைகுடா கடல்பிராந்தியங்களில் மீன்கள் எந்த இடத்தில் அதிக அளவில் கிடைக்கும், மீன்களை நல்ல லாபத்திற்க்கு சந்தை படுத்துதல் உள்ளிட்ட பயனுள்ள தகவல்களை கடல் ஓசை வானொலி மூலம் ஒலிபரப்பப்படும்," என்றார்.

மீனவ பெண்களுக்கு சட்ட விழிப்புணர்வு

கடல் ஓசை எஃப்.எம் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய நிலைய இயக்குநர் காயத்ரி "இந்த வானொலியில் மீனவ பெண்களுக்கான முன்னேற்றம் குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகிறது குறிப்பாக மீனவ பெண்களுக்கு பாசி வளர்த்தல், கருவாடு காய வைத்தல், ஊட்டச்சத்து சம்பந்தமான விஷயங்கள் மற்றும் மாதவிடாய் நேரங்களில் பெண்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் தனி ஒரு பெண்ணாக மீன் பிடிக்கச் செல்லும் போது பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக மீனவ பெண்களுக்கு வானொலி மூலமாக சட்ட விழிப்புணர்வு வழங்கப்பட்டு வருகிறது. மேலும் மீனவ பெண்களுக்கு ஏற்படும் சட்ட பிரச்சனைகள் குறித்து சட்ட வல்லுனர்களிடம் ஆலோசித்து அதற்கான தீர்வுகளை வழங்கி வருகிறோம்."

காணொளிக் குறிப்பு, 'கடல் ஓசை எஃப்.எம்.' - கடலுக்குள் ஒரு மெல்லிசை

"மத்திய கடல் ஆராய்ச்சி மையத்தின் சார்பாக வழங்கப்படும் வண்ண மீன் வளர்ப்பு திட்டம் குறித்தும் முழுமையாக விவரிக்கப்படும். மீனவ பெண்கள் மீன்பிடி தொழிலை விட்டு மாற்று தொழில் செய்து வருமானம் ஈட்டுவது எப்படி என்பது குறித்தும் கடல் ஓசை வானொலியில் விரிவாக நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றது," என்றார் காயத்ரி.

நாட்டுப் படகு மீனவர் ஜேசு கடல் ஓசை குறித்து பிபிசி தமிழிடம் பேசுகையில் "கடல் ஓசை எஃப்.எம்யில் மீனவர்களுக்கு எளிமையான முறையில் செய்திகளை தருகின்றனர். நாங்கள் மீன்பிடிக்க கடலுக்குள் செல்லும்போது நடுக்கடலில் ஏற்படும் புயல், சூறைக்காற்று மற்றும் இயற்கை பேரிடர்கள் குறித்து தெளிவான தகவல்களை எளிய முறையில் மீனவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் சொல்கின்றனர்."

'மனதுக்கு இனிமையான பாடல்கள்'

"நடுக்கடலில் மீன்கள் கிடைக்காதபோது கஷ்டமான சூழ்நிலையில் மன அழுத்தத்துடன் வானத்தை பார்த்து கொண்டிருக்கும்போது வானொலியில் மனதுக்கு இனிமையான பாடல்களை ஒலிபரப்பி எங்களது மனகஷ்டத்தை போக்கி வருகின்றனர் மீனவர்களுக்கு பயனளிக்கும் ஒரு வானொலியாக செயல்பட்டு வருகிறது," என்றார் ஜேசு.

மீனவப் பெண் பிரதீபா பிபிசி தமிழிடம் பேசுகையில் "முன்பெல்லாம் பாம்பன் பாலத்தை கடந்து சென்றால் மட்டுமே எங்களால் வானொலியைக் கேட்க முடியும். ஆனால் அந்த சூழலை மாற்றி கடல் ஓசை எஃப்.எம் வந்ததில் இருந்து ராமேஸ்வரம் தீவை சுற்றி உள்ள அனைவருமே காலை முதல் இரவு வரை வானொலியை கேட்டு ரசிக்க முடிகிறது." என்றார்.

கடல் ஓசை எஃப்.எம்

'மீனவப் பெண்களுக்கு நிம்மதி'

"ராமேஸ்வரம் தீவை சுற்றியுள்ள மீனவ கிராமங்களில் வசித்து வரும் என்னைப் போன்ற மீனவ பெண்கள் எங்கள் கணவன்மார்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றால் கடலில் காற்று அடிக்குமோ, புயல் வீசுமோ, என்ற அச்சத்துடனேயே இருப்போம். ஆனால் இந்த எஃப்.எம் மூலமாக நடுக்கடலில் எந்தவிதமான சூழ்நிலை உள்ளது என்பதை தெரிவிப்பதால் நாங்கள் நிம்மதி அடைகிறோம்." என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

"கடலில் பிளாஸ்டிக் கொட்டக்கூடாது, கழிவுகளை கொட்டக்கூடாது இதனால் கடல் வளம் அழியும் என்பதை உணர்த்தும் வகையில் மணிக்கு ஒரு முறை வாசகங்கள் கடலோசை எஃப்.எம்-ல் ஒலித்துக்கொண்டே இருக்கிறது'.

"தற்போது உள்ள சூழ்நிலையில் பெண்கள் தாய்ப்பால் கொடுப்பதை குறைத்து வருகின்றனர். ஆனால், கடல் ஓசை எஃப்.எம்-யில் தாய்ப்பாலின் நன்மைகளும், தாய்ப்பால் குழந்தைகளுக்கு கொடுப்பதால் குழந்தைகளுக்கு கிடைக்கும் ஊட்டச்சத்து குறித்தும் விழிப்புணர்வு அளிக்கப்பட்டு வருவதால் அதிகளவிலான பெண்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுத்து வருகின்றனர்," என்றார் பிரதீபா.

BBC Indian sports woman of the year

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: